கணையமும் நீரிழிவு நோயும்
(PANCREAS AND DIABETES MELLITUS)
‘கணையம்’ ஒரு முக்கியமான உடல் உறுப்பு. அதைப் பற்றியோ, அதன் செயல்பாடுகள் பற்றியோ பெரும்பாலோர்க்குத் தெரியாது. அதைப் பற்றிய விழிப்புணர்வு மக்களிடையே இல்லை. கணையம், இரைப்பைக்குக் கீழே, வயிற்றின் இடதுபுறம் அமைந்துள்ள ஒரு நீண்ட வடிவமான உறுப்பு. இரைப்பைக்குக் கீழே, சற்று பின்புறமாக இது அமைந்துள்ளது. மாவிலை வடிவத்தில், முன் சிறு குடலுக்கு (Duodenum) இடது பக்கமாக நீலமும், மஞ்சளும் கலந்த ஒரு நிறத்தில், தட்டையான வடிவில் அமைந்துள்ள உறுப்பு இது. இதன் நீளம் 15 முதல் 20 செ.மீ. அளவும், எடை 100 கிராம் அளவிலும் இருக்கும்.
இது ஒரு கலப்படச் சுரப்பி. இதில் நாளமில்லாச் சுரப்பிகளும், நாளமுள்ள சுரப்பிகளும் ஒருங்கிணைந்து அமைந்திருக்கும். இதுபோன்ற இரண்டு வகைச் சுரப்பிகள் (Dual Gland), கொண்ட உறுப்பு இது ஒன்றுதான். நாளமுள்ள சுரப்பிகள் உணவின், செரிமானத்திற்குத் தேவையான “நொதியங்களை’’ (Enzymes) சுரக்கின்றது. இப்படி சுரக்கும் “கணைய நீர்’’ (Pancreatic Enzyme) “கணைய நாளம்’’ (Pancreatic Duct) வழியே முன் சிறு குடலுக்கு செலுத்தப்படுகிறது. கணையத்தில் “லாங்கர்ஹான்ஸ் திட்டுக்கள்’’ (Islets of Langerhans) எனும் சிறப்புத் திசுக்கள் ஆங்காங்கே பரவி இருக்கும். உடல் நலத்துடன் இருக்கும் மனிதரிடம் இத்திட்டுக்கள் பத்து லட்சம் என்ற அளவில் இருக்கும். ஒவ்வொரு திட்டிலும் மூன்றாயிரம் முதல் நான்காயிரம் உயிரணுக்கள்(Cells) இருக்கும். இந்த அணுக்கள் “ஆல்பா’’ (Alfa), “பீட்டா’’ (Beta), “டெல்டா’’ (Delta) என்ற மூன்று வகையாக அமைந்திருக்கும். ஆல்பா அணுக்கள், “குளுக்கோகான்’’ (Glucogan) என்னும் ஊக்கி நீரையும், பீட்டா அணுக்கள் “இன்சுலின்’’ (Insulin) என்னும் ஊக்கி நீரையும், டெல்டா அணுக்கள் “சொமாட்டோஸ்டேட்டின்’’(Somatostatin) எனும் ஊக்கி நீரையும் சுரக்கின்றன. இந்த அணுக்களிலிருந்து வெளியேறும் ஊக்கி நீர்கள், (இந்த அணுக்கள்) நாளமில்லாததால், நேரடியாக இரத்தத்தில் கலந்து விடுகின்றன. ஒருபுறம் கணைய நீர் உற்பத்தியாகி உணவு செரிமானத்திற்கு உதவுவதும், மறுபுறம் ஊக்கிகள் (Hormones) உற்பத்தியாகி இரத்தத்தில் கலப்பதுமாகிய இரண்டு வேலைகளையும் ஒரே நேரத்தில் செய்கின்ற உறுப்பு நம் உடலில் கணையத்தைத் தவிர வேறு ஏதுமில்லை.
கணைய நீர்: நாம் உண்ணும் உணவில் உள்ள புரதச் சத்துகளைச் செரிப்பதற்கென்று “டிரிப்சின்’’ (Trypsin), “கைமோடிரிப்ஸின்’’ (Chymotrypsin), “கார்பாக்ஸி பெப்டிடேஸ்’’ (Corboxy Peptidase) என மூன்று வகை நொதியங்களை (Enzymes) சுரக்கும். டிரிப்சின், கைமோடிரிப்சின் இரண்டும் உணவில் உள்ள புரத மூலக்கூறுகளை உடைத்து “பெப்டைடு’’ (Peptide)களாக மாற்றுகின்றன. இந்த பெப்டைடுகளை கார்பாக்ஸி பெப்டிடேஸ் என்னும் நொதியம், மேலும் உடைத்து “அமினோ அமிலங்களாக (Amino acids)மாற்றி இரத்தம் வழியாகக் கல்லீரலுக்குச் செலுத்தப்படுகிறது. இது தவிர கணைய நீரில் உள்ள “அமைலேஸ்’’ (Amylace) என்னும் நொதியம், நாம் உண்ணும் உணவில் உள்ள “மாவுச்சத்தை’’ (Starch), “மால்டோஸ்’’ (Maltose)என்னும் பொருளாக மாற்றுகிறது. அதேபோன்று கணைய நீரில் உள்ள மற்றொரு நொதியமான “லைப்பேஸ்’’ (Lipase) கொழுப்பு உணவை, “கொழுப்பு அமிலமாக (Fatty acids) வும், “கிளிசராலாகவும்’’ (Glycerol) மாற்றம் செய்கிறது. இவை அனைத்தும் குடலில் உறிஞ்சப்பட்டு ரத்தத்தில் கலக்கின்றன. இரைப்பையிலிருந்து, சிறு குடலுக்கு வரும், உணவுக் கூழில் உள்ள அமிலத் தன்மையை சமன் செய்ய (Neutralise), “பை கார்பனேட் அயனி’’களை (Bi-Carborate Ions) சுரந்து, அதையும் கணைய நாளம் வழியே சிறுகுடலுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இது போன்று, நம் உண்ணும் உணவு செரிப்பதற்கு கணையம் என்ற இந்த உறுப்பு பெரும் பங்கு வகிக்கின்றது. கரையாத புரதங்களை உடைத்து கரையும் “பெப்டைடு’’களாகவும், பின் அமினோ அமிலங்களாகவும் மாற்றி, நம் உடல் வளர்ச்சிக்குப் பெரிதும் காரணமாகிறது. அதே போன்று மாவுச் சத்துகளைச் (Carbohydrates) சிதைத்து, மால்டோஸ் என்று மாற்றியும், பெரும் மூலக் கூறுகளாக இருக்கும் கொழுப்பை (Cholestrol) உடைத்து, கொழுப்பு அமிலமாகவும் (Fatty acids), கிளிசராலாகவும் பிரித்து சிறு சிறு மூலக்கூறுகளாக்கி (Molecules)எளிதில் செரிக்க வைக்கும் பணியைச் செய்வதன் மூலம் உணவுச் செரித்தலை செவ்வனே செய்வதன் மூலம், நம் உடலில் “வளர்சிதை மாற்றம்’’ (Metabolism) நிகழ்த்துவதும், அதனால் உடல் வளர்ச்சிக்கு அடிப்படையான காரணியும் ஆகிறது.
நாளமில்லாச் சுரப்பிகளான “லாங்கர்ஹான்ஸ் திட்டுக்களில் (பீட்டா உயிரணுக்களிலிருந்து) சுரக்கும், “இன்சுலின்’’ நமது உடலில், இரத்தத்தைக் கட்டுக்குள் வைப்பதில் பெரும்பங்கு வகிக்கிறது. (இன்சுலின் குறைபாட்டால்தான் ‘நீரிழிவு’ நோய் உண்டாகிறது. ஆல்பா உயிரணுக்களில் சுரக்கும், “குளுக்கோகான்’’ இரத்தத்தில் சர்க்கரைச் சத்து குறையும்போது, கல்லீரலில் சேமிக்கப்பட்டுள்ள “குளுக்கோஸை’’ (Glucose) எடுத்து வந்து ரத்தத்தில் கலக்கும் செயல்பாட்டைச் செய்கிறது. இதனால் உடலின் அணுக்களின் (Cells) செயல்பாட்டைச் சீராக வைப்பதில் குளுக்கோகான் என்ற ஊக்கி நீர் பெரும்பங்கு வகிக்கிறது. இந்த இரண்டு (இன்சுலின், குளுக்கோகான்) ஊக்கி நீர்களும், ஒன்றோடு ஒன்று இணைந்து செயல்படுவதால், இரத்தத்தில் “குளுக்கோஸ்’’ சீராக வைக்கப்படுகிறது. “டெல்டா’’ அணுக்களில் சுரக்கும் சுரப்பான “சோமட்டோஸ்டாடின் (Somatostatin) ஊக்கி நீர்(Hormone), “வளர்ச்சி ஊக்கி நீர், தடுப்பு ஊக்கி நீராக (Growth Hormone – Inhibiting Hormone) ஆக செயல்படுகிறது. இதன் மூலம் வளர்ச்சி ஊக்கி நீர் (Growth Hormone) சுரப்பு கட்டுக்குள் வைக்கப்படுகிறது. இது “பெப்டைடு ஊக்கி நீர்’’ (Peptide Hormone) என்றும் மறு பெயரில் அழைக்கப்படுகிறது. உடலில் உள்ள மற்ற நாளமில்லாச் சுரப்பிகளையும் (Endocrine Glands), அவற்றின் சுரப்புகளையும் ஒழுங்குபடுத்தும் பணியை இந்த ஊக்கி நீர் செய்கிறது. இதேபோல் இன்சுலின், குளுக்கோகான் சுரப்பையும் கட்டுப்படுத்துகிறது. உடலின் அணுக்களின் அதிக வளர்ச்சியைத் தடுக்கும் பணியையும் இந்த ஊக்க நீரே செயல்படுத்துகிறது.
கணைய அழற்சி (PANCREATITIS)
கணைய அழற்சி (Pancreatitis) , கணையத்தில் ஏற்படும் அழற்சியாகும் (Inflammation). இந்த அழற்சி, “திடீர் அழற்சி (Acute Pancreatitis) என்றும், “நாள்பட்ட அழற்சி’’ (Chronic Pancreatitis) என்றும் இருவகைப்படும். “திடீர் அழற்சி’’, எதிர்பாரதவிதமாகத் தோன்றி, சில நாள்கள் இருக்கும். “நாள்பட்ட அழற்சி’’ (Chronic Pancreatitis)பல ஆண்டுகள் இருக்கும்.
“திடீர் கணைய அழற்சி’’ (Acute Pancreatitis): இந்நோய் திடீரெனத் தோன்றும். ஒரு சில நாள்களே இருக்கும். லேசான அறிகுறிகள் முதல் உயிருக்கே ஆபத்து விளைவிக்கும் நிலையைக்கூட, சில நோயாளிகளுக்கு ஏற்படுத்தும். சரியான மருத்துவம் மூலம் திடீர் கணைய அழற்சியை முழுமையாகச் சரியாக்கலாம். சரியான மருத்துவம் செய்யாவிடில், திடீர் கணைய அழற்சி நாளடைவில் “நாள்பட்ட அழற்சி’’ நோயாக மாறும் நிலை ஏற்படும்.
“நாள்பட்ட கணைய அழற்சி’’ (Chronic Pancreatitis): நீண்ட நாள்களாக இருக்கும் கணைய அழற்சி, நாள்பட்ட நோயாக மாறும். திடீர் கணைய அழற்சிக்கு சரியான மருத்துவம் செய்து கொள்ளாமல் விடுவதால், “நாள்பட்ட கணைய அழற்சி’’யாக மாறும். அடுத்த முக்கிய காரணியாக விளங்குவது, “மதுப்பழக்கம்’’. நீண்ட நாள் மதுப்பழக்கம், முதலில் எந்த அறிகுறிகளையும் வெளிப்படுத்தாவிட்டாலும், சிறிது காலத்தில் கணையம் சேதமாகும். அந்த நிலையில் திடீரென மிகவும் ஆபத்தான அறிகுறிகளோடு நோய் திடீரென வெளிப்படும்.
(தொடரும்…)