– இராம. வைரமுத்து,
கழக வழக்குரைஞர், மதுரை
அய்யா – அண்ணாவிடம்
அனைத்தும் கற்றவர்
உடன்பிறப்புகளுக்கு உற்றவர்
அவருக்கு ஈடில்லை மற்றவர் !
பெண்களுக்கு வாக்குரிமை தந்த
பேரியக்கத்தின் வழி வந்தவர்
அய்யா – அண்ணல் கனவை நிறைவேற்றி
பெண்களுக்கு சொத்துரிமை தந்தவர் !
உள்ளாட்சியில் மகளிருக்கு
மூன்றில் ஒரு பங்கு வழங்கினார்
“மானமிகு சுயமரியாதைக்காரர்” என்பதே
தனது அடையாளம் என முழங்கினார் !
விளைவித்தவரே பொருளின்
விலையை நிர்ணயிக்க வேண்டுமென
விழைந்தது அவரது சிந்தை – அதில்
உருவானது உழவர் சந்தை
குடிசை வாழ் மக்களுக்கு மாடி வீடு
எளியவர்க்கு கோடி ரூபாய் மருத்துவ காப்பீடு !
‘அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம்‘ என
அய்யாவின் நெஞ்சில் அன்று தைத்த முள்ளை எடுத்து போட்டவர்
தீட்சிதர் பிடியிலிருந்து தில்லையை மீட்டவர் !
மண்டல் குழு பரிந்துரை
நிறைவேற துணை நின்றவர்
இதர பிற்படுத்தப்பட்டோருக்கான
இட ஒதுக்கீட்டை வென்றவர்
அருந்ததியர் சிறுபான்மையினருக்கு
அவர் தந்தார் உள் ஒதுக்கீடு
குரலற்றவர்களின் குரல் அவர்
அவருக்கு இணை எவர் !
ஊனமுற்றோரை ‘மாற்றுத் திறனாளி’
விதவையை ‘கைம்பெண்’
அரவாணிகளை ‘திருநங்கை’ என
வார்த்தைகளை மட்டுமின்றி அவர்கள்
வாழ்க்கையையும் மாற்றியவர்
அம்மொழி தமிழை
செம்மொழியாக்கிப் போற்றியவர் !
தாழ்த்தப்பட்டோருக்கு அஞ்சல் வந்தால்
தர மாட்டார் அவர் வீட்டில்
ஊர் ஓர மரக்கிளையில் கட்டி வைப்பார் அன்று
அந்தச் சமுதாயத்தின் தகத்தகாய சூரியனை
அஞ்சல் துறைக்கு அமைச்சர் ஆக்கினார் கலைஞர் வென்று !
கலைஞர் வழி செல்வோம்
களம் அனைத்தும் வெல்வோம் !!