ராணி அண்ணா மறைவு
கி.வீரமணி
அமெரிக்க பயணத்தின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றாக உலகத் தமிழர் இயக்கம் ஏற்பாட்டில் 20.4.1996 அன்று முத்தமிழ் விழா ஸ்கார்பர்ரோ பகுதியில் மிட்லண்ட் காலேஜ்யேட் இன்ஸ்டிடியூட் மண்டபத்தில் நடைபெற்றது. கனடா நாட்டின் டொரொன்டோ நகரில் புலம் பெயர்ந்த ஈழத் தமிழர்கள் உள்பட சுமார் 1 லட்சம் பேர் வாழ்கின்றனர். மண்டபம் முழுவதும் நிரம்பி வெளியிலும் ஏராளமானோர் நின்று கொண்டே உரையைக் கேட்கும் அளவுக்கு தமிழ் உணர்வாளர்கள் கூடியிருந்தனர். பல்வேறு போட்டிகளில் பங்கு பெற்று சிறப்பு செய்த மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினேன். திரு.சந்துரு அவர்கள் கழகப் பணிகளைப் பற்றி அறிமுக உரை நிகழ்த்தினார். அங்கு சிறப்புரை ஆற்றுகையில், “தமிழ் இன உணர்வு, மொழி உணர்வு, பண்பாட்டுப் படையெடுப்பு பற்றி, ஜாதி, பெண்ணடிமை, புது ஆண்டு பிறப்பு போன்றவை பற்றியெல்லாம் விளக்கிப் பேசினேன். இனப் படுகொலையிலிருந்து நிரந்தர விடிவு தமிழீழம்தான் ஒரே வழி என்பதை துவக்கம் முதல் நமது இயக்கம் தொடர்ந்து ஒரு நிலையில் நின்று குரல் எழுப்பத் தவறாது’’ என்பதை உறுதியோடு எடுத்துக் கூறினேன். கூடியிருந்த மக்கள் கையொலி எழுப்பி அக்கருத்தினை வரவேற்றனர்.
மே 3ஆம் தேதி விஸ்கான்சின் மாநிலத்திலுள்ள ரெசின் (Racine, Wisconsin) நகரில் தமிழகக் கல்வித் துறைக்கே புதிதான முக்கியமான ஓர் ஒப்பந்தம் கையொப்ப மிடப்பட்டது.
தொலைநோக்குக் கண்ணோட்டத்தோடு தமிழினத்திற்குப் பேருதவி புரிபவரும், தமிழ்நாடு அறக்கட்டளையின் நிருவாகக் குழு உறுப்பினரும், முன்னாள் தலைவருமான அமெரிக்கத் தொழிலதிபர் கேன்டன் டெக்னாலஜி (Ganton Technologies) தலைவர் மானமிகு துக்காராம் அவர்களின் பெரு முயற்சியாலும், தமிழகத்துப் பெண்கள் மேல்நிலை அடையவேண்டும் என்ற நம்பிக்கையாலும் புதிய ஒப்பந்தம் ஒன்று எங்கள் இருவராலும் கையொப்பமிடப்பட்டது.
அதில், வல்லம் பொறியியல் நிறுவனங்களின் மூலமாக உண்டாகும் பெரியார் தொடர் கல்வி சமுதாயக் கல்லூரியும், அமெரிக்காவில் விஸ்கான்சின் மாநிலத்தில் ரெசின் நகரில் உள்ள கேட்வே தொழிலியல் கல்லூரியும் சேர்ந்து இந்தப் பெண் பொறியியல் மாணவியர்க்கு சிறப்பான ‘Quality Control’“நன்முறைத் தொழில்’’ அமெரிக்க கேட்வே கல்லூரி துணைப் பட்டங்கள் (Associate Degree) நல்ல பயிற்சிக்குப் பின்னர் தரப்படும்.
வரும் கல்வி ஆண்டு முதல் கேட்வே _ கேன்டன் _ பெரியார் கல்லூரி பயிற்சியாளர்கள் நடத்தும் புதிய கல்வித் திட்டமும், பயிற்சியும் ஆரம்பமாகும். இதில் பயிற்சியுள்ள தொழில்துறை வல்லுநர்கள் முக்கிய பங்கேற்பார்கள்.
‘Quality Control’ “நன்முறைத் தொழில்’ மிகவும் முக்கியமான தேவையாக இன்று தொழில்துறை எங்கும் உள்ளது. இந்தத் துறையில் பயிற்சி பெறுவோருக்கு நல்ல வேலை வாய்ப்புகள் இருக்கும்.
இந்தத் திட்டத்திற்காக ஓராண்டுக்கும் மேலாகப் பாடுபட்டு ஏற்கெனவே பயிற்சித் திட்டங்கள், பாடப் படிப்புகள் பேராசிரியர்களால் ஒழுங்கு செய்யப் பட்டிருந்தது.
கேன்டன், டெக்னாலஜி தலைமை அலுவலகத்தில் கேன்டன் துணைத் தலைவர் மானமிகு சாந்தாராம் (இந்தத் திட்டத்தில் முக்கிய பணியாளராக உள்ள கேட்வே கல்லூரி நன்முறைத் தொழில் பயிற்சியாளர்) சிகாகோ டாக்டர் சோம.இளங்கோவன் ஆகியோர் உடன் இருக்க இந்த உன்னதமான ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டோம். (அரசு அனுமதி கிடைக்காததால் இதனைக் கைவிட வேண்டி நேர்ந்தது.)
அமெரிக்க கல்விப் பயணம் மற்றும் உடல்நலப் பரிசோதனைகளை முடித்துக் கொண்டு 7.5.1996 அன்று சென்னை திரும்பினேன். விமான நிலையத்தில் கழகப் பொறுப்பாளர்களும், தோழர்களும் ஏராளமானோர் கூடி வரவேற்றனர். தமிழர் தலைவர் வாழ்க! இனமானத் தலைவர் வாழ்க என்ற ஒலி முழக்கங்கள் விமான நிலையத்தை அதிரச் செய்தன. பல மாவட்டங்களிலிருந்து வந்திருந்த தோழர்கள் சால்வைகள், பழங்கள் அளித்தும், ரூபாய் மாலை அணிவித்தும் சிறப்பானதொரு அன்பினைப் பரிமாறினர்.
முதுபெரும் பெரியார் பெருந்தொண்டரும், வில்லிவாக்கம் கழக முன்னோடிகளில் ஒருவரும், பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவன நிருவாகக் குழு உறுப்பினர்களில் ஒருவருமான மானமிகு அ.தியாகராசன் அவர்கள் 7.3.1996 அன்று காலமானார் என்ற செய்தி கேட்டு அதிர்ச்சியுற்றேன். அவரது தந்தையார் திரு.அய்யாக்கண்ணு மேஸ்திரி அவர்களது காலத்திலிருந்தே தந்தை பெரியார் வழி தவிர வேறு ஏதும் அறியாத குடும்பம் ஆகும். கழகத்திற்குச் சோதனை, கழகத்தில் சிறு சலசலப்பு இவை வந்தபோதெல்லாம் கட்டுப்பாடு காத்து நின்ற பெரியாரின் இராணுவ வீரர் அவர்!
முன்பு வில்லிவாக்கத்தில் ஒரு வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த மாநாட்டினை பல கழகத் தோழர்களின் ஒத்துழைப்போடு நடத்தி, பெருத்த பொருள் நட்டத்திற்காளாகினர் என்றாலும் -_ வரலாறு படைத்தவர்களில் ஒருவர். பழைய பச்சை அட்டை ‘குடிஅரசு’ ஏட்டில் இவரது தந்தையார் அய்யாக்கண்ணு மேஸ்திரி பற்றி சிறப்பாக பல இடங்களிலும் தகவல் இடம் பெற்றிருக்கும். பல்வேறு கழகப் போராட்டங்களிலும் தவறாது குடும்பத்தோடும், தனியேயும் கலந்துகொள்ளும் கருப்பு மெழுகுவத்தி அவர்.
மறைந்த அ.தியாகராசன் அவர்கள் _ தாம் மறைவு அடைந்தவுடன் உடலை சென்னை பொது மருத்துவமனையில் ஒப்படைத்துவிட வேண்டும் என்று உயில் எழுதி, அதனை என்னிடம் ஒப்படைத்திருந்தார்; அதன்படி அவரது உடல் சென்னை பொது மருத்துவமனைக்கு ஒப்படைக்கப்பட்டது. மண்ணுக்குள் புதைந்து அழிவதைவிட, மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்குப் பயன்படட்டுமே என்கிற அவரின் “தொண்டற உள்ளம்’’ பாராட்டுக்குரியது.
அவரது மறைவு, அவர்தம் துணைவியார் நம் அன்பு அம்மா அவர்களுக்கும், பிள்ளைகளுக்கும், குடும்பத்தினருக்கும் மாத்திரம் இழப்பு அல்ல; இயக்கத்தினருக்கும் மிகப் பெரும் ஈடுசெய்ய முடியாத இழப்பு ஆகும் என மன வருத்தத்துடன் இரங்கல் செய்தி வெளியிட்டோம்.
முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் 84 வயது அடைந்த சுயமரியாதைச் சுடரொளி _ திராவிடர் கழக மத்திய நிருவாகக் குழு உறுப்பினர் பண்ருட்டி நா.நடேசனார் 13.3.1996 அன்று மறைவுற்றார் என்கிற செய்தியை அறிந்து பெரிதும் வருந்தினோம். அவர் மறைவு குறித்து விடுத்த அறிக்கையில்,
“பண்ருட்டி மானமிகு நா.நடேசன் அவர்கள் ஓர் ஒப்புவமையற்ற இலட்சியத் தொண்டர். எந்த நிலையிலும், கொள்கையில் வைரம்; கட்டுப்பாட்டில் எஃகு மனிதர். 1976 ஜனவரி 31 இரவு ‘மிசா’வில் நாங்கள் கைது செய்யப்பட்டபோது அவரும் கைது செய்யப்பட்டார். அவர் அப்போது தென்னார்க்காடு மாவட்ட திராவிடர் கழகத் தலைவர். பிப்ரவரி 2ஆம் தேதி இரவு சென்னை மத்திய சிறைச்சாலையில் நாங்கள் தாக்கப்பட்டபோது முதலாவது திறக்கப்பட்ட 9ஆம் நம்பர் பிளாக்கில் அவர் இருந்த அறை; முதல் அடி அவர்மீது. அதுபற்றிக் கவலைப்படாமல், மற்றவர்களைக் காப்பாற்றி, ஆறுதல் கூறிய கருஞ்சிறுத்தை அவர்! அதற்கு முன்பு பலமுறை பல போராட்டங்களில் கழகம் ஒன்றாக இருந்த காலம் முதற்கொண்டு ஈடுபட்டு சிறை சென்றவர். காமராசர்போல் எந்தப் பிரச்சினையையும் மேடைகளில் பொது அறிவுடன் நறுக்குத் தெறித்தாற்போல் விளக்கும் பெரியார் பெருந்தொண்டர். புத்தாண்டு வாழ்த்துக்கு பதில் எழுதியிருந்தார். அவர் தனது முடிவை எதிர்நோக்கியிருந்த துணிச்சல்காரர்!
அவரது மறைவில் _ நேரில் இறுதி மரியாதை செலுத்த இயலாத மனக்குறை எனக்குள்ளது.
இயக்கம் ஓர் அரிய இலட்சியத் தளகர்த்தரை இழந்தது; அவரது குடும்பம் ஒரு சீரிய கழகக் குடும்பம். அவரது துணைவியார், செல்வங்கள், கழகத் தோழர்கள் அனைவருக்கும் ஆறுதல் கூறுகிறோம். அந்தக் கடமை வீரருக்கு நமது வீர வணக்கம் எனக் குறிப்பிட்டிருந்தோம்.
முதுபெரும் பெரியார் பெருந்தொண்டரும், வடசென்னை மாவட்ட திராவிடர் கழகத் தலைவரும், அனைத்துக் கட்சி நண்பர்களாலும் மதிக்கப்பட்டவருமான புதுவண்ணை தோழர் க.பலராமன் அவர்கள் 2.4.1996 அன்று மறைந்தார் என்கிற செய்தி அறிந்து மிகவும் வேதனையும், துன்பமும், துயரமும் அடைந்தோம். கடந்த சில ஆண்டுகளாகவே அவர் உடல் நலம் குன்றி இருந்த நிலையிலும், கழகப் பணிகளை ஆற்றும் கடமையில் சிறிதும் குறையாமல் செயல்பட்ட கொள்கை வீரர் அவர்!
அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்களே பாராட்டி மகிழ்ந்தனர். அவ்வளவு நெஞ்சுரம் மிக்கவர்! அனைத்துக் கிளர்ச்சிகள், போராட்டங்களில் தவறாது கலந்துகொண்டு, ஓர் இராணுவ தளகர்த்தரைப்போல் எப்போதும், எந்த நிலையிலும் நடந்துகொண்ட இலட்சியத் தொண்டர் அவர். கட்டுப்பாட்டிற்கு மறு பெயர் சொல்ல வேண்டுமானால் ‘பலராமன்’ என்று கூறிடலாம். அவ்வளவு சிறப்பான எடுத்துக் காட்டாக இளைஞர்களுக்கு முன்னோடியாகத் திகழ்ந்தவர். ‘தலைமை சிந்திக்கட்டும்; நாம் செயல்படுவோம்’ என்ற இராணுவக் கட்டுப் பாட்டினைவிட மேம்பட்டது நம் இயக்கக் கட்டுப்பாடு என்பதையே எங்கும் கூறி நடந்து காட்டியவர். அவரது இழப்பு, இயக்கத்திற்கும், அவரது குடும்பத்திற்கும் ஈடு செய்ய இயலாத இழப்பு! அவரை இழந்து தவிக்கும் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி, வீரவணக்கம் செலுத்துகிறோம் என அமெரிக்காவிலிருந்து இரங்கல் செய்தி வெளியிட்டோம்.
நமது ‘விடுதலை’ ஏட்டில் செய்தியாளராகப் பணிபுரிந்து வரும் தோழர் வே.சிறீதர் அவர்களின் திருமணம் 21.4.1996 அன்று நடைபெற்றது. வந்தவாசி எம்.எஸ்.வேணு கோபால் _ வே.சுசீலா ஆகியோரின் செல்வன் ‘விடுதலை’ செய்தியாளர் வே.சிறீதர், சென்னை டி.கிருட்டினன் _ ஜி.கஸ்தூரி ஆகியோரின் செல்வி கி.பிரியா ஆகியோரின் வாழ்க்கை ஒப்பந்த விழா 21.4.1996 அன்று சென்னை மயிலாப்பூர் இராஜலட்சுமி திருமண மண்டபத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. மணவிழா வரவேற்பு நிகழ்ச்சியிலும், மண விழாவிலும் ஏராளமான முக்கியப் பிரமுகர்கள் கலந்துகொண்டு வாழ்த்து தெரிவித்தனர். பெரியார் திடலில் அமைந்துள்ள பல்வேறு அமைப்புகளில் பணிபுரியும் ஊழியர்கள், கழகப் பொறுப்பாளர்கள் பெருமளவில் வந்து கலந்துகொண்டனர்.
வெளிநாட்டுப் பயணத்திலிருந்து திரும்பியவுடன் மணமக்கள் வே.சிறீதர் _ கி.பிரியா ஆகியோர் பெரியார் திடலுக்கு வந்து வாழ்த்துப் பெற்றனர்.
திருமதி ராணி அண்ணா மறைவுற்றார் என்கிற செய்தியை 6.5.1996 அன்று கேட்டு சொல்லொணாத் துயரத்துக்கும், அதிர்ச்சிக்கும் ஆளானேன். அண்ணி என்று கழகத் தோழர்களால் அன்புடன் நேசிக்கப்பட்டவர். முன்னணியில் உள்ள திராவிட இயக்கத் தலைவர்கள் எல்லாம் அவரது உபசரிப்புக்கும், பாசத்துக்கும் பாத்திரமானவர்கள்தாம். அண்ணாவின் பொதுவாழ்வுக்கு மிகவும் உறுதுணையாக இருந்தவர். தந்தை பெரியார் அவர்கள் கொள்கைகளில் நம்பிக்கை உள்ளவர். என்மீது மாறாப் பாசம் கொண்டவர். அவர்களின் மறைவு திராவிட இயக்கத்துக்கு பெரும் இழப்பாகும்.
அவர்களின் பிரிவால் பெருந்துயரத்துக்கு ஆளாகி இருக்கும் அன்புச் சகோதரர் டாக்டர் C.N.A.பரிமளம் அவர்களுக்கும், அவர்களின் உடன்பிறப்புகளுக்கும், குடும்பத்தாருக்கும், தோழர்களுக்கும் கழகத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கின்றோம் என அமெரிக்கப் பயணத்திலிருந்தபோது இரங்கல் அறிக்கை வெளியிட்டோம்.
தமிழ்நாட்டில் மிகப் பெரியதோர் வெற்றி பெற்றுள்ள தி.மு.க., தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிகளுக்கு 9.5.1996 அன்று வாழ்த்துத் தெரிவித்து அறிக்கை வெளியிட்டோம். அதில்,
“இந்தப் பொதுத் தேர்தல் முடிவுகள் தி.மு.க., தமிழ் மாநில காங்கிரஸ் கூட்டணிக்கு மிகப் பெரியதோர் வெற்றியை அளித்துள்ளதை உணர முடிகிறது. 1991இல் நடந்ததை அப்படியே தலைகீழாக்கி, தமிழக வாக்காளர்கள் 1996இல் இத்தகைய முடிவுகளைத் தந்துள்ளனர். தந்தை பெரியார் அவர்கள் முன்பு ஒருமுறை குறிப்பிட்டதைப் போல, “தோசையை அப்படியே திருப்பிப் போட்டுக் காட்டியுள்ளனர்!’’
வெற்றி வாகை சூடியுள்ள தமிழினத் தலைவர் கலைஞர், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் மதிப்பிற்குரிய ஜி.கே.மூப்பனார் மற்றும் அவர்களது கூட்டணிக் கட்சித் தலைவர்கள் ஆகிய அனைவருக்கும் திராவிடர் கழகத்தின் சார்பில் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்ளுகிறோம்.
தமிழ்நாடும், தமிழினமும் பல சோதனைகளைச் சந்திக்கும் இந்தக் காலகட்டத்தில் கலைஞர் தலைமையில் அமையும் தி.மு.க. அரசிடமிருந்து தமிழ்நாட்டு மக்கள் முதல் உலகத் தமிழர்கள் வரை மிகுந்த எதிர்பார்ப்புடன் உள்ளனர். அதை நிச்சயம் நிறைவேற்றும் ஆற்றல் அவரது அரசுக்கு இருக்கும்; இருக்க வேண்டும்’’ என வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டோம்.
சுயமரியாதை வீரர் தோழர் சிவ.இளங்கோ அவர்கள் 12.5.1996 அன்று திடீர் மறைவுற்றார் என்கிற செய்தி அதிர்ச்சி தரக்கூடியதாய் இருந்தது.
மாணவப் பருவம் முதல் அவர் பொதுவாழ்வை திராவிடர் கழகத்திலிருந்து துவக்கிய சுயமரியாதைக் குடும்பத்தைச் சார்ந்த ஒரு பெருமகன். அரசு ஊழியர்கள் சங்கத்தில் (என்.ஜி.ஓ.) கால் நூற்றாண்டுக்குமேல் பொறுப்பில் இருந்து, சோதனைகள் வேதனைகள்பற்றி கவலைப்படாமல் சாதனைகள் செய்த மாவீரர் அவர்! அவரது மறைவின்மூலம் நல்ல பகுத்தறிவாளரை, சமூக நீதியாளரை, பொதுநலத் தொண்டரை நாடு இழந்துள்ளது. திராவிடர் கழகத்தின் சார்பில் நமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்ளுகிறோம் என வருத்தத்தோடு செய்தி வெளியிட்டோம்.
தமிழகத்தில் 1996ஆம் ஆண்டு பொதுத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில் நாடாளுமன்றத்தைப் பொறுத்த வரை, எதிர்பார்த்தபடியே, எந்த ஒரு கட்சிக்கும் தனித்து ஆட்சி அமைக்கும் அளவுக்கு அறுதி பெரும்பான்மை கிட்டவில்லை. அப்போது 16.5.1996 அன்று ‘விடுதலை’யில் முக்கிய அறிக்கை ஒன்றை வெளியிட்டோம்.
அதில், “மெஜாரிட்டி இல்லாத பா.ஜ.க.வை குடியரசுத் தலைவர் ஆட்சி அமைக்க அழைத்தது கட்சித் தாவலுக்கே வழிவகுக்கும். குடியரசுத் தலைவர் திரு.சங்கர் தயாள் சர்மா, அதிக இடங்களைப் பெற்ற தனி ஒரு கட்சி என்று காரணம் காட்டி பா-.-ஜ.க.வை அழைத்து அமைச்சரவையை அமைக்கும்படி கேட்பது, மரபை ஒட்டியது என்று கூறுகிறார்கள்; அரசியல் சட்டத்தில் எந்த இடத்திலும் தனித்த பெரும் கட்சியைத்தான் அழைக்க வேண்டும்; கூட்டணியை அல்ல என்ற கூறப்படவே இல்லை. அரசியல் சட்டப்படி ஆட்சி அமைக்க யாரை அழைப்பது என்பது குடியரசுத் தலைவரின் விருப்பச் சாரத்தையே (Discretionary Power) சார்ந்தது.
அரசியல் சட்டப் பிரிவுகள் ஏதும் சொல்லாத நிலையில், முன்மாதிரி (Precedent); சம்பிரதாயங்கள் (Convention) என்ற சாக்குகளில் பதுங்கி, இப்படி தேவகவுடா தலைமையில் உள்ள மூன்றாவது அணியினரை அழைக்காமல் அதைவிட குறைந்த எண்ணிக்கையிலுள்ள பா.ஜ.க.வின் தலைவர் வாஜ்பேயியை அழைப்பது, வருங்காலத்தில் கட்சித் தாவலுக்கே வழிவகுக்கும்’’ என குறிப்பிட்டிருந்தோம்.
தென் மாவட்டங்களில் கடந்த சில மாதங்களாகவே ஜாதிக் கலவரங்கள் எரிமலையாய் வெடித்துக் கிளம்புவதும், ஆங்காங்கு திடீர் திடீர் எனறு கைக்குண்டுகள், நாட்டு வெடிகுண்டுகளை வீசுவது, ஆட்களைக் கொல்லுவது போன்ற நிகழ்ச்சிகள் நடைபெறுவது தமிழ்நாடு வேதனையான வெட்கித் தலைகுனிய வேண்டிய நிகழ்வாகும். அதனைத் தடுக்கும் வகையில் முதலமைச்சர் செய்கின்ற முயற்சிகளும் வரவேற்கத்தக்கது. இதனை மய்யப்படுத்தி 17.5.1996 ‘விடுதலை’யில் அரசுக்கு சில யோசனைகளை வெளியிட்டோம். அதில், ஜாதிக் கலவரம் எங்கும் ஏற்படாத வண்ணம் ஒரு புதிய நெறிமுறையை (நிuவீபீமீறீவீஸீமீs) உருவாக்கி வைத்தல் அவசர அவசியமாகும். ஜாதிக் கலவரம் ஏற்படாது, அனைத்து சமூகங்களும் ஒற்றுமையாய் உள்ள கிராமங்களுக்கு ஆண்டுதோறும் அய்யா, அண்ணா பெயரில் பரிசுகள் அளிக்க முன்வர வேண்டும் என்பன போன்ற பத்து யோசனைகளைக் கூறினோம்.
அ.தி.மு.க. நிறுவனர் திரு.எம்.ஜி.ஆர். அவர்களது துணைவியார் திருமதி ஜானகி எம்.ஜி.ஆர் அவர்கள் 19.5.1996 அன்று சென்னையில் காலமானார் என்கிற செய்தியை வானொலி மூலம் கேட்டு மிகுந்த அதிர்ச்சியும் துயரமும் அடைந்தேன்.
கலைத்துறையில் பணிபுரிந்த எம்.ஜி.ஆர். அவர்களோடு இணைந்து அதுமுதல் அவரது தனிவாழ்வு, பொதுவாழ்வு இரண்டிற்கும் பெரிதும் துணையாக இருந்தவர் அவர்.
தனது கட்சித் தோழர்களிடம் மட்டுமல்லாது, அனைத்துக் கட்சியினருடனும், மனித நேயத்துடன் பழகிய பான்மையுடையவர்.
பெரியார் மணியம்மை பெண்கள் பொறியியல் கல்லூரி என்ற தஞ்சை வல்லம் கல்லூரி உலகின் முதல் பெண்கள் பொறியியல் கல்லூரியாக துவக்கப்படுவதற்கு அவர் முதல்வராக இருந்தபோதுதான் அனுமதி வழங்கினார் என்பதை இந்த நேரத்தில் நன்றி உணர்வோடு நினைவு கூர்கிறோம்.
அவரது பிரிவால் வாடும் அவரது குடும்பத்தினர், நண்பர்கள் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிப்பதுடன், திராவிடர் கழகம் அவர்களது துயரத்திலும் பங்கு கொள்கிறது என இரங்கல் செய்தி வெளியிட்டோம்.
முதுபெரும் பெரியார் பெருந்தொண்டரும், எப்போதும் கழகத் தோழர்களிடையே ‘நாகூர் நாத்திகன்’ என்றே அறிமுகமாகி அப்படி தன்னை மற்றவர்கள் அழைப்பதில் பெருமை கொண்டு தானும் நாத்திகன் சின்னதம்பி என்றே சொல்லக் கூடியவருமான மானமிகு சின்னத்தம்பி அவர்கள் 24.5.1996 அன்று மறைவுற்றார் என்கிற செய்தி நம்மை பேரிடி போன்று தாக்கிய துன்பச் செய்தியாகும்.
அவர் சில நாள்களுக்கு முன் திருச்சியிலிருந்து சென்னைக்குப் பயணம் செய்துவந்த நிலையில், உடல்நலம் குன்றி, மருத்துவ சிகிச்சை பெறும் நிலையில் பெரியார் திடலில் உள்ள அவரது மகள் _ மருமகன் (திருமதி வெற்றிச்செல்வி _ கலி.பூங்குன்றன்) ஆகியோரது இல்லத்தில் தங்கியுள்ளதை அறிந்து, 23.5.1996 அன்று மாலைதான் நானும், கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர் மானமிகு கோ.சாமிதுரை அவர்களும், ‘விடுதலை’ பணிமனை பொறுப்பு நிருவாகிகளும் சென்று, கண்டு உரையாடி உடல்நலம் விசாரித்தோம். மருத்துவரிடம் உங்களை அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்கிறேன் என்றெல்லாம் கூறிவிட்டுத்தான் விடைபெற்றேன்.
80 வயதினைத் தாண்டிய அவர் சுமார் 60 ஆண்டுக்கால இயக்க வரலாறுகளை, நடப்புகளை அப்படியே நினைவுகூர்ந்து சொல்லும் ஆற்றலாளர். கழகம் நடத்தும் எல்லா போராட்டங்களிலும் அவரும், அவரது துணைவியார் திருமதி ருக்மணி சின்னதம்பி அவர்களும் தொடர்ந்து ஈடுபடக்கூடியவர்கள்.
பழைய தஞ்சை மாவட்டம், நாகை வட்டம், மஞ்சக்கொல்லை கிராமம் அவர் சொந்த ஊராகும். மறைந்த திருவாரூர் வி.எஸ்.பி. யாகூப் அவர்கள் தஞ்சை மாவட்ட அமைப்பாளராக இருந்தபோது எங்களை 1945இல் அம்மாவட்ட திராவிட மாணவர் சுற்றுப் பயணத்திற்கு அழைத்துச் சென்றபோது தான் மஞ்சக்கொல்லையில் முதன்முதலாக அவரைச் சந்திக்கும் வாய்ப்பைப் பெற்றேன். அதுமுதல் இறுதிவரை அவர் மாறாத நட்பும், அன்பும் காட்டிய கழக கருஞ்சட்டை கடமை வீரர்!
அய்யா, அம்மா ஆகியவர்களது அன்பிற்கும், பாசத்திற்கும் ஆளானவர். உள்ளூரிலும், மாவட்டத்திலும் அனைத்துக் கட்சியினராலும் மதித்துப் போற்றப்பட்டவர்.
ஒளி தந்த அந்த கருப்பு மெழுகுவத்தி அதன் வாழ்வை இறுதியாக்கிக் கொண்டது; அது உண்டாக்கிய ஒளி நிரந்தரமானது _ என்றும் நீடிக்கக் கூடியது!
அவருடைய மூத்த மருமகன் அன்றைய நமது தலைமை நிலையச் செயலாளர், இன்றைய நமது கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் மற்றும் அவர்தம் மகள்கள் வெற்றிச்செல்வி, அழகுமணி, கவுதமி, வளர்மதி; மகன்கள்: சித்தார்த்தன், பெரியார் செல்வன், காமராஜ் _ ஏனைய குடும்பத்தாருக்கும் நமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கும் நேரத்தில், குலுங்கிக் குலுங்கிச் சிரிக்கும் அவரது பான்மையும், காட்டிய கொள்கை உறுதியும் என்றும் நம் நெஞ்சை விட்டு அகலாது என்று கூறி, அவருக்கு நமது வீர வணக்கத்தைச் செலுத்துகிறோம். வருத்தத்தைப் பகிர்ந்து கொள்கிறோம் என இரங்கல் அறிக்கையில் குறிப்பிட்டோம்.
(நினைவுகள் நீளும்…)