Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

ஆசிரியர் பதில்கள் : எழு பேர் விடுதலை நிச்சயம்

கே:       திருமணம் என்பது ஒப்பந்தமல்ல; அது சடங்குகளுடன் கூடிய பந்தம் என்று உயர்நீதிமன்ற நீதிபதி கூறியுள்ளது பற்றி தங்கள் கருத்து என்ன?

                – அ.குமார், வந்தவாசி

ப:           இந்துமதக் கண்ணோட்டத்தில் _ ‘இந்து லா’ என்ற சட்டப்படி வரையறுக்கப்பட்டதை _ பழைய கருத்தை _ அதில் மிகுந்த ஈடுபாடு உள்ள காரணத்தாலோ என்னவோ அப்படி ஓர் உயர்நீதிமன்ற நீதிபதி அவர்கள் (அவரது கருத்தைக்) கூறியுள்ளார்.

                ஆனால், திருமணத் தனி சட்டம்(Special Marriage Act) மற்றும் சுயமரியாதைத் திருமணச் சட்டம், திருமண விலக்கு  (Divorce) சட்டம் ஆகியவை வந்த பிறகு அப்படி கருத முடியுமா? சனாதனக் கருத்து. இன்றைய சட்டமும் பல உச்சநீதிமன்ற தீர்ப்புகளும் அதற்கு மாறாகவே உள்ளன என்பதே யதார்த்தம்.  

கே:       தமிழ்நாடு அரசைக் கலைப்பேன் என்ற சுப்ரமணியசாமி மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க முடியுமா?

                – க.ல.சங்கத்தமிழன், செங்கை

ப:           தமிழ்நாடு முதல் அமைச்சர், மக்கள் வழங்கிய தீர்ப்பால் ஜனநாயக வேகப் பேருந்தினை ஓட்டிச் செல்லுகிறார். காலத்தோடு போட்டியிட்டு, கடமையாற்றி வென்று வருகிறார். இதைக்  காணச் சகியாது சில குக்கல்கள் குரைத்துக் கொண்டே ஓடி வருகின்றன போலும். அதனைப் பொருட்படுத்த மாட்டார்கள் ஓட்டுநரும், பயணிகளும். முகவரி தேடும், மீடியா வெளிச்ச மனநோயாளிகளைப் பொருட்படுத்தாதீர்! ஏன் உங்கள் நேரத்தை வீணாக்குகிறீர்கள்?

கே:       நீட் தேர்வு உண்டா? இல்லையா? என்கிற மாணவர் குழப்பம் தீர தமிழ்நாடு அரசு என்ன கூற வேண்டும்?

                – த.மாணிக்கம், தஞ்சாவூர்

ப:           தமிழ்நாடு அரசு ஜஸ்டிஸ் ஏ.கே.ராஜன் குழுவை நியமித்து கருத்துரை பெற்று, செயல்படத் துவங்கிவிட்டதே. இதில் குழப்பத்திற்கு ஏது இடம்? ஒன்றிய அரசு, மாநில அரசு போன்றவற்றின் செயல்முறை, அரசியல் சட்ட நடைமுறை _ கொரோனா காலத்துச் சூழல் _ எல்லாம் கணக்கில் எடுத்துக்கொண்டு தமிழ்நாடு அரசு அதன் கடமையைச் செய்ய மிகுந்த கவனத்துடன் செயல்படுகிறது!

கே:       முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் வானளாவிய புகழ், அவர் கட்சியில் உள்ளவர்களால் கெடாதவகையில் அவர்கள் செயல்பட, தாய்க்கழகத் தலைவர் தாங்கள் அறிவுரை வழங்குவீர்களா?

                – ப.கன்னியப்பன், வேலூர்

ப:           நம்முடைய முதல் அமைச்சர் பல கண்களுடனும், பல காதுகளுடனும் செயல்படும் வல்லமையோடு ஆளுவதால், எதையும் கீழிறக்கத்திற்கு ஒருபோதும் விடமாட்டார். அடக்கமும் உறுதியும், எதிலும் நிதானமும் தெளிந்த போக்கும் அவரது தனித்தன்மை!

கே:       +2 தேர்வை ரத்து செய்த ஒன்றிய அரசு, நீட் தேர்வை நடத்த முடிவு செய்திருப்பது முரண் என்று நீதிமன்றத்தில் தடை பெற முடியுமா?

                – கா.தமிழ்மணி, மதுரை

ப:           மக்கள் மன்றத்தை நம்புவதே சாலச் சிறந்தது. அதுதான் இறுதித் தீர்ப்பளிக்கும் மன்றம்.

கே:       15 ஆண்டுகளுக்கு மேல் ஆயுள் தண்டனை பெற்ற அனைவருக்கும் விடுதலை என்று தமிழ்நாடு அரசு ஆணையிட்டால், 7 பேர் விடுதலை பெற வாய்ப்பு வருமா?

                – தீ.வேலுச்சாமி, தூத்துக்குடி

ப:           நிச்சயம் வரும். நம்பிக்கையோடு இருப்போம் _ விடியலை நோக்கி!

கே:       எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்தால் பா.ஜ.க. அரசைப் பணிய வைக்கலாம் என்பதைத்தானே தடுப்பூசி கொள்கை மாற்றம் உணர்த்துகிறது?

                – கோ.குமரன், திருச்சி

ப:           ஆம்! அதிலென்ன அட்டி? உலகம் உணர்ந்து கொண்டதே!

கே:       ‘கேரள தேவசம் போர்டு’க்கு பட்டியலினம் சார்ந்த ஒருவரை கேரள அரசு அமைச்சராக நியமித்திருப்பது பற்றி தங்களின் எண்ணம் என்ன?

                – வே.ஆறுமுகம், அரியலூர்

ப:           வரவேற்க வேண்டிய _ பாராட்ட வேண்டிய செயல். காமராசர் முன்பே வழிகாட்டியுள்ளாரே _ பி.பரமேஸ்வரனை அமைச்சராக்கி! கேரளத்தில் நடைபெறுவது ஒரு மவுனப் புரட்சி! முதல்வர் பினராயி விஜயனைப் பாராட்ட வேண்டும்!

கே:       ‘ஒன்றிய அரசு என்பதை ஏற்பீர்களா?’ என்னும் கேள்விக்கு அன்புமணி ராமதாஸ் அவர்கள், “இல்லை, நான் மத்திய அரசு என்றுதான் கூறுவேன்’’ என்று கூறியது பற்றி தங்கள் கருத்து?

                – ஜெ.ச.நந்தினி, மதுராந்தகம்

ப:           தமிழில் உண்மையான பற்றுள்ளவர்கள் ‘ஒன்றிய அரசு’ என்பதுதான் சரியான வார்த்தை என்பார்கள்! அரசமைப்புச் சட்டத்தில் அவர் சொல்லும் சொல் இல்லாத ஒன்று! அரசமைப்புச் சட்டம் சொல்லுவது ‘ஒன்றிய அரசு’ என்பதே! பிரச்சினை என்று வந்ததால் இந்த விளக்கம்.