என்னை முழுவதும் அறிந்தவர்கள்தான் கழகத்திலே இருக்கிறார்கள். அதிலே முற்றிலும் அறிந்தவர் என்று சொல்லத் தக்கவர்களிலே கருணாநிதிக்கு மிகச் சிறந்த இடம் உண்டு. கருணாநிதிக்கு ஈடு கருணாநிதிதான்!’’
– அறிஞர் அண்ணா
என் அருமை நண்பனைப் பற்றி நான் என்ன பேசுவது? கலைஞரைப் பற்றிப் பேசினால், நானும் அதில் சேர்ந்திருப்பேனே? அப்படியென்றால் என்னை நானே புகழ்ந்துகொள்வதாகிவிடுமே, அதைப் பற்றிப் பேசுவதா? இருவரும் சிறுபிள்ளைகளாகத் தஞ்சை மாநகரிலே சந்தோஷமாக சுற்றித் திரிந்தோமே அதைப் பற்றிப் பேசுவதா? தி.மு.கவுக்கு நிதி திரட்டுவதற்காக ஊர் ஊராக தெருத் தெருவாக நாடகம் போட்டோமே, அதைப் பற்றிப் பேசுவதா? சினிமாவுக்கு வந்த பிறகு ‘பராசக்தி’யில் அவருடைய வசனத்தில் பேசி நடித்தேனே, அதைப் பற்றிப் பேசுவதா? அந்தப் படம் வந்த ஒரே நாளில் புகழ் வானத்தில் பறந்தேனே, அதைப் பற்றிப் பேசுவதா?
– சிவாஜி கணேசன்
186 வயதினிலே…
இந்தியாவிலேயே தலைசிறந்த மருத்துவ வல்லுநர்களையும் ஆராய்ச்சியாளர்களையும் உருவாக்கிய பெருமை கொண்ட சென்னை மருத்துவக் கல்லூரி, 186ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.
கிழக்கிந்தியக் கம்பெனியில் இருந்த ஆங்கிலேயர்களுக்கு மருத்துவம் செய்வதற்காக இம் மருத்துவக் கல்லூரி ஆரம்பிக்கப்பட்டது. இந்தியாவின் பெருமைமிக்க அடையாளச் சின்னங்களில் ஒன்றாக இன்றும் விளங்கி வருகிறது. பெண்களுக்குக் கல்வி உரிமை மறுக்கப்பட்ட 18ஆம் நூற்றாண்டில், சென்னை மருத்துவக் கல்லூரியின் சர்ஜன் ஜெனரல் ஆக இருந்த எட்வர்ட் பால்ஃபர் என்பவரின் முயற்சியால், 1875ஆம் ஆண்டு பெண்களுக்கு இந்தக் கல்லூரியில் அனுமதி வழங்கப்பட்டது. அந்த ஆண்டு 4 பெண்கள் இதில் சேர்ந்தார்கள். டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி இங்கேதான் மருத்துவம் பயின்றார்.
இந்தியப் பிரதமருக்குதமிழ்நாடு முதலமைச்சர் கடிதம்
2021 ஏப்ரல் 17 ஆம் தேதியன்று வெளியான அதிகாரபூர்வத் தகவலில், தமிழ்நாட்டில் கரோனா தொற்றுப் பாதிக்கப்பட்டுள்ளோர் எண்ணிக்கை 61 ஆயிரத்து 593 ஆகவும், உயிரிழந்தோர் எண்ணிக்கை 39 ஆகவும் அதிகரித்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசு அதிகாரிகள் தேவையான தடுப்பு நடவடிக்கைகளைத் தீவிரமாக மேற்கொண்டுள்ள போதிலும், நிலைமை கைமீறிப் போய்விட்டதாக உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தலைமை வழக்கறிஞரே ஒப்புக்கொள்ளும் அளவுக்கு சூழல் உள்ளது.
முதலில் தடுப்பூசியைப் பெறும் குழுவினர் மருத்துவத்துறையினரும் முன்களப்பணியாளர்களும்தான். இரண்டாவது குழுவினர், 60 வயதுக்கு மேற்பட்டவர்களும், 45 முதல் 59 வயது வரையிலும்தான். அதிலும், மத்திய சுகாதார மற்றும் குடும்பநல அமைச்சகத்தால், பட்டியலிடப்பட்டுள்ள குறிப்பிட்ட இணை நோய்கள் உள்ளவர்களுக்கு மட்டும்தான் செலுத்தப்படுகிறது.
தடுப்பூசி செலுத்திக் கொள்வதற்காக அரசு மருத்துவமனைகளுக்குச் செல்லும் மக்கள், தடுப்பு மருந்துகள் பற்றாக்குறையால் திருப்பி அனுப்பப்படுவதாக செய்திகள் வருகின்றன.
கரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வரும் நிலையில், இந்தப் பெருந்தொற்றின் கொடிய விளைவுகளிலிருந்து மனித உயிர்களைக் காக்க அனைவருக்கும் தடுப்பூசி என்பது காலத்தின் தேவையாகிறது.
தமிழக மக்கள்தொகைக்கு ஏற்ப, கோவாக்சின் மற்றும் கோவிஷீல்ட் தடுப்பூசி மருந்துகளை அதிக அளவு வழங்க வேண்டும் என்று, சம்பந்தப்பட்ட அமைச்சகத்தை அறிவுறுத்த வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.
எனவே, நேரடி கொள்முதல் செய்வதற்கு மாநிலங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள அனைத்து கட்டுப்பாடுகளையும் நீக்கி, கூட்டுறவு கூட்டாட்சி தத்துவத்தின் உண்மையான உணர்வில் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையங்களை வலுப்படுத்த அனைத்து முயற்சிகளையும் எடுக்குமாறு தங்களைக் கேட்டுக்கொள்கிறேன்.
– மு.க.ஸ்டாலின்