பித்தப்பை கற்கள்
(GALL BLADDER STONE)
பித்தப்பை கல்லீரலின் கீழே அமைந்துள்ள, ஒரு சிறிய பையாகும். கல்லீரலில் உற்பத்தியாகும் பித்த நீரை எடுத்துச் செல்லும், பித்த நீர்க்குழாயுடன் இணைந்துள்ளது. கொழுப்புச் சத்துகளை சம அளவில் சீராக வைப்பதற்குத் தேவையானது பித்த நீர். அதை சேமித்து வைத்து, தேவையான நேரத்தில் குடலுக்குள் செலுத்தி, செரிமானத்திற்கு உதவுகிறது. இயல்பாக உணவு உண்டதும் பித்தப்பை சுருங்கும். லேசான நீல நிறத்தில் இருக்கும் பித்தப்பையானது, வளர்ந்தவர்களுக்கு 7 முதல் 10 செ.மீ. நீளமும், 4 சென்டி மீட்டர் அகலமும் கொண்டதாக இருக்கும். முழுமையாக நிரம்பியிருக்கும் நிலையில் இதன் கொள்ளளவு 50 மி.லி. ஆகும். ஒரு சிறிய பேரிக்காய் வடிவில் உள்ள பித்தப்பை, மேற்பகுதி, உடல், கழுத்து என்று மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
பித்தப்பையின் முதன்மையான செயல்பாடு, பித்த நீரைச் சேமித்தல் ஆகும். நாம் உண்ணும் உணவில் உள்ள கொழுப்புகளைச் செரிப்பதில் பித்தநீர் பெரும் பங்கு வகிக்கிறது. கல்லீரலில் சுரக்கும் பித்த நீர், பித்த நீர்க் குழாய் வழியே சென்று, பித்த நீர்ப் பையில் சேமித்து வைக்கப்படுகிறது. கொழுப்பைக் கொண்ட உணவு, முன் சிறு குடலை அடையும்பொழுது, சிறுகுடலில் உள்ள சுரப்பிகள், “கோலிசிஸ்டோகைன்” என்னும் சுரப்பை குடலில் செலுத்தும். இதன் விளைவாக பித்தப்பை சுருங்கி, பித்த நீர்க் குழாய் வழியே பித்த நீர் வெளியேறி, முன் சிறுகுடலை(Duodenum) அடையும். அங்கேயே கொழுப்புச் சத்தை பகுதியாக சிறு குடல் சுவர்கள் உறிஞ்சுவதற்கு பித்தப் பையே காரணமாகிறது. பின் (இரத்த நிறமி புரதம் (Haemoglobin) சிதைவு கல்லீரலில் ஏற்பட்டு, அதன் பின் விளைவாக உண்டாகும் “பிலிருபின்’’ நிறமியும் சிறுகுடலில் வெளியேற்றப்படும். கல்லீரலில் பித்தநீர் சுரக்கும்பொழுது உள்ள நிலையிலிருந்து, பித்தப் பையில் இருந்து வெளிப்படும் பித்த நீர் மாறுபாடு உடையது. கல்லீரல் பித்த நீரில் உள்ள பெரும்பகுதி நீர் மீண்டும் உறிஞ்சப்படும். பித்தப்பையின் மேல் தோலில் உள்ள கலங்களிலிருந்து சோடியம் அயனிகள் வெளிப்படும். இது நீர் மற்றும் குளோரைடுகளை குடல்வால் செல்கள் மீளுறிஞ்ச உதவுகிறது.
பித்தப்பை கற்கள்: (Gallstones – Choletithiasis)
பித்தப்பையில் உள்ள பித்த நீர் நீர்மமாகத்தான் இருக்கும். ஆனால், சிறு சிறு திடப் பொருள்களாக இந்நீர்மங்கள் மாறி கற்கள் போன்று கடினப்பட்டு விடுகின்றன. அதையே “பித்தப்பை கற்கள்’’ என்கிறோம். பித்த நீர், கல்லீரலில் உற்பத்தியாக, பித்த நீர்க் குழாய் வழியே சிறுகுடலை அடைகிறது. உணவு செரிமானத்திற்கு இதன் பங்களிப்பை நாம் அறிவோம். இரத்தச் சிவப்பணுக்கள் சிதைவினால் ஏற்படும் கழிவான “பிலிருபின்’’ என்னும் பொருளையும், கொழுப்புச் சத்து போன்றவற்றையும் குடலுக்குக் கொண்டு செல்லும் வேலையும் இதன்மூலமே நடைபெறுகிறது. பித்த நீர் சரியாகச் செலுத்தப்படாமல், பித்தப் பையில் தேங்கும் நிலை ஏற்பட்டால், நாளடைவில் அவை கற்களாக மாறும் நிலை உண்டாகும். இதையே “பித்தக் கற்கள்’’ (Gall Stones) என்கிறோம். இவை ஒரு சிறிய தானியம் அளவு முதல், மணல் போன்றும் இருக்கலாம். அல்லது சிறிது, சிறியதாக உள்ளவை அனைத்தும் ஒருங்கிணைந்து ஒரு சிறிய பந்து அளவுக்கும் மாறிவிடலாம்.
பித்தக் கற்களின் வகைகள்: பொதுவாக இருவகைப்படும்.
1. கொழுப்புக் கற்கள் (Cholesterol Stones): இவை கொழுப்புப் படிவங்கள் செரிமானக் குறைபாட்டால் ஏற்படுபவை. மஞ்சள், பச்சை கலந்த வண்ணத்தில் இருக்கும். இவையே பெரும்பாலும் பித்தப்பையில் உண்டாகும் கற்கள். 80 விழுக்காடு பித்தக் கற்கள், கொழுப்புக் கற்கள்தான்.
2. “பிலிருபின்’’ (நிறமிக்) கற்கள் (Bilirubin Stones): இரத்தத்தின் சிவப்பணுக்கள் சிதைவினால், உடையும் நிறமிகள் பித்த நீர் மூலம் குடலில் சென்று, வெளியேற்றப்படும். ‘பிலிருபின்’ என்றழைக்கப்படும் இவையும், சிலருக்குப் பித்தக் கற்களை ஏற்படுத்தும் தன்மையுடையவை. ஆனால், பித்தக் கற்கள் பெரும்பாலும் கொழுப்புக் கற்களாகத்தான் உருவானவையாக இருக்கும். பிலிருபின் கட்டிகள் மிகவும் குறைந்த அளவே, ஒரு சிறு நோயாளிகளுக்கே உண்டாகும். அவை ஏற்படும் காரணிகளைப் பார்ப்போம்.
கொழுப்புக் கற்கள்: நாம் உண்ணும் உணவு செரிப்பதற்கு பித்த நீர் இன்றியமையாதது. இயல்பான நிலையில் பித்த நீர் கொழுப்புத் திவலைகளைக் கரைக்கும் தன்மையுடையவை. அந்த நிலை ஏற்படாது போனால், அதிகப்படி தேங்கும் கொழுப்புத் திவலைகள் கொழுப்புக் கற்களாகக் கெட்டிப் பட்டுவிடும்.
பிலிருபின் கற்கள்: கல்லீரலில் ஏற்படும் நோய்களே இந்த வகைக் கற்கள் ஏற்படக் காரணம். கல்லீரல் நோய்த்தொற்று, இரத்தக் குறைபாடு நோய்கள் (Blood disorders),கல்லீரல் அழற்சி (Hepatitis) ஆகியவை தேவைக்கு அதிகமாக பித்த நீரைச் சுரக்கச் செய்யும். அவை முழுமையாக வெளியேறாமல், பித்த நீரின் அடர்த்தியை அதிகமாக்கும். அடர்த்தி அதிகமாகி, தேங்குகின்ற பித்த நீர், பித்தக் கற்களாகிவிடும்.
நோய் கூற்றியல்(Pathogenesis) : மருத்துவர்கள், எப்படி, எந்த நிலையில் “பித்தக் கற்கள்’’, பித்த நீரிலிருந்து உற்பத்தியாகிறது என்று கூற முடியாமல் இருந்தாலும் மேற்கண்ட நிலைகளால்தான் அவை ஏற்படுகின்றன என்கின்றனர்.
பொதுவாக இவை ஏற்படும் வாய்ப்புகள்:
¨ குடும்பத்தில் ஏற்கெனவே பாதிப்பு இருந்தால்
¨ பெண்கள் அதிகளவு பாதிப்படைவர்
¨ 40 வயதைக் கடந்தவர்கள்
¨ உடல் பருமன் அதிகம் உள்ளவர்கள்
¨ கொழுப்புச் சத்துள்ள உணவை அதிகம் உண்பவர்கள்
¨ அதிக உடற்பயிற்சிகளை மேற்கொள்ளாதவர்கள்
¨ ஊக்க நீர் (Hormones) மருந்துகளை எடுத்துக் கொள்பவர்கள்
¨ குடும்பக் கட்டுப்பாட்டு மாத்திரைகள் பயன்படுத்துபவர்கள்
¨ கருவுற்ற பெண்கள்
¨ நீரிழிவு நோயுள்ளவர்கள்
¨ குடல்நோயால் பாதிக்கப்பட்டவர்கள்
¨ இரத்த சோகை
¨ கொழுப்பைக் குறைக்கும் மருந்துகள் பயன்படுத்துபவர்கள்
¨ குறுகிய காலத்தில் ஏற்படும் எடை குறைவு
¨ பட்டினி, விரதம் இருப்பவர்கள்
நோயின் அறிகுறிகள்:
¨ மேல் வயிற்றில் வலி
¨ வலது தோள் பட்டையில் வலி
¨ முதுகில் வலி
¨ வயிற்றுக் கோளாறுகள்
¨ குமட்டல்
¨ வாந்தி
¨ செரிமானக் குறைபாடு
¨ நெஞ்செரிச்சல்
¨ வாயுத் தொல்லை
¨ தொடர்ச்சியான வயிற்று வலி (மருந்துகளால் குறையாமை)
¨ காய்ச்சல்
¨ கை, கால்கள் சில்லிட்டுப் போதல்
¨ தோல், கண் விழி வெண்படலம், நகக் கண்கள்
மஞ்சளாகிவிடல்
¨ ஆழ்ந்த மஞ்சள் சிறுநீர் போதல்
¨ வண்ணம் குறைந்த மலம் போதல்
நோயறிதல்:
இரத்தப் பரிசோதனை: நோய் தொற்றினால் பித்தப்பை பாதிக்கப்பட்டிருந்தால், முழு இரத்தப் பரிசோதனை செய்யலாம். இயல்பு நிலையை விட இரத்தத்தில் மாறுபட்டு உயர்ந்திருக்கும்.
கல்லீரல் செயல்பாடு சோதனை: (Liver Function test – LFT) கல்லீரல் நொதியங்கள் (Enzymes) அளவீடு, மஞ்சள் காமாலை சோதனைகள் போன்றவை, பித்தநீர் சேர்தலை வெளிப்படுத்த உதவும். பித்தக் கற்கள் பற்றி முழுமையாகத் தெரிய வாய்ப்பில்லை.
மீள்ஒலி ஆய்வு(Ultra Sound) : பித்தக் கற்களைக் கண்டுபிடிக்க ஒரு சிறந்த சோதனை இது. ஒலி அலைகளை, கல்லீரலில் செலுத்தி, அது உண்டாக்கும் எதிரொலிகளை வைத்து நோயறியும் சோதனை இது. இன்றைய நிலையில் இது ஒரு சிறந்த சோதனை ஆகும். எளிதாக, உடலினுள் எந்த ஊடுருவலும் இல்லாமல், வெளியில் இருந்தே செய்யப்படும் சோதனை இது. இச் சோதனை மூலம் பித்தக் கற்கள் அளவு, எண்ணிக்கை போன்றவற்றை எளிதில் அறியலாம். மிகவும் நம்பிக்கையான சோதனை இது. பித்தக் கற்களின் தன்மையை அறியும் நிலையோடு நில்லாமல், பித்தப் பையில் உள்ள வீக்கம், பித்தப்பைச் சுவரின் வீக்கம், நோய்த் தொற்றால் ஏற்படும் அழற்சி மாற்றங்களையும் எளிதில் இச் சோதனை மூலம் கண்டறியலாம்.
ஊடுகதிர் நிழற் படங்கள்: இவையும், பித்தக் கற்களைக் கண்டறிய உதவும். துல்லியமாக அறிய முடியாவிட்டாலும், கற்களின் இருப்பை அறிய முடியும்.
கணினி வரைவி: (Computed Tomography) (CT): கணினி வரைவி மூலம், கற்களை எளிதாக அறியலாம். பித்தக் கற்களை அறிவதோடு நில்லாமல், கல்லீரல் தன்மை, பித்தநீர்க் குழாய் மாற்றங்கள், பித்த நீர்ப்பை மாற்றங்களையும் இச்சோதனை மூலம் எளிதில் அறியலாம்.
காந்த அதிர்வலை வரைவி: (Magnetic Resonance Imaging – MRI) இச்சோதனை மூலம், கல்லீரல் மட்டுமின்றி, பித்தப்பை, கற்கள் மற்றும் பிற நோய்களையும் எளிதில் கண்டறிய முடியும்.
உடற்குழாய் உள்நோக்கி:(Endoscopy) : வாய் வழியே ஒரு குழாய் செலுத்தப்பட்டு, வயிறு வழியே சிறுகுடல் வரை இக்குழாய் செல்லும் அங்கு ஒரு நிறமி (Dye) செலுத்தப்படும். அது, ஊடுகதிர் படங்கள் மூலம் அல்லது கணினி மூலம் நேராகப் பார்க்கலாம். பித்தக் கற்களை எளிதாகவும், துல்லியமாகவும் அறியும் வாய்ப்பு மேற்கண்ட சோதனைகள் மூலம் ஏற்பட்டுள்ளது.
மருத்துவம்: மிகச் சிறிய (மணல் போன்ற) கற்கள் எந்த அறிகுறிகளையும் உண்டாக்காது. அறிகுறிகள் இல்லாமல் இருக்கும் சிறிய கற்கள் தானாகவே வெளியேறிவிடும்.
பித்தநீர்ப்பை நீக்கம்(Cholecystectomy): அறிகுறிகளோடு, அளவில் பெரிதாக இருக்கும் கற்கள் கொண்ட பித்தப்பை முழுமையாக அகற்றப்படும். பித்தப்பை எடுப்பதால் செரிமானத்தில் எந்தவித பாதிப்பும் ஏற்படாது. அறுவை மருத்துவம் ஒன்றுதான் சிறந்த ஆபத்தில்லாத மருத்துவம். பித்தப்பை நீக்கம் (Cholecystectomy)முன்பெல்லாம் வயிற்றைத் திறந்து செய்வார்கள். இப்பொழுதும் சில நோயாளிகளுக்கு இதே வகையில் மருத்துவம் செய்யும் நிலையும் ஏற்படும்.
நுண்துளை அறுவை மருத்துவம்(Laproscopic Surgery) : வயிற்றில் சிறு துளையிட்டு, அதன் வழியே குழாய்களைச் செருகி, பித்தப்பை அகற்றப்படும். இது ஓர் எளிமையான அறுவை மருத்துவம். தற்போது அதிக அளவில் செய்யப்படும் மருத்துவமும் இதுதான். இம் மருத்துவம் செய்து கொள்பவர்கள் மருத்துவமனையில் தங்கும் காலமும் குறைவு. நோய்த் தொற்று போன்ற தொல்லைகள் ஏற்படும் வாய்ப்புகளும் குறைவு. ஒரு எளிமையான சிறந்த மருத்துவ முறை இதுவாகும்.
பின் விளைவுகள்: மருத்துவம் செய்து கொண்டால் எளிதாக, முழுமையான உடல் நிலை சீராகும். மருத்துவம் சரியான முறையில் செய்து கொள்ளாவிடில் “பித்தப்பை அழற்சி” (Acute Cholecystitis) ஏற்படும். அதனால் வயிற்று வலி, காய்ச்சல் போன்றவை ஏற்படும். சில நேரங்களில் வீக்கம் அதிகமாகி பித்தப்பை கிழிந்து விடும். அதன் காரணமாக வயிற்றில் நோய்த் தொற்று ஏற்பட்டு, உயிருக்கே சில நேரம் ஆபத்து உண்டாகக் கூடும்.
பித்த நீர்க் குழாயில் சில நேரங்களில், கற்கள் அடைக்கும் நிலை ஏற்பட்டால் பித்தப்பை அழற்சியை உண்டாக்கும். இதனால் காய்ச்சல், குளிர் போன்றவை ஏற்படும்.
நோய்த் தொற்று ஏற்பட்டு, மருத்துவம் செய்யாவிட்டால், தொற்று வயிறு முழுதும் பரவி, உயிருக்கே ஆபத்தாக முடியும்.
கற்கள் தோன்றாமல் தடுக்கும் முறைகள்:
சரிவிகித உணவு, நார்ச்சத்து, நன்மை செய்யும் கொழுப்பு (HDL) உணவு (மீன் எண்ணெய், ஆலிவ் எண்ணெய் போன்றவை) எடுத்துக் கொண்டால் நலம் பயக்கும்.
தீமை செய்யும் கொழுப்பு உணவுகள், அதிக சர்க்கரை கலந்த உணவுகள் தவிர்ப்பது நலம்.
உடல் மெலிவை ஏற்படுத்தும் உணவை தவிர்க்க வேண்டும்.
பெண்கள் எடுத்துக் கொள்ளும் “ஊக்கி மருந்துகள்’’ (Hormones) மருத்துவர் அறிவுரைப்படி மாற்றிக் கொள்ள வேண்டும்.
உடற்பயிற்சி தினமும் செய்ய வேண்டும். 30 நிமிடங்கள் நடைப்பயிற்சி, வாரத்தில் அய்ந்து நாள்கள் செய்ய வேண்டியது கட்டாயம்.
“வருமுன் காத்தலே நலம்!’’
(தொடரும்)