நூல்: ‘புயல்’ பகுத்தறிவுச் சிறுகதைகள்
ஆசிரியர்:ஆறு.கலைச்செல்வன்
பதிப்பகம்: மணிவாசகர் பதிப்பகம், 31, சிங்கர் தெரு,
பாரிமுனை, சென்னை – 108. போன்: 044-25361039
பகுத்தறிவுச் சிறுகதைகள் தொகுப்பான ‘புயல்’ ஆசிரியர் ஆறு.கலைச்செல்வன் அவர்கள், அரசுப் பள்ளியில் தலைமை ஆசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். தனது இளம் வயது முதலே தந்தை பெரியார் அவர்களின் பொதுக்கூட்டங்களில் பங்கேற்று அவரது உரையால் கவரப்பட்டவர். தொடர்ந்து திராவிடர் கழகத்தின் செயல்பாடுகளால் ஈர்க்கப்பட்டவர். தனது சென்னை வாழ்க்கையின் போது பெரியார் திடலுக்கும் தனக்குமான தொடர்பினை அதிகப்படுத்திக் கொண்டு, திடல் நூலகத்தில் புத்தகங்களை வாசிப்பதே முக்கியப் பணியாகவும் கடைப்பிடித்து வந்தார். 1981இல் பண்ருட்டி ஒன்றிய பகுத்தறிவாளர் கழகத்தின் செயலாளராக சிறப்பாகப் பணியாற்றியவர்.
1978ஆம் ஆண்டு ஆசிரியர் கி.வீரமணி அவர்களை தனது ஊரான மஞ்சக்கொல்லைக்கு அழைத்து சிறப்பான ஏற்பாடுகள் செய்து பேச வைத்துள்ளார். 2017ஆம் ஆண்டு ஜனவரியில் ஜெர்மனி கொலோன் பல்கலைக்கழகத்தில் திராவிடர் கழகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட பெரியார் பன்னாட்டு மாநாட்டில் கலந்து கொண்டு ஆசிரியர் பாராட்டும் வகையில் ‘Students and self respect’ என்னும் தலைப்பில் உரை நிகழ்த்தி பாராட்டுப் பெற்றவர்.
தனது ஓய்வு வாழ்க்கையில் மக்களுக்குப் பயன்படும் வகையில் மூடநம்பிக்கைகள், சோதிடம், சாமியார், பக்தி என்னும் பெயரில் நடைபெறும் மோசடிகளை விளக்கி, மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வண்ணம் எழுதி, தொடர்ந்து ‘உண்மை’ இதழில் வெளியிடப்பட்ட சிறுகதைகள் இவை. ஒவ்வொரு சிறுகதையும் புதிய கோணத்திலும், படிப்பவர்கள் சிந்திக்கும் வகையிலும் எழுத்தின் நடையை எளிமையாகக் கையாண்டு எழுதப்பட்டுள்ளது. இன்றும் நாளிதழ்களில் நரபலி, சாமியார்கள் பெண்களை ஏமாற்றுவது போன்ற செய்திகள் தினந்தோறும் இடம் பெறுகின்ற அவல நிலையில் இதுபோன்ற பகுத்தறிவுப் படைப்புகள் காலத்தின் தேவை. இதனை இச்சிறுகதை தொகுப்பினைப் படிக்கும்போது அனைவரும் உணரலாம். எளிய கதைமாந்தர்களின் வாழ்வியலை எடுத்துக்காட்டும் ‘புயல்’ சிறுகதைகள் தொகுப்பில் உள்ள ‘பிள்ளையார் பேனா’, ‘முயற்சியே வெல்லும்’, ‘நன்கொடை’, ‘கடவுள் தொல்லை’, ‘மஞ்சள் நீராட்டு’ போன்ற கதைகள் ‘பளீச்’ வகையைச் சார்ந்த பகுத்தறிவு வெளிச்சமாய் அனைவரும் வாசிக்க வேண்டிய ஒன்றாகும்.
சீனா கேட்டதும் கண்டதும்
நூல்: சீனா கேட்டதும் கண்டதும்
ஆசிரியர்: ஆறு.கலைச்செல்வன்
பதிப்பகம்: மணிவாசகர் பதிப்பகம்.
ஆசிரியர் ஆறு.கலைச்செல்வன் அவர்கள் பன்முக ஆற்றல் கொண்டவர். கல்வியாளர், பகுத்தறிவாளர், தற்காப்புக்கலை ஆசான், சமூகநல செயல்பாட்டாளர் என பல்வேறு பணிகளுக்கு இடையேயும், அவர் பயணம் செய்த ‘சீனா’ நாட்டைப் பற்றிய பயண இலக்கியமாக இந்தப் புத்தகம் அருமையான முறையில் சீனாவின் கலாச்சாரம் மற்றும் தொழில்நுட்பப் பாங்கையும், மக்களின் குணநலன்களையும் நமக்குப் படம் பிடித்துக் காட்டும் வகையில் எழுத்து மூலம் பதிவு செய்துள்ளார்.
சீன தேசத்தைப் பற்றி நம்முடைய வியப்பை மேலும் அதிகப்படுத்தும் வகையில் ஒவ்வொரு இடத்திற்கும் பொருத்தமான தலைப்பிட்டு எழுதியுள்ளது நம்மை வாசிக்கத் தூண்டுகிறது. வாசிப்பில் அரிய செய்தியாக – ‘சீனாவில் சொந்தமாக வீடு வாங்க முடியாது’, ஆற்றுக்குக் கீழே சாலைப் பயணம், சீனப் பெருஞ்சுவரின் வரலாற்றை எளிமையாக விளக்கிய தன்மை, தியானன்மென் சதுக்கம், பெய்ஜிங்கின் புல்லட் இரயிலின் தன்மை, டிஸ்னிலேண்ட் என அவர் கண்டு வியப்புற்ற இடங்களை அப்படியே நம் கண்முன் காட்டியிருப்பது போன்ற எழுத்தின் வடிவம் நமக்கு மேலும் ஆவலைத் தூண்டக் கூடியதாக இருக்கிறது.
அனைத்து தரப்பு மக்களும் வாசிக்க வேண்டிய – சீனாவைப் பற்றி அறிந்துகொள்ள உதவும் முக்கிய நூல் இது. ஆசிரியடரிமிருந்து இன்னும் ஏராளமான பயணக் கட்டுரைகளை நாம் எதிர்பார்க்கலாம்.