சிறுகதை : கல்விக்கு முதலிடம்

ஜூன் 01-15 2021

ஆறு கலைச்செல்வன்

தான் ஓட்டிவந்த மிதிவண்டியை நிறுத்திவிட்டு எதிரே தெரிந்த அய்ந்து நட்சத்திர விடுதியை அண்ணாந்து பார்த்தான் அதியமான். விடுதியின் ஒரு பக்கத்தில் பதாகை ஒன்று கட்டப்பட்டிருந்தது. அதில் ஒரு சேவைச் சங்கக்  கூட்டம் பற்றிய செய்தி இடம் பெற்றிருந்தது.

அதியமானும் அந்த சேவைச் சங்கத்தின் உறுப்பினர்தான். அந்த சங்கத்தின் கூட்டம்தான் அந்த அய்ந்து நட்சத்திர விடுதியில் நடைபெற உள்ளது. அதில் கலந்துகொள்ளவே அதியமான் அங்கு வந்திருந்தான்.

விலையுயர்ந்த கார்கள் சரசரவென வந்து நின்றன. ஆடம்பரமான ஆடையணிந்த உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற இருந்த அரங்கம் நோக்கி விரைந்தனர். இந்த நிலையில்தான் கூட்டத்தில் கலந்துகொள்ள அதியமான் தனது மிதிவண்டியில் அங்கு வந்து சேர்ந்தான். அவனைப் பார்த்த மற்ற உறுப்பினர்கள் பலரும் ஓர் ஏளனப் பார்வையை அவன்மீது வீசிவிட்டுச் சென்றதை அவன் உணர்ந்தான்.

இருப்பினும் ஒரு சிலர் அவனை வியப்புடன் பார்த்துச் சென்றதையும் அவன் கவனிக்கத் தவறவில்லை.

“மிகவும் வறுமையில் இருப்பவனோ?’’ எனச் சிலர் எண்ணிச் சென்றனர்.

அப்போது அந்தச் சங்கத்தின் மூத்த உறுப்பினர் மணிவண்ணன் என்பவர் அங்கு வந்து சேர்ந்தார். அவர்தான் அதியமானை அந்தச் சங்கத்தில் இணைத்தார். வசதி படைத்தவர்கள் மட்டுமே அந்தச் சங்கத்தில் உறுப்பினராக முடியும் என்ற நிலையினை மாற்றி அனைவரையும் உறுப்பினராக்க விரும்புபவர் மணிவண்ணன். அதியமான் மீது அவருக்கு நல்ல நம்பிக்கை இருந்தது. அதியமானும் அவர் மீது மதிப்பும் மரியாதையும் வைத்திருந்தான்.

மிதி வண்டியில் வந்து இறங்கிய அதியமானை அழைத்து அவனிடம் பேச்சுக் கொடுத்தார்.

“அதியமான், உங்களிடம் மோட்டார் சைக்கிளோ, காரோ இல்லையா?’’ எனக் கேட்டார்.

“இருக்கு அய்யா’’ எனப் பதிலளித்தான் அதியமான்.

“கூட்டத்திற்கு காரில் வர வேண்டியதுதானே! அல்லது பைக்கிலாவது வரலாமில்லையா? அப்பத்தானே கவுரமாக இருக்கும்! இங்கே வரும் எல்லோரும் உங்களை ஒரு மாதிரியாகப் பார்க்கிறார்கள் அல்லவா?’’ என உரிமையுடன் கேட்டார் மணிவண்ணன்.

“இல்லை அய்யா. நான் நீண்ட தூரப் பயணத்திற்கு மட்டுமே அவற்றைப் பயன்படுத்துவேன்’’ என்றான்.

“ஏன் சிக்கனமா?’’ என வேண்டுமென்றே அவன் வாயைக் கிளறினார் மணிவண்ணன்.

“சிக்கனம் மட்டுமல்ல. உடலுக்கும் நல்லதுதானே. நாம் இந்த சேவைச் சங்கத்தில் இணைந்ததின் நோக்கமென்ன?’’ எனக் கேட்டான் அதியமான்.

இந்தக் கேள்வியை மணிவண்ணன் எதிர்பார்க்கவில்லை. இருப்பினும் பதில கூறினார். அவர்கள் உரையாடல் தொடர்ந்தது.

“ஓர் அறிமுகத்திற்காக. நமது தொழில் வளர்ச்சிக்காக’’ என்றார்.

“அப்புறம்?’’

“சோஷியல் சர்வீஸ்’’

“மற்றவர்களுக்குச் சேவை செய்யவும், நட்பைப் பலப்படுத்திக் கொள்ளவுமே நாம் இணைந்தோம். அதற்காகத்தான் என்னையும் இணைத்தீர்கள். அதற்கு நாம் நல்ல உடல் நலத்தோடு இருக்க வேண்டுமல்லவா?’’ எனக் கேட்டு சற்றே நிறுத்தினான் அதியமான்.

மணிவண்ணன் எப்போதுமே அவன் வாயைக் கிளறி அவனிடமிருந்து பல நல்ல செய்திகளைப் பெற வேண்டும் என்று விரும்புவார். அவற்றை உள்வாங்கிக் கொண்டு அந்தச் செய்திகளை பிறருக்குச் சொல்வார் மணிவண்ணன். அன்றும் அவன் வாயைக் கிளறி சில செய்திகளைப் பெற முடிவு செய்தார்.

“ஆமாம். நல்ல உடல் நலம் தேவைதான். அதற்கும் சைக்கிளில் வருவதற்கும் என்ன சம்பந்தம்?’’ என வினவினார் மணிவண்ணன்.

“சேவை செய்ய நமக்கு நல்ல உடல்நலம் தேவை. மிதிவண்டி என்பது அதற்கு உறுதுணையாக இருக்கும். நடைப்பயிற்சி எவ்வளவு முக்கியமோ அதேபோல் மிதிவண்டிப் பயன்பாடும் முக்கியம். முதலில் இது சுற்றுச்சூழலை மாசுபடுத்தாது. எரிபொருள் தேவையும் இல்லை. இதை நீங்கள் ஒப்புக்கொள்வீர்கள் அல்லவா?’’ எனக் கேட்டான் அதியமான்.

“ஆமாம். உண்மைதான்’’ என ஒப்புக் கொண்டார் மணிவண்ணன்.

“மிதி வண்டி ஓட்டுவதால் வயிற்று தசைகளும், முதுகுத் தசைகளும் வலுவடையும். உடலில் ஒருவித சமநிலைத் தன்மை உண்டாக்கப்படும். தொடைச் தசை, முழங்கால் தசை நன்கு இயங்கி வேலை செய்யும். உடல்கட்டு நன்றாகவும், வலிமையுடனும் ஆரோக்கியத்துடனும் இருக்கும். ஒரு வாரத்தில் மூன்று மணிநேரம் சைக்கிள் ஓட்டினால் இதய நோய்கள், இரத்தக் குழாய் அடைப்பு போன்றவை நிகழாது’’ என்று கூறி முடித்த அதியமான் மேலும் ஏதோ சொல்லப் போனான். அவனை இடைமறித்த மணிவண்ணன்.

“போதும், போதும் அதியமான். நிறைய சொல்லிட்டே இதுபற்றி நாம் மீண்டும் பிறகு பேசலாம். கூட்டத்திற்கு நேரமாயிடுச்சி’’ என்று சொன்ன மணிவண்ணன் திடீரென ஒரு குண்டைத் தூக்கிப் போட்டதுபோல் ஒரு செய்தியைச் சொன்னார்.

“அடுத்த ஆண்டு நமது சங்கத்திற்கு நீங்களே தலைமைப் பொறுப்பை ஏற்றுச் செயல்பட வேண்டும். அதற்கு நான் ஏற்பாடு செய்கிறேன்’’ என்பதுதான் அந்தச் செய்தி. அதைக்கேட்ட மணிவண்ணன் பதறினான்.

“வேண்டாம். வேண்டாம். சாதாரண உறுப்பினராக இருந்தே என்னால் பணி செய்ய முடியும். தலைவர் பதவியெல்லாம் வேண்டாம்’’ என உடனடியாக மறுத்தான் அதியமான்.

ஆனால், அவன் கூறியதை மணிவண்ணன் செவிமடுக்கவில்லை. நேரமாகிவிட்டபடியால் இருவரும் கூட்டம் நடைபெறும் அரங்கை நோக்கி விரைந்தனர்.

நாள்கள் சில கடந்தன. மணிவண்ணன் மற்ற உறுப்பினர்களிடமும் பேசி அதியமானை அடுத்த தலைவராகத் தேர்ந்தெடுக்க முடிவு செய்தார். மற்ற உறுப்பினர்களுக்கு மாற்றுக் கருத்துகள் இருந்தாலும் மூத்த உறுப்பினரான மணிவண்ணன் கூற்றை யாரும் மறுத்துப் பேச முடியவில்லை.

மேலும், மணிவண்ணன் தொடர்ந்து கூட்டங்களுக்கு வருபவரும் அல்ல. அடிக்கடி அவருக்கு உடல்நலமில்லாமல் போய் விடுவதுண்டு. சங்கச் செயல்பாடுகள் பலவற்றில் அவருக்கு உடன்பாடு இருக்காது. உண்மையான சேவையில் உறுப்பினர்கள் ஈடுபடுவது இல்லை என்ற குறைபாடு அவருக்கு இருந்தது.

இதையெல்லாம் அதியமான் சரி செய்வான் என அவர் நினைத்தார்.

அவரே அதியமானிடமும் பேசி அவனையும் சம்மதிக்க வைத்துவிட்டார்.

அதியமான் தலைவராகப் பொறுப்பேற்கும் நாளும் வந்தது. பதவி ஏற்பு நிகழ்ச்சியை மிகவும் எளிமையாக நடத்தினான். பள்ளியில் படிக்கும் ஏழை மாணவர்களுக்கு அந்த நிகழ்வில் உதவிகள் செய்தான்.

நாள்கள் நகர்ந்தன. பள்ளிக்காவும் மாணவர்களின் படிப்புக்காகவும் முக்கியத்துவம் கொடுத்து பணிகளைச் செய்தான் அதியமான். மத சம்பந்தப்பட்ட நிகழ்வுகளை முற்றிலும் தவிர்த்தான்.

இதனால் கோபமடைந்த உறுப்பினர்கள் பலரும் அதியமானைத் திட்டித் தீர்த்தனர்.

உறுப்பினர் ஒருவர், சிறைமீட்ட விநாயகன் கோயிலுக்கு சுற்றுச் சுவர் அமைத்துத் தரவேண்டும் என்றார். அதற்காக நிதிதிரட்ட வேண்டுமென்றார். வேறு பல உறுப்பினர்களும் பல வழிபாட்டு இடங்களுக்கு வேண்டிய வசதிகள் செய்து தரவேண்டுமென வற்புறுத்தினர்.

இந்நிலையில் இராஜா இராமலிங்கம் என்ற ஆசிரியர் அதியமானை அணுகினார்.

“எங்கள் பள்ளியில் குடிநீர் வசதி சரியாக இல்லை. உங்கள் சங்கம் அதற்கு ஏற்பாடு செய்து தண்ணீரை சுத்தப்படுத்தும் கருவியும் வாங்கித் தர வேண்டுமெனவும், ஸ்மார்ட் கிளாஸ் அமைத்துத் தர வேண்டுமெனவும் கோரிக்கை வைத்தார். அதியமான் அவரது கோரிக்கையை ஏற்று ஆழ்குழாய் கிணறு அமைக்கவும், ஸ்மார்ட் கிளாஸ், குடிநீர் சுத்திகரிப்புக் கருவி அமைத்துத் தரவும் ஒப்புக் கொண்டான்.

ஒப்புக்கொண்ட அவன் அதற்காக முழு மூச்சுடன் செயல்படலானான். பலரிடம் நிதி திரட்டினான். அவன் சார்ந்த சங்கத்திடமிருந்து அதிக அளவில் ஆதரவு இல்லாமல் இருந்தாலும்கூட பிற அமைப்புகளிடமிருந்து நிதி  திரட்டி பள்ளிக்கு வேண்டிய பணிகளை ஆசிரியர் இராஜா இராமலிங்கம் உதவியுடன் செய்து முடித்தான். அதே மாதத்தில 20ஆம் தேதி திறப்பு விழாவிற்கும் ஆசிரியர் இராஜா இராமலிங்கம் ஏற்பாடு செய்தார். விழா அதியமான் தலைமையில் நடைபெறும் என்றும் அறிவித்தார்.

இந்நிலையில் ஒருநாள் அதியமானை மணிவண்ணன் சந்தித்தார். பள்ளிக்குச் செய்ய உள்ள உதவிகளை எடுத்துச் சொன்னான் அதியமான். இதுபற்றி அடுத்த வாரக் கூட்டத்தில் உறுப்பினர்களிடம் தெரிவிக்கும்படி கேட்டுக் கொண்டார் மணிவண்ணன்.

கூட்ட நாள் வந்தது. பள்ளிக்குச் செய்யப் போகும் உதவிகள் பற்றியும் விழா நாள் குறித்தும் அதியமான் எடுத்துரைத்தான். ஆனால், பலரும் இந்த அறிவிப்பைக் கடுமையாக எதிர்த்தனர்.

“வரும் 20ஆம் தேதி பள்ளி நிகழ்ச்சியை ஏற்பாடு செய்ஞ்சிருக்கீங்க. ஆனா, அன்னைக்குத் தான் நம்ம ஊரில் தேர்த் திருவிழா நடக்க இருக்குது. அப்போது நாம் பக்தர்களுக்கு நீர் மோர் வழங்கவும், உணவுப் பொட்டலங்கள் வழங்கவும் வேண்டாமா?’’ என்று சீறினார் இராமன் என்ற உறுப்பினர். அவருடைய கருத்தைப் பலரும் ஆதரித்தனர்.

“பள்ளி விழாவை வேறு தேதியில் வைத்துக் கொள்ளுங்கள். பக்தர்களுக்கு நீர் மோர் வழங்கவும் உணவுப் பொட்டலங்கள் வழங்கவும் தலைவர் கண்டிப்பாக வரவேண்டும்’’ என்றார் சுப்ரமணியன் என்ற உறுப்பினர்.

“தேர்த் திருவிழாதான் முக்கியம். அதோடு மட்டுமல்ல. சுவாமிக்கு தங்கக் கீரீடம் ஒன்று செய்து தரவேண்டும். அதற்கு நிதி திரட்ட வேண்டும். பள்ளிக்கூடத்திற்கு அரசாங்கம் வேண்டுமானால் தேவையானதைச் செய்து தரட்டும். நாம் தெய்வப் பணி செய்வோம்’’ என்று கத்தினார் ஜெகதீசன் என்ற உறுப்பினர்.

அனைத்தையும் காதில் வாங்கிக் கொண்ட அதியமான் எழுந்து பேசத் தொடங்கினான்.

“கல்வி ஒன்றுதான் இந்த உலகை மாற்றக்கூடிய சக்திவாய்ந்த ஆயுதம். இது அறிஞர்கள் கூற்று. கல்வி வளர்ச்சிக்கு உதவினால்தான் மக்களை நாம் உயர்ந்த நிலைக்குக் கொண்டு செல்ல முடியும். வெற்றி என்பது எப்போது கிட்டும்? கல்வி அறிவு இருந்தால் மட்டுமே கிட்டும். அதை நாம் குழந்தைகளுக்குக் கொடுப்பதன் மூலம்தான் அவர்களை நாம் மகிழ்ச்சியடைய வைக்க முடியும். அடுத்து சுகாதாரம். அதற்கு நாம் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். உலகில் போலியோ என்ற கொடிய நோயை ஒழித்ததில் நமக்கும் பெரிய பங்கு உண்டு.

ஆகவே, பள்ளி விழாவிற்கு அனைவரும் வர வேண்டும். நான் இந்தச் சங்கத்தின் தலைவர். நீங்கள்தான் என்னைத் தேர்ந்தெடுத்தீர்கள். நான் சொல்வதை நீங்கள் கேட்க வேண்டும். நீங்கள் அந்தச் கிராமத்திற்கு வாருங்கள். உண்மை உங்களுக்குப் புரியும்’’ என்று நீண்ட நேரம் பேசினான் அதியமான். கூட்டத்தில் ஒரே அமைதி.

குறிப்பிட்ட நாளில் பள்ளி விழா நடந்து முடிந்தது. அதியமானுடன் மணிவண்ணன் போன்ற ஒரு சில உறுப்பினர்களே கலந்து கொண்டனர்.

இது முடிந்த அடுத்த சில நாள்களில் வழக்கம் போல் சங்கக் கூட்டம் நடைபெற்றது. தேர்த் திருவிழாவிற்கு தலைவர் வராதது குறித்து சிலர் ஆதங்கப்பட்டனர். அப்போது பள்ளி விழா நடைபெற்ற கிராமத்திலிருந்து பல இளைஞர்களும் ஊர்ப் பெரியவர்களும் கூட்ட அரங்கினுள் வந்தனர். பள்ளிக்குச் செய்த உதவிகள் குறித்து நன்றி தெரிவித்தனர். தலைவர் அதியமானையும் மற்ற உறுப்பினர்களையும் வானாளாவப் புகழ்ந்தனர். குறிப்பாக அவர்கள் தலைவரோடு ஒத்துழைத்த உறுப்பினர்களை வெகுவாகப் புகழ்ந்தனர். சங்க வளர்ச்சிக்கு தாங்களும் உதவுவதாகக் கூறினர். பல இளைஞர்கள் தாங்களும் சங்கத்தில் இணைவதாகக் கூறினர். இதையெல்லாம் கேட்ட பள்ளி விழாவிற்கு வராத உறுப்பினர்கள் குற்ற உணர்வுடன் சற்றே நெளிந்தனர். அதியமான் பெருமிதத்துடன் அனைவரையும் பார்த்தான். பிறகு கிராம மக்களைப் பார்த்து,

“உங்கள் அன்புக்கு நன்றி. பள்ளிக்குச் செய்த உதவிக்கு நான் மட்டும் காரணமல்ல. இங்குள்ள அனைத்து உறுப்பினர்களுமே காரணம். உங்கள் வாழ்த்துகளையெல்லாம் இந்த சங்க உறுப்பினர்களுக்கும் உதவியவர்களுக்கும் உரித்தாக்குகிறேன்’’ என்றான்.

இது சில உறுப்பினர்கள் மத்தியில் அதியமானின் செயலுக்கு நாம் உறுதுணையாக இல்லாமல் போய்விட்டோமே என்ற கவலையை உண்டு பண்ணியது. இனி வருங்காலங்களில் அதியமானுக்கு உறுதுணையாக இருக்க மனதிற்குள் உறுதி பூண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *