கவிஞர் கலி.பூங்குன்றன்
ஹிமாச்சலம், உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசத்தைத் தொடர்ந்து குஜராத்திலும் மதமாற்றத் தடுப்புச் சட்டம் நிறைவேறியது.
திருமண நோக்கத்திற்காக மட்டும் மதம் மாறுவதை சட்ட விரோதமாக்கும் மதமாற்ற தடுப்புச் சட்டத்தை மத்தியப் பிரதேச மாநிலம், உ.பி. மற்றும் ஹிமாச்சல் மாநிலங்கள் நிறைவேற்றி உள்ளன.
இந்த மதமாற்றச் சட்டங்களில் பொதுவாக இருப்பது _ திருமணங்களை செல்லாது என்று அறிவித்தல், முன் அனுமதி இல்லாமல் செய்யப்பட்ட மதமாற்றத்திற்கு அபராதம் விதித்தல் ஆகியவை ஆகும்.
ம.பி.யின் இந்தச் சட்டம் 60 நாள்களுக்கு முன்பே, மதமாற்றம் செல்லுபடியாக மாவட்ட ஆட்சியாளரிடம், மாற்றத்திற்கான நோக்கத்தை அறிவிக்க வேண்டும். அதனைத் தொடர்ந்து வெவ்வேறு மதத்தைச் சேர்ந்த ஆணும் பெண்ணும் சட்டப்படி திருமணம் செய்து கொள்ளலாம்.
உ.பி.யில் நவம்பர் மாதம் அறிமுகம் செய்யப்பட்ட Prohibition of Unlawful Conversion of Religious Ordinance, 2020 சட்டமும் 60 நாள்கள் முன் அறிவிப்பைக் கோருகிறது. அதே சமயத்தில் மாவட்ட ஆட்சியர், இந்த மதமாற்றத்திற்குப் பின்னால் இருக்கும் காரணங்களை ஆராய காவல்துறை விசாரணை நடத்த வேண்டும் என்றும் கூறுகிறது. கடந்த வாரம் நடைமுறைக்கு வந்த Himachal Pradesh Freedom of Religion Act, 2019 சட்டத்திலும் 30 நாள்களுக்கு முன்பே மத மாற்றம் செய்து கொள்வதற்கான காரணங்களை அறிவிக்க வேண்டும் என்று கூறியுள்ளது.
யார் இதனை விசாரிப்பார்கள்?
ம.பி.யின் சட்டத்தின் நான்காவது பிரிவில், மதமாற்றம் செய்து கொண்டவர் அல்லது அவரின் பெற்றோர்கள்/உடன் பிறந்தவர்கள் எழுத்துப் பூர்வமாக புகார் அளித்தால் மட்டுமே காவல்துறை விசாரணை இருக்கும். மாற்றப்பட்ட நபரின் கார்டியன்கள் நீதிமன்றத்தின் அனுமதியுடன் மட்டுமே புகார் அளிக்க முடியும். உதவி ஆய்வாளர் பதவிக்குக் கீழே உள்ள எந்த ஒரு காவல்துறை அதிகாரியும் இந்தச் சட்டத்தின் கீழ் ஒரு குற்றத்தை விசாரிக்க முடியாது என்றும், ம.பி. மாநில சட்டம் கூறுகிறது. சப்_-டிவிசனல் மாஜிஸ்திரேட் தகுதிக்கு கீழே இல்லாத ஒரு அதிகாரியின் முன் அனுமதி இல்லாமல் விசாரணையைத் துவங்க இயலாது என்று ஹிமாச்சல் சட்டம் கூறுகிறது.
நிரூபணம்
மதமாற்றம் செய்து கொண்டவர் எந்த ஒரு வற்புறுத்தலும், சட்டவிரோதமும் இல்லாமல் மதமாற்றம் செய்து கொண்டதை நிரூபிக்க வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது ம.பி.யின் சட்டம். இமாச்சல் பிரதேசத்தின் சட்டத்திலும் இந்தக் கூறு இடம் பெற்றுள்ளது. உ.பி. மேலும் ஒரு படி மேலே சென்று, இந்த மதமாற்றத்திற்குக் காரணமாக அமைந்தவர்கள் மீது சுமையை வைக்கிறது. காவல்துறை விசாரணையின் போது, மாஜிஸ்டிரேட் திருப்தி அடையவில்லை என்றால், அவசரச் சட்டம் பிரிவு 11இன்கீழ் இந்த மதமாற்றத்திற்குக் காரணமாக இருந்தவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படலாம். குற்றம் செய்தவர்களும் இதில் அடங்குவார்கள்.
குழந்தைகள் பராமரிப்பு
அரசிடம் முன்னறிவிப்புத் தராமல் கணவனோ அல்லது மனைவியோ சம்மதத்துடன் மதம் மாறி திருமணம் செய்து கொண்டாலும் அந்தத் திருமணம் செல்லாது என்று அறிவிக்கப்படும் என்று ம.பி.யின் சட்டம் கூறுகிறது.
தண்டனையின் அளவு
மூன்று மாநிலங்களிலும் சட்டத்திற்குப் புறம்பான மதமாற்றம் குற்றமாகும். மேலும் பிணையில் வெளியே வரமுடியாது. வாரண்ட் இல்லாமல் கைது செய்வதை இந்தச் சட்டம் அனுமதிக்கிறது. மேலும் பிணை வழங்கப்படுவது நீதிபதியின் கையிலே உள்ளது.
சட்டத்திற்குப் புறம்பாக மதமாற்றம் செய்ய முனைவோருக்கு ம.பி.யின் சட்டப்படி ஒன்று முதல் 5 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை வழங்கப்படலாம். மதமாற்றம் செய்யப்பட்டவர் பெண் அல்லது சிறுபான்மையினர் அல்லது பட்டியல் இனத்தவர் அல்லது பழங்குடியினராக இருந்தால் தண்டனை 10 ஆண்டுகளாகும். ஒருவரின் மதத்தை மறைத்து திருமணம் செய்து கொண்டால் அவர்களுக்குத் தண்டனை 3 முதல் 10 ஆண்டுகளாகும்.
உ.பி. சட்டம் குறைந்தபட்சம் ஒரு வருடம் சிறைத்தண்டனை விதிக்கிறது. இது அய்ந்து ஆண்டுகள் வரை நீட்டிக்கப்படலாம். மேலும் மீண்டும் மீண்டும் செய்யப்படும் குற்றங்கள் அதிகபட்ச தண்டனையை விட இருமடங்காகும். ஒரு பெண், மைனர் அல்லது எஸ்.சி / எஸ்.டி.யைச் சேர்ந்த ஒரு நபரை மாற்றியதாக குற்றம் சாட்டப்பட்டால் ஆண்களுக்கு அதிக தண்டனை வழங்கப்படுகிறது -_ இந்த வழக்கில் இரண்டு முதல் 10 ஆண்டுகள் வரை தண்டனை விதிக்கப்படும்.
இமாச்சல சட்டத்தில், சட்டவிரோதமாக மாற்ற முயற்சித்ததற்காக ஒரு நபருக்கு ஒன்று முதல் அய்ந்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம். மத மாற்றம் செய்யப்பட்ட நபர் ஒரு பெண், மைனர் அல்லது எஸ்.சி. / எஸ்.டி.யைச் சேர்ந்தவர் என்றால், தண்டனை இரண்டு முதல் ஏழு ஆண்டுகள் வரை தண்டனை வழங்கப்படும்.
ம.பி.யின் அவசர சட்டம் மத்தியப் பிரதேச மத சுதந்திரச் சட்டம், 1968அய் ரத்து செய்கிறது. கட்டாய மதமாற்றத்தைக் குற்றமாக அறிவித்திருந்தாலும், புதிய சட்டம் திருமணத்தின் போது மதமாற்றம் செய்வது, பாதுகாப்பு உரிமைகள், குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது ஆதார சுமையை மாற்றி அமைத்தல் தொடர்பான விதிகளையும் சேர்க்கிறது.
இமாச்சலப் பிரதேச மதமாற்ற சுதந்திரச் சட்டம், 2006அய் ரத்து செய்து, 2019இல் ஹிமாச்சல் புதிய சட்டத்தை நிறைவேற்றியது. 2019 சட்டம் திருமண நோக்கத்திற்காக மாற்றங்கள் தொடர்பான விதிகளைச் சேர்த்துள்ள நிலையில், மாவட்ட மாஜிஸ்திரேட்டிடம் முன் அறிவிப்பை வழங்கும் நடைமுறை 2006 சட்டத்திலும் இருந்தது.
2019ஆம் ஆண்டில், உ.பி. மாநில சட்ட ஆணையம் கட்டாயமாக மதம் மாற்றப்பட்ட சம்பவங்களுக்கு தீர்வு காண சிறப்புச் சட்டத்தைப் பரிந்துரைத்தது. அறிக்கையுடன் சமர்ப்பிக்கப்பட்ட வரைவு மசோதாவில், திருமண நோக்கத்திற்காக மட்டுமே மதமாற்றம் உள்ளிட்ட மோசடி மாற்றங்களுக்கு அபராதம் விதிக்கவும் பரிந்துரை செய்தது.
குஜராத்திலும் தடைச்சட்டம் நிறைவேற்றம்
கட்டாய மதமாற்ற தடைச் சட்டத்தைக் கொண்டு வருவதற்கு குஜராத் மாநில அரசு முடிவு செய்தது. அதன்படி குஜராத் மதச் சுதந்திர மசோதா_2021 தயார் செய்யப்பட்டு கடந்த ஏப்ரல் மாதம் பேரவையில் நிறைவேற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து ஆளுநர் ஆச்சார்யா தேவவிரத்தின் ஒப்புதலுக்காக இந்த மசோதா அனுப்பப்பட்டது.
இந்நிலையில் மசோதாவைப் பரிசீலித்த ஆளுநர், கட்டாய மதமாற்றத் தடை மசோதாவுக்கு ஒப்புதல் அளித்துள்ளார். இந்தத் தகவலை குஜராத் மாநில பேரவை மற்றும் நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பூபேந்திர சிங் சுதாசமா தெரிவித்தார்.
இந்த மசோதாவின்படி, ஒருவரை கட்டாயமாக மதம் மாற்றினாலோ அல்லது கட்டாயமாக மதம் மாற்றுவதற்குத் துணை புரிந்தாலோ குற்றம் சாட்டப்பட்ட அந்த நபருக்கு 3 ஆண்டு முதல் 5 ஆண்டு சிறைத் தண்டனை, ரூ.2 லட்சம் அபராதம் ஆகியவை விதிக்கப்படும். பாதிக்கப்பட்டவர் 18 வயதுக்குட்பட்டவராக இருந்தாலோ, தலித் அல்லது பழங்குடியினத்தைச் சேர்ந்தவராக இருந்தாலோ, குற்றம் சாட்டப்பட்டவருக்கு 4 ஆண்டு முதல் 7 ஆண்டு வரை சிறைத் தண்டனையும் ரூ.3 லட்சம் அபராதமும் விதிக்கப்படும். ஓர் அமைப்பு இந்தக் குற்றத்தைப் புரிந்தால், அந்த அமைப்பின் பொறுப்பாளருக்கு 3 ஆண்டு முதல் 10 ஆண்டு வரை சிறைத் தண்டனை விதிக்கப்படும்.
விரைவில் சட்டம்
இதுகுறித்து அமைச்சர் பூபேந்திர சிங் சுதாசமா கூறும்போது, “விரைவில் ‘லவ் ஜிகாத்துக்கு’ எதிரான சட்டத்தை பேரவையில் கொண்டு வரவுள்ளோம். ‘லவ் ஜிகாத்’ என்ற பெயரில் இவர்கள் செய்யும் அட்டகாசங்களை நாங்கள் சகித்துக் கொள்ள மாட்டோம். வரும் காலத்தில் ‘லவ் ஜிகாத்’துக்கு எதிராக கடுமையான சட்டங்களைக் கொண்டு வருவோம் என்று தெரிவித்தார்.
மதம் மாறுவது என்பது தனிமனிதர் பிரச்னை. மதம் மாறலாம்; ஆனால், ஜாதி மாற முடியாது என்பதில் இருந்தே ஜாதி எத்தகைய கொடூரமானது. இதில் கை வைக்கும் துணிச்சல் மத்திய அரசுக்கு இல்லாதது ஏன்?
ஏனெனில், ஜாதி வருணம் _ இந்து மதத்தின் அடிப்படை ஆதாரம். மக்களைப் பிரித்துப் பிரித்து வைத்தால்தான் பிறப்பின் அடிப்படையில் ‘பிராமணீயம்’ ஆதிக்கக் குதிரையேறி சவாரி செய்ய முடியும்.
திருமணத்துக்காக மதம் மாறுதலுக்காக இவ்வளவு அக்கறை செலுத்தும் இந்துத்துவாவாதிகள் ஜாதி இழிவின் காரணமாக மதம் மாறுவது குறித்து என்ன நினைக்கிறார்கள்?
அய்ந்து இலட்சம் பட்டியலின மக்களோடு அண்ணல் அம்பேத்கர் புத்த மார்க்கம் தழுவினார்களே _ அது பற்றிய கருத்தென்ன?
உலகின் கவனத்தை ஈர்த்த இந்த நிகழ்வுக்குப் பிறகாவது நற்குணமும், நற்புத்தியும் நல்ல முடிவையும் இந்துத்துவவாதிகளால் எடுக்க முடியவில்லையே ஏன்?
நெல்லை மாவட்டம் மீனாட்சிபுரத்தில் தீண்டத்தகாதவர்களாக இழிவுபடுத்தப்பட்ட மக்கள் இஸ்லாமிய மார்க்கத்தைத் தழுவ, தீண்டாமைக் கொடிய நோயிலிருந்து குணம் பெற்று நல்வாழ்வுத்தளத்தில் செம்மாந்த நடைபோடுகிறார்களே, அதற்குப் பதில் என்ன? பெற்றுக் கொண்ட பாடம்தான் என்ன?
“ஒரு குறிப்பிட்ட ஜாதியைச் சேர்ந்தவர்களுக்கு என்று இருந்த உரிமைகளை உடைத்ததற்காக முஸ்லிம் ஆட்சிக்கும் நாம் கடமைப்பட்டுள்ளோம். முஸ்லிம் ஆட்சியானது முழுதும் கெட்டது என்று சொல்ல முடியாது. எதுவுமே முழுதும் கெட்டதாக இருப்பதில்லை. தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் ஏழை மக்களுக்கும் இந்தியாவில் ஏற்பட்ட முஸ்லிம் ஆட்சி விடுதலை வழங்கியது. எனவேதான் வடஇந்திய மக்களில் அய்ந்தில் ஒரு பங்கு மக்கள் முஸ்லிம்களாயினர். வாள்தான் இந்த மத மாற்றத்தை முழுதும் ஏற்படுத்தியது என்பது சரியல்ல.
வாளும் நெருப்புமே இத்தனைப் பேரையும் மாற்றியது என்று கூறுவது பயித்தியக்காரத்தனத்தின் உச்சமாகும். 20 விழுக்காட்டிலிருந்து 50 விழுக்காடு சென்னை மாகாண மக்கள் கிறிஸ்துவ மதத்தைத் தழுவி விடுவார்கள். நீங்கள் அவர்களது குறைகளைக் களையவில்லையானால், நான் மலபாரில் பார்த்ததைவிட மட்டமான ஒரு விஷயத்தை உலகில் எங்கேனும், யாரேனும் பார்த்திருக்க முடியுமா? உயர்ந்த ஜாதியைச் சேர்ந்தவர்கள் செல்லும் தெரு வழியே ஏழைப் பறையன் செல்ல அனுமதிக்கப்படுவதில்லை. ஆனால், அதே ஏழைப் பறையன் ஒரு விசித்திரமான ஒரு ஆங்கில கிறிஸ்துவப் பெயரைத் தனக்குச் சூட்டிக் கொண்டால், பின்னர் அவன் உயர்ஜாதியினர் செல்லும் தெரு வழியே செல்ல அனுமதிக்கப்படுகிறான். இந்த நடைமுறையிலிருந்து இந்த உயர்ஜாதி மலபார் மக்கள் அனைவரும் பயித்தியக்காரர்கள் என்றும், அவர்கள் இல்லங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு பயித்தியக்கார விடுதி என்றும் தெரியவில்லையா?’’ இவ்வளவையும் விண்டுரைத்திருப்பது பெரியார் இயக்கத்தைச் சேர்ந்தவர் அல்லர்.
அமெரிக்காவின் சிகாகோ வரை ‘பிராமணியத்தை’ (இந்து மதத்தை)ப் பறைசாற்றிய வீரத்துறவி என்று அவர்கள் போற்றும் சாட்சாத் விவேகானந்தர்தான்.
(ஆதாரம்: ஸ்ரீராமகிருஷ்ண தபோவனம் 1983இல் வெளியிட்டுள்ள “The man making message of Vivekananda for the usuage of college students”என்ற நூலிலிருந்து.)
மதமாற்றத் தடைச் சட்டம் கொண்டு வரும் மனுவாதி பா.ஜ.க. மாநில ஆட்சியர் அவர்கள் போற்றும் விவேகானந்தரின் வினாக்களுக்கு விடை சொல்லுவார்களா?