அய்யாவின் அடிச்சுவட்டில் ….இயக்க வரலாறான தன் வரலாறு(267): தமிழக அரசின் ‘தந்தை பெரியார் சமூகநீதி விருது’

மே - 01-15 (2021)

கி.வீரமணி

தெலுங்கு தேசக் கட்சியின் தலைவரும், ஆந்திர முன்னாள் முதல்வரும், தேசிய முன்னணியின் தலைவருமான மதிப்புக்குரிய என்.டி.ராமாராவ் அவர்கள் 18.1.1996 அன்று காலமானார் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சியையும், வேதனையையும் தந்தது.

ஆந்திரத்தின் சிங்கமாக அம்மாநில உரிமைக்கும், காங்கிரஸ் அல்லாத ஓர் அரசு ஏற்படும் நிலை அங்கே வருவதற்கும் அயராது உழைத்தவர். தெலுங்கு தேச மக்களின் சுயமரியாதைக்காகவே தனிக் கட்சியைத் துவக்கியதாகக் கூறியவர்!

நடிகராக இருந்து அரசியலில் வந்தாலும், அரசியலில் பல திருப்பங்களை அங்கே உருவாக்கி மக்கள் தலைவராகவே அவர் வாழ்ந்தார். மத்தியில் உள்ள ஆட்சி _ முன்பு ஒருமுறை அவர் இருதய மாற்று அறுவை சிகிச்சைக்கு அமெரிக்காவுக்குச் சென்ற நிலையைப் பயன்படுத்தி, ஆட்சியைக் கவிழ்த்த நிலையில், அவர் மக்களைத் திரட்டி அயராது போராடி, மீண்டும் ஆட்சியில் அமர்ந்த அரசியல் சாதனை இதுவரை இந்திய அரசியலில் எவரும் செய்யாத சாதனை! குறிப்பிட்ட முன்னேறிய வகுப்பினர்தான் ஆள்வர் என்ற நிலையை மாற்றிய சமூகநீதியாளர் அவர்.

சென்னையில் பல ஆண்டு காலம் வாழ்ந்தவர் அவர். அவரது பிரிவால் வாடும் தெலுங்கு தேசக் கட்சியினர், அவரது துணைவியார், குடும்பத்தினர், தொண்டர்கள் அனைவருக்கும் திராவிடர் கழகத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து அறிக்கை வெளியிட்டோம்.

சென்னை சைதாப்பேட்டையில் முதலமைச்சர் அவர்களால் திறந்து வைக்கப் பட்டுள்ள அரசு அலுவலக வளாகத்திற்கு ஏற்கெனவே இருந்த பெயரான, நீதிக்கட்சித் தலைவர் பானகல் அரசரின் பெயரை மாற்ற வேண்டாம் என்ற வேண்டுகோளை தமிழக முதலமைச்சருக்கு திராவிடர் கழகத்தின் சார்பில் 20.1.1996 அன்று அறிக்கை வாயிலாக வெளியிட்டோம். அதில்,

சென்னை சைதாப்பேட்டையில் மறைமலை அடிகள் பாலம் அருகே ரூ.7 கோடியே 70 லட்சம் செலவில் 10 மாடிகள் கொண்ட ஊரக வளர்ச்சித் துறை கட்டடத்தை தமிழ்நாடு முதலமைச்சர் டாக்டர் ஜெயலலிதா அவர்கள் திறந்து வைத்து அதற்கு ‘வளரகம்’ என்று பெயர் சூட்டியுள்ளார். பானகல் மாளிகை என்பது அதற்கு முன் அங்கிருந்த ‘புராதன’ செங்கல்பட்டு மாவட்ட ஆட்சித் தலைவர் கட்டடம் ஆகும்.

திராவிட இயக்கத்தின் முதல் முதலமைச்சர் கடலூர் திரு.சுப்பராயலு ரெட்டி அவர்கள் ஆனபோதிலும்கூட அவர் உடல்நலக் குறைவு காரணமாக ஒரு சில மாதங்களே முதல்வராக இருக்க முடிந்த நிலையில், அடுத்த முதல்வர்தான் பானகல் அரசர் அவர்கள் ஆவார்கள். அவரது காலத்தில்தான் எத்தனையோ சிறப்புமிகு சாதனைகள் இந்து அறநிலையத் துறை சட்ட நிறைவேற்றம் உள்பட நிகழ்ந்தன.

அவரது பெயர் நிலைக்க அந்தப் பழைய கட்டடம் இப்போது புதிதாக 10 மாடிக் கட்டடமாக ஆகியுள்ளது. திராவிட இயக்கத் தொடர்ச்சியில்தான் என்ற நிலையில், அக்கட்டடத்தின் பெயரான பானகல் மாளிகை  என்பதை மாற்றுவது சரியானதல்ல. தமிழக முதல்வர் அவர்கள் அதற்கு ‘வளரகம்’ என்ற பெயர் சூட்டினாலும்கூட, ‘பானகல் மாளிகை வளரகம்’ என்று ஒரு திருத்த ஆணையைப் பிறப்பிப்பது மிகவும் சிறந்ததாக இருக்கும் என்று திராவிட இயக்கங்களின் தாய்க் கழகம் என்ற உரிமையோடு முதலமைச்சருக்கு வேண்டுகோளுடன் அறிக்கை வெளியிட்டோம்.

இலங்கை அதிபர் சந்திரிகா அரசில் அமைச்சராக இருந்த திரு.தொண்டமான் அவர்கள் 18.1.1996 அன்று தமிழ்நாடு வந்து திருத்துறைப்பூண்டியில் ஒரு திருமணத்தில் கலந்துகொண்டபோது, செய்தியாளர்கள் கேட்ட பல கேள்விகளுக்கு மிகவும் சிறப்பான முறையில் பதில் அளித்தார். அவரது பேட்டியில்,

பேச்சுவார்த்தைமூலம் சமாதானம் ஏற்பட வழி உண்டா என்ற கேள்விக்கு அமைச்சர் தொண்டமான் பதில் அளிக்கையில், “சந்திரிகா அரசு நல்லெண்ணத்துடன் துவக்கத்தில் சில முயற்சிகளைச் செய்தது. ஆனால், அப்போதைய பேச்சுவார்த்தை வெறும் கண்துடைப்பாகத்தான் இருந்தது. ஏற்கெனவே போடப்பட்ட பல ஒப்பந்தங்களை, தொடர்ந்து இலங்கையில் ஏற்பட்ட அரசுகள் அலட்சியப்படுத்தியே வந்தன. அதனால், தமிழர்களிடையே சந்தேக மனப்போக்கு வளர அது வாய்ப்பாகிவிட்டது.

வடக்கு, கிழக்கு மாகாணங்களை இணைத்து, அவற்றுக்கு அதிக சுயாட்சி அதிகாரம் கொடுத்து புறக்கணிக்கப்பட்ட மனித உரிமைகளையும் தமிழர்களுக்கு வழங்கினால் நிச்சயம் தீர்வு ஏற்பட வழி உண்டு.

“நான் இலங்கை அரசின் அமைச்சராக இருக்கிறேன். ஆயினும், தமிழர்களுக்கு எதிரான முயற்சிகள் நடக்கும்போது அதை எதிர்க்க, கண்டிக்கத் தயங்கியதே இல்லை!

இந்நிலையில் இங்குள்ள இந்தியத் தமிழர்கள் அல்லவா உலகில் எங்கு தமிழர்களுக்கு எது நடந்தாலும்  வழிகாட்டும் நிலையை மேற்கொள்ள வேண்டும்? தமிழ்நாட்டு தமிழ்ச் சகோதர சகோதரிகள் தங்கள் பொறுப்பைத் தட்டிக் கழிக்கலாமா?’’ என்று கேட்டுள்ளார் அமைச்சர் தொண்டமான்.

அவரது பேட்டியை சுட்டிக்காட்டி மத்திய, மாநில அரசின் கவனத்திற்கு அறிக்கை ஒன்றை வெளியிட்டோம். அதில்,

அவரது மனந் திறந்த இந்த கருத்து தமிழ்நாட்டின் அனைத்து மத்திய, மாநில அரசுகளின் இதயங்களைத் திறந்து ஈழத் தமிழர்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் என்று நம்பிய, அவரை நாம் பாராட்டுகிறோம்.  1996 டிசம்பர் 30ஆம் தேதி பெரியார் திடல் மாநாட்டில் நமது முடிவுகளும், உரைகளும் சரியான உண்மைகள் என்பதை அமைச்சர் தொண்டமானின் கருத்துகள் வழிமொழிகின்றன.

தமிழர்களே ஓரணியில் நின்று, ஒரே குரலில் ஈழ மக்களுக்கு இழைக்கப்படும் இன்னல்களைக்  களைய முன்வாருங்கள் _ மனித நேயத்தோடு என அறிக்கையில் குறிப்பிட்டோம்.

ஒவ்வோர் ஆண்டும் ஜனவரி 25ஆம் தேதி மொழிப்போர் தியாகிகள் தினம் தமிழகத்தில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருவது சிறப்பானது. இருப்பினும் மொழிப் போர் தியாகிகள் ஓய்வூதியம் எவ்வித மாற்றமும் செய்யாது வெறும் 400 ரூபாயாகவே தொடர்ந்து தரப்படுவதை உயர்த்தக் கோரி அறிக்கை ஒன்றை 24.1.1996 அன்று வெளியிட்டோம். அதில், “திராவிடர் கழகம் எப்பொழுதுமே இந்தி எதிர்ப்பில் முன்வரிசையில் நிற்கும் அமைப்பாகும். 1935இல் இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சியில் தாய்க் கழகத்தின் பங்கும் _ பணியும் எப்படிப்பட்டது என்பதை நாடறியும். இந்நிலையில் தமிழ்நாடு அரசு மற்ற அரசியல் தியாகிகளுக்கு ஓய்வூதியம் 1500 ரூபாய் தருவதைப் போல, பல்வேறு சலுகைகளைத் தர அரசு முன்வர வேண்டும். முதலமைச்சர் கருணை உள்ளத்தோடு இதனைப் பரிசீலிக்க வேண்டும். சில ஆயிரம் பேர்கள்தான் உள்ளனர். பெருந்தொகை கூடுதல் செலவு இதனால் அரசுக்கு ஏற்படப் போவதில்லை. திராவிட இயக்கம் இதனைச் செய்யாமல் வேறு எந்தக் கட்சி இதனைச் செய்யும்?’’ என அறிக்கையில் வேண்டுகோள் விடுத்தோம்.

சென்னை மாவட்டக் கழகத்தின் தூண்களில் ஒருவரும், கட்டுப்பாடு காத்த கழக இராணுவ வீரருமான பெரியார் பெருந்தொண்டர் மானமிகு வியாசர்பாடி சபாபதி அவர்கள் 19.1.1996 அன்று காலமானார் என்கிற செய்தி மிகவும் பேரிடியாக நம்மைத் தாக்கிய செய்தியாகும்.

எப்போதும் புன்னகை பூத்த முகத்துடன், கருஞ்சட்டையுடன் திடலுக்கு அடிக்கொரு தடவை வருபவர் அவர்! அனைத்துப் போராட்டங்களிலும், கிளர்ச்சிகளிலும் தமது துணைவியாரோடு தவறாமல் கலந்துகொள்ளும் கழகக் கடமை வீரர் அவர்!

அஞ்சல் துறையில் செவ்வனே பணிபுரிந்து, தமது பிள்ளைகளை மிகச் சிறப்பாகப் படிக்க வைத்து ஆற்றலாளர்களாக்கி, கடமையைச் செய்த லட்சியத் தந்தையாகவும் விளங்கியவர் அவர்! மறைந்த மாவீரருக்கு நமது வீரவணக்கம்! அவரது துணைவியார் திருமதி இந்திராணி அம்மா அவர்கள் கழக மகளிரணியில் தன்னை இணைத்து சலிக்காமல் தொண்டு செய்பவர். அவருக்கும், அவரது செல்வங்களுக்கும் ஆறுதல் கூறி அறிக்கை வெளியிட்டோம்.

மதுரை “சுயமரியாதைச் சுடரொளி’’ ஓ.வி.கே. நீர்காத்தலிங்கம் _ பாப்பா, தேனி கே.பி.பி.வி.மாயாண்டி _ சந்திரகாந்தி அம்மாள் ஆகியோரின் பேரனும், தேனி எம்.ராம்சிங் _ ஆர்.சந்திரா ஆகியோரின் மகனுமான எம்.ஆர்.சுரேந்தர்சிங், மதுரை பி.பாஸ்கரன் _பி.பத்மினி ஆகியோரின் மகள் பி.தீபப்பிரியா ஆகியோரது வாழ்க்கைத் துணை ஒப்பந்த விழா _ மதுரை கே.கே.நகர், லேக்வியூ சாலையிலுள்ள ஜஸ்டிஸ் வி.ஆர்கிருஷ்ணய்யர் சமுதாய கூடத்தில் 22.1.1996 அன்று நடத்தி வைத்தேன். விழாவில் சுயமரியாதைத் திருமணத்தின் அவசியத்தைப் பற்றி எடுத்துக் கூறினேன். மண விழாவில் கழகப் பொறுப்பாளர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

மாநில அளவில் திராவிட இயக்க அரசியல் கட்சி ஆட்சி வந்தால் மட்டும் போதாது. மத்தியில் அமைய இருக்கும், கூட்டணி ஆட்சியிலும் பங்குபெறும் வண்ணமும் தமிழ்நாட்டு உரிமைகளுக்குப் பங்கம் ஏற்படாமல் பாதுகாக்கவும், 40 நாடாளுமன்ற தொகுதிகளிலும் தி.மு.க., அ.இ.அ.தி.மு.க., ம.தி.மு.க., திராவிட இயக்க அரசியல் கட்சிகள் தொகுதி உடன்பாடு செய்துகொண்டு போட்டியிட வேண்டும் என்று முக்கிய அறிக்கையொன்றை 12.2.1996 ‘விடுதலை’யில் வெளியிட்டோம்.

அந்த அறிக்கையினைப் பாராட்டி அறிஞர் அண்ணாவின் மகன் டாக்டர் சி.என்.ஏ.பரிமளம் அவர்கள் கடிதம் எழுதினார். அதில்,

“அன்புள்ள ஆசிரியர் அண்ணன் அவர்கட்கு, தங்களது நேற்றைய அறிக்கையை ‘விடுதலை’யில் கண்டேன்; அருமையானதொரு திட்டத்தை திராவிட இயக்கங்களுக்கு தந்திருக்கிறீர். சம்பந்தப்பட்டவர்கள் காழ்ப்புணர்ச்சியைத் தவிர்த்து நல்ல முடிவெடுத்தால், தமிழர்களுக்கு நல்ல ஏற்றம் கிடைக்கும் எதிர்காலத்தில். மத்திய அரசில் இடம் பெற்றாலோ அல்லது நாடாளுமன்றத்தில் திராவிட இயக்கங்கள் கணிசமான அளவு இருந்தாலோ தமிழகம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளுக்குத் தீர்வுபெற ஏதுவாக இருக்கும். எங்களைப் போன்றவர்களின் எண்ணத்தை இப்படியொரு செயல்திட்டமாகத் தெரிவித்த ஆசிரியர் அவர்களுக்கு தமிழ் உணர்வு உள்ளவர்கள் சார்பில் என் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்ளுகிறேன். வணக்கம்.’’

தங்கள்,

அண்ணா பரிமளம்

சென்னை கலைவாணர் அரங்கில் 26.2.1995 அன்று தமிழக அரசு முதல் முறையாக தந்தை பெரியார் பெயரில் ‘தந்தை பெரியார் சமூகநீதி விருது’ என்னும் விருதினை நடைமுறைப் படுத்தியது. 1995ஆம் ஆண்டுக்கான அந்த விருது வழங்கும் விழாவுக்கு முதல்வர் டாக்டர் ஜெ.ஜெயலலிதா அவர்கள் தலைமையேற்று அவ்விருதினை எனக்குக் கொடுத்து பெரும் மகிழ்ச்சி கொண்டார். அவ்விருது பெறும் முதல் நபராகவும் நான் இருந்தது கழகத்திற்கும், தொண்டர்களுக்கும் கூடுதல் மகிழ்ச்சியைத் தந்தது. விழாவில் அமைச்சர்கள் திரு.கு.லாரன்ஸ், திரு.எஸ்.டி.சோமசுந்தரம், சட்டப் பேரவைத் தலைவர் திரு.சேடப்பட்டி இரா.முத்தையா, திரு.எம்.தங்கதுரை இ.ஆ.ப. (அரசுச் செயலாளர், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை) என அ.தி.மு.க.வின் முன்னணி அமைச்சர்களும், கழகப் பொறுப்பாளர்களும் கலந்துகொண்டனர்.

தமிழ்நாடு முதல்வர் டாக்டர் ஜெ.ஜெயலலிதா, விருது அளித்து சிறப்புரையாற்றுகையில், “1995ஆம் ஆண்டுக்கான தந்தை பெரியார் சமூகநீதி விருதினை, திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் மதிப்பிற்குரிய சகோதரர் திரு.கி.வீரமணிக்கு அளிப்பதில் நான் பெரு மகிழ்ச்சியும், பேருவகையும் அடைகிறேன்.

தந்தை பெரியாரின் பெயரில் அமைந்த இந்த விருதினைப் பெற முழுத் தகுதி படைத்த ஒருவர் இன்று இருக்கிறார் என்றால், அவர் நிச்சயமாக திரு.கி.வீரமணி அவர்களாகத்தான் இருக்க முடியும். தனது வாழ்நாளின் பெரும்பகுதியைத் தந்தை பெரியாருக்குத் தொண்டு செய்வதிலும், அவர்தம் கொள்கைகளைப் பரப்பி, சமுதாய நலப் பணிகளை மேற்கொள்வதிலும் செலவிட்டு வருகிறார். இவரைவிட தகுதியானவர்கள் வேறு எவர் இருக்க முடியும்? பெரியாரின் சீடர், அவரது வழித் தோன்றல், நமது அனைவரின் பாராட்டுதலுக்கும், போற்றுதலுக்கும் உரியவர் ஆவார்.

தனது மனத்திற்கு சரி என்று பட்ட கருத்தை அது எத்துணை கசப்பானதாக இருந்தாலும், அதைத் துணிவுடன் தயக்கமின்றி வெளிப்படுத்தும் ஆற்றல் படைத்தவர். அடுத்தவர் மனம் சிறிதும் புண்படாமல் தனது கருத்துகளை எடுத்துரைக்கும் திறமையையும் உயரிய பண்பையும் நான் அவரிடம் கண்டிருக்கிறேன். கடந்த 50 ஆண்டுகாலமாக அவர் தமிழகத்தின் மூலை முடுக்குகளுக்கும், ஏன் வெளி மாநிலங்களுக்கும் அயல் நாடுகளுக்கும் பயணம் செய்து, தந்தை பெரியாரின் கொள்கைகளைப் பரப்பி வருவதோடு, உலகிலேயே பெண்களுக்கென்றே  ஆரம்பிக்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரியாக பெரியார் மணியம்மை மகளிர் பொறியியல் கல்லூரியைத் துவக்கி பெருமையைச் செய்தவர்’’ என கழகத்தின் செயல்பாட்டினைப் பாராட்டியும், என்னை வாழ்த்தியும் பல கருத்துகளை எடுத்துரைத்தார். விழாவில் எனது ஏற்புரையில்,

“எதிர்பாராத விதமாக வரலாற்றுப் பெருமையுடன் இப்படி ஒரு நிகழ்ச்சி நடக்கிறது. ஏற்புரை என்கிற முறையில் நன்றி சொல்லக் கடமைப் பட்டுள்ளேன். நன்றி காட்டுவது தமிழன் பண்பாடு; அதுவும் தந்தை பெரியார் தொண்டர்கள் நன்றி காட்டுவதில் அதிகம் உணர்வு படைத்தவர்கள். சமுதாயத்துக்கு யார் பயன்படுகிறார்களோ அவர்களுக்கு நன்றி சொல்வதோடு நிற்க மாட்டோம், அவர்களுக்கு சமுதாயக் கொள்கையை அமல்படுத்துவதில் சங்கடங்கள் வரும்போது அந்தச் சங்கடங்களைச் சந்திப்பதில் நாங்கள் முதல்வர்களாக இருப்போம். இந்தச் சிறப்பு _ பெருமை என்பதெல்லாம் ஏதோ தனிப்பட்ட வீரமணி என்கிற தனி நபருக்குச் செய்யப்பட்டவை என்று நான் எடுத்துக் கொள்ளவில்லை. தந்தை பெரியார் என்னும் மாபெரும் வாழ்வியல் தத்துவத்தை தங்கள் வாழ்க்கையிலே கடைப்பிடித்து, அதற்காக எந்தத் தியாகத்தையும் செய்யத் தயாராகி, எந்தவிதமான பதவி, பகட்டு, புகழ் என்பவை பற்றிக் கவலைப்படாமல் மெழுகுவத்திகளைப் போல் எரிந்து, ஒளி தந்து தங்களை அழித்துக் கொள்கிற இலட்சோப லட்சம் பெரியார் தொண்டர்களுக்கு நீங்கள் அளித்திருக்கின்ற சிறப்பாகத்தான் இதனை எடுத்துக் கொள்கிறேனே தவிர, தனிப்பட்ட ஒருவனுக்குச் செய்யப்பட்ட சிறப்பாக எடுத்துக் கொள்ளவில்லை (பலத்த கரவொலி). தமிழக மக்களும், கழகத் தோழர்களும் வைத்திருக்கிற நம்பிக்கைக்கு, ஏற்றுக் கொண்டிருக்கிற தந்தை பெரியார் கொள்கைக்கு, சமூக நீதிக்கு நிச்சயம் என் வாழ்வின் இறுதி மூச்சு அடங்குகின்ற வரையில் துரோகம் செய்யமாட்டேன் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்’’ எனக் கூறி சமூகநீதிக்கு தந்தை பெரியாரின் சிந்தனைகள் எப்படியெல்லாம் பயன்படும் என்பதைச் சுட்டிக்காட்டி உரையை முடித்தேன். விழா நடைபெற்ற கலைவாணர் அரங்கத்திற்கு கழகத் தோழர்களும், ஏராளமான பொதுமக்களும் வருகை தந்து கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

பெரியார் மணியம்மையார் பொறியியல் கல்லூரியின் கல்விப் பணிக்காக அமெரிக்காவுக்கு 27.2.1996 அன்று என்னுடைய வாழ்விணையர் மோகனா அவர்களுடன் பயணமானேன்.

பயணம் வெற்றியடைய வாழ்த்துக் கூறி ஏராளமான கழகப் பொறுப்பாளர்களும், தோழர்களும் சென்னை விமான நிலையம் வந்து வழியனுப்பி வைத்தனர்.

அமெரிக்க பயணத்தின் முதல் நிகழ்வாக, அமெரிக்க வாழ் தமிழர்கள் ஒன்று கூடி டெக்சாஸ் மாநில டாலஸ் மாநகரில் உள்ள பேராசிரியர் இலக்குவன் தமிழ் இல்லத்தில் மார்ச் 23 அன்று நடைபெற்ற கூட்டத்தில் என் பெயரில் ஆண்டுதோறும் ‘சமூகநீதி விருது’ ஒன்றினை வழங்குவது என முடிவு எடுத்தனர். இதனை உலகில் பல்வேறு நாடுகளில் வாழும் பெரியார் இயக்கத்தினர் ஒன்றிணைந்து வழங்குவர் என பேராசிரியர் இலக்குவன் தமிழும், சிகாகோ நகர்வாழ் டாக்டர் சோம.இளங்கோவனும் இவ்விருது ஆக்கத்திற்கு முனைந்து பணியாற்றினர்.

இவ்விழாவில் வரவேற்றுப் பேசிய பேராசிரியர் டாக்டர் இலக்குவன் தமிழ், “தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் சமூகநீதி, பகுத்தறிவுச் சிந்தனை, பெண்கள் முன்னேற்றம், கடவுள் மறுப்பு முதலிய துறைகளில் ஆற்றிய பங்களிப்பு மற்றும் தொண்டினை விளக்கிப் பேசினார். விழாவில் கலந்து கொண்டமைக்காக மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்தனர்.’’

அங்கு சிறப்புரையாற்றுகையில், “இந்தியாவில் நடைபெறும் சமூகநீதிப் போராட்டத்தைப் பற்றியும், வரலாற்றில் எப்படி மதம் சமூகநீதியை மறுத்தது என்பதனையும், சமூகநீதிக்காக தந்தை பெரியார் உருவாக்கிய திராவிடர் கழகம் பற்றியும் ஒரு நீண்ட உரையாற்றினேன்.’’ விழாவில், பல அறிஞர் பெருமக்கள், சில பல்கலைக்கழகப் பேராசிரியர் அழைப்பினை ஏற்று பங்குபெற்றுச் சிறப்பித்தனர்.

சுற்றுப் பயணத்தின் தொடர் நிகழ்வாக, அமெரிக்காவின் செயின்ட் லூயிஸ் நகரில் மிசவுரி தமிழ்ச் சங்கத்தின் சார்பாக மார்ச் 30 அன்று ‘பெண்ணுரிமை’ என்ற தலைப்பில் சொற்பொழிவு ஆற்ற அழைக்கப்பட்டேன். விமானத்தில் ஏற்பட்ட கோளாறினால் நிகழ்ச்சி சற்று தாமதாகவே துவங்கியது. கூட்ட அரங்கில் தமிழன்பர்களும், பல்வேறு துறைகளில் சீருறப் பணியாற்றுபவர்களும், பெண்களும் பெருந் திரளாக வந்திருந்தனர். உரையில், “ஆண்களுக்கும் பெண்களுக்கும் பெண்ணுரிமை என்ன என்பதை தெளிவாக உணர்த்தும் வகையில் உரையாற்றினேன். உரையின் முடிவில்‘Saga of Periyar’ என்று ஒரு 20 நிமிட வீடியோ படம் _ தந்தை பெரியார், அன்னை மணியம்மையார் அறக்கட்டளையின் சார்பாக இயங்கிவரும் கல்வி நிறுவனங்களைப் பற்றி எல்லோருக்கும் விளங்குமாறு ஒளிபரப்பப் பட்டது. தந்தை பெரியாருக்குப் பின்னர் நிறுவனங்களின் வளர்ச்சி பற்றி அவர்களும் நன்கு தெரிந்துகொண்டனர். முடிவில், “உங்களிடம் உரையாற்ற மட்டும் இங்கே வரவில்லை. உங்களைப் போன்ற அறிவியலாளர்கள் மூலம் தெரிந்து கொண்டவற்றை எங்கள் கல்வி நிறுவனங்களுக்கு எடுத்துச் செல்லவும் வந்திருக்கிறேன்’’ என கூறி மனநிறைவுடன் உரையினை முடித்தேன்.

(நினைவுகள் நீளும்…)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *