இராவணனை வழிபடும் இடங்கள்:
மத்தியப் பிரதேசத்தில் இரண்டு இடங்களில் இராவணனை, குணமளிப்பவனாகவும் பாதுகாவலனாகவும் கொண்டாடுகிறார்கள்.
1. அந்த மாநிலத்தில் உள்ள மண்ட்சார் என்னும் ஊர் இராவணனின் மனைவி மண்டோதரியின் ஊராகக் கருதப்படுகிறது. எனவே, அந்த ஊர் மக்கள் இராவணனை தங்கள் மருமகனாகக் கருதுகின்றனர்.
அந்த நகரத்தின் கான்பூர் பகுதியில் உள்ள 35 அடி உயர இராவணன் சிலையின் இடது காலில் ஒரு சிவப்புக் கயிற்றைக் கட்டுவதன் மூலம் நோய் நொடிகளிலிருந்து மக்கள் காப்பாற்றப்படுவதாக நம்புகின்றனர்.
மற்ற பகுதி மக்கள் இராமனை வழிபடும் பதின் இரவின் (தசரா)போது மக்கள் பெருந்திரளாகத் திரண்டு இராவணனை வழிபடுகிறார்கள்
2. இதே மாநிலத்தின் விதிசா மாவட்டத்தில் இராவண்கிராம் என்னும் பெயரில் ஒரு சிற்றூர் உள்ளது. இராம லீலா கொண்டாட்டங்களின் போது அந்த ஊர்மக்கள் எவரும் இராவணன் உருவத்தை எரிக்கவே மாட்டார்கள். இராவணன் அவர்களுக்கு நல்லூழையும் பாதுகாப்பையும் வழங்கி அருளுவதாக நம்புவதால் வழிபடுகிறார்கள்.
தங்கள் இல்லத் திருமண நிகழ்ச்சிகளுக்கு முதல் அழைப்பிதழை அங்குள்ள இராவணன் கோயிலில் உள்ள இராவணனுக்குப் படைக்கும் வழக்கத்தைக் கொண்டுள்ளனர். எந்த வண்டி வாங்கினாலும் அதில் “ஜெய் லங்கேஷ்” என்று தவறாமல் எழுதி வைக்கின்றனர். அதனால் நேர்ச்சிகள் ஏற்படுவதில்லை என்று நம்புகின்றனர்.
இந்த ‘ராவண்கிராம்’ என்னும் ஊர், ம.பி. விதிசா மாவட்டத்தில், நேத்திரன் வட்டத்தில் அமைந்துள்ளது. பல நூற்றாண்டுகளாக இங்கு இராவண வழிபாடு நடந்து வருகின்றது. இந்தக் கோயிலினுள் 10 அடி உயர இராவணன் படிமம் படுத்த நிலையில் அமைந்துள்ளது. அந்தச் சிலையை நிமிர்த்தி வைக்க எவரேனும் முயன்றால் ஊருக்கே பேரழிவு எற்படும் என்று அந்த ஊர் மக்கள் நம்புகிறார்களாம்.
வழிபடுபவர்கள் எவரென்று கேட்கிறீர்களா?
இராவணன் பிறந்த குலமாகக் கருதப்படும் “கன்யகுப்ஜா” என்னும் பார்ப்பனப் பிரிவினராம்.
3. ராவண் மந்திர், பிசார்க், தில்லி
பெரு நோய்டாவில் இந்த இடம் இராவணன் பிறந்த இடம் என்று கூறுகிறார்கள். இந்தக் கோயில் இராவணனுக்கு உரியது. இராவணனின் தந்தை ‘விஷ்ரவா’ பெயரில் அமைந்துள்ள இந்த ஊரில் அமைந்துள்ல இந்தக் கோயிலை இராம பக்தர்கள் பல முறை தாக்கியும் மக்கள் தங்கள் கருத்தைச் சிறிதும் மாற்றிக்கொள்ளவில்லையாம்.
4. தக்ஷணான் ராவண் கோயில், கான்பூர், உ.பி.
இந்தக் கோயில் பதின் இரவு நாள்களில் மட்டும் திறக்கப்படுமாம். இராவணனை வழிபட மக்கள் பெரும் அளவில் திரளுவார்களாம். அந்த ஊரின் சிவன் கோயிலின் அருகில் அமைந்துள்ள கோயிலுக்கு மக்கள் அவனுடைய அறிவையும் வலிமையையும் கொண்டாடும் நோக்கத்தில் திரளுகிறார்களாம்.
5. இராவணன் கோயில், காக்கிநாடா. ஆந்திரா
ஆந்திராவின் கடற்கரையில் அமைந்துள்ள இந்தக் கோயிலில் உள்ள இராவணன், அவனுடைய சிவ பக்திக்காகக் கொண்டாடப் படுகிறானாம்.