கவிஞர் கலி பூங்குன்றம்
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் (த.மு.மு.க.) சார்பில் “மக்கள் உரிமை’’ இதழின் ஈகைத் திருநாள் சிறப்பு மலர் _ 2021 _ மதிப்புரைக்காக ‘விடுதலை’ ஏட்டுக்கு வந்ததைப் படித்தோம்.
“ஆம் _ இவர்கள் தீவிரவாதிகள்’’ (தமிழ் கேள்வி ஆசிரியர் தி.செந்தில்வேல்) எனும் கட்டுரையைப் படித்தபோது மனம் நெகிழ்ந்து போனது.
‘மதம்’, ‘மதம்’ என்று ஒரு கூட்டம் மதம் பிடித்து அலைகிறதே _ சிறுபான்மையினர் என்றால் சிறிதும் இரக்கமின்றிப் படம் எடுத்துச் சீறுகிறார்களே _ என்ற எண்ணம்தான் இதயக் கூட்டின் அம்பறாத் தூணியிலிருந்து ஒரு கணை அர்த்தம் தோய்ந்து வெளியில் வந்தது.
கட்டுரை ஆசிரியர் இஸ்லாமியர் அல்லர் _ இதோ அவர் எழுதுகிறார்:
தானே புயல், வர்தா புயல், ஒக்கி புயல் என்று புயல்களால் தமிழ்நாடு பாதிக்கப்பட்டிருந்த காலகட்டத்திலும் சரி, சென்னை பெருமழை வெள்ளக் காலகட்டத்திலும் சரி, இஸ்லாமியர்களின் உதவிக்கரம் பலரின் கண்ணீரைத் துடைத்தது.
அந்த நாள் என் வாழ்வில் மறக்க முடியாத நாள். சென்னையில் பெருமழை. நான் குடியிருந்த ஆலம்பாக்கம் வீட்டிற்குள் தண்ணீர் வரத் தொடங்கியது. கைக்குழந்தை, வயதான தந்தை, மனைவி இவர்களோடு என்ன செய்வது என்று விழி பிதுங்கி நின்ற நேரத்தில் நண்பர் கௌரா பதிப்பகம் ராஜசேகர் நேரில் வந்து அனைவரையும் அவர் இல்லத்திற்கு அழைத்துச் சென்றார்.
செல்லும் வழியிலேயே நான் ‘நியூஸ் 7 தமிழ்’ அலுவலகத்தில் இறங்கி விட்டேன். சென்னையில் பெருவாரியான இடங்களில் மின்சாரம் இல்லை. தொலைத்தொடர்பு சேவை இல்லை. நியூஸ்7 அலுவலகத்தில் இருந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கும், உதவி செய்ய நினைத்த மக்களுக்கும் பாலமாக இருக்க எண்ணி, ‘அந்தப் பாலம்’ என்ற ஒன்றைத் தொடங்கி மக்களின் உதவிகளைப் பெற்று பாதிக்கப்பட்டோருக்குக் கொடுக்கத் தொடங்கினேன்.
பல லட்ச மதிப்புள்ள பொருள்கள் வந்து குவிந்தன. அனைத்தையும் மக்களுக்குக் கொண்டு சேர்த்தேன். இதில் பெருமளவு உதவிக் கரம் நீட்டியவர்கள் இசுலாமியர்கள். தங்கள் பெயர் வெளியில் தெரிவதை முற்றிலும் தவிர்த்து உதவி செய்வதில் மட்டுமே நாட்டமாக இருந்தனர். பால், தண்ணீர், ஆடைகள், மருந்துகள் என எதைக் கேட்டாலும் அள்ளிக் கொடுத்த அந்த நல்ல உள்ளங்கள், அதோடு நிற்காமல், களத்தில் இறங்கி, மழை வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியின்போது சிலர் இறந்தும் போயினர். இத்தனைக்குப் பிறகும், அவர்களின் உதவி நிற்காமல் தொடர்ந்தது. சித்ரா என்ற இந்து சகோதரி நிறைமாத கர்ப்பிணி. அச்சமயத்தில் அவருடைய பிரசவத்திற்கு பெரும் உதவியாய் இருந்த சகோதரர் யூனுஸ் பெயரை தன் பெண் குழந்தைக்குச் சூட்டி தன் நன்றியைத் தெரிவித்தார் அவர். மத நல்லிணக்கத்திற்கான இதுபோன்ற ஏராளமான சான்றுகள் தமிழ்நாடு முழுவதும் பரவிக் கிடக்கின்றன.
இவை மட்டுமா? இசுலாமியரின் வழிபாட்டுத் தலங்கள் அனைத்தும் திறந்து வைக்கப்பட்டு, அங்கே அனைத்து மத சகோதரர்களையும் தங்க வைத்து விட்டு சாலையில் தங்கள் பிரார்த்தனைகளை ஏற்றெடுத்த சமூகத்தைப் பார்த்து உலகமே வியந்து நின்றது.
இயற்கைப் பேரிடரிலாவது தொற்று பரவும் அபாயம் மிக மிகக் குறைவு. ஆனால், உலகையே உலுக்கிக் கொண்டிருக்கும் கொரோனா காலத்திலும் மரணத்திற்கு அஞ்சாமல் மனிதநேயப் பணியைத் தொடரும் இசுலாமிய சமூகத்தை எத்துனை வாழ்த்தினாலும் போதாது. உறவுகளே கொரோனாவால் இறந்தவரின் சடலத்தைத் தொட அஞ்சி நடுங்கும் வேளையில், கொரோனாவால் இறந்தவர்களை அவர்களின் நம்பிக்கைபடியே அடக்கம் செய்யும் பணிகளை வேறு யாரால் செய்ய முடியும்!
குஜராத்தில் இசுலாமியர்களின் மீது நடத்தப்பட்ட கொலை வெறித் தாக்குதலும், அந்தக் கலவரத்தில் நடந்த இதயத்தை உலுக்கும் கொடூரங்களும் யாராலும் என்றைக்கும் மறக்க முடியாதவை. அந்த மாநிலத்தில், இந்துக்களும் வந்து சிகிச்சை எடுத்துக் கொள்ள ஏதுவாக பள்ளிவாசல்களை மருத்துவமனைகளாக மாற்றியுள்ளனர் குஜராத் இசுலாமியர்கள். அவர் நாண நன்னயம் செய்துள்ளார்கள் என்றே சொல்லலாம்.
ஓ-_2வுக்காக (ஆக்சிஜன்) நாடே ஏங்கிக் கொண்டிருக்கும்போது, ஓட்டுக்காக மேற்கு வங்கத்தில் முகாமிட்டிருக்கிறார் உள்துறை அமைச்சர் அமித்ஷா. இந்தியா முழுமையையும் விடுங்கள். இந்துக்களின் பாதுகாவலர்கள் என்று சொல்லிக்கொள்ளும் இவர்கள் குறைந்தபட்சம் இந்துக்களையாவது பாதுகாத்திருக்கிறார்களா என்றால் இல்லை என்பதே உண்மை. எந்த இந்துக்களை இவர்களின் அரசியல் லாபத்திற்காக இசுலாமியர்களுக்கு எதிராகத் தூண்டி விடுகிறார்களோ, அதே இந்துக்களுக்காக உதவிக்கரம் நீட்டுகின்றனர் இசுலாமியர்கள். பெரும்பான்மை இந்துக்கள் இதைப் புரிந்தே வைத்துள்ளோம். அந்தப் புரிதலில் இருந்து ஒன்றைச் சொல்லி நிறைவு செய்கின்றேன்.
எல்லா பள்ளிவாசல்களையும்
இடித்து விடாதீர்கள்…
இயற்கைப் பேரிடர் காலங்களில்
இந்துக்களுக்கும் அதுதான் தங்குமிடம்…
இசுலாமியர்களின் உதிரத்தை உறிஞ்சி விடாதீர்கள்…
விபத்துக்காலங்களில் அவர்களின் உதிரக்கொடை
உங்களுக்கு உதவக்கூடும்…
மதங்களை மனதில் வைப்போம்… மனித நேயத்தை மண்ணில் விதைப்போம்…
(மே 14, 2021, பக்கம் 11, மக்கள் உரிமை)
நெஞ்சை நெகிழச் செய்யும், மதங்களைக் கடந்த மனிதநேயத் தேன் கூட்டிலிருந்து சொட்டிய சுவையை ருசித்து அசைபோட்ட தருணத்தில் _ நாட்டில் நடந்த பல நடப்புகள் நம் நெஞ்சக் கதவைத் தட்டி, தேனிசை பாடின.
ஏடுகளில் வந்த செய்திகள்தாம் அவை:
புதுச்சேரி மாநிலம் _ முத்தியால்பேட்டை முதியவர், முதலியார்பேட்டையைச் சேர்ந்த முதியவர், விழுப்புரம் மாவட்டம் குமளம் கிராமத்தைச் சேர்ந்த முதியவர் ஆகியோர் கரோனாவால் மரணமடைந்த நிலையில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பினர் (இஸ்லாமியத் தோழர்கள்) இந்து முறைப்படி அவர்கள் அடக்கம் செய்தனர்.
(‘தி தமிழ் இந்து’ 13.6.2020, பக்கம் 4)
பட்டுக்கோட்டை பா.ஜ.க. தலைவர் கருணாநிதியின் உடலை அடக்கம் செய்தது த.ம.மு.க.
திருப்பதி இஸ்லாமிய குழுவினர் கரோனாவில் இறந்த அனாதைகளை சொந்த செலவில் அடக்கம் செய்தனர்.
(‘தி தமிழ் இந்து’ 14.5.2021, பக்கம் 9)
கரோனா பாதிப்பால் இறந்தவர்களின் உடல்களை மயானத்துக்குக் கொண்டு சேர்க்கும் பணியினை +2 மாணவர் ஒருவர் மேற்கொண்டு வருகிறார். டில்லியில் சீலாம்பூரைச் சேர்ந்த மருத்துவம் படிக்க விரும்பும் +2 மாணவர் சந்த் முகம்மது.
(‘தினமலர்’ 18.6.2020, பக்கம் 1)
த.மு.மு.க தலைவர் பேராசிரியர் தெரிவித்த தகவல் ஒன்று. கரோனாவால் உயிரிழந்த 126 பேர்கள் த.ம.மு.க. சார்பில் உடல் அடக்கம் செய்யப்பட்டது.
(‘தி தமிழ் இந்து’ 25.6.2020, பக்கம் 2)
இந்து பேராசிரியரின் இறுதிச் சடங்கை செய்த முஸ்லிம் எம்.பி.
சென்னையை பூர்வீகமாகக் கொண்ட பேராசிரியர் சாவித்ரி விஸ்வநாதன் (80) டெல்லி பல்கலைக்கழகத்தின் ஜப்பானிய மொழித் துறை தலைவராகப் பணியாற்றினார். 2001-இல் ஓய்வு பெற்றபின் பெங்களூருவுக்கு இடம்பெயர்ந்த இவர், தொடர்ந்து ஜப்பானிய மொழி வளர்ச்சிக்கான பணிகளில் ஈடுபட்டிருந்தார்.
ஜப்பானிய எழுத்தாளர் ஷிமாசகி டசன் எழுதிய ‘ஹகாய்’ நாவலை இந்தியில் ‘அவக்னா’ என்ற பெயரிலும், தமிழில் ‘தலித் படும்பாடு’ என்ற பெயரிலும் மொழிபெயர்த்தார். ஜப்பான் மொழி வளர்ச்சிக்காக பாடுபட்டதற்காக சாவித்ரி விஸ்வநாதனுக்கு ஜப்பான் பிரதமரின் விருது வழங்கப்பட்டது.
பெங்களூருவில் தங்கை மஹாலட்சுமியுடன் வசித்துவந்த சாவித்ரி விஸ்வநாதன் கரோனா தொற்றால் கடந்த 5ஆ-ம் தேதி உயிரிழந்தார். இதையடுத்து நண்பர்களின் உதவியோடு அவரது உடல் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. சாவித்ரி விஸ்வநாதனின் அஸ்தியை கர்நாடகாவைச் சேர்ந்த காங்கிரஸ் ராஜ்யசபா எம்.பி. சையத் நசீர் ஹுசேன் ஸ்ரீரங்கப் பட்டினத்தில் உள்ள காவிரி ஆற்றில் கரைத்தார். இதில் அவரது மனைவி மற்றும் மகன்களும் பங்கேற்று இறுதிச் சடங்குகளை நிறைவேற்றினர்.
இதுகுறித்து காங்கிரஸ் எம்.பி. சையத் நசீர் ஹுசேன் கூறும்போது, ‘‘டெல்லி பல்கலைக்கழகத்தில் நான் பணியாற்றிய போது சாவித்ரி விஸ்வநாதன் அறிமுகமானார். எனது குடும்ப நண்பர் என்பதைக் காட்டிலும் ஒரு தாயைப் போன்றவர். அவரது தங்கைக்கும் கரோனா பாதிப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது ஊரடங்கு அமலில் இருப்பதால் உறவினர்கள் வெளியூரில் இருந்து வர முடியாமல் போய்விட்டது. இஸ்லாமியனாகிய நான் அஸ்தியைக் கரைத்து இறுதிச் சடங்குகளைச் செய்யட்டுமா? அதில் எதுவும் சிக்கல் இருக்கிறதா என அவரது தங்கையிடமும், இந்துமத குருக்களிடமும் கேட்டேன். இருவரும் சம்மதம் தெரிவித்ததைத் தொடர்ந்து, எனது குடும்பத்தாருடன் ஸ்ரீரங்கப்பட்டினத்துக்கு வந்து சாவித்ரி விஸ்வநாதனுக்கு இந்து முறைப்படி திதி கொடுத்து பூஜைகள் மேற்கொண்டேன். இதனால் அவரது குடும்பத்தினர் மட்டுமல்லாமல் நாங்களும் மிகுந்த மகிழ்ச்சியோடும் உணர்ச்சிப் பெருக்கோடும் இருக்கிறோம்” என்றார்.
(‘தி தமிழ் இந்து’ 23.5.2021, பக்கம் 9)
ஹிந்து மூதாட்டிக்கு முஸ்லிம்கள் இறுதிச் சடங்கு
ஈரோடு : கிறிஸ்துவ முதியோர் இல்லத்தில், கொரோனாவால் இறந்த ஹிந்து மூதாட்டிக்கு, முஸ்லிம் சகோதரர்கள் இறுதிச்சடங்கு செய்து, மத நல்லிணக்கத்துக்கு உதாரணமாகத் திகழ்ந்தனர்.
ஈரோடு, திண்டலில், ‘லிட்டில் சிஸ்டர்ஸ்’ என்ற கிறிஸ்துவ முதியோர் இல்லத்தில், 75 வயதுக்கு மேற்பட்ட, 100 பேர் வசிக்கின்றனர். இவர்களுக்கு, ஈரோடு தெற்கு மாவட்ட காங்கிரசு தலைவரும், உணர்வுகள் அமைப்பு நிறுவனருமான, ‘மக்கள்’ ராஜன் தலைமையில், தினமும் உணவு வழங்கி வருகின்றனர்.
மக்கள் ராஜன் உணவு வழங்கச் சென்றபோது, அங்கு கொரோனா பாதித்த ஆண்டாள், 75 என்ற மூதாட்டி இறந்து விட்டார். உறவினர்கள் இல்லாததால் அவரது உடலை, ஹிந்து மதப்படி எரியூட்டும்படி, இல்ல நிருவாகிகள் கேட்டுக் கொண்டனர். இதையடுத்து, ‘பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா’ அமைப்பைச் சேர்ந்த பாட்ஷா, எஸ்.டி.பி.அய்., கட்சி மாவட்ட தலைவர் லுக்மான் உதவியுடன், ஆத்மா மின் மயானத்தில், சடங்குகள் செய்து, ஆண்டாள் உடல் எரியூட்டப்பட்டது.
மக்கள் ராஜன் கூறுகையில், ”ஹிந்து மதத்தைச் சேர்ந்த ஆண்டாளை, இறுதிக்காலம் வரை கிறிஸ்துவ சகோதரிகள் பராமரித்தனர். அவரது இறுதி நிகழ்வு, சடங்குகளை முஸ்லிம் சகோதரர்கள் செய்தனர். பிற ஏற்பாடுகளை நாங்கள் செய்தோம்,” என்றார்.
(‘தினமலர்’ 28.6.2021, பக்கம் 12)
இவற்றையெல்லாம் ஒரு பக்கத்தில் நிறுத்தி _ குஜராத் மாநிலத்தின் டாங்ஸ் மாவட்டத்தில் இறந்தவர்களின் புதைக்கப்பட்ட பிணத்தைக் கிறிஸ்துவ கல்லறையிலிருந்து தோண்டி வெளியில் எடுத்து ஆட்டம் போட்ட ஆர்.எஸ்.எஸ்., சங்பரிவார்களை ஒரு கணம் எண்ணிப் பாருங்கள்.
கர்ப்பிணிப் பெண் முசுலிம் என்பதால் வயிற்றைக் கிழித்து அந்தக் கரு சிசுவை எடுத்து எரியும் நெருப்பில் வீசி குதியாட்டம் போட்ட குரூரங்களையும் இன்னொரு பக்கத்தில் நிறுத்தி எடை போட்டுப் பாருங்கள் _ சில முக்கிய உண்மைகள் வானத்தின் விண்மீனாய் ஒளிரும்!
இறந்தவர் இந்து – உடலைத் தூக்கிச் சுமந்தவர்கள் முஸ்லிம்கள்
இதுதான் பெரியார் மண்!
திராவிடர் கழகத் தலைவரின் அறிக்கை:
சிறுபான்மையோருக்கு எதிராக வெறுப்பைத் தூண்டுவோரே – இதற்குப் பிறகாவது நல்லுணர்வு பெறுவீர்!
சென்னை _- அண்ணா நகரில் இறந்த 78 வயது நிறைந்த இந்து முதியவரை சுடுகாட்டுக்கு எடுத்துச் செல்ல அக்கம் பக்கத்தவர் எவரும் உதவிட முன்வராத நிலையில் முஸ்லிம் தோழர்கள் முன்வந்து உதவினர் என்ற செய்தி எதைக் காட்டுகிறது? பெரியார் மண் இது என்பதற்கான அடையாளம்தானே! இதற்குப் பிறகாவது சிறுபான்மையினரை எதிர்த்து வெறுப்பைக் கக்கும் கூட்டத்தினர் சிந்தித்து நல்லுணர்வு -_ மனிதநேயம் பெறுவது அவசியம் என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.
அறிக்கை வருமாறு:
கரோனா தொற்று (கோவிட் – 19) உலகத்தையே வாட்டி வதைத்துக் கொண்டு, லட்சக்கணக்கில் மனித உயிர்களைப் பலி வாங்கிக் கொண்டிருக்கும் நிலை, மானிட வரலாற்றில் மிகப்பெரும் கறை படிந்த அத்தியாயம்.
நாடு, இனம், மொழி, மதம், ஜாதி, ஏழை, பணக்காரன், படித்தவன் – படிக்காதவன், ஆளும் வர்க்கம், அவருக்குக் கீழே உள்ள ஆளப்படுவோர்கள் ஆகிய எல்லாவித செயற்கைப் பேதங்களை உடைத்து நொறுக்கி, அனைவரையும் அச்சுறுத்தி அனைவரும் என் தொற்றுக்கு சமமானவர்களே என்று ஆர்ப்பரிக்கும் அவல நோய் கரோனா! இந்தக் கொடிய நோயின் தாக்கத்தில்கூட, எரிகிற வீட்டில் பிடுங்கியது வரை லாபம் என்ற முறையில், இங்குள்ள மதவெறியர்கள், மனிதாபிமானம் ஓடோடி உதவிட வேண்டிய நேரத்தில்கூட, ஓங்கு மதவெறியை விசிறி விட்டு, மத அரசியல், வெறுப்பு அரசியலை விதைத்து அறுவடை செய்ய வீண் கனவு காணுகின்றனர்!
தமிழ்நாட்டில் தோல்வியே கண்டு வருகின்றனர்
சிறுபான்மைச் சமூகத்தவர்களான இஸ்லாமிய சமூகத்தவருக்கு எதிரான ஒரு திட்டமிட்ட பிரச்சாரத்தை, சமூக வலைத் தளங்களில் பரப்பியதோடு, சிற்சில மாவட்டங்களில், அவர்களை ஒதுக்கி வைக்கும் திட்டமிட்ட செயலையும் தொடங்கி, தமிழ்நாட்டில் தோல்வியே கண்டு வருகின்றனர்.
இன்று ஒரு நெஞ்சுருகும் செய்தி!
சென்னை அண்ணா நகரில் சில நாட்களுக்குமுன் இராமச்சந்திரன் என்ற முதியவர் -(வயது 78) இறந்துவிட்டார். ஊரடங்கு, வீட்டுக்குள்ளே இருந்தாக வேண்டிய கட்டாய உத்தரவு காரணமாக, அவரது உற்றார், உறவினர் எவருமே, ஈமச் சடங்கு _- இறுதி அடக்க நிகழ்வில் கலந்து கொள்ள முடியாத இக்கட்டான சூழ்நிலையில், செய்வதறியாது தவித்த இறந்தவரின் சகோதரர் நவநீதகிருஷ்ணன் என்பவர் இறந்தவரை சுடுகாட்டுக்குக் கொண்டு சென்று எரியூட்ட உதவ வேண்டும் என்று அக்கம் பக்கத்திலிருந்தவர்களிடம் கேட்டுக் கொண்டார்.
ஓடோடி வந்த முஸ்லிம் சகோதரர்கள்!
செய்தி அறிந்து உடனடியாக அப்பகுதியிலிருந்த (அண்ணா நகர்) தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத் தோழர்கள் -_- சதாம் உசேன், முகம்மது, ஜாகீர் உசேன், முகம்மது அலி, நிஜாமுதீன் ஆகியோர் மனிதாபிமானத்தோடு, மத மாச்சரியத்திற்கு மரணத்தில் ஏது இடம் என்ற உணர்வுடனும், சகோதரப் பாசத்துடனும் ஓடோடி வந்து, சடலத்தைத் தூக்கிச் சென்று இறுதியில் கடைசி ஈமச் சடங்குகள் செய்து முடிக்கும்வரை மயானத்தில் இருந்து திரும்பியுள்ளனர்.
‘இந்து’ நாளிதழுக்குப் பேட்டி!
முகம்மது அலி அவர்கள் ‘இந்து’ நாளிதழின் செய்தியாளரிடம் கீழ்க்கண்டவாறு கூறியுள்ளார்:
‘‘எங்களுக்கு இறந்து போனவரிடம் நேரிடையான பழக்கமோ, நட்போ கிடையாது. ஆனால், அவர் மிக நல்ல மனிதர் -_ பண்புடன் பலரிடமும் பழகும் பான்மையர் என்று கேள்விப்பட்டுள்ளோம். மனித நேயக் கடமையை நாங்கள் சகோதரத்துவ உணர்வுடன் செய்துள்ளோம்” என்று உணர்வு பொங்கக் குறிப்பிட்டுள்ளார்! ஒருவருக்கொருவர் அறிமுகமே இல்லாத நிலையிலும், எப்படிப்பட்ட மனிதாபிமானம் பொங்கி மதத்திற்கான செயற்கைக் கோடுகளையும் அழித்த மகத்தான செயல் இது!
இதில் இன்னொரு எதேச்சையாக நடந்த வேடிக்கையான ஒன்று என்ன தெரியுமா?
இறந்தவரோ ராமன் பெயரைக் கொண்டவர் -_ தூக்கிச் சுமந்தவர்களோ முஸ்லிம்கள்! – இதுதான் பெரியார் மண்!
இறந்தவர் பெயர் ‘இராமச்சந்திரன்’ இராமன் பெயரைத் தாங்கிய 78 வயது முதியவர்! அடக்கம் செய்ய உதவியது 6 முஸ்லிம் இளைஞர்கள்.
பெரியார் மண் இது. மனிதநேயம் பூத்துக்குலுங்க, மத வேற்றுமை பாராது காலங் காலமாக, இஸ்லாமியச் சகோதரர்களும், இந்து என்று அழைக்கப்படுவோரும், அண்ணன் _- தம்பிகளாக, மாமன் _- மைத்துனன் என்ற நேயத்தோடு, உறவுக்காரர்கள்போல், பேதமின்றி, பெருவாழ்வு _- சமத்துவம் பொங்க வாழும் மண்.
கரோனாவும்கூட குட்டிச் சொல்கிறது _- மதவெறியர்களே மாறுங்கள் என்று!
படிப்பினையைக் கற்க; நிற்க அதற்குத் தக!
(திராவிடர் கழகத் தலைவரின் அறிக்கை
– ‘விடுதலை’ 20.4.2020)