கே: தினமணி, தினமலர், ஹிண்டு போன்ற பத்திரிகைகள் விளம்பரச் செய்தியை தங்கள் பத்திரிகைச் செய்திகளைப் போல் தேர்தலுக்கு முதல் நாளில் வெளியிட்டது மோசடியா? சோரம் போன நிலையா? இவர்கள் எப்படி வெளியில் நடமாடுகிறார்கள்?
– அ.கிருஷ்ணமூர்த்தி, தருமபுரி
ப: நாளேடுகள் முழுப் பக்க விளம்பரங்களை வெளியிடுவது தவறல்ல; ஆனால், வாசகர்களை ஏமாற்றும் ஒரு தந்திரமாக _ அதுவும் தேர்தலுக்கு முந்தைய கடைசி பிரச்சாரக் கட்டத்தின்போது _ ஆளுங்கட்சிக் கூட்டணியின் அவதூறு பிரச்சார விளம்பரத்தை _ பத்திரிகையின் வழமையான பக்கம்போல் போட்டு, மேக்கப் (Make-up) செய்து வாக்காளர்களை ஏமாற்றுவது அசல் மோசடிக்கு நிகரான குற்றமாகும்.
“பத்திரிகை தர்மம்’’ ஜனநாயகத்தின் நான்காவது தூண் என்கிற நிலையில், இப்படி நாளேடு நடந்துகொள்வதன் மூலம் அவர்களது வருமானம் பெருகலாம். ஆனால், அவர்களது “பெறுமானம்’’ கேள்விக்குறியாகும் நிலைக்குக் குறைந்து விட்டதே. அதை எண்ணிப் பார்க்க வேண்டாமா?
கேவலம்! மகாகேவலம்! பத்திரிகைகள் அறிவு நாணயத்தாலும் அடக்கமுறை எதிர்ப்பிலும் தனித்து நின்று புகழ்பெற வேண்டுமே தவிர, இதுமாதிரியான நடத்தைகள் மூலம் வீரத்திற்குப் பதிலாக சோரம் போன இழிவைத்தான் இப்பத்திரிகைகள் சம்பாதித்துள்ளன! மகா வெட்கம்! ஏ தாழ்ந்த தமிழகமே!
கே: நீங்கள்தான் பி.ஜே.பி.க்கு எதிராக இந்திய அளவில் தலைமையேற்று அணி அமைத்து வழிநடத்த வேண்டும் என்று இரவீந்திரன் துரைசாமி அவர்கள் கூறியுள்ளதை ஏற்பீர்களா?
– த.மங்கலநாதன், மானாம்பதி
ப: நண்பர் ரவீந்திரன் துரைசாமி அவர்கள் சமூகநீதிப் போராளி. பல ஆண்டு வரலாற்றை நன்கு அறிந்த ஒருவர். கொரோனா இல்லாவிட்டால் சென்ற ஆண்டே தொடங்கியிருப்போம். கொரோனா பரவல் முடியட்டும். இந்தப் பணி வேகமெடுக்க வாய்ப்பு உண்டு.
கே: 69% இடஒதுக்கீட்டிற்கு பாதுகாப்பு பெறவும் நீட் தேர்வை தமிழகத்தில் அகற்றவும் சட்டரீதியாக என்ன செய்ய வேண்டும் என்பதற்கான செயல்திட்டத்தை தி.மு.க. அரசுக்கு வகுத்துக் கொடுப்பீர்களா?
– ம.வீராசாமி, திண்டிவனம்
ப: நிச்சயமாக! சட்டக்களம் (நீதிமன்றம்), மக்கள் மன்றமான சட்டமன்றம் இவற்றின் மூலம் விழிப்புணர்வை திட்டமிட்டு ஏற்படுத்தல்.
கே: மேற்கு வங்கத்தில் இடதுசாரிகளை அறவே ஒழிக்கும் செயலைச் செய்ததால்தான், அந்த இடத்தை பா.ஜ.க. கைப்பற்றிவிட்டது. தமிழகத்தில் சரியான எதிர்கட்சியை உணர்வுள்ள அ.தி.மு.க. தொண்டர்களைக் கொண்டு உருவாக்க வேண்டியது கட்டாயம் அல்லவா?
– தே.முருகன், வந்தவாசி
ப: உணர்வுள்ள அ.தி.மு.க. _ கொள்கையை மறந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டது, அது அடிமை தி.மு.க.வாக இருக்கும் நிலை மாற்றப்பட்டு அண்ணா தி.மு.க.வாக மாறட்டும். அப்புறம் மற்றவை பற்றி யோசிக்கலாம்!
கே: பெண்களின் பாதுகாவலர்கள் நாங்கள்தான் என்ற பி.ஜே.பி.யினர் சொல்லிக்கொள்வது போன்ற உலகமகா மோசடி உண்டா?
– க.தமிழரசி, திருவள்ளூர்
ப: வீட்டுக்குள் பெண்களை அடைத்து வைத்து _ குடும்பப் பணிகளை மட்டும் செய்யவைப்பதே சரியானது என்பது ஆர்.எஸ்.எஸ்.ஸின் மனுதர்மப் பார்வையும், கொள்கையும்!
கே: எல்லோருக்கும் விலையில்லா பொருள், பணஉதவி, உரிமைத்தொகை என்பதற்கு மாற்றாக, மாத வருவாய் இல்லாத ஏழைகளுக்கு மட்டும் என்று நிதியை மிச்சப்படுத்தி சாராயக் கடைகளை படிப்படியாகக் குறைக்கலாம் அல்லவா?
– கு.மகாலிங்கம், உத்திரமேரூர்
ப: நல்ல யோசனை _ புதிய (தி.மு.க.) அரசு பல திட்டங்களை நடைமுறைப்படுத்தும். ஏற்படும் அனுபவப் பாடங்கள் மூலம் நல்ல மாற்றங்களையும் நிச்சயம் செய்யத் தயங்காது!
கே: உயர்நீதிமன்றங்களில் 80 லட்சம் வழக்குகள் நிலுவையில் உள்ளதால், ஓய்வு பெற்ற நீதிபதிகளை ஒப்பந்த முறையில் பணி அமர்த்தும் யோசனையை உச்சநீதிமன்றம் கூறுவது சரியா?
– மகிழ், சைதை
ப: தவறில்லை. சமூகநீதிக் கண்ணோட்டத்தைப் புறந்தள்ளாமல் இதைச் செய்யலாம். அரசியல் சட்ட விதிகளில் ‘Ad Hoc’ பிரிவின்படி தற்காலிக நியமனங்களை, குறிப்பிட்ட காலத்தில் செய்ய விதிகள் இடம் தருகின்றன!
கே: புதிய அரசு இன்னும் சில வாரங்களில் பதவி ஏற்க உள்ள நிலையில் அவசர அவசரமாக காந்தி கிராமம் பல்கலைக்கழகத்திற்கு துணைவேந்தரை ஆளுநர் நியமனம் செய்திருப்பது ஆதிக்கம் மற்றும் அநியாயமல்லவா?
– குமரன், பழனி
ப: தவறான ஆளுமை _ அதிகார முறைகேடு _ தேர்தல் துவங்கி முடிவுகள் வரும் முன்னர் இப்படிச் செய்வது ஏற்புடையதல்ல. கண்டனக் குரல்கள் ஒங்கி ஒலிக்க வேண்டும்!