கே:வாக்குப்பதிவு எந்திரத்தின் மீதான நம்பகத்தன்மை ஒரு புறம் இருக்க, தேர்தல் ஆணையத்தின் மீதான நம்பிக்கை தொடர்ந்து கேள்விக்குறியாகிறதே… இதிலிருந்து மீள என்ன வழி?
– கல.சங்கத்தமிழன், செங்கை
ப:மத்தியில் பா.ஜ.க. _ ஆர்.எஸ்.எஸ். இல்லாத எதிர்க்கட்சிகளின் கூட்டாட்சிதான் ஒரே தீர்வு _ ஒரே வழி!
கே:தமிழ்நாட்டை மூன்றாகப் பிரிக்கும் திட்டம் பற்றி தங்கள் கருத்து என்ன?
– இளையராஜா, பிலாக்குறிச்சி
ப:முதல்வர் கனவில் மிதக்கும் சில தலைவர்களின் முதல் போடா முனைப்பு தழைத்து வரும் பரிதாப யோசனை _ மாவட்டங்கள் தனியாகப் பிரிந்து வந்தால்கூட முதல்வர்களாக அப்படிக் கனவு காணுவோர் வர இயலாது என்பதே உண்மை நிலை!
கே:டாக்டர் அம்பேத்கர் பல்கலைக்கழகத் துணைவேந்தரை வெளிப்படையாக ஆர்.எஸ்.எஸ்.காரர் என்று கூறி வாழ்த்து தெரிவிக்கப்படுகிறதே! இது எங்கு போய் முடியும்?
– கருணாமூர்த்தி, விருத்தாசலம்
ப:புதிய ஆட்சி அமைந்தால் சரியான பரிகாரம் ஏற்படக்கூடும்! முற்றுப்புள்ளி வைக்கப்படும் _ உறுதியாக.
கே:வடநாட்டில் வழியெங்கும் பிணங்கள் காத்துக் கொண்டிருக்கும் நிலையில் ஊடகங்கள் உண்மையை மறைப்பதேன்?
– பகுத்தறிவு, திருப்பூர்
ப:அச்சம் அல்ல; அரசியல் ‘லாபம்’! _ காரணங்களால்தான்!
கே:அம்பேத்கரியவாதிகளாக தங்களைக் காட்டிக்கொள்ளும் சிலர் இந்துத்துவாவைவிட திராவிட இயக்கத்தைக் கடுமையாக எதிர்க்கக் காரணம் என்ன?
– ஆ.சே.அந்தோனி, செங்கோட்டை
ப:உண்மை அம்பேத்கரியவாதிகள் அல்லர்; போலிகள் என்பதை காட்டிக் கொண்டதற்கு நம் நன்றி! பா.ஜ.க.விற்குத் துணை நிற்கும் திசைமாறிய பறவைகள்!
கே: கொரோனா தடுப்பூசியை வீணாக்கியதில் தமிழ்நாடு முதலிடம் வகிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளனவே!
– மணிமேகலை, பெரம்பூர்
ப: ‘முதலிடம்’ தான் இதிலும்!- வேதனை _ மகா வெட்ககேடு!
கே:தேர்தல் ஆணையம், உச்சநீதிமன்றம் போன்ற உயர்ந்த பொறுப்பிலிருந்து ஓய்வு பெறுகின்றவர்களுக்கு உடனுக்குடன் மத்திய அரசு, அரசுப் பதவிகளை அளிக்கிறதென்றால், அவர்கள் பணியின்போது எப்படி நேர்மையானவர்களாக இருந்திருப்பார்கள்?
– சீர்காழி கு.நா.இராமண்ணா, சென்னை
ப: 21.04.2021 ‘விடுதலை’ அறிக்கை நன்கு இதனை விளக்குகிறது _ காண்க.
கே:திருமணத்திற்காக மதம் மாறக் கூடாது என்று சட்டம் வந்துள்ளதே! சுயமரியாதைத் திருமணங்களை எல்லா மதத்தினரும் – மதங்களுக்கிடையேயும் செய்துகொள்ள சட்டம் தேவையல்லவா?
– கனகராஜ், சென்னை
ப: மத்திய ஆட்சி மாறும்போது அப்படிச் சட்டம் வருவது காலத்தின் கட்டாயம்.
கே: தேர்தல் பரப்புரைக் கூட்டங்கள் வாயிலாகத்தான் கொரோனா அதிகமாகப் பரவியுள்ளது என்பது ஏற்கத்தக்கதா?
– தேன்மொழி, திருவொற்றியூர்
ப: இதில் 5 விழுக்காடு உண்மை என்றாலும்கூட, மதத் திருவிழாக்களால் 90 விழுக்காடு பரவியுள்ளது என்பதற்கு ஆதாரம் உண்டே!