சாலையைக் கடக்கிற போது கைப்பேசி பேசிக் கொண்டே போகிறவர்கள் தங்களுக்கு மட்டுமல்ல, மற்றவர்களுக்கும் ஆபத்தை ஏற்படுத்தக் கூடியவர்கள். சீனாவில் இப்படி பொறுப்பின்றி கைப்பேசி பேசிக்கொண்டோ, தகவல் அனுப்பிக்கொண்டோ, படம் பார்த்துக் கொண்டோ சாலையைக் கடந்தால் 50 யுவான் வரையில் அபராதம் செலுத்தத் தயாராக இருக்க வேண்டும்.
விநோத சட்டம்
மாபெரும் பொருளாதார வீழ்ச்சிக்கும் இரண்டாம் உலகப் போருக்கும் பிறகு ஆஸ்திரேலியாவில் உணவுப் பொருள்கள் தட்டுப்பாடு ஏற்பட்ட சூழலில் ஒரு சட்டம் கொண்டுவரப்பட்டது. அதன்படி ஒருவர் தனது வண்டியில் எவ்வளவு உருளைக்கிழங்கு கொண்டு செல்லலாம் என்று வரம்பு நிர்ணயிக்கப்பட்டது. இப்போதும் அந்தச் சட்டவிதி இருக்கிறது. அனுமதி பெறாமல் காரில் 50 கிலோவுக்கு மேல் உருளைக்கிழங்கு கொண்டு சென்றால் 2,000 ஆஸ்திரேலிய டாலர் அபராதம். அதே குற்றத்தை மறுபடி செய்து பிடிபட்டால் 5,000 டாலர் செலுத்த வேண்டும்.
தொழில் நுட்பச் சட்டம்
இன்று நவீன தகவல் தொடர்புத் தொழில்நுட்பத்தில் கம்பியில்லா மெய்நிலை அல்லது அருகலை எனப்படும் ‘வைஃபை’ இணைப்பு முக்கியமானதாகியிருக்கிறது. சிங்கப்பூரில் ஒருவருடைய ஒப்புதலின்றி அவருடைய வைஃபை இணைப்பில் தொடர்பு ஏற்படுத்திக்கொண்டால் அதற்கு 10000 சிங்கப்பூர் டாலர் அபராதம், அல்லது மூன்றாண்டு சிறை அல்லது இரண்டும் சேர்ந்த தண்டனை என அந்த நாட்டின் கணினி தவறான பயன்பாடு மற்றும் இணையப் பாதுகாப்புச் சட்டம் சொல்கிறது.
கொரோனா தடுப்புப் பணியில் ரோபோ
ஜப்பான் நாட்டில் கடையில் ரோபோ ஒன்று கொரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டு வருவது வாடிக்கையாளர்களை பெரிதும் கவர்கிறது. ரோபோ வாடிக்கையாளர்களுடன் கொரோனா தடுப்பு நடவடிக்கை பேசி அசத்துகிறது. கடைக்குள் வரும் வாடிக்கையாளர்களிடம் முகக் கவசங்கள் அணிதல், சமூக இடைவெளியைக் கடைப்பிடித்தல் உள்ளிட்டவற்றை பின்பற்றும்படி கூறுகிறது. இதற்காக ரோபோவுடன் இணைக்கப்பட்டுள்ள கேமிரா மற்றும் முப்பரிமாண லேசர் அலைக்கற்றை தொழில்நுட்ப உதவியுடன் இந்தப் பணிகளை ரோபோ மேற்கொள்கிறது. மேலும் கடையில் வாடிக்கையாளர்கள் தேவையான உடைகளைத் தேர்வு செய்யவும் இந்த ரோபோ உதவி புரிகிறது.
மோக்சியின் சாதனை
செவ்வாய்க் கோளுக்கு அனுப்பப்பட்ட பெர்சிவியரன்ஸ் என்ற அமெரிக்க விண்கலத்துடன் சேர்ந்து இறங்கியுள்ள மோக்சி எனும் ஆய்வு வாகனம் செவ்வாய்க் கோளின் வளி மண்டலத்திலிருந்து ஆக்சிஜனைப் பிரித்தெடுப்பதில் வெற்றி கண்டுள்ளது. இந்த வளி மண்டலம் பலவீனதுமானதும் நச்சுத்தன்மை கொண்டதுமாகும். ஏப்ரல் 20 அன்று செய்யப்பட முயற்சியில் அய்ந்து கிராம் ஆக்சிஜனை மோக்சி தயாரித்துள்ளது. இது ஒரு விண்வெளி வீரர் பத்து நிமிடம் சுவாசிக்கப் போதுமானது.