வரலாற்றுச் சுவடு : மூவலூர் இராமாமிர்தம் அம்மையார்

ஜுன் 16-30 ,2021

தேவதாசி முறை ஒழிப்பில் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார்!

திருவாரூருக்கு அருகில் பாலூரில் 1883ஆம் ஆண்டு கிருஷ்ணசாமி – சின்னம்மாளின் மகளாகப் பிறந்தார். கிருஷ்ணசாமி மனவேதனையில் வீட்டை விட்டுச் சென்றுவிட, வறுமையில் வாடிய சின்னம்மாள் குழந்தையை (இராமாமிர்தத்தை) 10 ரூபாய் பணத்துக்கும் ஒரு பழைய புடவைக்கும் தாசிகுல பெண்ணிடம் விற்றுவிட்டார்.

அப்போது இராமாமிர்தத்திற்கு வயது 5

இவருக்கு 7 வயதானதும் தாசித் தொழிலில் ஈடுபடுத்த சடங்கு செய்தனர். மூவலூரில் உள்ள திண்ணைப் பள்ளியில் படித்தார், கூடவே சுயம்பு பிள்ளையிடம் நாட்டியம் பயின்றார். ஆடல்பாடலில் வல்லவரானார். 17 வயதான நிலையில் 60 வயது கிழவர் இவரைத் திருமணம் செய்ய முயன்றபோது, இவர் தன் குருவான சுயம்பு பிள்ளையைத் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு சீனிவாசன், செல்லப்பா என்று இரு ஆண் பிள்ளைகளும் ஒரு பெண் பிள்ளையும் பிறந்தன.

இராமாமிர்தம் தொடக்க காலத்தில் தந்தை பெரியாருடன் காங்கிரஸ்காரராகப் பணியாற்றினார். காஞ்சிபுரம் மாநாட்டில் காங்கிரஸைவிட்டு பெரியார் வெளியேறியபோது இவரும் வெளியேறினார். பின் சுயமரியாதை இயக்கப் பணிகளில் தந்தை பெரியாருக்குப் பெருந்துணையாய் இருந்தார். சுயமரியாதை மாநாடுகளுக்கு, தேவதாசிப் பெண்களை அதிகளவில் அழைத்துவந்தார். தேவதாசி முறை ஒழிக்கப்பட வேண்டும் என்பது சுயமரியாதை இயக்கத்தின் முக்கியக் கொள்கையாய் இருந்தது. 1944ஆம் ஆண்டு சேலத்தில் நடந்த நீதிக்கட்சி மாநாட்டில் அம்மையார் கலந்துகொண்டார். இந்தி எதிர்ப்பு முதல் சுயமரியாதை இயக்கக் கொள்கைகளைப் பரப்பும் பணியில் தீவிரமாக ஈடுபட்டார்.

முத்துலட்சுமி ரெட்டியின் முன்னோடி:-

தேவதாசி முறை ஒழிப்பில் முத்துலட்சுமி ரெட்டிக்கு மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் முன்னோடியாவார். காங்கிரஸில் இருக்கும் போதே 1925இல் மாயவரத்தில் (மயிலாடுதுறை) தேவதாசி ஒழிப்பு மாநாடு கூட்டினார். கட்டுரை, கதை போன்றவற்றை எழுதி விழிப்பூட்டினார்.

‘குடிஅரசு’ இதழில் (13.12.1925) “தேவதாசிகளுக்கு ஓர் எச்சரிக்கை’’ என்ற கட்டுரையில் தன் சொந்த அனுபவங்கள் பற்றி எழுதி விழிப்பூட்டினார்.

தந்தை பெரியாரும், மூவலூர் இராமாமிர்தம் அம்மையாரும் ஊட்டிய விழிப்புணர்வின் விளைவாய் டாக்டர் முத்துலட்சுமி அம்மையார் தேவதாசி முறை ஒழிப்பை சட்டபூர்வமாகச் செய்ய முனைந்தார். சட்டசபையில் மசோதா கொண்டுவந்து, சத்தியமூர்த்தி அய்யரின் எதிர்ப்பையும் வென்று சட்டத்தை நிறைவேற்றினார். இதற்கு மூவலூர் அம்மையார் முழு ஒத்துழைப்பையும் தந்தார்.

“தாஸிகள் மோசவலை அல்லது மதிபெற்ற மைனர்’’ என்ற நாவலையும், “தமயந்தி’’ என்ற சிறுகதையும் எழுதினார். இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் தீவிரமாகப் பங்கு கொண்டார். 14.11.1938இல் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் பங்கு பெற்றமைக்கு கைது செய்யப்பட்டு சிறை சென்றார். எண்பது வயதைக் கடந்த அம்மையாரின் பொதுப்பணி அளவிடற்கரியது. தாய்க்குலத்திற்கும், தமிழ்மொழிக்கும், சமுதாயப் புரட்சிக்கும், தன்மான இயக்கத்திற்கும் அவர் இறுதிவரை உழைத்தவர் என்ற சிறப்புக்குரிய இப் பெருமாட்டி 27.6.1962ஆம் நாள் மறைந்தார்.

‘அறப்போர் இதழ்’, ‘அம்மா போய் விட்டார்கள்’ (6.7.1962, பக்கம் 2) என்று அவர் மறைவுச் செய்திக் கட்டுரை வெளியிட்டு, அவருடைய சிறப்புகளை நினைவு கூர்ந்துள்ளது. தமிழ்நாடு முதல்வர் டாக்டர் கலைஞர் மு.கருணாநிதி அவர்கள், மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் மறைவுக்கு 27.06.1962ஆம் நாள் ‘முரசொலி’ இதழில் எழுதிய தலையங்கத்தில்,

வீரத்தாயை இழந்தோம்

பால் நுரைபோல் தலை

தும்பை மலர் போல் உடை!

கம்பீர நடை!

கனல் தெறிக்கும் பேச்சு!

அனல் பறக்கும் வாதத்திறன்!

அநீதியைச் சுட்டெரிக்க சுழலுகின்ற கண்கள்!

அடிமை விலங்கு தகர்த்தெறிய ஆர்ப்பரிக்கும் உள்ளம்!

ஓயாத பணி! ஒழியாத அலைச்சல்!

என்று பாராட்டினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *