கவிதை : களத்தில் நிற்போம்!

மே - 01-15 (2021)

முனைவர் கடவூர் மணிமாறன்

பகுத்தறிவுப் பேராசான், பாரே போற்றும்

               பகலவனாம் அய்யாவின் புகழை மாய்க்கத்

தகுதியிலா அறிவற்ற கூட்டத் தார்கள்

               தலைதூக்கி நிலைமறந்து குதிக்கின் றார்கள் ;

வகுப்புரிமை இறையாண்மை சமூக நீதி

               வழங்கியுள்ள இடஒதுக்கீ டெல்லாம் இந்நாள்

தொகுப்பாக வீழ்த்திடவே துடிப்போர் தம்மின்

               தூதுவராய் இனப்பதர்கள் காலில் வீழ்ந்தார்!

 

சாலைகளின் பெயர்மாற்றம்; சிலைக்குக் காவி

               சங்கிகளின் வெறியாட்டம் ஓய வில்லை ;

பாலைநிலம் ஒருநாளும் சோலை யாகா ;

               பதர்களுமே விதைநெல்லாய் ஆவ துண்டோ?

மூளையினை முற்றாக அடகு வைத்த

               மூடர்களோ ஒருநாளும் திருந்தார் போலும்;

காலையிலே எழுகின்ற கதிரோன் தன்னைக்

               கையிரண்டால் தடுப்பதற்கே முயலு கின்றார்!

 

பொறுப்பற்றோர் இந்நாளில் உரிமை யாவும்

               பூவொன்றைப் பறித்தல்போல் பறிக்க லானார் ;

வெறுப்புணர்வில் குளிப்பவர்கள் தமிழ ரோடு

               விளையாடிப் பார்க்கின்றார்; நடுவண் ஆட்சிச்

செருக்காலே திமிர்கொண்டு சிறுமை சேர்ப்போர்

               சீற்றமெலாம் எரிமலைமுன் தீய்ந்து போகும் ;

எருக்கம்பூ ஏந்திழையார் சூடல் உண்டோ ?

               எதிர்நிற்கும் ஆரியத்தை வீழ்த்தி வெல்வோம்!

 

தமிழ்மானம் தமிழ்மரபு தமிழர் பண்பு

               தனித்தன்மை மிக்கதனை உலகோர் ஏற்பர் !

அமிழ்தனைய செந்தமிழை அழிப்ப தற்கே

               ஆகாத இந்தி சமற் கிருதம் தன்னைக்

கமுக்கமுடன் திணித்திடவே திட்டம் போடும்

               கயமைக்கு நாமென்றும் அஞ்சோம்! கெஞ்சோம் !

உமியென்றும் சோறாகா! உணர்ச்சி கொண்டே

               உரம்வாய்ந்த ஒண்டமிழீர்! களத்தில் நிற்போம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *