மஞ்சை வசந்தன்
நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் ஓர் இனப்போர்; சனாதனத்திற்கும் சமதர்மத்துக்குமான போர் என்று தேர்தலுக்கு முன்னமே நாம் அறிவித்துவிட்டுத்தான் களத்தில் இறங்கினோம்.
நாம் கூறியதை திருமாவளவன் அவர்கள் அப்படியே வழிமொழிந்தார். காரணம், அவர் கொள்கைவாதி! பெரியார் அம்பேத்கர் விழி கொண்டு நோக்கக் கூடியவர்.
ஆரியத்தின், ஆர்.எஸ்.எஸ்.ஸின் ஆபத்து அறிந்த அத்தனை பேரும் இதை ஏற்றுப் பரப்புரை செய்தனர்.
இந்த உண்மை அப்பாவித் தமிழர்க்குப் புரியாமல் போனாலும் ஆரியத்திற்கு நன்றாகவே புரிந்திருந்தது. அதனால்தான் இந்தத் தளத்தை மடைமாற்றி, உணர்வுகளை ஊட்டி மக்களை ஈர்க்க, தங்கள் பக்கம் சேர்க்க முயற்சி செய்தனர்.
கந்தர் சஷ்டி கவசத்தைக் கையில் எடுத்து முருகனை இழிவுபடுத்திவிட்டார்கள். அது தி.மு.க.வின் ஏற்பாடுதான் என்று அபாண்டமாய் பழி சுமத்தினர்.
மகளிரை இழிவு செய்யும் மனுதர்மத்தைக் கண்டித்துப் பேசியதைத் திரித்து, பெண்களுக்கு எதிராகத் திருமா பேசிவிட்டார் என்று கண்டனக் குரல்கள் எழுப்பி பெண்களைக் கவர முயற்சித்தனர்.
வேலை எடுத்துக்கொண்டு வீதி வீதியாய்ச் சென்று, தி.மு.க. கடவுளுக்கு எதிரான கட்சி என்று காட்டி, பக்தர்களை தம் பக்கம் திரட்ட முயற்சி மேற்கொண்டனர்.
வருமானவரி சோதனை போட்டு, தி.மு.க. அணியை வலுவிழக்கச் செய்துவிட முயன்றனர். அவதூறுகளை அன்றாடச் செய்தி போலத் திரித்து நாளிதழ்களில் வெளியிட்டனர்.
வாக்குப் பதிவுக்கும் வாக்கு எண்ணிக்கைக்கும் ஒரு மாத இடைவெளியை ஏற்படுத்தி ஏதாவது தில்லுமுல்லு செய்து வெற்றிபெற முடியுமா என்றும் திட்டமிட்டனர்.
வாரிசு அரசியல் என்று மக்களுக்கு வெறுப்பை உண்டாக்கி தி.மு.க.வை வீழ்த்தி விடலாம் என்று காய் நகர்த்திப் பார்த்தனர்.
திராவிடத்தை ஒழித்தே தீருவோம் என்று கைக்கூலிகளை களத்தில் இறக்கிவிட்டனர். ஆனால், திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள், ஒற்றை முழக்கமாக “திராவிடம் வெல்லும்!’’ என்று எழுச்சியூட்டி இந்த இனத்தை ஆரியத்திற்கு எதிராய் அணிகொள்ளச் செய்தார்.
தி.மு.க. அணியிலுள்ள எல்லா கட்சிகளும் மதச்சார்பற்ற, சமதர்ம, சமூகநீதிக் கொள்கைகளை ஏற்றுக் கொண்டவை என்பதால், ஆரிய ஆர்.எஸ்.எஸ்.ஸின் சனாதன அணிவகுப்பை ஆர்த்தெழுந்து எதிர்த்தனர்.
தி.மு.க.வை மீண்டும் ஆட்சியில் அமர்த்துவதன் மூலம் மட்டுமே, தமிழ்நாட்டின் உரிமையை, தமிழர் உரிமையை, தமிழ் மொழியின் பாதுகாப்பை, சமூகநீதியை, சமத்துவத்தை, மதச்சார்பின்மையை மீட்டு நிலைநிறுத்த முடியும் என்று தீர்க்கமாய் முடிவு செய்து அதற்காக உழைத்தனர். தமிழக மக்கள் விழிப்போடிருந்து, இந்த உண்மை நிலையைப் புரிந்து, எந்தத் திசை திருப்பலுக்கும் இடம் தராமல் உறுதியாய் நின்று தி.மு.க. கூட்டணிக்கு அதிக அளவில் வாக்களித்தனர்.
விளைவு; திராவிடம் வென்றது; – ஆரியம் தோற்றது! சமதர்மம் வென்றது; சனாதனம் தோற்றது!!
அடகில் அ.தி.மு.க.: செல்வி ஜெயலலிதா இருந்தவரை அ.தி.மு.கழகத்தை பி.ஜே.பி.யின் பிடியில் சிக்காமல் காத்தார். ஆர்.எஸ்.எஸ்., பி.ஜே.பி அச்சுறுத்தல்களை, ஆதிக்கத்தைத் துணிவுடன் எதிர்த்தார். அவர் இறந்த அடுத்த கணமே பி.ஜே.பி. பிடிக்குள் சென்றது அ.தி.மு.க. முறையற்றுக் குவித்த சொத்துகளைக் காப்பாற்றிக் கொள்ளவும், ஆட்சியை கவிழாது காப்பாற்றிக் கொள்ளவும் பி.ஜே.பி.யிடம் அ.தி.மு.க.வை அடகுவைத்தார் எடப்பாடி.
தமிழர் விரோதச் செயல்கள், தமிழ்மொழிக்கு எதிரான திட்டங்கள், வேளாண் துறைக்குக் கேடான சட்டங்கள், சமூக நீதிக்கு எதிரான திட்டங்கள், குலக்கல்வியைக் கொண்டுவரும் முயற்சிகள் போன்றவற்றை எதிர்க்காமல், – எதிர்க்கத் துணிவு இல்லாமல் செயல்படுத்தத் துணை நிற்கின்றனர். தமிழகத்தின் உரிமைகளை விட்டுக் கொடுத்தனர். தமிழகத்திற்கு வரவேண்டிய, – தரவேண்டிய நிதிகளைக்கூட கேட்டுப் பெற திராணியில்லாமல் அடிமையாட்சி புரிந்தனர். தி.மு.க.வின் உள்விவகாரங்களைக்கூட பி.ஜே.பி. தீர்மானிக்கும் நிலைக்கு அ.தி.மு.க.வை அடகு வைத்தனர். இதனால் தமிழகம் இழந்தது ஏராளம்; அ.தி.மு.க. இழந்ததும் ஏராளம்.
திராவிடக் கட்சி என்று கூறிக்கொண்டு, கட்சியைக் காவி மயமாக்கினர். ஜெயலலிதாவிற்குப் பின் அ.தி.மு.க அழிந்துவிடக் கூடாது. அந்த இடத்தை பி.ஜே.பி. பிடித்து விடக் கூடாது. அ.தி.மு.க.விற்கும் கேடாக முடியும் என்ற தொலைநோக்கில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள், சசிகலாவை முன்னிறுத்தி கட்சியைக் காப்பாற்றினார். ஆனால், அப்படிக் காப்பாற்றிக் கொடுக்கப்பட்ட அ.தி.மு.க.வை பி.ஜே.பி.யிடம் அடகுவைத்து அடிமைக் கட்சியாக்கிவிட்டனர். இதை அ.தி.மு.க. தொண்டர்களே விரும்பவில்லை. குறிப்பாக பி.ஜே.பி.யுடன் கூட்டணி வைப்பதை அவர்கள் அறவே ஏற்கவில்லை. என்றாலும் சுயநலத்திற்காக, தங்களைக் காப்பாற்றிக் கொள்ள இத்துரோகத்தைச் செய்தனர்.
கொள்கைக் கூட்டணி:
ஆனால், தி.மு.க. தந்தை பெரியார், அண்ணா, அம்பேத்கர், கார்ல் மார்க்ஸ் போன்ற சமதர்மத் தலைவர்களின் கொள்கைகளுக்கு ஏற்ற கூட்டணியை அமைத்தது. பி.ஜே.பி.யை, ஆர்.எஸ்.எஸ். சூழ்ச்சிகளை, சனாதன திட்டங்களை துணிவுடன் எதிர்த்தது. அ.தி.மு.க.வுக்கு எதிரான பரப்புரையைவிட பி.ஜே.பி.க்கு எதிரான பரப்புரையை அதிகம் செய்தது. அவர்களின் அச்சுறுத்தல்களைத் துணிவுடன் எதிர்கொண்டது. அதனால், தமிழக மக்கள் தி.மு.க. கூட்டணியை வெளிப்படையாக ஆதரித்தனர்.
மதவெறி, ஜாதி வெறிக்கு ஆட்படாமல், இது பெரியார் மண் என்பதை உறுதி செய்யும் வகையில் தி.மு.க. கூட்டணிக்கு பெருமளவில் வெற்றியைத் தந்தனர்.
அ.தி.மு.க.வின் வாக்குகளைப் பயன்படுத்தித் தான் பி.ஜே.பி. 4 இடங்களைப் பெற்றதே தவிர, தனது செல்வாக்கால் அல்ல. ஆனால், அதை வைத்து பி.ஜே.பி. தமிழகத்தில் காலூன்றிவிட்டது என்பது தப்பானது. தமிழகத்தில் உள்ள முதன்மைக் கட்சிகள் பி.ஜே.பி.யைக் கூட்டணியில் சேர்க்காமல் ஒதுக்கினால், அக்கட்சி ஒரு தொகுதியில் கூட வைப்புத் தொகையைப் பெற முடியாது என்பதே உண்மை நிலை.
புதுச்சேரியில் ரெங்கசாமி, தமிழகத்தில் பழனிச்சாமி என்று நெஞ்சுரம் இல்லா தலைவர்களைக் கொண்டு பி.ஜே.பி. சட்டமன்றத்திற்குள் நுழைகிறதே அல்லாமல், மக்களின் ஆதரவைப் பெற்று அல்ல என்ற அடிப்படை உண்மையை யாரும் மறுக்க முடியாது.
திசை காட்டும் திராவிடம்!
தி.மு.க. தனிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்து பதவி ஏற்கும் முன்பே மக்கள் நலன் சார்ந்த பணிகளைத் தொடங்கியதன் மூலம் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர். முதல்வராகப் பதவி ஏற்ற 2 நாள்களிலே மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள் துடிப்புடன், துரிதமாகச் செயல்பட்டு செய்த பணிகள் ஒட்டுமொத்த தமிழக மக்களையும் வியப்பில் ஆழ்த்தியது. குறிப்பாக பத்திரிகையாளர்கள் வியப்பின் விளிம்பிற்குச் சென்றனர். முதல்வரான முதல் நாளே பிரதமர் நரேந்திர மோடியுடன் பேசி ஆக்சிஜன் அளவை உயர்த்திப் பெற்றார். தலைமைச் செயலாளராக வெ.இறையன்பு அவர்களை நியமித்ததோடு உதயசந்திரன் போன்ற உயர் அதிகாரிகளை உரிய இடத்தில் அமர்த்தினார். மக்கள் அளித்த மனுக்கள் மீது விரைந்து தீர்வு காண சிறப்பு அலுவலகத்தைத் தேடித் தேர்ந்து செயல்படச் செய்தார். அன்றே மாவட்ட ஆட்சியாளர்கள் கூட்டம், மருத்துவமனைகள் ஆய்வு, அடுக்கடுக்காய் அதிரடியாய் நடவடிக்கைகளை மேற்கொள்ள எதிர்தரப்பார்கூட மூக்கின் மேல் விரல் வைத்தனர்.
“உள்ளதை உள்ளபடி ஒளிவின்றி உரையுங்கள்’’ என்றார். அதிகாரிகள் உளம் திறந்தனர். உடனே, உண்மை நிலை அறிந்து ஊரடங்கு. ஊரடங்கில் மக்கள் பாதிக்கப்படாமல் இருக்க உதவித் தொகை. அன்றாட வாழ்வு பாதிக்கப்படாமல் அடிப்படைத் தேவைகளுக்கு விதிவிலக்கு. ஒருவரும் குறை சொல்ல முடியாத அளவிற்கு ஒவ்வொரு செயலும் பாராட்டும்படியாய் இருந்தன.
எதிர்க்கட்சிகளை மதிப்பதிலும், இயக்க முன்னோடிகளைத் தேடிச் சென்று மதிப்பதிலும், அம்மா உணவகம் செயல்படும் என்று அறிவித்ததிலும், விளம்பரப் பதாகைகளை அகற்றியதிலும், 7 வயது சிறுவனின் தொண்டுள்ளத்தைப் பாராட்டி அவனிடம் தொலைபேசியில் பேசியதிலும் தன்னுடைய மாண்பை தெள்ளத் தெளிவாகக் காட்டிவிட்டார்.
மத்திய அரசிடம் மாநில உரிமைகளை விட்டுக் கொடுக்காமல், தனக்குள்ள பங்கை தயக்கமின்றிக் கேட்டுப் பெறுவதில் அவர் எழுதிய கடிதம் மாநில உரிமைக்கான ஆவணம். தி.மு.க. தலைவர் முதல்வர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள் தமிழகத்திற்கு மட்டுமல்ல, இந்தியாவிற்கே திசைகாட்டும் (வழிகாட்டும்) கலங்கரை விளக்கமாய் உயர்ந்து நிற்கிறார்.
அவருக்கு அரணாய் ஆசானாய் தி.க. தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் பல்லாற்றானும் பக்க பலமாய் நிற்பதோடு, அரசியல் விமர்சகர் இரவீந்திரன் துரைசாமி அவர்கள் கேட்டுக்கொண்டதுபோல இந்தியாவிலுள்ள மதச் சார்பற்ற தலைவர்களை ஒன்றிணைத்து ஓர் உறுதியான அணியை உருவாக்க மதச்சார்பற்ற சமூகநீதி களத்தைத் தயார் செய்யும் பெரும் பொறுப்பையும் ஏற்றுக்கொண்டுள்ளார். இவ்வகையில் திராவிடம் வென்றதோடு மட்டுமல்ல, இந்தியாவிற்கும் திசைகாட்டி நிற்கிறது என்பதே உண்மைநிலை!
தாய்க்கழக தீர்மானங்கள்:
புதிதாகப் பதவி ஏற்றுள்ள தி.மு.க. அரசுக்கு, தாய்க் கழகமாம் திராவிடர் கழகம் தனது தீர்மானங்களின் வழி, முதன்மைப் பணிகளை முன்மொழிந்துள்ளது. அதை வழிமொழிந்து செயல்படுத்தும் போது இந்த அரசின் மீதான மக்களின் நம்பிக்கையும் மதிப்பும் மேலும் உயரும்.
தி.க.வும் தி.மு.க.வும் இரட்டைக் குழல் துப்பாக்கி என்றார் அண்ணா. இரண்டு கட்சிகளுக்கும் கொள்கைகளும், இலக்குகளும் ஒற்றுமை உடையவையே! கொள்கை முரண்பாடோ இலக்கு வேறுபாடோ இரு இயக்கங்களுக்கு இடையே இல்லை.
எனவே, திராவிடர் கழகத் தீர்மானங்களை விரைந்து செயல்படுத்தி, தமிழக மக்களின் வாழ்வுக்கும் வளர்ச்சிக்கும் வழிசெய்ய வேண்டும். அதன்மூலம் மக்களின் நம்பிக்கையும் மதிப்பும் கூடும்.
எதிர்க்கட்சியினரிடமே நல்ல யோசனைகளைக் கூறுங்கள் என்று கேட்கும் மாண்பு நம் முதல்வருக்கு இருப்பதால், தாய்க் கழகத்தின் தீர்மானங்கள் வரைந்து நிறைவேறும் என்பதில் அய்யமில்லை. தாய்க்கழகம் ஆதாயம் எதிர்பாராமல் மக்கள் நலனுக்கே பாடுபடும் இயக்கம் என்பதால் அதன் கோரிக்கைகள் மக்கள் கோரிக்கைகள்தான் என்பதை தி.மு.க. தலைவர் நன்கு அறிவார்.
குறிப்பாக சமூகநீதியின் உயிர் மூச்சான இடஒதுக்கீட்டை ஒழித்துக்கட்ட மத்திய பா.ஜ.க. அரசு பல முயற்சிகளை எடுக்கும் நிலையில், உச்சநீதிமன்றமும் அதற்கு உடந்தையாகச் செயல்படும் நிலையில் தி.மு.க. அரசு முழு விழிப்புடன் இருந்து இடஒதுக்கீட்டைக் காக்க வேண்டியது கட்டாயக் கடமையாகும்.
திராவிடர் கழகத்தின் செயற்குழு கடந்த 9.5.2021 அன்று 11 தீர்மானங்கள் நிறைவேற்றியுள்ளது. அதில், ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள தி.மு.க. அரசுக்கு கீழ்க்கண்ட தீர்மானங்களை இயற்றியுள்ளது. அவை தி.மு.க. அரசு உடனடியாக செயல்படுத்த வேண்டிய முதன்மைக் கடமைகளாகும். அது, தமிழினத்தின், தமிழ் மொழியின், தமிழ்நாட்டின் உரிமைக்கும் வளர்ச்சிக்கும் பாதுகாப்பிற்கும் உயர்விற்கும் கட்டாயமானவை என்பதால்தான் புதிய அரசு பொறுப்பேற்றவுடன் இவை வலியுறுத்தப்பட்டு தீர்மானங்களாக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, ஏழு பேர் விடுதலை என்பது தமிழக மக்களின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்பாகும். எனவே, கீழ்க்கண்ட தீர்மானங்களை தி.மு.க. அரசு உடனே நிறைவேற்றி வரலாற்றுச் சாதனை படைக்க வேண்டியது கட்டாயக் கடமையாகும்.
கரோனா ஒழிப்புக்கு முன்னுரிமை
நாட்டையே மிகப்பெரிய அளவில் அச்சுறுத்தும் கரோனாவை ஒழிக்கும் பணியை ஒரு மக்கள் இயக்கமாக நடத்துவது என்று அறிவித்துள்ள முதலமைச்சரின் நிலைப்பாடு வரவேற்கத்தக்கது.
கட்சிக்கு அப்பாற்பட்ட முறையில் அனைவரும் இதற்கு ஒத்துழைப்புக் கொடுக்கவேண்டும் என்றும், அரசு விதிக்கும் கட்டுப்பாடுகளையும், நிபந்தனைகளையும் ஏற்றுச் செயல்படவேண்டும் என்றும் பொதுமக்களையும் இக்கூட்டம் கேட்டுக்கொள்கிறது.
தடுப்பூசி போட்டுக் கொள்ளுதல், முகக்கவசம், தனி மனித இடைவெளி, சோப்பால் கை கழுவுதல் இவற்றைத் தவிர்க்காமல் மேற்கொள்ளவேண்டும் என்றும் பொது மக்களை இச்செயற்குழு வற்புறுத்திக் கேட்டுக் கொள்கிறது. இவை நம் உயிர் காக்கவே _ அரசுக்காக அல்ல என்பதையும் பொதுமக்கள் உணரவேண்டும் என்றும் இக்கூட்டம் சுட்டிக்காட்டுகிறது.
அனைத்து ஜாதியினருக்கும் வாய்ப்பளித்து அர்ச்சகர் உரிமைச் சட்டத்தை அமல்படுத்துக!
தி.மு.க. தனது தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளபடி அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமைச் சட்டத்தின் அடிப்படையில் அர்ச்சகர் பயிற்சி பெற்ற 203 பேருக்கும், தமிழகக் கோவில்களில் பணியாற்றும் வகையில் முன்னுரிமை கொடுத்து ஆணை பிறப்பிக்குமாறு தமிழ்நாடு அரசை இச்செயற்குழு கேட்டுக் கொள்கிறது.
அனைத்து ஜாதியினருக்கும் பயிற்சி அளிக்கும் திட்டத்தைத் தொடரவேண்டும் என்றும் இச்செயற்குழு தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறது.
பெரியார் நினைவு சமத்துவபுரம்
சீரமைத்திடுக!
முத்தமிழ் அறிஞர் மானமிகு கலைஞர் அவர்கள் முதலமைச்சராக இருந்தபோது, தமக்கே உரித்தான வகையில், ஜாதி ஒழிப்பு சமத்துவக் கண்ணோட்டத்தில் பெரியார் நினைவு சமத்துவபுரங்களை நாடெங்கும் உருவாக்கினார்.
உள்ளாட்சித் துறை அமைச்சராகவும், துணை முதலமைச்சராகவும் இருந்த மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள்தான் பெரும்பாலான பெரியார் நினைவு சமத்துவபுரங்களைத் திறந்து வைத்தார்.
அ.இ.அ.தி.மு.க. ஆட்சியில் அவை போதிய பராமரிப்பு இல்லாமல் சீர்கெட்ட நிலையை அடைந்துள்ளன. அவற்றைச் சீரமைக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசை கேட்டுக்கொள்வதுடன் _ பெரியார் நினைவு சமத்துவபுரத்தில் எந்தவித மத வழிபாட்டுச் சின்னங்களும் இருக்கக் கூடாது என்று திட்டவட்டமான விதிமுறைகள் இருந்தும், அதற்கு விரோதமாக பல இடங்களில் மதவழிபாட்டுச் சின்னங்கள் திணிக்கப் பட்டுள்ளன _ உடனே கவனம் செலுத்தி, பெரியார் நினைவு சமத்துவபுரத்தின் நோக்கத்தை நிறைவேற்றுமாறு இக்கூட்டம் கேட்டுக் கொள்கிறது.
மத்திய அரசின் வருணதரும, சனாதனக் கல்வித் திட்டத்தைப் புறக்கணித்திடுக!
மத்திய பா.ஜ.க. ஆட்சியின் தேசிய கல்வித் திட்டம் 2019 _ என்பது சனாதன கொள்கைகளைப் போதிப்பதுடன், ஹிந்தி, சமஸ்கிருதத்தையும் திணிக்கும் போக்கில் செயல்படுகிறது _ இத்தகைய கல்வித் திட்டத்தை முற்றிலுமாக நிராகரிக்குமாறு தமிழ்நாடு அரசை இச்செயற்குழு கேட்டுக்கொள்கிறது.
2021ஆம் ஆண்டுக்கான பாடத் திட்டம் என்ற பெயரால் பல்கலைக்கழக நிதி உதவிக் குழு (யு.ஜி.சி.) வரலாற்றையே தலைகீழாகப் புரட்டும் திட்டத்தைத் தயாரித்துள்ளது.
எடுத்துக்காட்டாக இதுவரை வரலாற்று ஆசிரியர்களாலும், தொல்லியல் துறையாலும் நிறுவப்பட்ட சிந்துவெளி திராவிட நாகரிகம் என்பது மாற்றப்பட்டு, சிந்து _ சரசுவதி நாகரிகம் என்றும், வேத கால நாகரிகம் என்றும் திரித்துப் பாடத் திட்டத்தில் இடம்பெறச் செய்யப்பட்டுள்ளது.
மத்திய ஆசியாவிலிருந்து வந்தவர்கள் ஆரியர்கள் என்ற வரலாற்று உண்மையினைப் புரட்டி ஆரியர்கள் இந்தியப் பூர்வீகக் குடிகளே என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்திய சமுதாயத்தை இந்து சமுதாயம் என்றும், முசுலிம் சமுதாயம் என்றும் பிளவு செய்யும் பகுதிகளும் இடம்பெற்றுள்ளன.
இந்த விபரீதமான பேரபாயத்தை முளையிலேயே கிள்ளி எறியும் பணியை தந்தை பெரியார் பிறந்த _ திராவிட இயக்கம் செழித்த தமிழ் மண் செய்ய வேண்டும் என்றும், தி.மு.க. அரசு தொடக்க நிலையிலேயே இந்தத் திட்டத்தை முற்றிலும் நிராகரிப்பதாக அறிவிக்க வேண்டும் என்றும் இச்செயற்குழு முக்கியமாக வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.
அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகம் – செம்மொழி நிறுவனம் இவற்றைச் சீரமைத்தல்
அறிஞர் அண்ணாவின் நூற்றாண்டை யொட்டி _அவருக்குப் பொருத்தமான நினைவுச் சின்னமாக ஆசியாவிலேயே மிகப்பெரிய நூலகமாக தி.மு.க. ஆட்சியில், முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் முதலமைச்சராக இருந்தபோது, 2010இல் அண்ணாவின் 102ஆம் ஆண்டு பிறந்த நாளில் சென்னை கோட்டூர்புரத்தில் முதலமைச்சர் கலைஞரால் திறக்கப்பட்ட (8 தளங்கள் _ 3.75 லட்சம் சதுர அடி _ ரூ.180 கோடி செலவில் 5 லட்சம் நூல்களோடு தொடங்கப்பட்ட) நூலகத்தை அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக உருக்குலைக்கப்பட்டுள்ள நிலையை மாற்றி, சீர்படுத்தி மக்களுக்கு நல்ல வகையில் பயன்படும்படி செய்ய ஆவன செய்யுமாறு தமிழ்நாடு அரசை இச்செயற்குழு கேட்டுக்கொள்கிறது.
அரசு நூலகங்களுக்கு ஏடுகள் – இதழ்கள் இடம் பெறுவதற்கு ஆவன செய்க!
அரசு நூலகங்களில் நூலகத்துறை சார்பில் சந்தா கட்டி அனுப்பப்பட்டு வந்த ஏடுகள், இதழ்களை அரசியல் நோக்கத்தோடு கடந்த ஆட்சியில் நிறுத்தப்பட்டதை மாற்றி, மீண்டும் அரசு நூலகங்களில் ஏடுகளும், இதழ்களும் இடம்பெற ஆவன செய்யுமாறு தமிழ்நாடு அரசை இச்செயற்குழு கேட்டுக் கொள்கிறது. அதேபோல, அரசு நூலகங்களுக்கு புத்தகங்கள் வாங்குவதில் கவனம் செலுத்தி, எழுத்தாளர்களையும், பதிப்பகத்தார்களையும், வாசிப்பாளர்களையும் ஊக்கப்படுத்துமாறு தமிழ்நாடு அரசை இச்செயற்குழு கேட்டுக்கொள்கிறது.
முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் முயற்சியால் தி.மு.க. ஆட்சியில் தமிழுக்குச் செம்மொழி தகுதி பெற்றுத்தரப்பட்டது.
அ.இ.அ.தி.மு.க. ஆட்சியின் பாரா முகத்தாலும், மத்திய அரசின் தமிழ்மொழி மீதான துவேஷ சிந்தனையாலும் அந்நிறுவனம் அனாதையாக்கப்பட்டு விட்ட நிலையில், தி.மு.க. அரசு இதில் முக்கிய கவனம் செலுத்தி, இந்நிறுவனத்தை மேலோங்கச் செய்திட அனைத்து முயற்சிகளையும் எடுக்குமாறு இச்செயற்குழு கேட்டுக்கொள்கிறது.
ராஜீவ் காந்தி கொலை:
எழுவர் விடுதலை குறித்து…
ராஜீவ் காந்தி கொலையில் சம்பந்தப் படுத்தப்பட்ட எழுவர் மீதான விடுதலை குறித்து உச்சநீதிமன்றம் தெளிவாக தீர்ப்பளித்தும், தமிழ்நாடு அமைச்சரவையும் அவர்களை விடுதலை செய்யும் வகையில் முடிவு செய்து ஆளுநருக்கு அனுப்பியும், இதுவரை அவர்கள் விடுதலை செய்யப்படாமல் 30 ஆண்டு காலமாக சிறையில் வாடுவது எந்த வகையிலும் சட்டப் பூர்வமானதும் அல்ல _ நியாயப்பூர்வமானதும் அல்ல என்பதால், இந்தப் பிரச்சினையில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள தி.மு.க. அரசு கூடுதல் கவனம் செலுத்தி, எழுவரையும் விடுதலை செய்ய ஆவன செய்யுமாறு இச்செயற்குழு தமிழ்நாடு அரசைக் கேட்டுக்கொள்கிறது.
மேலே குறிப்பிட்டுள்ள முதன்மையான கடமைகள் போல தொடர்ந்து இந்த அரசு செய்ய வேண்டிய கடமைகள் பல உள்ளன. கடந்த 10 ஆண்டுகளில் அ.தி.மு.க. ஆட்சியில் தமிழர் அடையாளங்கள் பல பறிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, தமிழ்ப் புத்தாண்டு. தை முதல் நாள்தான் தமிழ்ப் புத்தாண்டு என்ற தமிழ் அறிஞர்களின் முடிவை முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் தனது ஆட்சிக் காலத்தில் நடைமுறைப்படுத்தினார். ஆனால், செல்வி ஜெயலலிதா அவர்கள் ஆட்சியில் அமர்ந்ததும் அதை நீக்கி பழையபடி சித்திரை முதல் நாள் என்று மாற்றினார். இதையும் நீக்கி, பழையபடி தை முதல் நாளைத் தமிழ்ப் புத்தாண்டாக அரசு அறிவிக்க வேண்டும்.
இந்துமத சாஸ்திரங்கள்படியும் தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு என்பதற்கு நம்மிடம் வலுவான ஆதாரங்கள் உள்ளன. எந்த இந்து மதத் தலைவரும் மறுக்க முடியாது. அதை விளக்கி பின்னர் விரிவாக எழுதவுள்ளோம். எனவே, அறிஞர்கள் முடிவுப்படியும், தமிழர் வாழ்வுப்படியும், இந்துமத சாஸ்திரங்களே ஏற்றுக் கொண்டுள்ளபடியும் தை முதல் நாளைத் தமிழ்ப் புத்தாண்டாக கொண்டாட ஆவன செய்ய வேண்டியது தி.மு.க. அரசின் கட்டாயக் கடமையாகும். அது கலைஞருக்குச் செய்யும் வரலாற்றுச் சிறப்பும் ஆகும்.
இதுபோல, தமிழர் பெருமை, தொன்மையைப் பறைசாற்றும் அகழ் ஆய்வுகள், தமிழர் மருத்துவம், கலை, பண்பாடு இவற்றையும் வெளிக் கொணர்ந்து பாதுகாக்க வேண்டும்.
தமிழ்த் தேசியம் என்ற போர்வையில் தமிழ், தமிழர், தமிழர் பண்பாடு என்று இளைஞர்களை ஏமாற்றி, தமிழர்களின் இன எதிரிகள் ஆரிய பார்ப்பனர்கள் என்பதை மாற்றி, கன்னடர், தெலுங்கர், மலையாளிகள் என்று மடைமாற்றி வருகின்ற போலிகளுக்கு வேலையில்லாமல், தமிழ், தமிழர், தமிழ்நாடு இவற்றுக்குத் தேவையான அனைத்தையும் தி.மு.க. அரசு செய்து விடுமேயானால் இளைஞர்கள் திசைமாறாமல் தி.மு.க.வை நோக்கி வருவர். அதன்வழி இன்னும் கூடுதல் சக்தியோடு மதவாத சனாதன சக்திகளை நாம் எதிர்த்து முறியடிக்க முடியும்.
திராவிடம் தேர்தலில் வென்றது. இன்னும் அது வெல்ல வேண்டியவை பலவுள்ளன. அதற்கு இளைஞர்களிடையே விழிப்பை உண்டாக்க வேண்டியது கட்டாயம். தேர்தல் நேரப் பரப்புரைகளோடு நிற்காமல், தமிழ்நாடு முழுவதும் திராவிட இயக்க பயிற்சி முகாம்கள் நடத்தி, வகுப்புகள் நடத்தி ஆயிரக்கணக்கில் கொள்கைத் தெளிவுடைய இளைஞர்களை உருவாக்க வேண்டும்.
சனாதன சூழ்ச்சியை பாமர மக்களுக்கும் விளக்கி விழிப்பூட்ட வேண்டும். மத்தியில் ஆட்சிக்கு வருபவர்கள் அதிகார பலம் பெற்று விடுவதால், அதிலும் சனாதன சக்திகள் அமராமல் தடுத்து மதச்சார்பற்ற சமூகநீதியில் அக்கறையுள்ள அரசு அமைய ஓர் அணியை இந்திய அளவில் உருவாக்க வேண்டும். அந்த அணியை உருவாக்க திராவிடத் தலைவர்களால்தான் முடியும். எனவே, தி.க. தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்கள் வழிகாட்டலில், தி.மு.க. தலைவர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள் அனைத்திந்திய அளவில் கொள்கை ஏற்புடைய தலைவர்களை ஒருங்கிணைத்து மதவாத சக்திகளை வீழ்த்தி மனித தர்மத்தை நிலைநாட்ட வேண்டும்; அதிலும் திராவிடம் வெல்லும்! அதை எதிர்கால வரலாறும் சொல்லும்! இது உறுதி!