கே. இந்தத் தேர்தல் முடிவுகளில் முற்போக்கு சக்திகள் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம் என்ன?
– தமிழ் மைந்தன், சைதாப்பேட்டை
ப: 1. எவ்வளவு பணபலம், பத்திரிகை (விளம்பர பலம்), ஆட்சி அதிகார பலம் இருந்தாலும், உண்மையான மக்கள் பலத்திற்கு முன் அவை மண்டியிடும் என்பதும்,
2. ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு -_ ஒற்றுமை இன்றேல் முழுத்தோல்வி _ அந்த ஒன்றுபடுவது லட்சியத்திற்காக என்று இருக்க வேண்டுமே தவிர, வெறும் பதவிக்கான வேட்டையாக இருந்தால் மக்கள் தோல்வியைக் கொடுப்பார்கள் என்பதும்.
3. தேர்தல் கமிஷன் ஒரு ‘காகிதப் புலி’ என்பதும்!
கே. கலைஞர் மகன் என்பதைத் தவிர, ஸ்டாலினுக்கு வேறு தகுதிகள் கிடையாது என்று மேனாள் நீதிபதி மார்கண்டேய கட்ஜு கூறியுள்ளது எதைக் காட்டுகிறது?
– திராவிட விஷ்ணு. வீராக்கன்
ப: கூறுகெட்ட அலகாபாத் பார்ப்பனக் கொழுப்பு இப்படிப் பைத்தியமாக உளறுகிறது; அலட்சியப்படுத்துங்கள்!
கே. சுயமரியாதை இயக்கத்தின் நூற்றாண்டு 2025இல் வரும் நிலையில் அதற்குள் முடிக்க நினைக்கும் தங்கள் முக்கிய திட்டம் எது?
-அய்ன்ஸ்டின் விஜய், சோழங்குறிச்சி
ப: ‘பெரியார் உலக’த்தின் ஒரு பகுதி துவக்கமும் வளர்ச்சியும் _ அதற்குள் சரியான நினைவாக அமையும். 3 ஆண்டுகளுக்கு மேல் அ.தி.மு.க. அரசு கிடப்பில் போட்ட கோப்பு _ தி.மு.க.வின் அரசு விரைந்து. விடியலைத் தருவதால் அது வாய்ப்பாக அமையக் கூடும்.
கே. கடவுளின் தேசத்தில் (கேரளத்தில்) மக்கள் தேர்தலில் பொதுவுடைமைக்கு வாக்களித்து வருணாசிரம காவிகளுக்கு மரண அடி கொடுத்து ஓர் இடம்கூட இல்லாமல் செய்தது பற்றி?
– கல.சங்கத்தமிழன், செங்கை
ப: அய்யப்பன் அங்கே பா.ஜ.க.வை கைவிட்டது. இராமன் அயோத்தியில் கை கழுவியது, காசி விசுவநாதர் ‘அம்போ சொல்லியது. திருப்பதி வெங்கடாஜலபதி ‘கோவிந்தா கோவிந்தா’ போட்டது. ‘புத்தி வென்றது! பக்தி தோற்றது!’.
கே. முதல் தலைமுறைப் பட்டதாரிகளாயிருக்கும் கிராமப்புற ஏழை மாணவர்களுக்கும் வேலைவாய்ப்புகளில் முதலில் முன்னுரிமை என்பதை அரசு மேற்கொண்டால் சிறப்பாய் இருக்கும் அல்லவா?
– தேன்மொழி, திருவொற்றியூர்
ப: கொரானா தடுப்பு -_ ஒழிப்புக்கே முன்னுரிமை. வேலைவாய்ப்புகள் அடுத்து, தானே வரிசையில் வருவது உறுதி!
கே. விபீடண அடிமைகளின் துணையால் சனாதன ஆர்.எஸ்.எஸ். தமிழக சட்டப் பேரவைக்குள் நுழைந்துவிட்டதே?
– க.காளிதாஸ், காஞ்சி
ப: ‘விபீடணர்கள் சிரஞ்சீவிகள்!’ என்பதன் பொருள் இப்போது புரிகிறதல்லவா?
கே. மூன்று மாநில தேர்தல் வெற்றி உத்தரப்பிரதேசத்தில் வரும் 2022 சட்டமன்றத் தேர்தலில் எதிரொலிக்கும் என்று எதிர்பார்க்கலாமா? ஆரியம் வீழுமா?
– சி.பச்சையப்பன், பொற்பந்தல்
ப: சுடுகாட்டுப் பிணங்கள் உயிர் பெறுமா? இப்போதே அயோத்தியிலும், வாரணாசியிலும் படுதோல்விதானே பா.ஜ.க.வுக்கு மக்கள் அளித்த பரிசு.
கே. நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தல் முடிவைப் பார்க்கும் போது, ஜாதிய அமைப்புகளால் கட்டமைக்கப்பட்டுள்ளதைப் போன்று கொங்கு மண்டலத்திலும், வடஆர்க்காடு மாவட்டங்களிலும் உள்ள நிலையை எப்படிப் பார்க்கிறீர்கள்?
– க.கலைமணி. முடப்பள்ளி
ப: நல்ல பிரச்சாரம் மற்றும் செயல் நடவடிக்கை ‘ஆபரேஷன்’ செய்தாக வேண்டிய கட்டாயம் உருவாகும்.
கே. மேற்குவங்கத்தில் இந்துத்துவா மதவாத பி.ஜே.பி. தேர்தல் ஆணைய உதவியுடன் பல்வேறு அடக்குமுறைகளைக் கையாண்டும் தேர்தலில் வெற்றி பெறமுடியவில்லையே!
வங்கத்தின் முடிவை எப்படிப் பார்க்கிறீர்கள்?
– க.பா.சித்தார்த், பண்ருட்டி
ப: வங்கத்தின் ‘பெண் புலி’யின் துணிவும், நெஞ்சுரமும், வங்க மக்களின் உணர்வும் வெல்லப்பட முடியாத விவேகம் என்பதை மோடி _ அமித்ஷா _ நட்டா போன்றவர்களுக்கு உணர்த்துகிறது!
எட்டுமுறை படையெடுத்தும் தோல்விதானே அம்மக்கள் இவர்களுக்குத் தந்த பரிசு! தமிழ்நாடு கேரளா இப்படி புதிய தளமும் களமும் அமைக்கின்றன.