இளைய தலைமுறையே இனிதே வருக 7 : முற்போக்கு மனநோயளிகளை” வெளிப்படுத்தி பொதுவெளியில் வெளிச்சம் பாய்ச்சுவோம்!

மே - 01-15 (2021)

வீ. குமரேசன்

சிந்தனை ஆற்றல் மனிதகுலத்திற்கு மட்டுமே உரியது. மனிதன் சிந்திக்கத் தொடங்கிய பின்புதான் செம்மைப்பட தலைப்பட்டான். அடிப்படைத் தேவை பற்றிய சிந்தனையினை அடுத்து பொதுவெளியில் கருத்தாக்கம் காண முற்பட்டான். உலகின் பல்வேறு பகுதிகளிலும், அந்தந்த மண் சார்ந்து — மக்கள் சார்ந்து கருத்தாக்கங்கள் மலர்ந்தன. மலர்ந்த கருத்தாக்கங்களின் எண்ணிக்கைக்கு அளவே இல்லை. கருத்தாக்கங்கள் பற்றிய கண்ணோட்டம், அவை ஏற்படுத்திய _ ஏற்படுத்திவரும் சமூக விளைவுகள், – இவை பற்றிய புரிதலுடன் வாழ்வோர் மிகவும் குறைவு. இப்படி சிறுபான்மையினரான சமூகம் பற்றிய புரிதலுடையவர்களால்தான் ஒவ்வொரு காலக் கட்டத்திலும் மானுடம் முன்னேற்றம் கண்டு வருகிறது.

கருத்தாக்கத்தால் ஏற்பட்ட எழுச்சி, ஏற்றங்கள் பற்றிய அடிப்படை அறிவு பொதுநலத்தில் அக்கறை உள்ளோரிடம் ஓரளவிற்கு இருக்க வேண்டும்; இருக்கின்ற வரையில் தேடிப் படித்து தெரிந்துகொள்ள வேண்டும். உலகின் ஒரு பகுதியில் விளைந்த கருத்தாக்கத்தின் மூலம் ஏற்பட்ட முன்னேற்றங்கள் அனைத்துப் பகுதிகளுக்கும் முழுமையாகப் பொருந்தாது. கருத்தாக்கத்தின் முக்கியத்துவம் அதனைப் பயன்படுத்திடும் மக்களுக்கான பொருத்தப்பாடுடன் கலந்தது. கருத்தாக்கம், என்பது நிச்சயமாக எதிர் கருத்தாக்கத்தையும் உருவாக்கிடக் கூடியது.

ஆதிக்க சக்திகளால் கட்டமைக்கப்பட்ட கருத்தாக்கங்களால் ஆட்கொள்ளப்பட்ட சமூகத்தில், மாற்றுக் கருத்துகள் எளிதில் தோன்றி விடாது. நல்ல நோக்கம் கொண்ட மாற்றுக் கருத்துகளும் அடக்கு முறைக்கு ஆளாகிட நேரும். ஆதிக்க சக்திகள் தங்களது ஆதிக்கம் கருதி மாற்றுக் கருத்துகள் வலுப்பட்டால், தங்களது ஆதிக்கத்திற்கு அபாயம் என எண்ணுவது நியாயமல்ல. மாற்றுக் கருத்துகளால் ‘நேர்மறை சமர்’ என்பதாக தங்களையும் அறியாமல் சிலர் _ குறிப்பாக ஒடுக்கப்பட்டோரில் ஒரு சிலர் _ ஆதிக்கச் சக்திகளுக்கு துணைபோவது சமூக அவலமே.

பிறவியின் அடிப்படையில் பேதம் கற்பித்து, மக்கள் அனைவரையும் ஏற்றத் தாழ்வாகப் பிரித்து, சமத்துவமற்ற நிலைமைகளை உருவாக்கி, அதன் அடிப்படையில் கல்வி மறுக்கப்படுவதும், குலத் தொழிலைத் தவிர வேறு தொழிலை மேற்கொள்ளுவதற்கும் அனுமதி இல்லை என்பதும், மீறி- மேற்கொண்டால் தண்டனைக்கு ஆளாக்குவதுமான இத்தகைய மனிதநேயமற்ற கொடுமைகளை கடவுள் ஏற்படுத்திய விதியாக சனாதனக் கருத்தினை நிலைப்படுத்தி உள்ளனர். இந்த அவல நிலைமையினை கொண்டாடிப் போற்றிடும் மனநிலை கொண்ட ஒடுக்கப்பட்டோரும் இருக்கின்றனர்.

இந்த நிலைமைகளை மாற்றிட பல கருத்துகள் உருவாகின. அவை நேரடியாகவும், சாதுர்யத்துடன் மறைமுகமாகவும் பலத்த எதிர்ப்புகளுக்கு ஆளாகின. இந்த அவலநிலை பல நூற்றாண்டுகள் கடந்த நிலையிலும் மாற்றங்கள் — மாற்றுக் கருத்துகள் வளர்ந்து வந்தாலும் ஆதிக்கக் கருத்துகள் முற்றிலும் அகற்றப்படவே இல்லை.

ஆதிக்கக் கருத்துகள் ஒடுக்கப்பட்டோரால் முழுமையாகப் புரிந்து கொள்ளப்படவில்லை ஒடுக்கப்பட்டோரில் பலர் ஆதிக்க சக்திகளுக்கு தங்களது செயலின் விளைவுகளைப் பற்றிய உணர்வு இல்லாமலேயே ஆர்வம் காட்டி வருகின்றனர்.

பல நூற்றாண்டுகளாக நிலவி வரும் சமூக இழிவு நிலைக்குக் காரணம் பிறவி அடிப்படையிலான ‘ஜாதி’ என்பதே. ஜாதியை எதிர்த்துப் போராட முனையும் பொழுது ‘ஜாதி’ எனும் சொல்லைப் பயன்படுத்தித்தான் ஆக வேண்டும். சாக்கடையைக் கழுவி சுத்தம் செய்ய முனைந்தால் சாக்கடை நீர் சுத்தம் செய்பவர் மீது தெறிக்கத்தான் செய்யும். சாக்கடையை சுத்தம் செய்ய முற்பட்டவர் மீது சாக்கடை நீர் பட்டுவிட்டது என கேளிக்கையுடன் விமர்சித்தால் எவ்வளவு அநியாயமோ, அதே போலத்தான் ‘ஜாதியைக்’ குறிப்பிட்டு ஜாதி ஒழிப்புப் பணியில் ஈடுபட்டுவருபவரை விமர்சனம் செய்திடுவதும்.

ஜாதி ஒழிப்பின் முதல் கட்டம், ஜாதியினால் ஏற்படுத்தப்பட்ட பாகுபாட்டை நீக்குவதே. ஜாதியைச் சுட்டிக்காட்டி கல்வி மறுக்கப்பட்டால், ஜாதியைக் காட்டித்தான் கல்வி பெற முயற்சிக்க வேண்டும். அப்பன் தொழிலைத்தான் மகன் செய்திட வேண்டும் என்ற குலத்தொழிலுக்கு அடிப்படை _ பிறவியின் அடிப்படையிலான ஜாதிமுறையே. குலத் தொழிலை ஒழித்திட ஜாதியைப் பற்றிப் பேசிடத்தான் வேண்டும். சமூக அநீதி பற்றிப் பேசும் பொழுது ஜாதியைச் சொல்லித்தான் ஆக வேண்டும்.

ஜாதி ஒழிப்பின் ஒரு கட்டமான ஜாதி ஏற்றத் தாழ்வினைக் களைந்து சமூகநீதியினை நிலைநாட்டிட கடைப்பிடிக்கப்படும் அணுகுமுறையே இடஒதுக்கீடு. ஆதிக்கச் சக்திகள் ஏற்படுத்திய வகைப்படுத்தப்பட்ட அணுகுமுறையினை இடஒதுக்கீட்டில் கடைப்பிடிப்பது தவிர்க்க இயலாது. சமத்துவநிலை அடைந்திட ஒடுக்கப்பட்டோரின் நிலைக்கேற்ப பார்ப்பனரல்லாத உயர்ஜாதியினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், தாழ்த்தப்பட்ட வகுப்பினர், பெண்கள் என வகைப்படுத்தித்தான் இடஒதுக்கீட்டின் பலனைப் பெற முயற்சிக்க வேண்டும். சமத்துவத்தை ஒழித்த ‘ஜாதி’யை, சமத்துவநிலையினை அடைந்திட அந்த ‘ஜாதி’ அடையாளத்தைக் குறிப்பிட்டுத்தான் ஆகவேண்டும். தொலைத்த பொருளை தொலைத்த இடத்திற்குச் சென்றுதான் தேட வேண்டும். ஓர் இடமானது பொருளைத் தொலைத்திடக் காரணமாக இருந்தது என்பதால் அந்த இடத்தினை விடுத்து வேறு இடத்தில் சென்று தேட நினைப்பது அறிவுடைமை ஆகுமா? பகுத்தறிவு சார்ந்த செயலாகுமா?

ஜாதி அடிப்படையிலான ஏற்றத் தாழ்வினைப் போக்கிட, பாகுபாட்டை களைந்திட, கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் இடஒதுக்கீடு கிடைத்திட பல தலைவர்களும், அமைப்புகளும் போராடி வருகின்றனர். இந்தப் பணியில் தந்தை பெரியார் இயக்கத்தின் பங்கு பெரிதானது மட்டுமல்ல, நீண்ட நெடிய சமூகநீதிப் பயணத்தைக் கொண்டது. கூட்டத்தோடு சேர்ந்து முழக்கம் மட்டுமே எழுப்பும் பணி அல்ல; இடஒதுக்கீட்டிற்கு தடையை ஏற்படுத்த, ஆதிக்க ஜாதியினர் முற்பட்டு வரும் வேலையில், இடஒதுக்கீட்டில், பயன்பெற்றோர் _ பயனடைய இருப்போர், உண்மைநிலை புரியாது அந்த ஆதிக்க சக்திகளுக்குத் துணை போகிறார்கள்.

துணை போகும் ஒடுக்கப்பட்டோரில் ஒரு சிலர் ‘முற்போக்காக கருத்து’ ஒன்றை எழுப்பி வருகின்றனர். ‘ஜாதியை ஒழிக்க வேண்டுமென்றால், பள்ளிக்கூடங்களில் மாணவர் சேர்க்கையின் பொழுது ஜாதியைக் குறிப்பிடக் கூடாது’ — இதுதான் அந்த ‘முத்தான முற்போக்குக் கருத்து’. சமூகநீதியின் அரிச்சுவடி கூடத் தெரியாமல் அறியாமையால் விளைந்த கருத்து என்பதைத் தவிர, வேறு என்ன சொல்ல முடியும்?  வகுப்புவாரி இடஒதுக்கீட்டு நியாயமாகக் கிடைத்தாலும் முழுமையாக நடைமுறைக்கு வரவில்லை.

பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர், பெண்கள் இடஒதுக்கீடு பெறுவதில் நீண்ட தூரம் செல்ல வேண்டியுள்ளது. எடுக்கும் முயற்சிகளுக்கு, ஒத்துழைப்புத் தராவிட்டாலும், சமூகநீதிப் பயணத்திற்குப் புறம்பாகக் கருத்து தெரிவித்துவிட்டு, ‘முற்போக்கு சாதனை’ புரிந்துவிட்டதாக மனம் மகிழும் மனநோயாளிகளாக, இடஒதுக்கீட்டால் பலன்பெற்று முன்னேறிய படித்த வட்டத்தில் பலபேர் மாறி உள்ளனர். ‘உதவி செய்யாவிட்டாலும் உபத்திரவம் செய்யாமல் இருந்தாலே போதும்’ என்ற அனுபவ மொழியை நினைத்துத்தான் ஆதங்கம் கொள்ள வேண்டியிருக்கிறது.

இப்படி ‘முற்போக்கு முகமூடி’ போட்டு கருத்து தெரிவித்திடும் வகையில் அண்மையில் நிகழ்ந்த துக்ககரமான நிகழ்விலும் ‘முற்போக்கு’ அடையாளம் முனைப்பு காட்டியுள்ளது. கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக நகைச்சுவை நடிப்பில் முத்திரை பதித்து, நகைச்சுவை வெளிப்பாட்டில் சமூகசீர்திருத்தக் கருத்துகளை திரையில் வெளிப்படுத்திய கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் போல திரைஉலகில் திகழ்ந்து, ‘சின்னக் கலைவாணர்’ எனும் அடைமொழியுடன் அண்மையில் அகால மரணமடைந்த விவேக் அவர்களுக்காக இரங்கல் செய்தியினை பல தலைவர்களும், கலைஞர்களும், தனி நபர்களும் தெரிவித்தனர். விவேக் அவர்களின் சமூக சீர்திருத்தக் கருத்து சார்ந்த நடிப்பாற்றலைப் பாராட்டி திராவிடர் கழகத்தின் சார்பாக ‘பெரியார் விருது’ வழங்கப்பட்டது. திராவிடர் கழகத்தின் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் விடுத்த இரங்கல் செய்தியில் ‘பிற்படுத்தப்பட்ட வகுப்பில் பிறந்து தனது உழைப்பால் முன்னேறிய விவேக்’ என்று குறிப்பிட்டதை சில ‘முற்போக்கு முகமூடிகள்’ விமர்சனம் செய்துள்ளன.

ஜாதி ஒழிப்பிற்குப் பாடுபட்டு வரும் அமைப்பின் தலைவர், ஜாதி அடிப்படையில் அடையாளப்படுத்த ‘பிற்படுத்தப்பட்ட வகுப்புச் சார்ந்த’ என்று எப்படிக் குறிப்பிடலாம் என விமர்சித்துள்ளனர்.

தகுதியும் திறமையும் தமக்கே உரியது, பிராமணரல்லாதராகப் பிறந்த மற்றவர்களுக்கு அவை கிடையாது என ஆண்டாண்டு காலமாக ஆதிக்கக் குரல் ஒலிக்கப்பட்டு வரும் நிலையில், தகுதியும் திறமையும் எங்களுக்கும் உண்டு என்று சொல்லாமல் பறைசாற்றி திரையுலகில் புகழிடத்தை அடைந்த கலைஞன் பிறந்தது _ ஆதிக்க சக்திகளால் பிற்படுத்தப்பட்ட வகுப்பில்தான் என்பதை அவர்கள் மறுத்து விட முடியுமா?

அந்த நிலையை அடைவதற்கு எவ்வளவு தடைகளை, எதிர்ப்புகளை அந்தக் கலைஞன் நேர் கொண்டிருப்பார்? அத்தனையும் உடைத்தெறிந்து ஆதிக்க சக்திகளே வேறு வழியில்லாமல் போற்றிடும் நிலைக்கு உயர்ந்த கலைஞன் விவேக் அவர்கள் பிறந்தது தமிழகத்தின் தென்பகுதியில் வாழும் உழைக்கும் மக்களான ஒரு பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தில்தான். ‘பிற்பட்ட வகுப்பு’ அல்ல; ‘பிற்படுத்தப்பட்ட வகுப்பு’ என தனது நடிப்பாற்றலால் நிரூபித்து வாழ்ந்தவர் விவேக். வாய்ப்புக் கிடைத்தால் பிறவி ஒரு பொருட்டல்ல; தகுதியும் திறமையும் வெளிப்பட்டே தீரும் என வாழ்ந்து காட்டியவர்களுள் ஒருவராக விவேக் அவர்கள் மறைந்துள்ளார்.

இந்த சமூக உயர்வை எட்டிய ஒரு கலைஞன் ‘பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சார்ந்தவர்’ என பொருத்தமாக, மற்றவர்கள் சுட்டிக்காட்டாத ஓர் அடையாளத்தைத்தான் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் தெரியப்படுத்தி இரங்கல் செய்தி விடுத்துள்ளார். இதில் ‘தவறு’ காணும் ‘முற்போக்கு மனநோயாளிகளின்’ செயல் பொதுவெளியில் தோலுரித்துக் காட்டப்பட வேண்டும். ஒரு செய்தியினை அந்த ‘மனநோயாளிகள்’ மறந்து விட்டார்களா? அல்லது தெரிந்தும் மறைத்து விட்டார்களா? நடிகர் விவேக் அவர்கள் தான்அளித்த செய்தி ஊடக நேர்காணல் நிகழ்ச்சி பலவற்றில், தான் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்தவர் என்பதை பகிரங்கமாகவும்  சில நேரங்களில் வலியுறுத்தியும் வெளிப்படுத்தி வந்தது இன்றைக்கும் காட்சி ஊடகங்களில் பதிவாகவே நீடித்துவருகிறது. ஜாதி உணர்வை வளர்க்கும் விதமாக வெளிப்படுத்திய கருத்துகள் அல்ல அவை; தான் கடந்து வந்த பாதையைப் பறைசாற்றிட விரும்பிய ஓர் ஆதங்கத்தின் வெளிப்பாடுகளாகக் கிளம்பியவையே!

இரங்கல் செய்தியில் நடிகர் விவேக் பற்றிய குறிப்பினை மிகச் சரியாகவே சொல்லியிருக்கிறார் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள். குறைகாண முயலும் ‘முற்போக்கு மனநோயாளிகளின்’ பார்வையில்தான் கோளாறு உள்ளது. ஆதிக்க சக்திகளுக்குத் துணைபோய்க் கொண்டிருக்கும் ஒடுக்கப்பட்டோரில் ஒரு சிலரின் சமூகநீதி துரோகத்தின் வெளிப்பாடு தொடர்ந்து நடைபெற்று வருவதுதான். விவேக் அவர்களின் மறைவினை ஒட்டி எழுந்த விமர்சனம் அண்மைக்கால நிகழ்வே. ஆதிக்க சக்திகளுக்குத் துணைபோகாமல், சமூகநீதி சக்திகளுக்கு ஆதரவு தெரிவித்து, ஆக்கம் காட்டும் அணுகுமுறையினை, இளைய தலைமுறையினர் வளர்த்துக் கொள்ள வேண்டும். துரோகம் இழைப்போரின் செயலை நுண்ணறிவு கொண்டு- ‘பெரியார் கண்ணாடி’ போட்டுப் பார்த்திட பழகிக் கொள்ள வேண்டும்.

(தொடருவோம்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *