கி.தளபதிராஜ்
காலை எழுந்து வழக்கமான பூஜைகளை முடித்து ஆலோடியில் கிடந்த சாய்வு நாற்காலியில் சாய்ந்தபடி அன்றைக்கு வந்த நாளிதழ்களைப் புரட்டிக் கொண்டிருந்தார் வெங்கட்ராம அய்யர். அய்யர் சமஸ்கிருதப் பண்டிதர். மத்திய அரசுப் பள்ளி ஒன்றில் சமஸ்கிருத ஆசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். மிகவும் கண்டிப்பான பேர்வழி. பஞ்சகச்சம், கோட் அணிந்துதான் பள்ளிக்கு வருவார். பார்த்தவுடன் மாணவர்களை இனம் கண்டு கொள்வதில் பலான பேர்வழி.
‘பிராமினோ!’
“கொரோனாவை அடுத்து நாட்டை உலுக்கும் புதிய தொற்று! கொரோனாவைக் காட்டிலும் பல மடங்கு வீரியமிக்க தொற்று. காலச் சூழலுக்கு ஏற்ப உருமாறி மனிதர்களைத் தாக்கக்கூடியது என்பதோடு மனித சமூகத்திற்கே பேரழிவை ஏற்படுத்தக்கூடிய தொற்று.”
நான்கு காலத்திற்கு செய்தி வெளியிட்டிருந்தது அந்த நாளிதழ். வெங்கட்ராம அய்யருக்கு அதைப் படித்ததும் கிலி உண்டாயிற்று. வெளிநாட்டில் புரோகிதம் பண்ணிக் கொண்டிருக்கும் மகன் சுப்புணியின் நினைவு வந்தது. மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் சகிதம் பங்களா, கார் என சகல வசதிகளோடும் வாழ்ந்து வருகிறான் சுப்புணி. சென்ற வருடம் கொரோனா தொற்று உச்சத்தை அடைவதற்கு முன்பே ஊருக்குத் திரும்பச் சொல்லி பல முறை சொல்லிவிட்டார் பண்டிதர். சுப்புணிக்கும் ஊருக்கு வர ஆசைதான். எவ்வளவோ முயற்சித்தும் சுப்புணியால் வர இயலவில்லை. இப்போது மீண்டும் புதிய தொற்று பரவும் செய்தி பண்டிதரை மிகவும் கவலையில் ஆழ்த்தியது.
“பிராமினோ!” தொற்றுக்கு புதிய தடுப்பூசி!
கொட்டை எழுத்தில் ஆறாம் பக்கத்தில் பிரசுரிக்கப்பட்டிருந்த அந்தச் செய்தி பண்டிதரின் கவனத்தை ஈர்த்தது.
“பிரபல தமிழக மருத்துவர் திராவிடன் தலைமையிலான மருத்துவக் குழு பிராமினோ தொற்றுக்கு பெரிவாக்ஸின் என்ற புதிய தடுப்பூசி மருந்தைக் கண்டுபிடித்துள்ளது. பல்வேறு சோதனைக்குப் பின் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வர இருக்கிறது. பெரிவாக்ஸின் தடுப்பு மருந்தை பிரதமர் அறிமுகப்படுத்தி நாட்டு மக்களுக்கு அர்ப்பணிக்க உள்ளார்.”
ஆத்துக்காரி பங்கஜத்தை அழைத்து அந்தச் செய்தியை மீண்டும் உரக்கப் படித்தார் பண்டிதர். பங்கஜம் வெளிநாட்டில் இருக்கும் தன் மருமகளுக்கு ஃபோன் போட்டாள்.
ஹெலோ! யார் பேசறது? நான் பங்கஜம் பேசுறேன். சுப்புணி ஆத்துல இருக்கானோல்லியோ?
சொல்லுங்கோ மாமி. அவர் ஆத்துல இல்லை. கோயிலுக்குப் போயிருக்கார். வர சித்த நாழியாகும். ஏதாவது முக்கியமான விஷயமா? சொல்லுங்கோ!
என்னது? கோயிலுக்குப் போயிருக்கானா? ஏண்டி அசடு! லோகமே தொற்றுல தொங்கிண்டு அவஸ்தைப் பட்டிண்டுருக்கறது. கோயிலுக்குப் போறானாக்கும் கோயிலுக்கு. நாங்க இங்க ஒவ்வொரு நிமிஷமும் மடியில நெருப்பைக் கட்டிண்டு அல்லாடிண்டுருக்கோம். நீ என்னடான்னா ரொம்ப கேஷ்வலா கோயிலுக்குப் போயிருக்கான்னு சொல்ற?
நியூஸெல்லாம் பார்க்கிறேளோல்லியோ? இங்க எல்லாக் கோயிலையும் இழுத்து மூடிட்டா. நம்ம பக்கத்து ஆத்து மாமியோட அத்திம்பேர் மதுரையில புரோகிதம் பண்ணிண்டுருந்தாரே ரெங்கு மாமா அவருக்குக் கொரோனா. நம்மவாளே நிறையபேர் மாட்டிண்டுட்டா. ஒரு கோயில் விடாம உள்ளே புகுந்து இங்க மருந்தடிக்கிறா. அம்பாளுக்கு அபிஷேகம் இப்போல்லாம் கிருமிநாசினி தெளிச்சுதான் நடக்கறது. அந்தக் கருமத்தைவேற டிவிக்காரனுங்க திருப்பித் திருப்பிப் போடறானுங்க. கொரோனாவுக்குத்தான் இந்தக் கூத்துன்னா இப்ப வந்திருக்கிறது இன்னும் மோசமாம். அவனாண்ட சொல்லி கொஞ்ச நாளைக்கு ஆத்துலயே இருக்கச்சொல்லுடி.
இங்க பிராமினோ தொற்றுக்கு மருந்து கண்டுபுடிச்சுட்டாளாம். தெரியுமோ நோக்கு? பேப்பர்லல்லாம் செய்தி போட்டுருக்கா. உங்க மாமாதான் படிச்சு காண்பிச்சார். எங்களுக்கு தடுப்பூசி கிடைக்கறதோ இல்லையோ, நம்ம பிரைம் மினிஸ்டர் உங்களுக்கு முதல்ல அனுப்பிடுவார். உஷாரா முன்னாடியே ரெஜிஸ்டர் பண்ணி வச்சுடுங்கோ.
டிரிங்…டிரிங்..
காலிங் பெல் அடிக்கிற சத்தம் கேக்கறது. சுப்புணி வந்தா அப்புறமா பேசச்சொல்லு. நான் ஃபோனை வைக்கிறேன்.
ஏண்ணா இங்கதான உட்கார்ந்துருக்கேள். காலிங்பெல் அடிக்கிறது கேக்கலையாக்கும்? எழுந்துபோய் கதவைத் திறக்கறது?
எனக்கு சத்தம் நன்னாத்தான் கேக்கறதுடி. நீ என்ன அப்படி உள்ள முக்கியமா பண்ணிண்டுருக்கே? எப்பப் பார்த்தாலும் செல்போனும் கையுமாத்தான் அலைஞ்சுண்டுருக்கே. போ…போ… யாருன்னு பாரு!
கதவைத்திறந்து வாசலுக்குப் போனாள் பங்கஜம்.
நடுத்தர வயதுக்காரர் ஒருவர் அரசாங்க ஜீப்பிலிருந்து இறங்கி வந்தார்.
“வெங்கட்ராம அய்யர் சார் வீடுதானே? சார் இருக்காங்களா?’’
“இருக்கார். நீங்க யார்? எங்கேயிருந்து வர்றேள்?’’
“நாங்க ஹெல்த் டிபார்ட்மெண்ட்லேர்ந்து வர்றோம் மேடம். பிராமினோ தொற்றுக்கு புதுசா வேக்ஸின் கண்டுபுடிச்சிருக்காங்கல்லியா? அந்த மருந்தை நாட்டுக்கு அர்ப்பணிக்க நாளை மறுநாள் நம்ம பிரதமர் தமிழ்நாட்டிற்கு வர்றார். சாருக்கு அந்த விழா இன்விடேஷன் கொடுக்க வந்திருக்கோம். பிரதமர் இந்த விழாவை ‘திருவிழா’ மாதிரி நடத்தனும்னு சொல்லியிருக்கார். டாக்டர் திராவிடனே சாரை நேரா பார்த்து இந்த இன்விடேஷனை கொடுத்துட்டு வரச்சொன்னார்.’’
“பேரெல்லாம் சரியாத்தான் சொல்றா. நம்மாத்துக்காரர யார் இன்வைட் பண்ணியிருப்பா?’’ அழைப்பிதழைக் கையில் வாங்கினாள் பங்கஜம். வெங்கட்ராம அய்யர், சமஸ்கிருத ஆசிரியர் (ஓய்வு) என முகவரி தெளிவாக எழுதியிருந்தது.
பங்கஜம் பேசிகொண்டிருந்ததைக் கவனித்த பண்டிதர் எழுந்துவந்து அவளிடமிருந்த அழைப்பிதழை வாங்கிப் பிரித்தார். யார் அனுப்பியிருப்பா? என தனக்குள் கேட்டுகொண்டே அழைப்பிதழை முழுவதுமாகப் படித்தார். நிகழ்ச்சியில் பங்கேற்பவர்கள் தங்கள் அடையாள அட்டையைக் கொண்டுவர வேண்டும். ஒரு மணி நேரம் முன்னதாகவே அரங்கிற்குள் வரவேண்டும் என்று குறிப்பிடப் பட்டிருந்தது. அழைப்பிதழின் உரையை மீண்டுமொருமுறை திருப்பிப் பார்த்தார். அனுப்புதல்: மருத்துவர் திராவிடன், முன்னாள் மாணவன் என்று இருந்தது.
‘திராவிடன்!’ ‘திராவிடன்!’ அந்தப் பெயரைத் திரும்பத் திரும்ப உச்சரித்தார். “ஓ…. திராவிடன்! அந்த ‘உதவாக்கரை!’ அவனா?’’ அவரால் நம்ப முடியவில்லை. பெசன்ட் நகர் பள்ளியில் பணியாற்றிய போது ஒன்பதாம் வகுப்பில் இவரிடம் சமஸ்கிருதம் படித்தவன். பண்டிதருக்கு திராவிடனின் நினைவு வந்தது.
வெங்கட்ராம அய்யர் மிகவும் கண்டிப்பான பேர்வழி. மாணவர்களை தண்டிப்பதற்கென்றே தனியாக ஒரு பெரம்புக் குச்சி அவர் கையில் எப்போதும் இருக்கும். அடித்து அடித்து தெறித்துக் கிடக்கும் அந்தக் குச்சியின் முனையை நூல் கொண்டு இழுத்துக் கட்டியிருப்பார். அவர் அழைத்தாலே சில மாணவர்கள் பயத்தில் டிரவுசரில் மூத்திரம் போய்விடுவார்கள். அன்று ஏதோ செம ஜாலி மூடில் இருந்தார். பாடம் நடத்துவதைத் தள்ளிவைத்து மாணவர்களிடம் சகஜமாகப் பேசிகொண்டிருந்தார்.
ஒவ்வொருவராக அழைத்து அவர்களின் எதிர்கால ஆசையைக் கேட்டறிந்தார். மாணவர்கள் ஆசிரியர் முன்னால் வரிசையாக வந்து நின்று தங்கள் விருப்பத்தைச் சொன்னார்கள். சிலரை முதுகில் தடவித் தட்டிக் கொடுத்தார். சிலர் விருப்பத்திற்கு அவர்களை உற்சாகப்படுத்த மாணவர்களை கையொலி எழுப்பச் சொன்னார்.
திராவிடனை அழைத்தார். பண்டிதருக்கு அருகே வந்து நின்று, “நான் டாக்டருக்குப் படிக்கப்போறேன் சார்!” என்றான். அய்யர் அவனை ஒரு நிமிடம் உற்றுப்பார்த்தார். சட்டென எழுந்து மேஜையில் கிடந்த சாக்பீஸை எடுத்து கரும்பலகையில், ‘ஔஷதம்‘ ‘பஸ்பம்‘ ‘கஷாயம்‘ ‘சூரணம்‘ ‘நேத்ரபூஷணம்‘ என நான்கைந்து சமஸ்கிருதச் சொற்களை கடகடவென எழுதி அதற்கான தமிழ் வார்த்தையை சொல்லச் சொன்னார். திராவிடன் பேந்தப் பேந்த முழித்தான். “நாலு வார்த்தை முழுசா தெரியலை. நீங்க டாக்டராகப் போறீங்களோ?’’ என நெற்றியை உயர்த்தி அவனை ஏளனமாகப் பார்த்தார். “உதவாக்கரை! நீயெல்லாம் கொடி பிடிக்கத்தான்டா லாயக்கு. போய் உட்கார்!’’ என்றார். அவர் அப்படிச் சொன்னதும் வகுப்பறை முழுதும் எழும்பிய மாணவர்களின் கேலிச் சிரிப்பொலி அவனுள் மிகுந்த அவமானத்தை ஏற்படுத்தியது.
‘உதவாக்கரை!’ அந்தப் பயலா? அவனா டாக்டர்? அவனா மருந்து கண்டுபிடிச்சான்? அவர் மனம் நம்ப மறுத்தது. நமக்கு ஏன் அழைப்பை அனுப்பியிருக்கிறான் என்பதும் அவருக்குப் பிடிபடவில்லை. பிரைம் மினிஸ்டர் பார்ட்டிஸிபேட் பன்ற ப்ரொகிராம். இது போல ஒரு வாய்ப்பு கிடைப்பதே கஷ்டம். எது எப்படியோ! எப்படியும் கலந்து கொள்ள வேண்டும் என நினைத்தார்.
விழாவிற்கான நாள் வந்தது. மாலை நிகழ்ச்சிக்கு பட்டுப் பஞ்சகச்சம், கோட், அங்கவஸ்திரம் சகிதமாக ஆத்துக்காரியையும் அழைத்துக்கொண்டு மதியமே வீட்டைவிட்டுப் புறப்பட்டு விட்டார். செக்யூரிட்டி சோதனைகள் எல்லாம் முடிந்து மாலை அய்ந்து மணிக்கு அரங்கு திறக்கப்பட்டது. வி.அய்.பி கேட் வழியாக பண்டிதரை அழைத்து பார்வையாளர்கள் முன்வரிசையில் அமரச்சொன்னார்கள். குளு குளு ஏசி அறையில் ரூம் ஸ்பிரே வாடை மூக்கைத் துளைத்தது. அரங்கமே அமைதியாக இருந்தது. மேடையில் போடப்பட்டிருந்த இருக்கைகளை மோப்பநாய் ஒன்று சுற்றிச்சுற்றி வந்து மோப்பமிட்டுக் கொண்டிருந்தது. வலது பக்கம் இரண்டு இருக்கைகள் தள்ளி தமிழாசிரியர் தமிழ்ச்செல்வன் அமர்ந்திருந்தார். இரண்டு பேரும் ஒன்றாக வேலை பார்த்தவர்கள். இவரைப் பார்த்ததும் தமிழ்ச்செல்வன் எழுந்து வந்து வணக்கம் சொன்னார். இருவரும் ஒருவரையொருவர் நலம் விசாரித்துக் கொண்டனர். அதைக்கண்ட செக்யூரிட்டி ஒருவர் ஓடி வந்து சார் சீட்டை விட்டு எழுந்திருக்கக் கூடாது. இது பிரைம்மினிஸ்டர் புரொக்கிராம். பாதுகாப்பு கருதி ப்ளீஸ்… ஒத்துழையுங்கள் என்று சொல்லிவிட்டுப் போனார்.
சிறிது நேரத்தில் அரங்கிற்குள் நுழைந்த மருத்துவர் திராவிடன் முதல் வரிசையில் அமர்ந்திருந்த பண்டிதரைப் பார்த்து வணக்கம் சொன்னார். பண்டிதர் தன் கைகளை உயர்த்தி ஆசீர்வதித்தார். திராவிடனைக் கண்டதும் தமிழாசிரியர் தமிழ்ச்செல்வன் எழுந்து வந்து கட்டி அணைத்து ஆரத்தழுவிக் கொண்டார். அந்த அரவணைப்பில் திராவிடனின் கண்களில் துளிர்த்த நீர்த்துளிகள் வழிந்து தமிழாசிரியரின் சட்டையை நனைத்தது.
விழா தொடர்ந்து நடைபெற்றது. நிறைவாக ஏற்புரை வழங்க எழுந்தார் திராவிடன். அனைவருக்கும் வணக்கம் சொல்லி தன் உரையைத் தொடங்கினார்.
“எல்லோரும் இங்கே என்னைப் பாராட்டினார்கள். இந்தப் பாராட்டுகள் எனக்கு மட்டும் உரியது அல்ல. இது ஒரு கூட்டு முயற்சி. எங்கள் மருத்துவக் குழுவினரின் முயற்சியில் கிடைத்த வெற்றி. இந்தப் பாராட்டுகள் நான் உள்பட எனது குழுவினர் அனைவருக்கும் உரியதாகும். தமிழ்நாட்டின் அனைத்து மருத்துவர்களுக்கும் இந்தப் பாராட்டினைப் பகிர்ந்தளிக்க விரும்புகிறேன். உலகின் எந்த மருத்துவர்களுக்கும் நமது மருத்துவர்கள் சளைத்தவர்கள் அல்லர். அதே நேரத்தில் இன்றைக்கு மருத்துவத்துறையில் இந்தளவிற்கு நான் வளர்ந்து வந்ததற்கு முக்கிய காரணமாக இருந்தவர்கள் என்னுடைய பள்ளி ஆசிரியர்கள் இரண்டு பேர். ஒருவர் தமிழாசிரியர் தமிழ்ச்செல்வன். மற்றொருவர் சமஸ்கிருத பண்டிதர் வெங்கட்ராம அய்யர். இந்த நேரத்தில் அவர்களுக்கு நான் நன்றி சொல்லக் கடமைப் பட்டிருக்கிறேன். அவர்களை உங்களிடம் அறிமுகப்படுத்த விரும்புகிறேன். இருவரையும் மேடைக்கு வரும்படி அழைக்கிறேன்!” என்றார்.
ஆசிரியர்கள் இருவரும் மேடையில் ஏற்றப்பட்டு சால்வை அணிவித்து சிறப்பிக்கப்பட்டார்கள். நன்றியுரைக்குப் பின் தேசியகீதம் ஒலிக்கப்பட்டு விழா நிறைவுபெற்றது.
திராவிடன், விழாவிற்கு வந்த ஆசிரியர்களிடம் “முக்கிய விருந்தினர்களை வழியனுப்பிவிட்டு வந்துவிடுகிறேன். தன்னோடு இருந்து சாப்பிட்டுவிட்டுத்தான் செல்ல வேண்டும் என்று வற்புறுத்திவிட்டுச் சென்றார்.
பண்டிதரும் தமிழாசிரியரும் திராவிடன் வரும்வரை அங்கேயே காத்திருந்து தங்களின் பழைய நினைவுகளைப் பகிர்ந்து கொண்டனர். பண்டிதரின் பேச்சில் திராவிடனைப் பற்றிப் பேசும் பொழுது ஒருவித எகத்தாளம் இருந்தது. அவரது பேச்சும் முகபாவனையும் ரசிக்கும்படியாக இல்லை. பள்ளியில் திராவிடனுக்கு ஏற்பட்ட சில அவமானங்களை அவரது பேச்சு நினைவுபடுத்தியது.
திராவிடன் படிப்பில் சராசரிதான். தமிழில் முதல் மாணவன். தமிழாசிரியரின் கேள்விகளுக்கு முதலில் பதிலளிப்பவன். வழக்கத்திற்கு மாறாக அன்று தமிழ் வகுப்பில் அவன் எந்தக் கேள்விக்கும் பதிலளிக்கும் மனநிலையில் இல்லை. மிகுந்த சோர்வோடு தெரிந்தான். அவன் முகம் வாடியிருந்ததைக் கண்டுகொண்ட ஆசிரியர் பள்ளி முடிந்ததும் வீட்டில் வந்து தன்னைப் பார்க்கும்படி சொல்லிவிட்டுப் போனார்.
பள்ளிவிட்டு நேராக தமிழாசிரியர் வீட்டிற்குச் சென்றான் திராவிடன். அப்போதும் அவன் முகத்தில் தெளிவில்லை. முகத்தைக் கழுவிவிட்டு வந்து அமரச்சொன்னார் ஆசிரியர். அவன் அருகில் அமர்ந்து தோளில் கை போட்டபடி என்னடா உன் பிரச்சனை? என்றார். திராவிடன் தேம்பித் தேம்பி அழ ஆரம்பித்தான். வார்த்தைகள் வரவில்லை. அழுகையை அடக்கிகொண்டு, “சார்! டாக்டருக்குப் படிக்க சமஸ்கிருதம் தெரிஞ்சிருக்கனுமா சார்?” அதற்குமேல் அவனால் பேச முடியவில்லை. அழுகை முந்திகொண்டது. செருமிச் செருமி அழுதான்.
“எவன் சொன்னான்?’’ தமிழ்ச்செல்வன் கோபம் கொப்பளிக்கக் கேட்டார். அவருடைய முகம் சிவந்து போயிற்று.
“முட்டாள்! சமஸ்கிருதத்திற்கும் மருத்துவத்திற்கும் என்ன சம்பந்தம்? நம்ம முன்னோர்களின் பரம்பரை வைத்தியம் சித்த மருத்துவம். அதையே திருடி சமஸ்கிருதத்தில் ஆயுர்வேதம்னு பேர் வச்சுட்டான் பார்ப்பான், சமஸ்கிருதம் தெரிந்தால்தான் வைத்தியம் பார்க்க முடியும்னு கிளப்பி விட்டான். மருத்துவக் கல்லூரிகளில் சேரவே சமஸ்கிருதம் தெரிஞ்சிருக்கனும்னு சொன்னானுங்க. நாமதான் அதையெல்லாம் உடைச்சு எறிஞ்சுட்டோமே! இப்போ ஏன் சமஸ்கிருதம்? முட்டாளே! இதுக்குப்போயா அழற? மனசை படிப்பில் வை. டாக்டராகனும்னு ஆசைப்பட்டா அந்த வெறியோட படி! உன்னை ஒருத்தனாலும் அசைக்க முடியாது!’’ என்றார்.
தமிழாசிரியரின் வார்த்தைகள் திராவிடனுக்கு உற்சாகத்தையும் ஊக்கத்தையும் அளித்த அதே வேளையில் பண்டிதர் உதிர்த்த அந்த ‘உதவாக்கரை’ என்னும் சொல் அவனுள் டாக்டராக வேண்டும் என்ற ஒரு வெறியைத் தூண்டிவிட்டது.
திராவிடன் இன்று மருத்துவத்துறையில் பெரிய ஆராய்ச்சி நிபுணர்! நினைக்கும் போதே தமிழ்ச்செல்வனுக்குப் பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது.
பண்டிதர் குறுக்கிட்டார்.
“ஏன் சார்! இந்த மருந்தெல்லாம் சரியா வரும்னு நினைக்கிறீங்க?’’
தமிழ்ச்செல்வனுக்கு இப்போது வெங்கட்ராம அய்யரைப் பார்ப்பதற்கே அருவருப்பாக இருந்தது.
“நாவில் குற்றம் இருந்தாலொழிய, வேம்பு இனிக்காது! பிறவியில் மாற்றம் இருந்தாலொழிய, பார்ப்பான் தன் போக்கை ஒரு போதும் மாற்றிக் கொள்ள மாட்டான்!”
எப்போதோ கேட்ட வார்த்தைகள் தமிழ்ச்செல்வன் மனதில் மீண்டும் மீண்டும் ஒலித்தது.
பண்டிதரைப் பார்த்தபடி இவர்கள் திருந்தவே மாட்டார்களா என மனதுக்குள் நினைத்து விரக்தியாகச் சிரித்தார்.