மஞ்சை வசந்தன்
உலகையே அச்சுறுத்தி ஆட்டிப்படைக்கும் கொடுந்தொற்று கொரோனா. வல்லரசு நாடுகள்கூட எதிர்கொள்ள முடியாமல் ஏராளமான இழப்புகளைப் பெற்றன.
உலக நாடுகளை ஒப்பிட்டு நோக்குங்கால் முதல் அலையில் இந்தியாவின் பாதிப்பு அளவு குறைவு. அப்படியிருந்தும் அதைத் திறமையாக மத்திய அரசு கையாளததால், நோய்த்தொற்றும் பாதிப்பும் அதிகமாயின.
மத்திய அரசே காரணம்
மதம் சார்ந்த நம்பிக்கைகளைப் பின்பற்றி அறிவியலைப் புறந்தள்ளியதால் தொற்றின் பரவல் அதிகமாயிற்று. ஊரடங்கை மட்டும் ஒரே தீர்வாகக் கொண்டு, தடுப்பு நடவடிக்கைகளை, காப்பு நடவடிக்கைகளை, நிவாரண நடவடிக்கைகளை, இழப்பீட்டுத் திட்டங்களை மத்திய அரசு செய்யவில்லை.
சிலைகள் வைப்பதற்கும், நாடாளுமன்றப் புதிய கட்டடம் கட்டுவதற்கும், இராமர் கோயில் கட்டுவதற்கும், கார்ப்பரேட் முதலாளிகளுக்கு சலுகைகள் வழங்குவதற்கும் லட்சக்கணக்கான கோடி ரூபாய்களைச் செலவிடும் மத்திய அரசு மாநிலங்களுக்கு கொரோனா தடுப்பு செயல்பாடுகளுக்குப் போதுமான நிதியை ஒதுக்கவில்லை.
மாநிலங்களுக்கு உரிமைப்படி, நியாயப்படி வழங்க வேண்டிய ஜி.எஸ்.டி. பங்குத் தொகையைக் கூட வழங்காமல் வஞ்சித்தது.
ஓரவஞ்சனை: தடுப்பூசிகள் வழங்குவதிலும், நிதி ஒதுக்கீடு செய்வதிலும், மருத்துவக் கருவிகள், மருத்துவப் பொருள்கள், ஆக்ஸிஜன் வழங்குவதிலும் தாங்கள் ஆளும் மாநிலங்களுக்கு கூடுதலாகவும், மற்ற மாநிலங்களுக்குக் குறைவாகவும் வழங்கியது.
பேரிடர் காலத்தில்கூட இப்படி மாற்றாந்தாய் மனப்பான்மையோடு, கொடுநெஞ்சக் கொள்கையோடு மத்திய அரசு செயல்படுவதை உலக நாடுகளே கண்டித்தன.
ஊடகங்கள் கண்டனம்
மோடி அரசின் கையாலாகத் தனத்தை ஊடகங்கள் ஒவ்வொரு நாளும் கண்டித்து வருகின்றன. “மோடி அரசையே காணவில்லை!’’ என்று ஊடகங்கள் கூறும் அளவுக்கு மோடி அரசு செயல்படா அரசாக, திறனற்ற அரசாக, பொறுப்பற்ற அரசாகச் செயல்பட்டு வருகிறது.
நீதிமன்றங்கள் கண்டிப்பு:
உயர்நீதிமன்றங்களும், உச்சநீதிமன்றமும் ஒவ்வொரு நாளும் தங்கள் கண்டனங்களை, எதிர்ப்பை மத்திய அரசுக்குத் தெரிவித்து வருகின்றன. தாங்களாகவே முன்வந்து வழக்குப் பதிந்து ஆணைகளை வழங்கி வருகின்றன. “பிச்சை எடுத்தாவது மக்களைக் காப்பாற்றுங்கள்!’’ என்று வேதனையின் விளிம்பிற் சென்று தங்கள் விரக்தியை, வேதனையை வெளிப்படுத்தின.
மத்திய அரசு மாற வேண்டும்
அயல்நாடுகள், ஊடகங்கள், நீதிமன்றங்கள், மக்கள் என்று எல்லாத் தரப்பும் எதிர்ப்பு தெரிவித்தும் மத்திய அரசு தன் செயல்பாடுகளில் மாற்றம் செய்யவில்லை, பொறுப்புடன் செயல்படவில்லை.
பேரிடர் நேரத்தில் நோய் தடுப்புக்கும், நிவாரணத்திற்கும் சிகிச்சைக்கும் முழுப் பொறுப்பேற்க வேண்டிய மத்திய அரசு, தன் கடமைகளை மறந்து, எல்லாப் பொறுப்புகளையும், நிதிச் சுமைகளையும் மாநில அரசுகளிடம் தள்ளிவிட்டு, தப்பிக்க முயற்சிக்கிறது.
இப்படிப்பட்ட பொறுப்பற்ற, ஆளுமையற்ற, நேர்மையற்ற, மனிதநேயமற்ற, அறமற்ற செயல்பாடுகளால் மத்திய அரசின் மீது மக்கள் மிகுந்த கோவத்துடனும் வெறுப்புடனும் உள்ளனர்.
எனவே, மத்திய அரசு அறவழியிலும், அறிவியல் வழியிலும் தன் செயல்பாடுகளை மாற்றிக்கொண்டு மக்களைக் காக்க மனிதநேயத்தோடு செயல்பட வேண்டும். மாநிலங்களுக்கு பாரபட்சமின்றி வேண்டிய உதவிகளைச் செய்ய வேண்டும்.
அ.தி.மு.க. அரசின் அலட்சியம்
தேர்தல் முடிவு தி.மு.க.வுக்குச் சாதகமாக அமையும் என்று கருத்துக் கணிப்புகள் வரவே, டெண்டர்களை முடித்து வருமானம் பார்க்கக் காட்டிய அக்கறையை, கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் அ.தி.மு.க. அரசு காட்டவில்லை. 2021 தொடக்கத்திலிருந்தே கொரோனா தடுப்புக்கும், இரண்டாம் அலையை எதிர்கொள்வதற்கும் எந்த முன் எச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை. தேர்தல் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்தே எந்த ஆக்கபூர்வ செயல்பாடுகளையும் செய்யவில்லை.
தமிழகத்தில் நோய்த் தொற்று அதிகமானதற்கும், இரண்டாம் அலை தீவிரமானதற்கும் அ.தி.மு.க. அரசின் அலட்சியப் போக்கும், பொறுப்பைத் தட்டிக் கழித்த காழ்ப்பு மனநிலையும் காரணம்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் சாதனைகள்:
ஆனால், தேர்தல் முடிவு வெளியிடப்பட்டு, முதல்வராக தான் வருவது உறுதி என்று ஆன அடுத்த கணமே, முதல்வராகப் பொறுப்பேற்பதற்கு 5 நாள்களுக்கு முன்பே, கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் முழுமூச்சில் , முழு முனைப்பில் இறங்கினார் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள். பதவி ஏற்பதற்கு முன்பே மருத்துவர், செவிலியர் பணி நியமனங்களை உடனே செய்யச் சொன்னார்.
பதவி ஏற்ற அன்று மாலையே அலுவலர்கள் கூட்டத்தைக் கூட்டி போர்க்கால அடிப்படையில் தடுப்புப் பணிகளையும், நிவாரணப் பணிகளையும் மேற்கொண்டார். அதிலிருந்து ஒரு நாள்கூட ஓய்வில்லாமல், இரு வாரங்களில் ஏராளமான பணிகளை இடைவிடாமல் செய்து, மக்களைக் காக்கும் மகத்தான மனிதநேயப் பணியில் தன்னை அர்ப்பணித்துக் கொண்டு செயல்பட்டு வருகிறார்.
ஊடகங்கள், நீதிமன்றங்கள், மக்கள், ஏன் எதிர்க்கட்சிகள் கூட வியந்து பாராட்டுகின்ற அளவுக்கு மிகப் பெரிய வரலாற்றுச் சாதனைகளைச் செய்து வருகிறார். மக்களின் பொறுப்பை உணர்த்துவதற்கு அவர் கெஞ்சிக்கேட்டு வேண்டுகோள் வைத்தது தமிழகத்தையே கலங்கச் செய்துவிட்டது.
மக்களும் பாதிக்கப்படாமல், நோய்த் தொற்றும் அதிகரிக்காமல் ஊரடங்கை மேற்கொண்டு வரும் அவரது மனிதநேயச் செயல் கண்டு உலகமே பாராட்டுகிறது!
மூடநம்பிக்கைகளை முறியடிப்போம்
கொரோனா என்னும் கொடுந்தொற்றைத் தடுத்து மக்களைக் காக்க உலக நாடுகள் அறிவியல் அணுகுமுறைகளை மேற்கொள்ளும் நேரத்தில், மதவெறிகொண்ட பா.ஜ.க. அரசும் அதன் உறுப்பினர்களும் மூடக் கருத்துகளை ஒவ்வொரு நாளும் கூறி அறிவியலைக் கேலிக் கூத்தாக்கி வருகின்றனர்.
மாட்டு மூத்திரத்தைக் குடித்தால் கொரோனா போகும், சாணியைப் பூசிக் கொண்டால் கொரோனா வராது, விரதம் இருந்தால், யாகம் செய்தால் கொரோனா போய்விடும். தடுப்பூசி வேண்டாம் என்றெல்லாம் பேசி வருகின்றனர்.
மத்திய அமைச்சர் ஒருவர் “அப்பளம் சாப்பிட்டால் கொரோனா வராது’’ என்கிறார்.
சாத்திவ்இராஜ் என்ற நாடாளுமன்ற உறுப்பினர் மாட்டு மூத்திரம் குடித்தால் கொரோனா வராது என்கிறார்.
யோகா சாமியார் ராம்தேவ் “தடுப்பூசி முட்டாள்தனம்’’ என்கிறார்!
இவர்களைக் கண்டித்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டிய மத்திய அரசு மவுனம் காத்து வருகிறது.
தமிழகத்தில் தணிகாசலம் என்பவர் மூலிகைகளால் கொரோனாவை குணப்படுத்துவேன் என்று சென்ற ஆண்டு கூறியதற்கு அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர். ஆனால், முட்டாள்தனமாக மூடக் கருத்துகளைப் பரப்பும், தடுப்பூசியை எதிர்க்கும் ஆள்கள் மீது எந்த நடவடிக்கையும் இல்லை!
இதுதான் பாசிச காவி ஆட்சியின் அடையாளம்.
கும்ப(ல்)மேளா: கொரோனா இரண்டாம் அலை தொடங்கிய நேரத்தில் கும்பமேளா நடத்தி கோடிக்கணக்கில் பணத்தை வீணடித்ததோடு, இலட்சக்கணக்கில் கும்பல் சேர்ந்ததால் கொரோனா தொற்று விரைந்து நாடு முழுக்கப் பரவியது. இப்படியொரு முட்டாள்தனமான செயலை அதுவும் பெருந்தொற்று அதிகமாகப் பரவும் காலகட்டத்தில் நிகழ்த்திய செயலை உலகில் எந்த நாட்டிலும் காண முடியாது.
விழிப்புணர்வால் விரட்டுவோம்
மூடக்கருத்துகளை முறியடித்து விழிப்புணர்வை வளர்ப்பதன் மூலமே கொரோனாவை விரட்ட முடியும், ஒழிக்க முடியும். நாமும் பரப்பக் கூடாது; நமக்கும் பரவக் கூடாது என்ற பொறுப்புணர்ச்சியுடன் ஒவ்வொரு குடிமகனும் கட்டாயம் நடந்துகொண்டால் மட்டுமே கொரோனாவை ஒழிக்க முடியும். அதற்கு கீழ்க்கண்டவற்றைக் கட்டாயம் பின்பற்ற வேண்டும்.
முகக்கவசம்: கொரோனா பரவலைத் தடுக்க முகக் கவசமே முதன்மையான கருவி. அந்த முகக் கவசத்தையும் முறையாக அணிய வேண்டும், முறையாக குப்பைத் தொட்டியில் போட வேண்டும். முகக் கவசம் உயிர்க்கவசம் என்பது முற்றிலும் உண்மை. எல்லோரும் முகக்கவசம் அணிந்தால் 95% நோய்த் தொற்றைக் கட்டாயம் தடுக்க முடியும்.
தனிமனித இடைவெளி:
வீட்டில் இருக்கும்போதும், வெளியில் செல்லும்போதும் தனிமனித இடைவெளி கட்டாயம். மூன்று மீட்டர் இடைவெளி என்பது பாதுகாப்பானது. தேவையில்லாமல் வெளியில் செல்வதைத் தடுத்தாலே, தவிர்த்தாலே கும்பல் குறையும், தனி மனித இடைவெளி தானே உருவாகும். நட்பு, பாசம், உறவு வளர்ப்பதற்கு இது உகந்த காலம் அல்ல. நோய்க் கிருமிக்கு உறவு தெரியாது.
கிருமி நாசினி: கிருமி நாசினி கொண்டு கை கழுவுதல், காய்கறிகளை நன்கு சுத்தம் செய்து பயன்படுத்துதல் போன்றவற்றால் நோய்க்கிருமி பரவாமல் தடுக்கலாம்.
சித்த மருந்துகள்: தமிழர் மருத்துவமாம் சித்த மருந்துகள் உணவுப் பொருள்களாக இருப்பதால் அவற்றை அளவுடன் அன்றாடம் பயன்படுத்தினால் கொரோனா பாதிப்பை பெரும் அளவில் குறைக்கலாம்.
மிளகு, மஞ்சள், இஞ்சி, கடுக்காய், திப்பிலி, தூதுவளை, ஆடுதொடா இலை, கீழா நெல்லி, கரிசாலை, அதிமதுரம், கண்டங்கத்திரி லேகியம், கபசுரக் குடிநீர் போன்றவற்றை மருத்துவர் ஆலோசனையோடு மாற்றி மாற்றி எடுத்துக் கொண்டால் கொரோனா வராமலும் தடுக்கலாம், வந்தாலும் குணப்படுத்தலாம்.
அறிகுறிகள் தெரிந்தால்…
நோயின் வேகத்தை, பாதிப்பை இது கட்டுப்படுத்தும். பெரும்பாலும் இப்பொருள்களாலே நோய் கட்டுக்குள் வரும். நோய்த் தொற்றுக்கான அறிகுறிகள் தெரிந்தாலே உடனடியாக மருத்துவமனைக்குச் சென்று சோதனை செய்து மருத்துவர்களின் ஆலோசனைப்படி உரிய சிகிச்சை பெற வேண்டும்.
இந்த நோய்த் தொற்று சிலருக்கு எந்த அறிகுறியும் இல்லாமல் நீங்கிவிடும். சிலருக்கு குறைந்த பாதிப்போடு குணமாகிவிடும், மிகக் குறைவானவர்களுக்கே மருத்துவமனைச் சிகிச்சை தேவைப்படும் என்பதைப் புரிந்துகொண்டு மருத்துவர்கள் ஆலோசனைப்படி நடந்தால், உயிர்ச் சேதத்தைத் தவிர்க்கலாம். எனக்கு வெறும் சளிதான், காய்ச்சல்தான் என்று வீட்டிலிருந்து விடக்கூடாது. தொடக்க நிலையிலேயே கண்டறிவது உரிய சிகிச்சை பெற உதவும்.
தடுப்பூசி: இன்றைக்கு மக்களுக்கு இருக்கிற ஒரே கருவி தடுப்பூசிதான். எனவே, தடுப்பூசியைக் கட்டாயம் போட்டுக் கொள்ள வேண்டும். தடுப்பூசி போடக் கூடாதவர்கள் என்று ஒரு வேலை மருத்துவர்கள் சொன்னால் மட்டும் அவர்கள் ஆலோசனைப்படி தவிர்க்கலாம். மற்றபடி தடுப்பூசி ஒன்று தான் நமக்கு இருக்கும் காப்பரண். எவ்வளவு விரைந்து தடுப்பூசிகள் அனைவருக்கும் போடப்படுகிறதோ அவ்வளவு சீக்கிரம் உலகம் இப்பேரழிவில் இருந்து விடுபடும்.
சத்யராஜ் அறிவுரை:
பகுத்தறிவாளர் நடிகர் சத்யராஜ் அவர்கள், அரசு விளம்பரத்தில் ஓர் அரிய கருத்தைக் கூறியுள்ளார். “பிறந்த நாள், திருமணம், காது குத்தல், வளைகாப்பு, இறப்பு போன்றவற்றில் உறவு, நட்பு, பாசம் இவற்றைக் காட்ட வேண்டும் என்பதற்காகக் கும்பல் சேரக்கூடாது. விழா நடத்துவோரே, உங்கள் பாதுகாப்புக்கும் எங்கள் பாதுகாப்புக்கும் வீட்டிலிருந்தே வாழ்த்தையோ வருத்தத்தையோ தெரிவியுங்கள். நேரில் வரவேண்டாம் என்று கேட்டுக்கொள்வதே பகுத்தறிவுக்கு உகந்த செயல்’’ என்று கூறியுள்ளார். இதை விழா நடத்துவோர் கட்டாயம் பின்பற்றி கொரோனா பரவலைத் தடுக்க வேண்டும். இது ஒரு சமுதாயப் பணி, தொண்டு என்பதை உணர வேண்டும்.
அரசுடன் ஒத்துழைக்க வேண்டும்
மருத்துவர்கள், வல்லுநர்கள் கூறும் கருத்துகளைத்தான் அரசும், மக்கள் நலன் கருதி விதிகளாக வகுத்துத் தருகிறது. எனவே, அரசு கூறும் வழிமுறைகளைக் கட்டாயம் மக்கள் பின்பற்றி நடக்க வேண்டும். இதைத் தங்கள் நலன் கருதியும் மக்கள் நலன் கருதியும் ஒவ்வொருவரும் செய்ய வேண்டும்.
சிலர் கட்டுப்பாடுகளை மீறிச் செய்யும் செயல்கள் அவர்களை மட்டும் பாதிப்பதில்லை. மற்றவர்களையும் பாதிக்கிறது என்பதை உணர்ந்து பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும். கொரோனா ஒழிப்பு என்பது அரசு மட்டும் செய்யும் செயல் அல்ல. அது ஒவ்வொருவரும் செய்ய வேண்டிய கட்டாயக் கடமை!
மூன்றாம் அலையைத் தடுப்போம்!
இரண்டாம் அலை பரவலுக்கு மத்திய அரசும், மக்களில் சிலருமே காரணம் என்ற படிப்பினையைக் கொண்டு, தவறுகளை, தப்புகளை விலக்கி, விழிப்போடு, அறிவோடு செயல்பட்டு, மூன்றாம் அலை வராமல் தடுக்க வேண்டும்.
மூன்றாம் அலை குழந்தைகளை அதிகம் பாதிக்கும் என்பதால், பெரியவர்கள் செய்யும் தப்பால், ஏதும் அறியாத குழந்தைகள் பாதிக்கப்படுவது அவர்களுக்குச் செய்யும் கொடுமையாகும். எனவே, குழந்தைகளை மனதிற்கொண்டு ஒவ்வொருவரும் விதிமுறைகளை, தடுப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றி, விழிப்போடு செயல்பட்டு கொடிய கொரோனாவை விரட்டுவோம்! ஒழிப்போம்!