கட்டுரை : பெரியாரும் பாவாணரும்

ஜுலை 1-15,2021

எம்.எஃப்.அய்.ஜோசப் குமார்

தேவநேயப் பாவாணர், 1934_-43 ஆகிய ஆண்டுகளில், திருச்சிராப்பள்ளியிலுள்ள மேற்காணியார் ஈபர் உயர் நிலைப்பள்ளியில் தலைமைத் தமிழாசானாகப் பணியாற்றினார். இந்த காலக்கட்டத்தில்தான் இராஜாஜி அவர்கள் மதறாஸ் மாகாணத்தின் முதல்வராய் இருந்து, தமிழ்நாட்டில் கட்டாய இந்திக் கல்வியைப் புகுத்திட முனைந்தார். இப்பொல்லா வினைக்கெதிராகத் தமிழ் மக்கள் பெரியாரின் தலைமையில் கிளர்ந்தெழுந்து போராடினர். அறிஞர் அண்ணா, சோமசுந்தரம் பாரதியார், சர்.ஏ.டி.பன்னீர் செல்வம், பாரதிதாசன், சவுந்தர பாண்டியன், தனித் தமிழ்ப் பற்றாளர் மறைமலை அடிகள் ஆகியோரெல்லாம், தமிழ் மண்ணின் மூலை முடுக்கெல்லாம் சென்று தங்களது வீரியம் நிறைந்த பேச்சினாலும் எழுத்தினாலும், மக்களுக்கு கட்டாய இந்திக் கல்வியின் கேட்டைப் பற்றி விளக்கினர். கலவரம் வெடித்தது. அரசினரின் அடக்குமுறையும் தொடர்ந்தது. தமிழ்ப் பெண்களும் இவ்வடக்கு முறையைப் பற்றிச் சிறிதும் கவலாதவராய், துவளாதவராய் தமது மகவுகளுடன் போராட்டத்தில் குதித்தனர், சிறை ஏகினர். பெரியாரின் தலைமையில் நிகழ்ந்த இப்போராட்டத்தின் இறுதியில், கட்டாய இந்திக் கல்வித் திட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது. முதல் கட்டாய இந்தி எதிர்ப்புப் போராட்டம் நிகழ்ந்தகாலை, ஆசிரியப் பணியிலிருந்த தேவநேயனார், தமது கவிதைகள் மூலம் மக்களுக்கு விழிப்புணர்வைத் தூண்டினார். கட்டாய இந்தி எதிர்ப்பின் இன்னொரு முகமாக, அவர், தமிழ்மொழியின் தொன்மை, வளமை குறித்து ஆய்வுக் கட்டுரைகள் தீட்டினார். தமிழ் மொழியோடு ஒப்பிடும்போது, இந்தி மொழியின் இலக்கிய, இலக்கணச் செறிவு எவ்வளவு கீழ்நிலையில் இருக்கின்றது என்பதை, தமது கட்டுரைகளில் விளக்கினார். 1940இல், அவர் எழுதிய ஒப்பியன் மொழிநூல் (இரண்டு தனி நூல்களைக் கொண்டது) ஓர் எழுபது பக்க அறிவார்ந்த  முன்னுரையோடு எழுதப்பட்டு, பாவாணரின் மொழி ஆராய்ச்சிப் புலமையை உலக அறிஞர்கட்கு அடையாளம் காட்டியது.

தந்தை பெரியார் தலைமையில் நடைபெற்ற மொழிப்போர் வெற்றி கண்டவுடன், தேவநேயனார், பெரியார் குறித்து, பத்து அடிகளில் ஒரு பதிகம் பாடினார்.

தமிழன் விடுதலைத் தலைவர் மூவருள்

அமரும் ஈகையர் அறநூல் வள்ளுவர்

தமியின் மொழியினர் தவநன் மறைமலை

இமிழ்தன் மானியர் இராம சாமியார்.

 

அரிய செயல்களை ஆற்று வார்தமைப்

பெரியார் எனச்சொலும் பிறங்கு திருக்குறள்

உரியா இப்பெயர்க் கொருவர் நேரிலே

இரியீ ரோடையர் இராம சாமியார்.

 

இல்லத் திருந்துநல் லின்ப வாழ்வுறும்

செல்வச் சிறப்பினிற் சிறிதும் வேட்டிலர்

வல்லைத் தமக்கென வாழ்வு நீக்கினார்

ஒல்லும் வகையெலாம் உழைக்க இனவர்க்கே.

மல்லைப் பதவிகொள் மாட்சி யிருப்பினும்

அல்லிற் பகலினில் அடுத்த வழியெலாம்

கல்லிற் சாணியிற் கடுத்த வசவுறுஞ்

சொல்லிற் படும்பொறைச் சூர வாழ்க்கையர்.

மலையெ னும்மறை மலையென் அடிகளும்

தலையென் சோமசுந் தரபா ரதியும்பின்

தொலையும் இந்தியைத் தொடர்ந்தெ திர்க்கினும்

நிலைசி றந்ததி ராம சாமியால்.

 

குடிசெய் வார்க்கிலை கூறும் பருவமே

மடிசெய் தேயவர் மானங் கொளக்கெடும்

இடிசெய் உடம்புபல் இடும்பைக் கலமெனத்

துடிசெய் தேயவர் தொண்டு பூண்டுளார்.

 

தான மிட்டதன் தலைவன் நிலைகெட

ஈனச் சூத்திரன் என்னுந் தீயனை

வானங் காட்டென வணங்குத் தமிழன்தன்

மானங் கெட்டுவாழ் வழமை கடிந்துளார்.

 

படிமை மேல்மிகு பாலை யூற்றலும்

குடுமி மலையெரி கோநெய்  கொட்டலும்

கடவுள் தேரினைக் கடத்த லும்முனோர்

கொடமை மடம்பகுத் தறிவில் கோளென்றார்.

 

கட்டுக் கதைகளைக் கடவுள் தொன்மத்தைப்

பிட்டுப் பிட்டவை பிதற்றல் புரட்டலை

வெட்ட வெளிச்சமாய் விளக்கி னார்முனம்

பட்டப் படிப்பெல்லாம் பயனில் குப்பையே.

 

அடருந் தமிழரோ டணையுந் திரவிடர்

மடமைதவிர்ந்துதன் மான வாழ்வுற

இடர்கொள் ஆர்வலர் இராம சாமியார்

கடவுள் இலையெனக் கழறும் எல்லையே.

“செயற்கரிய செய்வர் பெரியர் என்பதற்கு எடுத்துக்காட்டு பெரியார் என்றும், தமிழினத்திற்கெனவே உழைக்க வந்தவர் அவர் என்றும், எதிர்ப்புக் கஞ்சாது தாங்கும் சூர வாழ்க்கையர் என்றும், இந்தியெதிர்ப்பில் தலை சிறந்தவரும், குடி செய்வாராய், மடி செய்யாது, மானங் கருதாது தொண்டு பூண்டவரும் பெரியாரே என்றும், கண்மூடி வழக்கங்கள் மண்மூடிப்போக உழைப்பவரும், பட்டப் படிப்புகள் பயனில் குப்பையாக இருப்பதை மெய்ப்பிப்பவரும் அவரே என்றும், பெரியார் தன்மான இயக்கப் பதிகத்துப் பாடுகிறார்’’ என்று புலவர் இளங்குமரனார் அவர்கள், பாவாணர் கவிதைகள் குறித்த கட்டுரையொன்றில் பாராட்டி எழுதியுள்ளார்.

“கல்லிற் சாணியிற் கடுத்த வசவுறுஞ்

சொல்லிற் படும்பொறைச் சூர வாழ்க்கையர்’’

என்ற வரிகள்தாம், பெரியாரின் தொண்டுள்ளத்தை எவ்வளவு உயர்வாக மதிப்பீடு செய்கின்றன!

தேவநேயனார் 1944 முதல் 1956 வரை, பன்னிரு ஆண்டுகள், சேலம் நகராட்சிக் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றியுள்ளார். இந்தக் காலத்தில் அவர் தனித்துப் பயின்று, 1952இல், தமிழில் முதுகலைப் பட்டம் பெற்றது, அவர் கற்றலில் என்றும் தளர்வுற்றதேயில்லை என்பதைக் காட்டுகிறது.

1955இல் சேலம் தமிழ்ப் பேரவை, பாவாணர் தமிழ்த் தொண்டினைப் பாராட்டி ஓர் விழா நடத்தியது. விழாவிற்குத் தலைமை தாங்கிச் சிறப்பித்த தந்தை பெரியார் பாவாணருக்கு ‘திராவிட மொழிநூல் ஞாயிறு’ என்னும் பட்டமும், ஓர் வெள்ளிக் கேடயமும் அளித்துப் போற்றிப் பேசினார். இன்றும் தேவநேயனார், மொழிஞாயிறு தேவ நேயப்பாவாணர் என்றே அறியப்பட்டுள்ளார்.

1956இல் இருந்து 1961 வரை அய்ந்து ஆண்டுகள், தேவநேயனார் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்மொழி ஆராய்ச்சியாளராகப் பணியாற்றினார். அப்பணியில் அவருக்கு மனநிறைவு கிட்டவில்லை. பணி மூப்புக்குப் பின் அவர் எதிர்பார்த்த பணி நீட்டிப்பும் கிடைக்கவில்லை. அவர் வருமானமின்றி, பல பொருளாதார இடர்ப்பாடுகளைச் சந்தித்துக் கொண்டிருப்பதை அறிந்த தந்தை பெரியார், அவரைத் தேடி வந்து, இருநூறு உரூபா கொடுத்து உதவினார் என்ற செய்தி, பாவாணராலேயே, ‘பாவாணர் நோக்கில் பெருமக்கள்’ என்ற கட்டுரை நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது. 22.8.1977இல், பாவாணர், தாமரைச் செல்வர் வ.சுப்பையா அவர்களுக்கு எழுதிய மடல், அவரது வறிய நிலையைச் சுட்டுவதாய் அமைந்துள்ளது. காலமெல்லாம் தனித்தமிழ்க் கொள்கையினால் குறைந்த சம்பளமே பெற்று வந்திருக்கிறேன். இன்னும் குடியிருக்க வீடில்லை. பொத்தகம் வாங்கப் பணமில்லை என்ற வரிகள், பாவாணர் தனது குறைந்த ஊதியத்தையும், புத்தகம் வாங்கவும், அதன்மூலம் தமிழ்மொழி ஆராய்ச்சியில் தொடர்ந்து ஈடுபடவுமே பயன்படுத்தினார் என்ற உண்மையைத் தருகின்றன. தந்தை பெரியார் பாவாணருக்குச் செய்த உதவியின் ஒவ்வொரு காசும் ஆய்வுக் கருவியாகப் பயன்பட்டிருக்க வேண்டு மென்பதையும், அக்கருவியின் விளைவாக ஆய்வு நூல்கள் வெளிப்பட்டிருக்க வேண்டு மென்பதையும் அந்நூல்கள் தமிழ் மீட்புப் பணிக்கென்று அமைந்த படைக்கலன்களாய்த் திகழ்கின்றன என்பதையும் நம்மால் உணரமுடிகிறது.

பரவலாக, ஒரு சிக்கனவாதியாகவே அறியப்பட்டுள்ள பெரியார் உண்மையில், மற்றவர் துயருறுங்காலை, ஓடிச்சென்று உதவும் மனத்தினராய் இருந்தார் என்ற செய்திதான் அவரை எவ்வளவு உயர்ந்த மனிதராய்க் காட்டுகின்றது! உள்ளத்தில் அன்பைத் தேக்கி வைத்திருந்த காரணத்தினால் தான், பெரியார் தனது உடலை, ஓர், என்பு தோல் போர்த்த உடம்பாகக் கருதாமல், தனது நீண்ட வாழ்நாள் முழுவதும், மக்களுக்குத் தொண்டாற்றிடும் ஆற்றல்மிக்க ஒரு கருவியாகப் பயன்படுத்தினார் என்பதே உண்மை.

பாவாணர், தாம் திருச்சிராப்பள்ளி ஈபர் உயர்நிலைப்பள்ளியில் பணியாற்றிய காலம் தொட்டே, தந்தை பெரியார் அவர்களுடன் மடல் பரிமாற்றத்தில் இருந்திருக்கிறார். ஒருமுறை, பாவாணர், அரைக்கால் உரூபா நாணயத்தில், இந்தி எழுத்தும், தெலுங்கு எழுத்தும் இருந்தபோது, தமிழ் எழுத்து மட்டும் இல்லாமை பற்றிக் கிளர்ச்சி செய்ய வேண்டுமென்று பெரியாருக்கு மடல் வரைந்தார். அதற்கு பெரியார் அவர்கள், “நான் உங்களைப் போற் பண்டிதனல்லேன். பொதுமக்களிடம் தொண்டு செய்து, அவர் மூடப் பழக்கவழக்கங்களைப் போக்குபவன். நீங்களும் உங்களைப் போன்ற பண்டிதரும் சேர்ந்து அக்கிளர்ச்சி செய்யுங்கள்’’ என்று பதில் எழுதிவிட்டார். பெரியாரது பணி இந்தியை எதிர்த்தது, ஆரியச் சூழ்ச்சியைக் கண்டித்தது, தமிழ் திராவிடர் நல்வாழ்விற்கு வழி வகுத்தது, இவற்றோடு சிக்கனம் கருதி, ‘விடுதலை’, ‘குடிஅரசு’ இதழ்களில் சில எழுத்து வடிவங்களை மாற்றியதும் ஆகுமாம்.

பாவாணர் தமது சிறு வயதிலிருந்தே இசைத் தமிழைப் பயின்றார். பண்கள், மெட்டுகள் இவற்றின் சிறப்புக் குறையாமல், ஏராளமான கவிதைகளை வடித்த வித்தகராயும் விளங்கினார். 1924இல், அதாவது அவரது 22ஆம் அகவையில், அவர் சென்னை, திருவல்லிக்கேணி, கெல்லட் உயர்நிலைப் பள்ளியில் பணியாற்றியபோதே, இனிமையான பண்களில் தோய்ந்த பாடல்களைச் செய்யும் தேர்ச்சி பெற்றிருந்தார். ஒரு சில ஆண்டுகள் கழித்து அவர் மன்னார்குடியிலுள்ள பின்லே கல்லூரியிலும், உயர்நிலைப் பள்ளியிலும் பணியாற்றிய வேளையில், அங்கிருந்த இசைப் பெரும்புலவர் இராசகோபாலரிடம் மேலும் முறையாக இசை பயின்று, இத்துறையில் தமது திறமைகளை மேம்படுத்திக் கொண்டு பின்னாளில், தனது இணையர் நேயமணி அம்மையார் மறைந்தபோது அவரது நினைவாக ஒரு கலம்பக நூலைச் செய்து, அதில் இசையாசிரிய வணக்கமும் பாடியுள்ளார். இது, அவர் இசைத்தமிழின் பெருமையை உலகெலாம் பரப்பிய பெருந்தொண்டில் ஒரு குறிப்பிடத்தக்க பங்களிப்பாகும். பாவாணர், பெரியார் என்னும் தலைப்பில் தந்தை பெரியார் குறித்து காப்பி பண்ணிலும் முன்னை (ஆதி) தாளத்திலும் ஓர் அழகிய கவிதை படைத்துள்ளார்.

பெரியார்

பண் – ‘காப்பி’  தாளம்  முன்னை (ஆதி)

செயற்கரிய செய்தவர் பெரியார் – செம்பொற்

சிலைபெறும் புகழுக்கே சிறப்பாக வுரியார்

 

மயற்கை யொடுமடமை அரியார் – பல

மதகரி களுக்கே கோடரியார்

 

பையற் பருவத்துஞ் சாமி யென்று – வட

               பார்ப்பனர் பாதத்தில் விழுந்து

கையிற் பொருள் காணிக்கையாத் தந்து – மிக்க

               களிக்கும் வழக்கம்போம் விழுந்து

 

உண்டிச் சாலை யுள்ளறை யுண்டு – பின்னே

               ஒழிந்த வேதியன் எச்சில் நன்று

உண்டுவந்தான் தமிழன் அன்று – அதை

               ஒழித்தவர் பெரியாரே வென்று

 

சூத்திரன் தமிழனாய்ச் சொல்லி – அவன்

               சொந்த நாட்டிலவனைத் தள்ளி

மேல்தொடுவது மின்றி யெள்ளி – நூலன்

               மிதித்த நிலைக்கு வைத்தார் கொள்ளி.

பாவாணரின் பன்முக ஆற்றலுக்கு இக்கவிதை ஒரு சிறப்பான சான்றாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *