கே. மத்திய அரசால் நடத்தப்படும் பொருளாதார வளர்ச்சி நிறுவனம் நடத்திய ஆய்வறிக்கை முடிவில் எஸ்.சி., எஸ்.டி., கல்வி உதவித் தொகையை நிறுத்திவிடலாம் என்று பரிந்துரைத்துள்ளதே இது சரியா?
– தாட்சாயினி, இராயபுரம்- சென்னை
ப: இந்திய யூனியன் ஆட்சியை _ மத்திய அரசை நடத்திடும் கட்சி ஆர்.எஸ்.எஸ். _ அதன் அரசியல் வடிவம் பா.ஜ.க. அவர்களது எண்ணப்படி _ மனுதர்மப்படி கல்வி என்பது உயர்ஜாதி உரிமையாகவே _ ஏகபோகமாகவே _ நீடிக்க வேண்டும்; மற்ற ஒடுக்கப்பட்ட சமூக மக்கள் குறிப்பாக எஸ்.சி.யினர் கல்வி கற்று, பதவி பெற்று தங்கள் ஆளுமையைக் கேள்விக்குறி ஆக்கக் கூடாது என்பதே. அதற்காக ஆட்சி யந்திரத்தில் இந்த சமூக அநீதிகள் தொடர்கதைகளாகின்றன.
இதை எதிர்த்து ஊரடங்கு முடிந்தவுடன் ஒரு மாபெரும் மக்கள் கிளர்ச்சியை _ அறவழியில் நடத்திட நாம் ஆயத்தமாகி, ரத்து செய்யாமல் _ பாதிப்புக்கு ஆளாகாமல் _ காப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வோம்; நமது எம்.பி.க்கள் மூலமாக.
கே. பி.எம்.கேர்ஸ் எனப்படும் மத்திய அரசு சார்பாக வாங்கப்பட்டுள்ள வெண்டிலேட்டர்கள் செயலற்று உள்ளனவே – யார் பொறுப்பு?
– மதியழகன், பெரியாக்குறிச்சி
ப: ‘பி.எம்.கேர்ஸ்’ என்பதே வெளிப்படைத் தன்மையற்றதாக உள்ளது என்பது பலரது குற்றச்சாற்று. இந்நிலையில் இந்த முறைகேட்டை யார் விசாரிப்பது? குறைந்த அரசு(Minimum Government) நிறைந்த ஆளுமை (Maximum Governance)என்பது இதுதானோ?
கே. பாலஸ்தீனம் – இஸ்ரேல் பிரச்சினைக்கு என்னதான் தீர்வு?
– மழைமதி, காஞ்சிபுரம்
ப: எல்லாம் ‘அமெரிக்கப் பெரியண்ணன்’ கையில் இருக்கிறது. ஒரு பொது அமைப்பை ஏற்படுத்தி கண்காணித்தலும் _ இரு நாடுகளிலும் நடைபெறும் இம்மாதிரி சண்டை _ பாலஸ்தீன மக்களின் நியாயம் காக்கப்படுதல் அவசியம் என்பதை உலகுக்கு அந்த அமைப்பு உணர்த்த வேண்டும்.
கே. கொடிய கொரோனா சவாலையும் எதிர்கொண்டு, தான் அளித்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் ஆளுமைத் திறனை எப்படிப் பார்க்கிறீர்கள்?
– கலை ஆதவன், ஜெயங்கொண்டம்
ப: மக்கள் _ எதிர்க்கட்சியினர் எதிர்பார்த்ததைவிட பல மடங்கு சிறப்புடனும், திறமையுடனும், அர்ப்பணிப்புடனும் இரவு பகல் பாராது, கடமையாற்றி வரலாறு படைக்கிறார் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின்! ஆரியமும் பாராட்டும் ஆளுமைத்திறன்!!
கே. ஆர்.எஸ்.எஸ் அமைப்பு மோடியைக் கைவிடும் குரலில் பேசத் தொடங்கியுள்ளதே…. இதற்கான காரணமும் விளைவும் என்னவாக இருக்கும்?
– ஆ.சே.அந்தோணி ராஜ், செங்கோட்டை
ப: இன்னும் 3 ஆண்டுகளில் இதைவிட மோசமான நிலை ஏற்பட்டாலும் பெரிய மாற்றம் இருக்காது! அவற்றின் பிரதமர்கள் சுதந்திரமாக ‘தர்பார் நடத்துவதில்’ ஆர்.எஸ்.எஸ்.க்கு உடன்பாடு இல்லை; என்றாலும், வெளியே காட்டிக் கொள்ளாமல், பழமொழி சொல்லுவார்களே ‘ஊமையன் கனவு கண்டதுபோல்’ என்ற அந்த நிலை. இது புதிதல்ல.
வாஜ்பேயி பிரதமர், அத்வானி உள்துறை அமைச்சர் காலத்திலேயே ஏற்பட்டது. இப்போது கூடுதலாக இருக்கிறது என்றாலும், விட்டுக் கொடுக்காமல் கட்டியே தழுவுவார்கள் _ வேறு வழி இல்லாததால்! (மோடி அக்கட்சியில் தனக்கு பெரிய பலத்தை உருவாக்கி வைத்துள்ளார்.)
கே. மீண்டும் மீண்டும் தி.மு.க.வை ஈழத்தமிழருக்கு எதிரான இயக்கமாகக் காட்டுவதில் புலம்பெயர்ந்த தமிழர்கள் பலர் முனைப்பாக இருப்பது ஏன்?
– அயன்ஸ்டின் விஜய், சோழங்குறிச்சி
ப: அறியாமை, அகம்பாவம், அரைவேக்காட்டுத்தனம் _ ‘நன்றி மறந்த நல்லவர்கள்’ அத்தகையவர்கள்!
கே. சமூக நீதிக்கு எதிரான குரல்கள் ஒலிக்கப்படாமல் இருக்க நாம் என்ன செய்ய வேண்டும்?
– சா. அருண், உல்லியக்குடி (அரியலூர்)
ப: அனைவரும் ஒன்றுபட்டு சமூகநீதி என்று வரும்போது ஓரணியில் நிற்க வேண்டும். பகைவர் பின்னங்கால் பிடரியில்பட ஓடுவர்!
கே. எதிர்காலத்தில் அ.தி.மு.க. தொடர்ந்து பலமான கட்சியாக இருக்குமா? பாண்டிச்சேரி போல் பி.ஜே.பி.யால் அ.தி.மு.க. கட்சி அழிக்கப்படுமா?
– தமிழ் மைந்தன், சைதாப்பேட்டை
ப: அ.தி.மு.க. இப்போதே புதுச்சேரியில் இல்லை. படுதோல்வி _ பூஜ்யம்தான் மிச்சம். தமிழ்நாட்டில் சொந்தக் காலில் நின்று கொண்டிருக்கிறார்கள். எலி _ தவளை கூட்டணி முறிந்தாலும் உயிர் இருக்கும்!
கே. அமெரிக்காவில் இரண்டு தடுப்பூசி போட்டவர்கள் முகக்கவசம் அணியத் தேவையில்லை, சமூக இடைவெளி விடத் தேவையில்லை என்கிறார்களே, இந்தியாவுக்கு அந்த நிலை எப்போது, எப்படி வரும்?
– க.ல.சங்கத்தமிழன், செங்கை
ப: நிச்சயமாக இப்போது வராது! கொஞ்ச காலம் ஆகும் _ நமக்குப் போதிய அறிவு வரும் வரை!