கண்காணிப்பும் களையெடுப்பும் கட்டாயம்!
மஞ்சை வசந்தன்
பாதுகாப்பு, பயிற்றுவிப்பு, நெறிகாட்டல், ஒழுக்கம், நீதி, நேர்மை, அடக்கம், நட்பு, அன்பு, பாசம், கண்காணிப்பு என்று பலவற்றை உள்ளடக்கி மாணவர்களை மகிழ்வோடு கற்கச் செய்ய வேண்டிய கடப்பாடுடைய பள்ளிகள், பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள், பள்ளியை நடத்தும் நிருவாகம், கல்வி வணிகமயமாக மாறிப்போனதன் விளைவாய், மதிப்பெண்ணுக்கு மட்டும் முதன்மை அளித்து மற்றதையெல்லாம் புறந்தள்ளிய போக்கால் இன்று பயிலும் மாணவர்களுக்கே பாதுகாப்பற்ற, பாலியல் தொல்லைகளுக்குப் பலியாகும் அவலம் ஒவ்வொரு நாளும் அரங்கேறி வருவது, ஒவ்வொருவரும் வேதனையுடன் வெட்கித் தலைகுனிய வேண்டியதுமான நிலையாகும்.
ஆசிரியர்கள் யார்?
மாணவர்களுக்குக் கற்பித்து மாதம் பிறந்ததும் சம்பளம் வாங்குபவர் என்ற மனநிலை தற்போது வந்துவிட்டது. ஆனால், ஆசிரியர் என்பவர் அப்படிப்பட்டவர் அல்ல. அவர் மாண்பின் மொத்த வடிவம்; ஒழுக்கத்தின் உறைவிடம்.
அது மட்டுமல்ல, ஆசிரியர்கள் மாணவர்களின் இரண்டாவது பெற்றோர். இன்னும் சொல்லப் போனால் பெற்றோரைவிடவும் அதிகப் பொறுப்புடையவர். பெற்றோரிடம் பிள்ளைகள் இருப்பதைவிட ஆசிரியர்களிடமே அதிக நேரம் இருக்கின்றனர். பெற்றோர் சொல்வதைக் கேட்டு நடக்காத பிள்ளைகள் ஆசிரியர் சொல்வதை அப்படியே ஏற்று நடப்பர்.
ஒரு பிள்ளையின் வாழ்வைத் தீர்மானிப்பதில் ஆசிரியரின் பங்கே முதன்மையானது. ஆசிரியர்கள் பிஞ்சு உள்ளங்களில் பதிய வைக்கும் கருத்துகளே வாழ்நாள் முழுக்க அவர்களை வழி நடத்துகின்றன.
ஆசிரியரின் செயல்பாடுகளைப் பார்த்தே மாணவர்கள் தங்களின் செயல்பாடுகளை அமைத்துக் கொள்கின்றனர். எனவே, மாணவர்களின் முன்மாதிரி (Role Model) ஆசிரியர்கள் ஆவர்.
ஒருவன் எதிர்காலத்தில் தப்பு செய்தால், “உனக்குச் சொல்லிக் கொடுத்த வாத்தியார் யார்?’’ என்று கேட்பது உலக வழக்கு. இதுவே ஆசிரியர் ஒரு மாணவனின் வாழ்விற்குப் பொறுப்பாளி என்பதை உலகிற்குச் சொல்லும் சான்றாகும்.
தங்களிடம் ஒப்படைக்கப்பட்ட பிள்ளைகளை பொறுப்புணர்வோடு, பாசம், பரிவு, அன்பு, கருணை, நேசங்களோடு நடத்த வேண்டும். கற்பிக்க வேண்டும், பாதுகாக்க வேண்டும், உருவாக்க வேண்டும்.
பிள்ளைகளை அச்சுறுத்துவது, அடக்கி ஒடுக்குவது, அடிப்பது, துன்புறுத்துவது அறவே கூடாது. அப்படிச் செய்பவர்கள் ஆசிரியர் பணிக்கு அறவே தகுதியற்றவர்கள் என்பது பொருள்.
அன்புடன், பாசத்தோடு பழகினாலே மாணவர்கள் ஆசிரியர்கள் சொல்வதைக் கேட்டு நடப்பர். பிள்ளைகளுக்கே உரிய சில இயல்புகள் (குறும்புகள்) இருக்கும். அதை புரிந்து நடக்க வேண்டியது ஆசிரியரின் கடமையாகும். மாணவர்கள் உளநிலை பற்றிய பாடம் ஆசிரியர்கள் பயிற்சியின்போது கற்பிக்கப்படுவதன் காரணம் அதுதான்.
ஆசிரியர் சங்கங்கள்:
அக்காலத்தில் ஆசிரியர்களுக்கு சமுதாயத்தில் அளிக்கப்பட்ட உயர் மதிப்பு இன்று கிடைக்காததற்குக் காரணம், ஆசிரியர்கள் ஆசிரியர்களாக இல்லாததுதான் என்பதே கசப்பான உண்மை. சம்பளத்திற்காக மட்டும் போராடும் ஆசிரியர் சங்கங்கள் ஆசிரியர்களின் உயர் தகுதிக்கும் பொறுப்பேற்க வேண்டும். தப்பு செய்கின்ற ஆசிரியர்களைக் காப்பாற்ற சங்கங்கள் முன்வரக் கூடாது. அவர்களுக்கு உரிய தண்டனை கிடைக்க துணை நிற்க வேண்டும்.
ஒரு காவல்துறை அதிகாரி தப்பு செய்தால் இன்னொரு காவல்துறை அதிகாரி நடவடிக்கை எடுப்பதுபோல் ஆசிரியர் சங்கங்கள் பொறுப்புடன் நடக்க வேண்டும். ஆசிரியர்கள் தங்கள் கடமைகளைச் சரியாகச் செய்கிறார்களா என்று ஆசிரியர் சங்கங்கள் கண்காணிக்க வேண்டும். தப்பானவர்களைக் கண்டிக்க வேண்டும்.
பாலியல் தொல்லை:
பிள்ளைகளின் இரண்டாம் பெற்றோர் போன்று நடந்துகொள்ள வேண்டிய ஆசிரியர்களில் சிலர் பிள்ளைகளுக்கு பாலியல் தொல்லை தருவதும், காம இச்சையுடன் பிள்ளைகளைக் கட்டாயப்படுத்துவதும் கடுமையான தண்டனைக்குரிய குற்றமாகும்.
இப்படிப்பட்ட மனநிலை உள்ளவர்களை கண்டறிந்தால், உடனடியாக அவர்களை ஆசிரியர் தொழிலை விட்டு அப்புறப்படுத்த வேண்டும். தன் பிள்ளை போன்ற மாணவர்களிடம் பாலுணர்வு வேட்கையுடன் வரம்பு மீறி நடப்பதும், மாணவர்களைத் துன்புறுத்துவதும் மன்னிக்க முடியாத மாபெரும் குற்றமாகும். அப்படிப்பட்டவர்கள் மனிதர்களாக இருக்கவே தகுதியற்றவர்கள் என்னும்போது, அவர்களை ஆசிரியர்களாக அனுமதிப்பது மாபெரும் குற்றமாகும்.
பள்ளி நிருவாகமே முழுப் பொறுப்பு:
பள்ளி ஆசிரியர் செய்யும் தவறுக்கு பள்ளி நிருவாகமே முழு பொறுப்பு. பள்ளி ஆசிரியரை தேர்வு செய்து பணியமர்த்துவது நிருவாகம்தானே. அவர்கள் ஒழுக்கமுள்ள, பாசமுள்ள, கடமை, கண்ணியம், கட்டுப்பாடு கொண்டு நடக்கக்கூடியவர்களை சலித்து, எடுத்து தேர்வு செய்து பணியமர்த்த வேண்டும்.
பணியமர்த்திய பின் ஆசிரியர்களின் செயல்பாடுகளைக் கண்காணிக்க வேண்டும். தப்பு கண்டறியப்பட்டால் தயவு தாட்சண்யம் இன்றி கடும் நடவடிக்கை மேற்கொண்டு, பணி நீக்கம் செய்ய வேண்டும். கற்பித்தலில் குறையிருந்தால் திருத்தலாம். ஒழுக்கக் கேடானவர்களை ஒரு நொடிப் பொழுதும் அனுமதிக்கக் கூடாது. அனுமதிக்கும் நிருவாகமே பெருங்குற்றவாளி.
ஆய்வு அலுவலர்களின் கடமை:
பள்ளிகளை ஆய்வு செய்வதற்கென்று உள்ள ஆய்வு அலுவலர்கள் திடீரென்று சென்று ஆய்வு மேற்கொண்டு, தப்புகளைக் களைய வேண்டும், தண்டிக்க வேண்டும். ஆய்வு செய்வதை விழா போல ஆக்கி, முன்கூட்டியே அறிவித்துவிட்டு செல்வது ஆய்வின் நோக்கத்திற்கு எதிரானது. ஆய்வு அலுவலர்கள் தங்கள் கடமையைச் சரியாகச் செய்தால் பல சீர்கேடுகளைக் களையலாம்.
பெற்றோர் ஆசிரியர் சங்கக் கடமை:
பெற்றோர் ஆசிரியர் சங்கக் கூட்டங்களை அடிக்கடி கூட்டி மாணவர்களுக்குள்ள சிக்கல்களை, குறைகளை, பாதிப்புகளைக் களைய வேண்டும். மதிப்பெண் பட்டியலை வழங்கவும், கட்டணம் வசூல் பற்றி பேசவும், நிருவாகம் சொல்வதை மட்டும் பெற்«£ர் கேட்டுக் கொண்டு செல்வதும் பெற்றோர் ஆசிரியர் சங்கக் கூட்டத்தின் நோக்கம் அல்ல. பெற்றோரின கருத்தை, ஆசிரியர்கள் கருத்தை, ஏன் மாணவர்களின் கருத்தைக் கூட நிருவாகம் கேட்க வேண்டும்.
பெற்றோர் ஆசிரியர் சங்கக் கூட்டம் சரியாக நடந்து நடவடிக்கை மேற்கொண்டாலே எல்லா குற்றச் செயல்பாடுகளையும் களைய முடியும்.
பாதுகாப்பற்ற பாலியல் தொல்லையுள்ள சூழலில் ஒரு மாணவர் படித்தால் அவரால் எப்படி மன நிம்மதியுடன் படிக்க முடியும்? ஏன், எப்படி மன நிம்மதியுடன் வாழ முடியும், தூங்க முடியும், படிப்பில், வகுப்பில் கவனம் செலுத்த முடியும்?
பெற்றோர் கடமை
குழந்தைகள்மீது நிகழ்த்தப்படும் பாலியல் வன்முறைகளைத் தடுப்பதில் பெற்றோருக்கு அதிகப் பொறுப்புணர்வு இருக்கிறது. அவர்கள் குழந்தை வளர்ப்பில் மிகுந்த அக்கறை எடுத்துக்கொள்ள வேண்டும். பெரும்பாலான பெற்றோர்கள் தங்களது பொறுப்புகளைத் தட்டிக் கழிப்பதாலேயே அங்கு பெற்றோருக்கும் குழந்தைகளுக்குமான வெளிப்படையான உரையாடல் இல்லாமல் போகிறது. ‘நல்ல’ பள்ளியில் சேர்த்து விடுவதிலும், அவர்கள் ‘நல்ல’ மதிப்பெண் வாங்க வேண்டும் என்பதிலும் மட்டுமே கவனம் செலுத்துகிறார்கள். பள்ளியில் என்ன நடந்தது என்று கூடப் பிள்ளைகளிடம் கேட்பதில்லை. அதற்கு அறியாமையும் ஒரு காரணம். இந்தச் சூழல்களால்தான் இதுபோன்ற பாலியல் குற்றச்சாட்டுகள் பெரும்பாலும் தாமதமாகவே வெளிப்படுத்தப்படுகின்றன. பெற்றோர் தங்கள் குழந்தைகளிடம் தொடர்ச்சியாக உரையாட வேண்டும். பெற்றோர் _ ஆசிரியர் கழகத்தின் செயல்பாடுகளை மேலும் தீவிரப் படுத்த வேண்டும்.
பள்ளிகளில் குழந்தைகளுக்கு அவர்கள் உடல் சார்ந்த புரிந்துணர்வை கொஞ்சம் கொஞ்சமாக ஏற்படுத்தும்போதுதான், அவர்கள் வெளிப்படையான உரையாடலுக்குள் வருவார்கள். இந்த வெளிப்படைத் தன்மையே பாலியல் குற்றங்களின் எண்ணிக்கையைக் குறைக்கும். அனைத்துப் பள்ளிகளிலும், பாலியல் குற்றங்களை விசாரிக்கும் குழு அமைக்கப்பட வேண்டும். தொடர் உரையாடலும் தீவிர கண்காணிப்பும் அவசியம்.
வாழ்நாள் பாதிப்பு
ஒரு வகுப்பில் பாலியல் குறித்துப் பேசியபோது, 70 சதவிகிதக் குழந்தைகள் தாங்கள் பாலியல் சீண்டலுக்கு ஆளாக்கப்பட்டதாகத் தெரிவித்தனர். பதின்ம வயதில் குழந்தைகளின் அறியாமையைப் பயன்படுத்தி அவர்களிடம் அத்துமீறுகின்றனர். அதுவே, கல்லூரிகளில் இன்டர்னல் மதிப்பெண், புரொஜக்ட் என அதிகாரத்தைப் பயன்படுத்தி பாலுறவுக்கு இணங்க மிரட்டுகின்றனர். முனைவர் பட்ட ஆய்வு மேற்கொள்ளும் மாணவிகளை அவர்களது வழிகாட்டி (Guides) மிரட்டுவதும் நடக்கிறது. ஆக, பள்ளி முதல் பிஹெச்.டி வரை பெண்களுக்கு இந்தத் தொல்லை.
ஒரு சிறுமியை சிறார்வதைக்கு உட்படுத்துவது ஆணுக்கு அந்த நேரத்துக் கிளர்ச்சி மட்டுமே. ஆனால் பாதிக்கப்பட்ட குழந்தைக்கு உளவியல், உடல்ரீதியாக அது வாழ்நாள் வலியாக மாறிவிடுகிறது.
சிறார் வதைக்கு ஆளாகும் குழந்தைகளுக்கு எதிர்காலத்திலும் அதன் தாக்கம் தொடரும். மனச்சோர்வு, பதற்றம், பயம் போன்ற பிரச்னைகளுக்காக சிகிச்சைக்கு வரும் நோயாளிகளின் கடந்த காலத்தை விசாரிக்கும் போது, அவர்களில் பெரும்பாலானவர்கள் சிறுவயதில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டவர்கள் எனத் தெரிய வருகிறது.
இவர்களால் திருமணத்துக்குப் பிறகுகூட முழுமையான தாம்பத்ய உறவில் ஈடுபட முடியாது. கணவனே நெருங்கி வந்தாலும் பதற்றத்துக்கு ஆளாவார்கள். Post traumatic stress disorderஎன்று சொல்லப்படக்கூடிய உளவியல் பிரச்சினைகளுக்கு இவர்கள் ஆட்படுகின்றனர்.
சட்டமும் சமூகப் பொறுப்பும்
“18 வயதுக்கு உட்பட்டவர்கள் மீது நிகழ்த்தப்படும் பாலியல் குற்றங்களுக்கு எதிராக ‘போக்சோ’ (POCSO – The Protection of Children from Sexual Offences)சட்டம் இயற்றப்பட்டிருக்கிறது. மேலும், இந்திய தண்டனைச் சட்டத்தில் பாலியல் வன்முறைக்கெதிரான சட்டப் பிரிவுகள் இருக்கின்றன. அவற்றின்படி, பாலியல் வன்கொடுமை மட்டுமல்ல, அதற்கான முயற்சிகள் மேற்கொள்வதும் பாலியல் குற்றம்தான். மேலும், தொடுதல், வரம்பு மீறிப் பேசுதல், உடல் மொழியில் சைகை செய்தல் என அனைத்துமே பாலியல் குற்றங்கள்தாம்.
இதையும் தாண்டி முக்கியமான அம்சங்களைக் கொண்டு போக்சோ, பணியிடங்களில் பாலியல் தொந்தரவுக்கு எதிரான சட்டம் என நிறையச் சட்டங்கள் கொண்டு வரப்பட்டிருக்கின்றன. அவற்றில் தெளிவான வரையறை இருக்கிறது.
18 வயதுக்குக் கீழ் உள்ள பெண் குழந்தைக்குப் பாலுறவுக்குச் சம்மதம் தெரிவிக்கும் உரிமை இல்லை. எனவே, 18 வயதுக்குக் கீழ் உள்ள பெண்ணைத் திருமணம் செய்து உறவு கொண்டால்கூட அது பாலியல் வன்முறையாகக் கருதப்பட்டு ‘போக்சோ’ சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவர். ‘போக்சோ’ சட்டத்தின்படி குற்றவாளிக்கு அதிகபட்சமாக ஆயுள் தண்டனை, மரண தண்டனைவரை விதிக்கப்படுகிறது. தொடுதல், சமிக்ஞை செய்தல் மற்றும் பாலுறவு சார்ந்து பேசுதல் ஆகியவற்றுக்கு 3 _ 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கப்படுகிறது. பாலியல் குற்றச்செயலைப் பொறுத்தவரையில் பாதிக்கப்பட்டவர் எத்தனை ஆண்டுகள் கழித்து வேண்டுமானாலும் வழக்கு தொடர்ந்து தனக்கான நீதியைப் பெற முடியும். பாலியல் குற்றங்களைப் பொறுத்தவரை அது நிகழ்த்தப்பட்டபோது அதை வெளிப்படுத்து வதற்கான பக்குவமும், சூழலும் இருந்திருக்காது. ஆகவே, அதை எத்தனை ஆண்டுகள் கழித்து வேண்டுமானாலும் சொல்லலாம். செல்போன் உரையாடல்களின் ஆடியோ பதிவு, எழுத்து வடிவ உரையாடல் எனில் அதன் ஸ்க்ரீன்ஷாட் போன்றவைகூட சாட்சியமாக ஏற்றுக் கொள்ளப்படுகிறது. சூழ்நிலை சாட்சிகளும் இதில் முக்கிய இடம் பெறுகின்றன. என்றாலும், இந்தச் சட்டங்கள் மட்டும் போதாது, சமூக மனநிலையில் மாற்றங்கள் உருவாக வேண்டும்.
சி.சி.டி.கேமரா:
பள்ளி வளாகம், வகுப்பறைகள் இவற்றில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட வேண்டியது கட்டாயம். இக்கேமரா பொருத்தப்பட்டிருக்கிறது என்று தெரிந்தாலே குற்றச் செயல்கள் குறையும்.
கேமராக்கள் பொருத்துவதோடு, அவை சரியாக தொடர்ந்து இயங்குகின்றனவா என்பதையும் அடிக்கடி நிருவாகம் கவனிக்க வேண்டும். கேமரா செயல்படவில்லை என்றால் நிருவாகத்தின் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அரசின் பொறுப்பு
“ஒவ்வொரு பள்ளியிலும் குழந்தைகளின் பிரச்சினைகளைக் கேட்டறிந்து தீர்வளிக்க உளவியல் ஆலோசகர் கட்டாயம் அவசியம். சில பள்ளிகளில் மட்டுமே உளவியல் ஆலோசகர்கள் அமர்த்தப்பட்டிருக்கின்றனர். பெரும்பாலான அரசுப் பள்ளிகளில் அவர்களுக்கான இடம் இன்று வரையில் இல்லை. வீட்டில் மாணவர்கள் பாதுகாப்பாகத்தான் இருப்பார்கள் என்று இருந்துவிடாமல் இணையவழி கல்வியானாலும் மாணவர்களுடன் உளவியல் ஆலோசகர்கள் தொடர்ந்து இணைப்பில் இருப்பது அவசியம்.
இணையவழியாக நடத்தப்படும் வகுப்புகள் பள்ளியினால் பதிவு செய்யப்பட வேண்டும் என்றும், குழுக்கள் அமைக்க வேண்டும் என்றும் சொன்னது தனியார் பள்ளிகளுக்கே பொருந்தும் நிலையில் உள்ளது. ஏனென்றால், இணையவழி கல்வியை அரசு மாணவர்களால் இன்னுமே முழுவதுமாகப் பெற முடியவில்லை. இணையவழிக் கல்விக்கு மாற்றாக தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் பாடங்களால்தான் அரசுப் பள்ளி குழந்தைகள் பயனடைந்து வருகின்றனர்.
இணையவழி கற்றலுக்கு மாற்று யோசிப்பது இந்தக் காலகட்டத்தில் அவசியமாகிறது. பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு மடிக் கணினியோடு, பாடத் திட்டத்தை பென் டிரைவில் அளித்திருப்பது போல மற்ற வகுப்பு மாணவர்களுக்கும் கொடுப்பது அவசியமாகிறது. ஒருவிதத்தில் மாணவர்களுக்கு நிகழும் ஆன்லைன் பாலியல் சீண்டல்களுக்கும் இது தீர்வாக அமையும்’’ என்று கல்வியாளர்கள் கூறுவதையும் அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்.
பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளாகும் ஆசிரியர்கள், பள்ளி நிருவாகிகள் மீது கடும் நடவடிக்கையை அரசு மேற்கொள்ள வேண்டும். இதில் எந்தவித தயக்கமும் கூடாது. இது மாணவர்களின் பாதுகாப்பு எதிர்காலம் சார்ந்தது.
மாணவர்கள் கடமை
மாணவர்கள் தங்களுக்கு ஆசிரியர்களிடமிருந்தோ, மற்றவர்களிடமிருந்தோ பாலியல் சீண்டல், தொல்லை, வற்புறுத்தல், பலாத்காரம் வரும்போது, தன்னுடைய எதிர்ப்பை உடனே காட்ட வேண்டும். அடுத்து அந்த நிகழ்வைப் பற்றி வீட்டில் உள்ள பெற்றோர்ருக்கு உடனே தெரிவிக்க வேண்டும்.
அச்சப்பட்டு சொல்லாமல் இருப்பதோ, தயக்கம் காட்டுவதோ கூடாது. அப்படி தயங்குவது, சொல்லாமல் இருப்பதால்தான் குற்றவாளிகள் தொடர்ந்து இக்குற்றங்களைச் செய்கின்றனர். அச்சப்படுபவர்களிடம்தான் குற்றவாளிகள் துணிந்து தங்கள் தீய செயல்களைச் செய்கின்றனர்.
பெற்றோரும் ஒவ்வொரு நாளும் என்ன பாடம் நடந்தது என்று கேட்டு அறிவதுபோலவே, வேறு ஏதாவது உனக்கு பள்ளியில் பாதிப்பு நடந்ததா என்று ஒவ்வொரு நாளும் பிள்ளைகளிடம் கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டும்.
பள்ளி முதல் கல்லூரி வரை
படிக்கின்ற பிள்ளைகள் மீதான பாலியல் குற்றங்கள் பள்ளியில் தொடங்கி பல்கலைக்கழகங்கள் வரை நடக்கின்றன. பள்ளி மாணவர்களிடம் அறியாமை அச்சம் இருப்பதைப் பயன்படுத்தி குற்றவாளிகள் தப்பு செய்கின்றனர். உயர் வகுப்புகளில் அதிக மதிப்பெண், வழிகாட்டும் பணி போன்றவற்றைப் பயன்படுத்தி மாணவர்களை தன் இச்சைக்கு இணங்கச் செய்கின்றனர். இதைவிட அயோக்கியத்தனம் வேறு இருக்க முடியாது. படித்து பட்டம் பெற்று ஆசிரியராக வந்தவர்கள் இப்படி நடக்கிறார்கள் என்றால் அது கொலைக் குற்றத்தைவிட கடுமையாகக் கருதி தண்டிக்கப்பட வேண்டும்.
சமுதாய எதிரிகள்:
மாணவிகளிடம் ஆசிரியர்கள் தப்பாக நடக்கும்போது அரசு நடவடிக்கை எடுக்கும். அதற்கு முன் பள்ளி நிருவாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இது கட்டாயக் கடமை.
ஆனால், இங்கே சில சமூக விரோதிகள், பத்திரிகைகள், மாணவிகளுக்கு எதிரான வன்கொடுமையைக் கண்டிப்பதற்கு மாறாக, தப்பு செய்த ஆசிரியரும், பள்ளியும் தங்கள் ஜாதி என்ற கண்ணோட்டத்தில் அணுகி, அரசின் நடவடிக்கைகளை எதிர்க்கிறார்கள். இதைவிட சட்டவிரோத செயல், சமூக விரோதச் செயல் வேறு இல்லை. இவர்கள் மீதும், தப்பு செய்த ஆசிரியர் மீதும், நடவடிக்கை எடுக்காத பள்ளி நிருவாகத்தின் மீதும், கடுமையான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும். இல்லையென்றால் மக்களின் கிளர்ச்சிக்கும், போராட்டத்திற்கும் அது வழிவகுக்கும்.
பள்ளி மாணவர்களுக்கு எதிரான வன்கொடுமைக்கு எதிரான நடவடிக்கையில் ஜாதி, மதம், மொழி என்ற எந்த பாரபட்சமும் இன்றி கடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். எந்த மதம் சார்ந்த பள்ளியாக இருந்தாலும், எந்த ஜாதி சார்ந்த குற்றவாளியாக இருந்தாலும் கடும் நடவடிக்கை கட்டாயம். அப்போதுதான் குற்றங்கள் குறையும்; மாணவிகளுக்குப் பாதுகாப்பு கிடைக்கும்.