தகுதி? எது திறமை? என்பதில் ஏகப்பட்ட முரண்பாடுகள் உண்டு.
ஒருவரின் சுற்றுச் சார்பு _ எப்படி வாழ்ந்தார் _ வளர்ந்தார் என்பது மிகவும் முக்கியம். தலைமுறை தலைமுறையாகப் படித்தவர்களோடு _ இந்தப் புதிய தலைமுறை எந்த வகையில் போட்டியிட முடியும்? அப்படி என்றால் இந்தப் புதிய தலைமுறைகளுக்கு எதிர்காலம் என்ற ஒன்றே கிடையாதா? படியுங்கள்! சமூகநீதியின் அவசியம் என்பது பற்றி விளங்கும்.
‘முதல் தலைமுறை பட்டதாரி’ என்று பலரைச் சொல்வோம். உண்மையில், முதல் தலைமுறை பட்டதாரிகளின் கல்லூரிப் பருவம் எப்படி இருக்கும் தெரியுமா? தன் வாழ்விலிருந்து சொல்கிறார், திருவாரூர் மாவட்டம் கண்கொடுத்தவனிதம் கிராமத்தைச் சேர்ந்த நாகவள்ளி பாண்டியன்.
“என் அப்பா ஹோட்டலில் கூலி வேலை பார்த்தார். அம்மா கனிமொழி. எனக்கு ஓர் அக்காவும், இரண்டு தம்பிகளும். அக்கா பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெறவில்லை என்பதால் திருமணம் செய்து கொடுத்துவிட்டனர். முதல் தம்பி எட்டாம் வகுப்பு முடித்துவிட்டு கொத்தனார் வேலை பார்த்து வருகிறார். இளைய தம்பி பி.பி.ஏ. படிக்கிறார்.
நான் நான்காம் வகுப்புவரை பக்கத்து ஊரான பருத்தியூரில் படித்தேன். பின்னர், என் பாட்டி, தாத்தா வாழும் குடவாசலில் அய்ந்தாம் வகுப்பு சேர்ந்தேன். நான் ஒன்பதாம் வகுப்புப் படித்தபோது என் அப்பா காசநோயால் உயிரிழந்தார். அதற்கு மூன்று நாள்களுக்கு முன் அப்பா என்னிடம், ‘எனக்கு அப்புறம் நீதான் குடும்பத்தைப் பார்த்துக்கணும், நல்லா படி’ என்றார். நான் பன்னிரண்டாம் வகுப்பு முடித்தபோது, வீட்டில் திருமணப் பேச்சை எடுத்தனர். படிப்புக்காக நீண்ட போராட்டம் நடத்தினேன். ‘ஃபீஸ் கட்ட மாட்டோம்’ என்றார்கள். எங்கள் ஊரில் மெடிக்கல்ஸ் நடத்திவந்த ராஜா அண்ணன், இறந்துபோன தன் தங்கச்சியாக என்னை நினைத்து, கல்லூரி அட்மிஷனுக்காக ஃபீஸ் கட்டினார். திரு.வி.க. அரசு கலைக் கல்லூரியில் பி.ஏ. ஜர்னலிஸம் சேர்ந்தேன். பேராசிரியர் சுரேஷ் அய்யா, எனக்கு வழிகாட்டியாகக் கிடைத்தார்.
வீட்டில் விறகு அடுப்பில் சமைத்துவிட்டு கல்லூரிக்குச் செல்வேன். நான்கு கிலோமீட்டர் சைக்கிளில் சென்றுதான் பஸ் ஏற முடியும். பஸ் காசைத் தவிர கையில் காசு எதுவும் இருக்காது. நண்பர்கள் கல்லூரியில் ஏதேனும் உணவு வாங்கிச் சாப்பிடும்போது ஏக்கமாக இருக்கும். பசிக்கே உணவு இல்லாத எனக்கு கேம்பஸிலேயே மயக்கம் வந்துள்ளது.
கல்லூரி நூலகத்திலும், திருவாரூர் சென்ட்ரல் லைப்ரரியிலும் உள்ள புத்தகங்களைக் கொண்டுதான் படிப்பேன். வீட்டில் விளக்கு வெளிச்சத்தில் படித்துக் கொண்டிருக்கும்போது, ஊரில் குடிகாரர்கள் போதையில் வந்து கதவைத் தட்டுவார்கள். ஒருமுறை அப்படி வந்த ஒருவரை கல்லால் ஓங்கி அடித்தேன். அன்றிலிருந்து யாரும் வருவதில்லை.
ஃபர்ஸ்ட் கிளாஸில் பி.ஏ. பாஸ் செய்த பின்னர், காரைக்குடி அழகப்பா கல்லூரியில் வியிவிசி(Master of Journalism and Mass Communication) முடித்தேன். என் படிப்புச் செலவுக்கு ‘புதிய தலைமுறை’ தொலைக்காட்சியின் நிருவாக ஆசிரியர் கார்த்திகைச் செல்வன் அய்யாவும், மெஸ் ஃபீஸுக்கு ஆனந்தம் ஃபவுண்டேஷன் நிருவாக இயக்குநர் செல்வக்குமார் அய்யாவும் உதவினர்.
கல்லூரிப் பருவத்தில் சீனியர் ஒருவர் என்னைக் காதலிப்பதாகத் தொந்தரவு கொடுக்க, ஒரு கட்டத்தில் வெறுத்துப் போய் படிப்பை நிறுத்திவிடலாம் என்று நினைத்தேன். என் பேராசிரியர்கள் சுரேஷ் அய்யா மற்றும் கோபிநாத் அய்யா, ‘பாதையில் முள் இருந்தால் திரும்பி வந்துடுவியா, இல்ல முள்ள எடுத்துப் போட்டுவிட்டுப் போவியா?’ என்று கேட்டபோது, தெளிவு பெற்றேன்.
முதுகலைப் படிப்பிலும் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றேன். செல்வக்குமார் அய்யா உதவியுடன், காரைக்குடி அழகப்பா கல்லூரியிலேயே எம்.ஃபில் முடித்துவிட்டு, இப்போது ரிசல்ட்டுக்காக காத்திருக்கிறேன். தொடர்ந்து பிஹெச்.டி. முடித்து, நெட் (NET – The National Eligibility Test)இல் தேர்ச்சி பெற்று, அரசுக் கல்லூரியில் பேராசிரியராவதே என் குறிக்கோள். ஒவ்வொரு தடையிலும் நான் திணறி நிற்கும்போது தேற்றிவிட்ட நண்பர் அரவிந்துக்கு என் நன்றிகள். தற்போது கரூர், ஜெய்ராம்ஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உதவிப் பேராசிரியராக உள்ளேன். சமூகம் எனக்குக் கொடுத்ததை நான் திருப்பிக் கொடுக்க வேண்டும். சமீபத்தில் ஓர் அறக்கட்டளைக்கு என்னால் முடிந்த ஆயிரம் ரூபாய் கொடுத்தேன். அத்துணை மகிழ்ச்சி, மன நிறைவு.
முதல் பட்டதாரிகள் இப்படித்தான் முட்டி, மோதி வருகிறோம். கிராமங்களில் நம் தம்பி, தங்கைகளையும் நம் பின்னால் நடக்க வைப்பதுதான் நம்முடைய உடனடிக் கடமை என்பதை உணர்வோம்!’’
வெற்றி மகள்!
நன்றி: ‘அவள் விகடன்’ 25.5.2021