புதுப்பாக்கள்

பிப்ரவரி 01-15

தண்ணீர் தந்த சமத்துவம்

கள்ளர் தெரு,
பள்ளர் தெரு,

குறவர் தெரு,
பறையர் தெரு,

நாடார் தெரு,
கோனார் தெரு,

எல்லாத் தெருக்களும்
ஒன்றாயின….
அடித்த மழையில்!

– த.ரெ.தமிழ்மணி,
திருவாரூர்

வாசனை

சாம்பிராணிப் புகையையும்,
மீறிநின்றது
முனியாண்டி விலாஸ்
சுக்கா வறுவல் வாசனை
வீதிவலம் வந்த பெருமாள்
மூக்கை மூடவில்லை.

– வீ. உதயக்குமாரன்,
வீரன்வயல்

துளிப்பா துகள்கள்

சம்பந்திகள்

வற்றிய குளம்
புதையுண்ட புழுக்கள்
நலம் விசாரிக்கும் நாரைகள்

தாலாட்டும் கடலலைகள்
நீடு துயிலில்
மீனவப் பிணங்கள்

கொதித்துக் கதறும் உலைநீர்
வேகும் அரிசியின் ரணம்
வேதனையின் கூக்குரல்

வாசலில் மணக்கிறது
சாணம் தெளித்த நீர்
மூச்சுத் திணறும் வண்டிமாடுகள்
வேண்டாம் இட ஒதுக்கீடு
வாருங்கள் எல்லோரும்
சம்பந்திகள் ஆயிடுவோம்

– மீனா சுந்தர்

ஈழம் எழும்!

எங்களின் ஈழதேசக் கனவு
கருவரையிலேயே
கல்லறையாக்கப்ப(டும்)ட்ட
பெண் சிசுவைப் போலானது
எத்தனை முறை
ஆரிய நஞ்சைக் கொண்டு
எங்கள் எண்ணக் கருவை
அழித்தாலும் என்ன?
வீரியமுடன்தான்
இருக்கின்றன
விந்தணுக்கள்!
ஓர் நாள் உயிர்த்தெழும்
உக்கிரமாய்
அணுவின் ஆற்றலைப் போல்
அகிலம் உணர.

– ஆலம்பாடி மா. பாலமுருகன்
விழுப்புரம்

பலன்

வாந்தி மயக்கத்தில் பலர்
மரண பீதியில் சிலர்
மருத்துவமனையில்!-?
சோற்றில்
பல்லி விழுந்த பலன்.

– மணக்காடு ஜெயச்சந்திரன்

நிராகரிப்பு

கடவுளின் பார்வையில்
பக்தனின் விண்ணப்பம் தென்பட்டது
கோயில் கட்டும் விசயமாக
நெடுஞ்சாலையில் கோயிலென்றால்
நிராகரிக்கிறேன்
என்றது கடவுள்
இடிபட நேர்ந்தால்
சக்தியில்லா சாமியென்று
சாடுவான் கருஞ்சட்டைக்காரன் என்று
சமாதானம் சொல்லியது

பட்டா நிலத்தில்
குந்தியிருந்தாலும்
பொங்கி வழியுமா சக்தி? என்று
பொங்கினான் பக்தன்!
புறப்பட்டுப் போனான்
இன்னொரு சாமிக்கு
விண்ணப்பம் போட.

– முசிறி மலர்மன்னன்

நறுக்குகள்

ஆண் வாசனையால்
பிறந்தவனுக்கு
பெண் வாசனை
கூடாதுதான் ஆபாசத்தின் உச்சமான
அய்யப்பன்
நாசமாய்ப் போக

***

கங்கை நதி சிவனின் தலையில் தோன்றுகிறது….
அப்ப
புவியியல் ஆசிரியர்
பொய் சொன்னாரா?

***

குப்பை பொறுக்கி
பிள்ளைகளைப்
பள்ளிக்கு அனுப்பும்
பெற்றோர்கள்
பள்ளிக்கூட கஸ்டடியில்
குப்பை பொறுக்கும்
மாணவர்கள்!

– கலைபாரதி, சித்தமல்லி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *