வல்லம் பெண்ணடிமை ஒழிப்பு கருத்தரங்கம்
கி.வீரமணி
முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர்கள் காரைக்குடி என்.ஆர்.சாமி – பேராண்டாளு அம்மையார் ஆகியோரின் குடும்பத்தின் மூன்றாம் தலைமுறை செல்வங்களான தி.பெரியார் சாக்ரடீசு – (அன்றைய பசும்பொன் மாவட்ட தி.க செயலாளர் சாமிதிராவிடமணி – செயலட்சுமி ஆகியோரின் மகன்) செல்வி ஜெ.இங்கர்சால் (சிவகங்கை பா.ஜெயராமன் – தமிழரசி ஆகியோரின் மகள்) ஆகியோரின் வாழ்க்கைத் துணைநல ஒப்பந்த விழாவை 25.5.1996 அன்று காரைக்குடி மீனாம்பிகா திருமண மண்டபத்தில் தலைமையேற்று ராகுகாலத்தில் நடத்தி வைத்தேன்.
இந்த மணவிழாவையொட்டி காரைக்குடி நகரம் முழுவதும் கழகக் கொடியும், தோரணங்கள் எங்கு பார்த்தாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தன. மணமகனின் தந்தை சாமி.திராவிடமணி மணவிழாவிற்கு வந்திருந்த அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.
வாழ்க்கைத் துணை நல ஒப்பந்தத்தை கூறச் செய்து மணவிழாவை நடத்திவைத்தேன். மணவிழாவில் புலவர் பழம்நீ, வழக்குரைஞர் அ.அருள்மொழி, வழக்குரைஞர் ச.இன்பலாதன், குடிநீர் வடிகால் வாரிய முன்னாள் தலைவர் கற்பூர சுந்தரபாண்டியன் அய்.ஏ.எஸ்., தொழிலதிபர் திருநாவுக்கரசு, திரைப்பட இயக்குநர் எஸ்.பி.முத்துராமன், வணிக கழகத் தலைவர் நாகப்பன், குன்றக்குடி அடிகளார் பொன்னம்பலதேசிகர் ஆகியோர் மணமக்களை வாழ்த்திப் பேசினார்கள்.
மணவிழாவில் சிறப்புரையாற்றுகையில், “சாமி.திராவிடமணியிலிருந்து அவருடைய செல்வர்கள் வரை நல்ல கொள்கை உறுதி கொண்ட தோழர்கள். சாமி.திராவிடமணி அவர்களுடைய தந்தையார் முதுபெரும் பெரியார் தொண்டர் சுயமரியாதைச் சுடரொளி என்.ஆர்.சாமி அவர்களும், நம்முடைய மாவட்டத் தலைவர் வழக்கறிஞர் இன்பலாதனுடைய தந்தையார் வழக்கறிஞர் சண்முகநாதன் அவர்களும், “நாங்கள் மாவட்ட பொறுப்பிலிருந்து விலகிக் கொள்கின்றோம். இளைஞர்கள் அந்தப் பொறுப்பை பார்க்கட்டும்’’ என்று வழிவிட்டு விலகிக் கொண்டு, இயக்கப் பணியைத் தொடர்ந்தவர்கள். இந்த மணவிழாவிற்கு அச்சடிக்கப்பட்டிருக்கின்ற அழைப்பிதழிலே மூன்று தலைமுறைகளில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சிகளை இணைத்து செய்திகளைப் போட்டிருக்கின்றார்கள். 1940லே என்.ஆர்.சாமி_பேராண்டாள் திருமணம், அடுத்த தலைமுறை திருமணம் 4.7.1968லே சாமி.திராவிடமணிக்கும் _ செயலட்சுமி அவர்களுக்கும், அதனைத் தொடர்ந்து மூன்றாவது தலைமுறை திருமணத்தை இப்பொழுது மேடையிலே நீங்கள் பார்க்கின்றீர்கள். இந்த மணவிழா (சுயமரியாதை திருமணம்)6ஆவது தலைமுறை கொண்ட 70 ஆண்டு வரலாற்றினை உள்ளடக்கிய திருமணமாகும்.
மணவிழாவிலே எப்பொழுதும் முதலிலே பேசிவிட்டு, கடைசியாகத்தான் மணவிழாவை நடத்துவேன். இன்று முதலில் திருமணத்தை நடத்தி வைத்திருக்கிறேன். காரணம், அவசர அவசரமாக ‘இராகுகாலம்’ என்பது முடிவதற்குள்ளாக இந்த மணவிழாவை நடத்த வேண்டும் என்பதற்காக. சிலர் எங்களைப் பார்த்து, “பகுத்தறிவாதியாகிய நீங்கள் இராகுகாலம் என்ற ஒன்றை நம்புகிறீர்களா?’’ என்று கேட்கலாம். அல்ல; ராகுகாலம் என்று ஒன்று இருக்கின்றது என்று நம்பி சிலர் நடுங்குகின்றார்களே அந்த மூடநம்பிக்கையைக் களைய வேண்டும் என்பதற்காக இதை விளக்கி செய்கின்றோம். எங்கே மூடநம்பிக்கை இருக்கின்றதோ அங்கு தன்னம்பிக்கை விடைபெற்று விடும். இந்த மண்ணில் மூடநம்பிக்கைகள் இருக்கும் வரை எங்கள் இயக்கம் இருக்கும். எவ்வளவு நாளைக்கு நோய்கள் இருக்கின்றதோ அவ்வளவு காலத்திற்கும் டாக்டர்களுக்கு வேலை இருக்கின்றது என்பதுபோல.
குடும்பத்தில் என்.ஆர்.எஸ். அவர்கள் செய்த அறிவுப் புரட்சியைப் பற்றி 1985இல் ரஷ்யாவில் பேசும்பொழுதுகூட சொல்லியிருக்கின்றேன். ‘எங்களுடைய நாட்டிலே பொதுஉடைமைத் தத்துவத்தை வலியுறுத்துகின்ற வகையிலே “சமதர்மம்“ என்று 50 ஆண்டுகளுக்கு முன்பு பெயர் வைத்திருக்கிறார்கள். ஸ்டாலின், காரல்மார்க்ஸ், லெனின், ரஷ்யா என்று எல்லாம் பெயர் வைத்திருக்கிறார்கள்.
அதனால்தான் பெரியாரை கொண்டு போய் சாக்ரட்டீசோடு இணைத்தார் சாமி.திராவிடமணி. ஏனென்றால் அறிவைப் பயன்படுத்து என்று சொன்ன வகையிலேதான் சாக்ரட்டீஸ் பெரிய ஆளே தவிர, பெரியார் அளவுக்கு நூற்றுக்கு நூறு அவர் ஒன்றும் பெரிய பகுத்தறிவுவாதி அல்ல. சாக்ரட்டீசின் முழு வாழ்க்கை வரலாற்றைப் படித்தவர்களுக்கு மட்டும்தான் தெரியும். அதனால்தான் மணமகனுக்கு பெரியார் சாக்ரட்டீஸ் என்று பெயர் வைத்தார். இந்த அழைப்பிதழிலே குழந்தைகளின் பெயர்கள் பிராட்லா, பிரின்ஸ் என்னாரசு பெரியார், பிரின்சஸ் பேராண்டாள் மங்கை, பவானி என்னாரசு, மணியம்மை, மேடம் என்னாரசு, புருனோ என்னாரசு என அச்சிடப்பட்டுள்ளதைப் பார்த்தாலே பெயரிடுவதில் ‘உலகமே இந்தக் குடும்பத்தில்!’ அடங்கியிருப்பது புரியும். இங்கர்சாலும் இந்தக் குடும்பத்தைச் சேர்ந்தவர்தான். இது எல்லாம் தந்தை பெரியாரின் அறிவுப் புரட்சியினுடைய விளைவு. பகுத்தறிவு உணர்வோடு குழந்தைகளையும் வளர்க்கிறார்கள்.
இறுதியாக மணமக்கள் இருவரும் கணவன் மனைவியாக அல்லாமல், நல்ல நண்பர்களாக வாழ்க்கையை வாழ வாழ்த்துவோம்’’ என ஒரு நீண்ட உரையை கழகக் குடும்ப மண விழாவில் ஆற்றினேன்.
மறுநாள் திருநெல்வேலி மாவட்ட திராவிடர் கழக முன்னாள் தலைவர் பி.சிவனணைந்த பெருமாள், மத்திய நிர்வாகக் குழு உறுப்பினராக இருந்த ராசம்மாள் ஆகியோரின் செல்வி எஸ்.மனோரஞ்சிதம், கீழப்பாவூர் எம்.ஆர்.கே.தங்கம் _ கனிஅம்மாள் ஆகியோரின் செல்வன் டி.திருநாவுக்கரசு ஆகியோரது வாழ்க்கை ஒப்பந்த விழா 26.5.1996 அன்று காலை 10:00 மணியளவில் தூத்துக்குடி சார்லஸ் தியேட்டர் அருகில் உள்ள அழகர் மகால் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. விழாவிற்கு தலைமையேற்று மணமக்களுக்கு வாழ்க்கைத் துணை நல ஒப்பந்த உறுதிமொழியினைக் கூறச் செய்து மணவிழாவினை நடத்தி வைத்துச் சிறப்புரையாற்றினேன். மண்டபம் நிரம்பி வழிகின்ற அளவுக்கு கழகத் தோழர்களும் பொதுமக்களும் வந்திருந்தனர்.
அதேநாள் மாலையில் நெல்லை மாவட்டக் கழகத் துணைச் செயலாளர் தச்சநல்லூர் பாமா _ ஆதிலெட்சுமி ஆகியோரின் மகள் செல்வி மா.சொர்ணமாலா; நெய்வேலி அரங்கநாதன் _ கஸ்தூரி ஆகியோரின் மகன் அ.ஞானசேகரன் இவர்களின் வாழ்க்கைத் துணை நல ஒப்பந்த விழாவை 26.5.1996 அன்று தச்சநல்லூர் சிறீதேவி திருமண மண்டபத்தில் தலைமையேற்று வாழ்க்கை ஒப்பந்த உறுதிமொழியைக் கூறச்செய்து, மூடநம்பிக்கையை ஒழிக்கும் வகையில் ராகுகாலத்தில் நடத்தி வைத்தேன். விழாவிற்கு கழகப் பொறுப்பாளர்கள் பெருமளவிற்கு கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
தஞ்சை மாவட்டம் தலையாமங்கலத்தைச் சார்ந்த வீ.அருணாசலம் _ தனலட்சுமி ஆகியோரின் செல்வி அ.அருணாமிசி அவர்களுக்கும், அதே ஊரைச் சார்ந்த வீ.நடராசன் _ சிவபாக்கியம் ஆகியோருடைய செல்வன் ந.இளங்கோவன் அவர்களுக்கும் வாழ்க்கைத் துணைநல ஒப்பந்த விழா 10.6.1996 அன்று தொல்காப்பியர் சதுக்கம் கிரேசி ஹால் திருமண மண்டபத்தில் வாழ்க்கை துணை நல ஒப்பந்தத்தை கூறச் செய்து நடத்தி வைத்தேன்.
மேலும், சுயமரியாதைத் திருமணத்தினால் ஏற்படுகின்ற நன்மைகளையும், வைதீகத் திருமணத்தினால் உண்டான தீமைகளையும் ஒப்பிட்டுக் காட்டி உரையாற்றினேன்.
தஞ்சை மாவட்டம் நெடுவாக்கோட்டையில் 10.6.1996 அன்று நடைபெற்ற தந்தை பெரியார் முழு உருவச் சிலை திறப்பு விழாவில் கலந்துகொண்டு கொட்டும் மழையில் அறிவு ஆசான் தந்தை பெரியார் சிலையைத் திறந்து வைத்தேன். பல்லாயிரக்கணக்கான மக்கள் இந்நிகழ்ச்சியை கொட்டும் மழையில் நின்றபடி பார்த்து மகிழ்ந்தனர். நிகழ்ச்சி சிறப்புற்று நடைபெற எல்லா வகையிலும் பாடுபட்ட கழகத் தோழர்களுக்கும் மற்றவர்களுக்கும் ஆடை அணிவித்து பெருமைப்படுத்தினேன். அப்போது பெரியார் பெருந்தொண்டர் நெடுவாக்கோட்டை வை.குப்புசாமி அவர்களது பவள விழாவை ஒட்டி அவருக்கு விழாக்குழு சார்பாக கேடயம் வழங்கிப் பெருமைப்படுத்தினோம். முன்னதாக ஊரே வியக்கும் வகையில் மூடநம்பிக்கை ஒழிப்பு ஊர்வலத்தையும் கழகத் தோழர்கள் நடத்தி சிறப்பித்தனர்.
இராசபாளையத்தில் 14.6.1996 அன்று பெரியார் சிலை திறப்பு விழா, பெரியார் நூற்றாண்டு படிப்பகத் திறப்பு விழா, மதவெறி பிடித்த பாரதிய ஜனதா ஆட்சிப் பீடை ஒழிந்த நாள் பொதுக்கூட்டமும் ஒன்றிணைந்து நடைபெற்றது. பெரியார் நூற்றாண்டு படிப்பகத்திற்கு அருகில் அமைக்கப்பட்டுள்ள தந்தை பெரியார் சிலையை கழகத் தோழர்களுடைய வாழ்த்தொலி முழக்கங்களுக்கிடையே திறந்துவைத்தேன். இதனைத் தொடர்ந்து, அமைக்கப்பட்டிருந்த பொதுக்கூட்டத்தில் பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சி ஒழிப்பின் அவசியத்தை மக்களிடையே எடுத்துக்கூறி உரையாற்றினேன்.
படிப்பகம் கட்டிய நல்லதம்பி, அய்யா சிலை வழங்கிய ஆர்.பி.ஆதிநாராயணன் ஆகியோர்க்கு சால்வை அணிவித்துப் பெருமைப்படுத்தினேன். கூட்டம் முடியும் வரை பொதுமக்கள் முழுமையாக உரையைக் கேட்டு, தெளிவுபெற்றுச் சென்றனர்.
தஞ்சை வல்லம் பெண்ணடிமை ஒழிப்பு கருத்தரங்கம்:
16.6.1996 மற்றும் 17.6.1996 ஆகிய நாள்களில் பெரியார் மணியம்மை மகளிர் பொறியியல் கல்லூரியில் பெரியார் கல்வி நிறுவனங்களும் மாநில பகுத்தறிவாளர் கழகமும் இணைந்து ஏற்பாடு செய்து நடத்திய “பெரியாரும் பெண்ணடிமை ஒழிப்பும்“ பற்றிய இரண்டு நாள் ஆய்வரங்கம் நடைபெற்றது. பெரியார் மணியம்மை கல்வி அறப்பணி கழகத்தின் தலைவர் என்ற நிலையில் நான் அறிமுக உரை நிகழ்த்தினேன். இந்நிகழ்வில் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக பெண் கல்வித்துறை இயக்குனர் பேராசிரியர் ரெஜினா பாப்பா, கனடா நாட்டு ஆய்வாளர் ஜெரி மேன்சன் கிங், சென்னை பல்கலைக்கழக பொருளியல் துறை பேராசிரியர் டி.எம்.சீனிவாசன், மதுரை காமராஜர் பல்கலைக்கழக சமூகவியல் துறைத் தலைவர் முனைவர் எல்.தாராபாய் ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினர்.
கோட்டூர் ஒன்றிய திராவிடர் கழகத் தலைவரும், எனது கொள்கை உறவினருமான வீ.பாலசுப்பிரமணியன், பா.ருக்மணி ஆகியோரின் செல்வன் பா.சித்தார்த்தன் _ புதுடில்லி விக்கிரமார்த்தாண்டன் _ சுந்தரி ஆகியோரின் செல்வி வி.சாந்தி ஆகியோரின் வாழ்க்கை ஒப்பந்த விழாவை 19.6.1996 அன்று தலைமையேற்று மன்னார்குடி பி.எம்.எம்.திருமண மண்டபத்தில் நடத்திவைத்தேன்.
மணவிழாவிற்கு வந்திருந்த அனைவரையும் மணமகளின் தந்தை வீ.பாலசுப்பிரமணியன் வரவேற்றார். இறுதியாக மணமக்களை வாழ்த்தி உரையாற்றினேன்.
19.6.1996 அன்று பிற்பகல் 3:00 மணிக்கு நாகை காயிலே மில்லத் மாவட்ட கருப்பு நட்சத்திரங்களின் நினைவுக் கொடிக் கம்பத்தில் கழகக் கொடியேற்று விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு நாகை காயிதே மில்லத் மாவட்ட தி.க. தலைவர் எஸ்.எஸ்.மணியம் தலைமை வகித்தார். கருப்பு நட்சத்திரங்களின் நினைவுக் கொடிக் கம்பத்தில் கொடியேற்றி வைத்தேன். அருகில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள அய்யா-_அம்மா அறிவுக்குடில் என்ற பெயரில் அமைந்துள்ள கட்டடத்தையும் பார்வையிட்டேன்.
தமிழகத்தில் புதிய மாவட்டத்தினை உருவாக்குவதில் தமிழக அரசு செய்யவிருந்த சில தவறுகளைச் சுட்டிக்காட்டி 20.6.1996 அன்று ‘விடுதலை’யில் முக்கிய அறிக்கையொன்றை வெளியிட்டோம். அதில்,
தமிழ்நாட்டில் மேலும் சில மாவட்டங்கள் தி.மு.க. அரசால் உருவாக்கப்பட்டுள்ளது. கடந்த 18ஆம் தேதி தமிழ்நாடு முதலமைச்சர் கலைஞர், திருவாரூர் சென்றிருந்தபோது இரண்டு (தஞ்சை, நாகை காயிதே மில்லத்) மாவட்டங்கள் மூன்று மாவட்டங்களாகப் பிரிவினை செய்யப்படும் என்று அறிவித்ததை வரவேற்ற நாம், அப்படி அங்கு உருவாகும் ஒரு மாவட்டத்திற்கு தஞ்சை மாவட்டம் தந்த திராவிடர் தளபதி சர்.ஏ.டி.பன்னீர்செல்வம் பெயரைச் சூட்ட வேண்டும் என்ற வேண்டுகோளை 19ஆம் தேதி திருவாரூரில் நடைபெற்ற நாகை காயிதே மில்லத் மாவட்ட கழகத் தோழர்கள் கலந்துரையாடலில் குறிப்பிட்டதோடு, அதனைத் தீர்மானமாக அரசுக்கு வைத்தோம். (20ஆம் தேதி ‘விடுதலை’ ஏட்டிலும் இத்தகவல் வெளிவந்துள்ளது.)
28ஆம் தேதி முதல்வர் கலைஞர் அறிவித்ததில் பன்னீர்செல்வம் பெயரில் திருவாரூரைத் தலைநகரமாகக் கொண்டு தனி மாவட்டம் இயங்கும் என்று அறிவித்தது மகிழ்ச்சிக்கும், பாராட்டுக்கும் உரியதாகும். அதனை மனப்பூர்வமாக வரவேற்கும் அதேவேளையில், அம்மகிழ்ச்சி நீடிக்காத வகையில் செய்திருப்பது தமிழ் மக்களின் கல்வியில் மண்ணைப் போட்டு, இரண்டு முறை ஆட்சிக்கு வந்தபோதெல்லாம் ஆயிரக்கணக்கான கிராமப் பள்ளிகளை இழுத்து மூடியவரும், எஞ்சிய பள்ளிகளில் அரை நேரம் படிப்பு, மீதி அரை நேரம் அவனவன் அப்பன் தொழில் என்ற குல தர்மக் கல்வியைப் புகுத்தியவருமான திரு.ராஜகோபாலாச்சாரியார் பெயரில் நாமக்கல் மாவட்டம் என்று பெயர் சூட்டியிருப்பது ஆகும்.
1979இல் உருவான பெரியார் மாவட்டத்தைக்கூட இன்னமும் ‘தினமலர்’ என்ற பார்ப்பன ஏடு பெரியார் மாவட்டம் என்று எழுத மறுத்து, ‘ஈரோடு மாவட்டம்’ என்றே பிடிவாதமாக எழுதி வருகிறது. அவ்வளவு ‘பெருந்தன்மை’ அவர்களுக்கு!
பன்னீர்செல்வம் இந்தி எதிர்ப்பின்போது சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது, தாளமுத்து, நடராசன் (மொழிப் போர் தியாகிகள்) சிறையில் இறந்தது பற்றி சட்டமன்றத்தில் கேள்வி கேட்கப்பட்டபோது, முதல்வராக இருந்த ஆச்சாரியார் மிகவும் ஆணவத்துடன் “அவர்கள் படிக்காத தற்குறிகள். அதனால், செத்துப் போனார்கள்’’ என்று பதில் கூறியவர். சட்டமன்றக் குறிப்பில் இன்னமும் இருக்கிற செய்தி இது. அந்த ஆச்சாரியாருக்கு திராவிட இயக்க ஆட்சியில் பன்னீர்செல்வத்திற்குப் பெயர்சூட்டும் அதே அறிவிப்பில், இப்படி ஒன்று என்றால், அதைவிடக் கொடுமை வேறு இருக்க முடியுமா? எனவே, இது கண்டனத்திற்கும் வேதனைக்கும் உரிய ஒன்றாகும்.
எந்த ஆட்சியாக இருந்தாலும் பாராட்டி வரவேற்க வேண்டியவற்றை திராவிடர் கழகம் வரவேற்கும். கண்டித்துச் சுட்டிக்காட்ட வேண்டியவற்றைத் தயங்காமல் கண்டிக்கும். அந்த அடிப்படையில் மேற்கூறிய கருத்துகளை அறிக்கையில் சுட்டிக்காட்டிக் குறிப்பிட்டிருந்தோம்.
பகுத்தறிவாளர் கழக மாநிலத் துணைத் தலைவர் வழக்கறிஞர் பாண்டிவளவன் அவர்கள் 26.6.1996 அன்று மறைந்தார் என்கிற செய்தி அறிந்து அதிர்ச்சியுற்றேன். அவரது துணைவியாருக்கும், பிள்ளைகளுக்கும் ஆழ்ந்த இரங்கலையும், வீரவணக்கத்தையும் தெரிவித்து விடுதலையில் அறிக்கை வெளியிட்டோம்.
நாவலர் நூல் வெளியீடு:
11.07.1996 அன்று சென்னை பெரியார் திடலில் பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பில் டாக்டர் நாவலர்
இரா.நெடுஞ்செழியன் அவர்களின் 77ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவும், அவர் எழுதிய ‘திராவிட இயக்க வரலாறு’ முதல் தொகுதி நூல் வெளியீட்டு விழாவும் நடைபெற்றன. நிகழ்வில் பங்கேற்று நூல்களை வெளியிட்டு அந்த நூலைப் பற்றியும் டாக்டர் நாவலர் அவர்களைப் பற்றியும் உரையாற்றினேன்.
இராஜபாளையத்திற்கு அருகிலுள்ள தேவதானம் ஊரைச் சேர்ந்த கழகச் செயல்வீரர் க.காளிராஜ் அவர்கள் எதிரிகளால் படுகொலை செய்யப்பட்ட செய்தி என்னைப் பெரிதும் அதிர்ச்சியடையச் செய்தது.
அவரது இல்லத்திற்குச் சென்று அவரது படத்திற்கு மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்திய பின், அவருடைய துணைவியாருக்கு ஆறுதல் கூறினேன். என்னுடன் எனது துணைவியார் மோகனா அம்மையாரும் வந்திருந்தார்கள்.
பெங்களூருக்குச் சென்று 14.7.1996 அன்று ஒரு நாள் முழுக்க பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்குகொண்ட பின் அங்குள்ள மயூரா ஓட்டலில் தங்கியிருந்தேன்.
14.7.1996 காலை 9:30 மணிக்கு கோலார் தங்கவயல் லட்சுமிபதி_லீலா ஆகியோரின் மகள் வசந்திக்கும் தவமூர்த்திக்கும் வாழ்க்கை ஒப்பந்த விழாவை நடத்திவைத்து சிறப்புரை ஆற்றினேன். அன்று நண்பகல், பெங்களூர் ஆண்டர்சன்பேட் அலுவலகம் அருகில் கோல்டன் குருதி பரிசோதனை நிலையத்தைத் திறந்து வைத்தேன்.
புரட்சிக் கவிஞர் விழா:
புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் பிறந்தநாளை முன்னிட்டு தமிழர் கலை பண்பாட்டுப் புரட்சி விழா 18.7.1996 அன்று மாலை பெரியார் திடலில் நடைபெற்றது. பகுத்தறிவாளர் கழக துணைத் தலைவர் பொறியாளர் ஞானசுந்தரம் வரவேற்றார். பெரியார் நூலக வாசகர் வட்டத்தின் தலைவர் மயிலை நா.கிருஷ்ணன் தலைமை வகித்தார். மாநில பகுத்தறிவாளர் கழக செயல் தலைவர் எம்.டி.கோபாலகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். விழாவில் பெரியார் அய்.ஏ.எஸ். பயிற்சி மய்யத்தில் படித்து தேர்ச்சி பெற்ற சொக்கலிங்கம் அய்.ஏ.எஸ்., தொழிற்சங்கத் தலைவர் எஸ்.சி.சி.அந்தோனிப் பிள்ளை, பழனியப்பா பிரதர்ஸ் உரிமையாளர் எஸ்.எம்.பழனியப்ப செட்டியார், பகுத்தறிவுப் பாவலர் அ.மறைமலையான் ஆகியோருக்கு பெரியார் விருது வழங்கிச் சிறப்பித்தேன். திராவிடர் கழக துணைப் பொதுச்செயலாளர் கோ.சாமிதுரை, தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன் ஆகியோர் உரையாற்றிய பின் இறுதியாக நிறைவுரை ஆற்றினேன். நிகழ்ச்சிகளை தலைமை நிலையச் செயலாளர் கவிஞர் கலி.பூங்குன்றன் தொகுத்து வழங்கினார்.
21.7.1996 அன்று காலை திருவண்ணாமலை செய்யாறில் மேனாள் விடுதலை பணியாளரும், பகுத்தறிவாளர் கழகப் பொறுப்பாளருமான தோழர் வட மணப்பாக்கம் வி.வெங்கட்ரமணன்- மு.தமிழ்மொழி ஆகியோரது திருமணத்தை நடத்தி வைத்தேன். மணமகனின் அண்ணன் திரைப்பட இயக்குநர் செய்யாறு வி.ரவி வரவேற்புரையாற்றினார். மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் அருணாச்சலம் தலைமை வகித்தார்.
மணமகனின் தந்தை நல்லாசிரியர் பி.கே.விஜயராகவன் மற்றும் மணமகளின் தந்தை கு.முரளி ஆகியோர் பெரியார் பற்றாளர்கள்.
இந்நிகழ்வில் திராவிடர் கழக அன்றைய துணை பொதுச்செயலாளர் கோ.சாமிதுரை, பொதுக்குழு உறுப்பினர் வந்தவாசி வேல்.சோமசுந்தரம், பெரியார் பெருந்தொண்டர் டி.பி.திருச்சிற்றம்பலம், சட்டப்பேரவை உறுப்பினர்கள் வ. அன்பழகன், ஆரணி சிவானந்தம், செய்யாறு தேவராஜ், கழகப் பொறுப்பாளர்களான, செங்கல்பட்டு கோபால்சாமி, காஞ்சிபுரம் டி.ஏ.ஜி. அசோகன் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களும் தோழர்களும் கலந்துகொண்டனர்.
இறுதியாக மணமகளின் அண்ணன் மு.பாண்டியன் நெடுஞ்செழியன் நன்றி உரையாற்றினார்
22.7.1996 அன்று எண்ணூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்று சுயமரியாதை சுடரொளிகள் க. பலராமன், மு.சந்துரு ஆகியோரது நினைவுப் பெயர்ப் பலகைகளைத் திறந்து வைத்தேன். வழியெங்கும் தோழர்கள் உற்சாக வரவேற்பளித்தனர்.
7:30 மணியளவில் அசோக் லேலண்ட் கேட் அருகில் கழகத் தோழர்கள் வாழ்த்தொலி முழங்க கழகக் கொடி ஏற்றி வைத்தேன். இரவு 8:00 மணியளவில் எண்ணூர் கடைவீதியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொதுக்கூட்டத்தில் வெ.மு.மோகன் தலைமை உரையாற்றினார். மாவட்டச் செயலாளர்கள் ப.கவுதமன், பா.தட்சிணாமூர்த்தி, வடசென்னை மாவட்டத் தலைவர் அ.குணசீலன், தலைமை நிலையச் செயலாளர் கவிஞர் கலி.பூங்குன்றன், துணைப் பொதுச் செயலாளர் கோ.சாமிதுரை ஆகியோரின் உரைக்குப் பின் இதே எண்ணூரில் மின்வாரியத் தோழர் ஒருவரால் ஏற்பாடு செய்யப்பட்ட அரங்கக் கூட்டத்தில் அய்யா பெரியார் அவர்களுடன் நானும் கலந்து கொண்டதை நினைவு கூர்ந்தும், தமிழின முன்னேற்றத்திற்குத் தேவையான பல்வேறு கருத்துகளை ஆதாரங்களுடன் விளக்கியும் சிறப்புரையாற்றினேன்.
(நினைவுகள் நீளும்…)