பெரியார் பேருரையாளர்

ஜூன் 01-15 2021

அ.இறையன்

வை. கலையரசன்

சிறுவனாக இருந்தபோதே தந்தை பெரியாரின் சமூகப்புரட்சி, கோட்பாடுகளால், பகுத்தறிவுச் சிந்தனைகளால் ஈர்க்கப்பட்டு திராவிடர் மாணவர் கழகத்தில் இணைந்து, பல்லாயிரம் மாணவர்களுக்கு பெரியாரியலை பயிற்றுவிக்கும் பணியை இறுதிமூச்சு உள்ளவரை ஆற்றிய பெரியார் பேருரையாளர் பேராசிரியர் அ. இறையனார் அவர்களின் 90 ஆம் ஆண்டு பிறந்தநாள் ஜூன் 4 அன்று.

மதுரையில் ராமுத்தாய் – அழகர்சாமியின் மகனாகப் பிறந்து திண்டுக்கல்லில் வளர்ந்து கல்வித்துறையில் ஆசிரியராக, தலைமை ஆசிரியராக, கல்வி அலுவலராக ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களின் பயிற்றுநராக பல்லாண்டுகள் பணியாற்றியவர். மாணவர் பருவத்தில் இயக்க வாழ்வில் ஈடுபட்டு திராவிட மாணவர் கழகத்தின் முன்னணிப் பொறுப்பாளர்களில் ஒருவராக திகழ்ந்தவர்.

பயிற்சி நிறுவனத்தில் படித்துக் கொண்டிருந்த நிலையில் 1948இல் ஈரோட்டில் நடந்த சிறப்பு மாநாட்டிற்குச்  சென்றிருந்தபோது, ஏற்கெனவே திண்டுகல்லில் இவரின் நடவடிக்கைளைக் கவனித்திருந்த  டார்ப்பிடோ  

ஏ.பி.ஜனார்த்தனம் அவர்களால்  கி. வீரமணி,  கலைஞர் மு.கருணாநிதி உள்ளிட்ட  ஆகிய அன்றைய இளம் முன்னோடிகளிடம்   இவர் இயக்கத்திற்கு நன்கு பயன்படுவார்  என அறிமுகப்படுத்தப் பெற்றார். இராஜகோபாலாச்சாரியார் குலக்கல்வித்திட்டத்தை அறிமுகப்படுத்தியபோது, கல்வித்துறை அதிகாரிகள், தலைமை ஆசிரியர்கள் கூட்டத்தில் கடும் எதிர்ப்பைத் தெரிவித்தவர். அதே இராஜகோபால் ஆட்சிகாலத்தில் விடுதலையை பள்ளி முகவரிக்கு வரவழைத்து படித்தவர்..

தொடர்ந்து திராவிடர் கழகத்தில் பல்வேறு பொறுப்புகளை வகித்தவர். பகுத்தறிவு ஆசிரியரணி மாநிலத் தலைவர், பெரியாரியல் பயிற்சிப் பட்டறை மாநில செயலாளர், கலைத்துறை செயலாளர், உதவிப் பொதுச் செயலாளர், உலகளாவிய பெரியார் பகுத்தறிவு இலக்கிய அணியின் தலைவர் உள்ளிட்ட பொறுப்புகளில் இருந்து சிறப்பாகப் பணியாற்றியவர்.

இறையன்,  இனநலம்,  தமிழாளன், நாடகன்,  பொருநன், பெரியார் மாணாக்கன்,  மாந்தன்,  பாணன்,  வேட்கோவன்,  சான்றோன்,  அறிவேந்தி,  கிழவன்,  வழக்காடி,  பிடாரன்,  சுவைஞன்,  சீர்தூக்கி,  பூட்கையன்,  செய்தி வள்ளுவன் போன்ற பல புனைபெயர்களில் திராவிட இயக்க இதழ்களில் எழுதி வந்தவர். மேலும் அவர் எழுதிய நூல்கள் பல்வேறு ஆதாரங்களைக் கொண்ட ஆவண களஞ்சியமாகத் திகழ்கின்றன.

“சுயமரியாதை சுடரொளிகள்’’ என்னும் திராவிட இயக்க தலைவர்கள் மற்றும் தொண்டர்களின் வாழ்க்கை வரலாற்று குறிப்புகள் தொகுப்பு அவரது மிகச்சிறந்த ஆவணமாக திராவிட இயக்க வரலாற்று ஆய்வாளர்களுக்கு பயன்பட்டு வருகிறது. “இல்லாத இந்து மதம்‘‘ என்னும் தலைப்பிலான சிறுநூல் மிகச்சிறந்த பல்வேறு ஆதாரங்களை கொண்ட, குறிப்பாக சங்கராச்சாரியாரின் தெய்வத்தின் குரலை ஆதாரமாகக் கொண்ட சிறந்த மறுப்பு நூலாகும்..

“தமிழ் இன மான மீட்பர் பெரியார்’’ என்னும் தலைப்பில் நூலாக வெளிவந்துள்ள அவரது ஆய்வுரை. தந்தை பெரியாரை ஒரு சமூக நோய் முதல் நாடும்  மருத்துவராக, தமிழ் மக்களின் உரிமைகளுக்காக தொடர்ந்து முழங்கி வாதாடிய வழக்குரைஞராக, புதிய  சமூகத்தைக் கட்டமைப்பதில் ஒரு சமுதாயப் பொறியாளராக அறிமுகப்படுத்தியுள்ளது.

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் அவர் ஆற்றிய ஓர் அறக்கட்டளை ஆய்வு  சொற்பொழிவின் நூல் வடிவமான “இதழாளர் பெரியார்’’ தமிழ் சமூகத்திற்கு அவரது படைப்புகளில் தலையாயது ஆகும். தந்தை பெரியார் தம் லட்சியப் பணிகளில் வீறுநடை போட போர் ஆயுதங்களாக உருவாக இருந்த அவரது ஏடுகளான ‘குடிஅரசு’, ‘புரட்சி’, ‘திராவிடன்’, ‘ரிவோல்ட்’, ‘பகுத்தறிவு’, ‘விடுதலை’, ‘ஜஸ்டிஸைட்’, ‘உண்மை’, ‘தி மாடர்ன் ரேஷனலிஸ்ட்’ உள்ளிட்ட ஏடுகளைப் பற்றிய வரலாற்று நூல்.

பெரியார் நடத்திய ஏடுகளின் தொடக்கம், அது போட்ட எதிர்நீச்சல், சந்தித்த அடக்குமுறைகள், பொருளாதார அறைகூவல்கள் மற்றும் அவரது ஏடுகளில் வெளியான முக்கிய செய்திகள், அந்த செய்திகள் சமூகத்தில் ஏற்படுத்திய தாக்கம் ஆகியவற்றை படம் பிடிக்கும் ஓர் அற்புத ஆவணமான ஆய்வுக் களஞ்சியமாகும்.

வாழ்க இறையனார் !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *