பிறந்த நாள் : 25.6.1931
நம் நாட்டில் வி.பி.சிங் அவர்கள் பிரதமராக இருந்தது வெறும் 11 மாதங்கள் 8 நாள்கள் மட்டுமே. ஆனால், காலத்துக்கும் ஏன் அவர் நினைவுகூரப்படுகிறவராக இருக்கிறார்?
அவருடைய சமூகநீதிக் கொள்கையும், அதனை செயல்படுத்திய உறுதியாலும், அவர் என்றென்றும் மக்களால் போற்றப்பட்டு வருகிறார்.
1989இ-ல் மக்களவைத் தேர்தல் நடக்க இருந்தது. தமிழ்நாட்டுக்கு வந்து கருணாநிதியைச் சந்தித்தார் வி.பி.சிங். தி.மு.க., ஜனதா தளம், தெலுங்கு தேசம், அசாம் கன பரிஷத் ஆகிய கட்சிகளை ஒருங்கிணைத்து, ‘தேசிய முன்னணி’ என்கிற கூட்டணியை உருவாக்கி, அந்தத் தேர்தலைச் சந்தித்தார். அவருடைய கூட்டணிக் கட்சி 143 இடங்களைக் கைப்பற்றியது. ஆனாலும், அவருக்குப் பெரும்பான்மை கிடைக்கவில்லை. பி.ஜே.பி. கட்சி மற்றும் இடதுசாரிகள் வெளியிலிருந்து ஆதரவு அளித்ததால், வி.பி.சிங் பிரதமராகப் பதவி ஏற்றார்.
தன்னுடைய ஆட்சியில் அண்ணல் அம்பேத்கருக்கு பாரத ரத்னா பட்டம் வழங்கினார். அது மட்டுமின்றி, நாடாளுமன்றத்தில் அம்பேத்கரின் படத்தை இடம்பெறவும் வைத்தார். காவிரி நதிநீர் பங்கிடுதலில் இனியும் பிரச்னை வரக்கூடாது என்று முதன்முதலில் காவிரி நடுவர் மன்றம் ஆரம்பித்தார். இத்தகைய தருணத்தில் வி.பி.சிங்கிற்கு ஆதரவு கொடுத்ததை அறுவடைசெய்யும் விதமாக, பி.ஜே.பி கட்சி தனது இந்துத்துவா பரவலாக்கத்தை அவர்மூலம் சாத்தியப்படுத்த நினைத்தது. ஆனால் வி.பி.சிங், அதற்கு இசைந்து கொடுக்காததனால் அவருக்கு நெருக்கடி கொடுக்க ஆரம்பித்தார்கள். ஆனாலும், வி.பி.சிங் எதற்கும் அஞ்சவில்லை.
‘’பிற்படுத்தப்பட்ட மக்களின் பட்டியல் இந்தியாவிடம் இல்லை. அரசாங்கம் அம்மக்களைக் கண்டறிந்தால் மட்டுமே அவர்களுக்கான இடஒதுக்கீடு கிடைக்கும்‘’ என்றார் அண்ணல் அம்பேத்கர். அவர் கூறி 28 ஆண்டுகளுக்குப் பிறகு பிரதமராகப் பொறுப்பேற்ற மொரர்ஜி தேசாய், பி.பீ.மண்டல் என்கிறவர் தலைமையில் ஓர் ஆணையம் அமைத்தார். அந்த ஆணையம் சுமார் இரண்டு வருடங்கள் நாடு முழுவதும் மாநில அரசுகளின் உதவியுடன் ஆய்வு நடத்தி அறிக்கை சமர்ப்பித்தது.
ஆனால், அப்போதைய காங்கிரஸ் அரசு அந்த அறிக்கையின்படி இடஒதுக்கீட்டுக் கொள்கையை அமல்படுத்தத் தயங்கியது. ஏறத்தாழ பத்தாண்டுகள் மக்களின் உரிமைகள் கிடப்பில் கிடந்தன. அத்தகையதொரு சூழலில்தான் நீண்டகாலம் கிடப்பில் இருந்த மண்டல் கமிஷன் பரிந்துரை செய்ததை, மக்களின் உரிமைக்கான திட்டத்தைத் தைரியமாக அமல்படுத்தினார் வி.பி.சிங்.
வி.பி.சிங், பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இடஒதுக்கீடு வழங்கியதால், இந்தியா முழுக்க பெரிய அளவில் போராட்டங்கள் நிகழ்ந்தன. ஒருபக்கம் நெருக்கடி அதிகரித்துக் கொண்டு போனது. மறுபக்கம், காங்கிரஸ் கட்சியும் அவர் ஆட்சியிலிருந்து வெளியேறுவதற்கான வேலையை மௌனமாகப் பார்த்துக் கொண்டிருந்தது; தனக்கு ஆதரவு வழங்கிய பி.ஜே.பி.-யும் தன் பங்குக்கு நெருக்கடியை மேலும் அதிகரித்தது. வி.பி.சிங் எதற்கும் அசரவில்லை. அயோத்தியில் ராமர் கோயில் கட்ட ரத யாத்திரை மேற்கொண்ட பி.ஜே.பி. தலைவர் அத்வானி கைது செய்யவும் வாரன்ட் பிறப்பித்தார். இதனால் வெகுண்டெழுந்த பி.ஜே.பி., தன்னுடைய ஆதரவை விலக்கிக் கொண்டதால், வி.பி.சிங் தலைமையிலான அரசு ஆட்சியை இழந்தது.
அதற்குப் பிறகு, 1996ஆ-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் ஐக்கிய முன்னணியின் ஆட்சி அமைத்தபோது, வி.பி.சிங் பிரதமர் பதவி வகிக்க வேண்டுமெனத் தலைவர்கள் சிபாரிசு செய்தார்கள். ஆனால், வி.பி.சிங் மறுத்துவிட்டார். சிறுநீரகக் கோளாறு, ரத்தப் புற்று ஆகியவற்றால் பாதிக்கப்பட்ட வி.பி.சிங், வேறு வழியின்றி பொது வாழ்க்கையில் இருந்து தன்னை துண்டித்துக்கொண்டு, நோயினால் அல்லலுற்றார். 2008ஆ-ம் ஆண்டு, டெல்லியிலுள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அவர் இறந்தார். ஒரு நல்ல தலைவன் ஆட்சிபுரிந்த காலங்கள் குறைவெனினும், தன் குடிமக்களால் அவன் என்றென்றும் நினைவுகூரப்படுவான் என்பதற்கு நித்திய உதாரணம் வி.பி.சிங்.