சர் ஏ.டி.பன்னீர்செல்வம்

ஜூன் 01-15 2021

பிறந்த நாள்: 1.6.1888

1940 மார்ச்சு முதல் தேதி தமிழர்களைக் குலுங்கிக் குலுங்கி அழச் செய்து விட்டது.

“காலம் சென்ற பன்னீர் செல்வமே! காலஞ் சென்று விட்டாயா? நிஜமாகவா? கனவா?’’ என்று எதற்கும் அஞ்சாத சிங்கமான தந்தை பெரியார் அவர்களையே கதறச் செய்து விட்டது என்றால், அது சாதாரணமா?

57வயதிற்குள் அவர் தமிழ் மக்களின் உள்ளங்களில் எல்லாம் ஆசனம் போட்டு உட்கார்ந்துவிட்டார்.

1918 முதல் 1920 வரை தஞ்சை நகராட்சித் தலைவராக இருந்தார். 1924 முதல் 1930 வரை மூன்று முறை தொடர்ச்சியாக தஞ்சாவூர் மாவட்ட ஜில்லா போர்டு தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர். அவர் இந்தப் பொறுப்பில் இருந்தபோது பார்ப்பனர் அல்லாதாருக்கு ஆற்றிய தொண்டு, சாதனைச் சரித்திரத்தில் நங்கூரம் பாய்ச்சி நிற்கும்.

உரத்தநாடு எனும் ஊரில் ஒரு தர்ம சத்திரப் பள்ளிக் கூடம் இருந்தது. சாப்பாடு _ கல்வி எல்லாம் இலவசம் ஆங்கே. ஆனால், அது முழுக்க முழுக்கப் பார்ப்பனப் பிள்ளைகளுக்கு மட்டுமே என்ற நிலைப்பாட்டில் இருந்தது. ஏ.டி.பி. அவர்கள் மாவட்ட போர்டு தலைவராக இருந்த போது அந்த முறைக்குச் சீட்டுக் கிழித்து, ஜாதி வேறுபாடு இல்லாமல் அந்தச் சத்திரப் பள்ளியை அனைவருக்கும் பொதுவுடைமை ஆக்கினார்.

அதேபோல திருவையாறு அரசு கல்லூரி என்பது சமஸ்கிருதக் கல்லூரியாக மட்டுமே இருந்தது. அய்யங்கார் விடுதியாகவே வழிந்து காணப்பட்டது. அதிலும் கை வைத்தார். தமிழும் படிக்க ஆணித்தரமான ஆணையைப் பிறப்பித்தார். 1929இல் செங்கற்பட்டில் நடைபெற்ற சுயமரியாதை இயக்க மாநாட்டில் சுயமரியாதை இயக்கத்தின் துணைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1930ஆம் ஆண்டில் சென்னை சட்டமன்ற உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1935 முதல் 1937 வரை சென்னை மாநில உள்நாட்டு அமைச்சராக இருந்தார். லண்டனில் நடைபெற்ற வட்ட மேஜை மாநாட்டிலும் கலந்து கொண்டார்.

இந்தி எதிர்ப்புக் காரணமாக தந்தை பெரியார் பெல்லாரி சிறையில் இருந்தபோது நடைபெற்ற தென்னிந்திய நல உரிமைச் சங்க மாநாட்டுக்குத் தலைமை வகித்த ஏ.டி.பி. அவர்கள் தன் தோளுக்குப் போட்ட மலர் மாலையை பெரியாரின் தாளுக்கு (பெரியார் படம்) அணிவித்து உணர்ச்சி வயப்பட்டார். தம் வீட்டில், தான் பார்க்கும் இடத்தில் எல்லாம் பெரியார் படம் இருக்க வேண்டும் என்று ஏற்பாடு செய்திருந்தார்.

இங்கிலாந்தில் இந்திய அமைச்சரின் செயலாளராகப் பொறுப்பேற்க ஹனிபால் விமானம் மூலம் பயணம் செய்தபோது அவ்விமானம் ஓமன் கடலில் விழுந்தது. தமிழர்களைத் துயரக் கடலில் தவிக்கவிட்டதே!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *