மருத்துவம் : விதி நம்பிக்கையை விலக்கிய அதி நவீன மருத்துவங்கள்! [28]

ஏப்ரல் 16-31,2021

கல்லீரல் அழற்சி

(HEPATITIS)

¨           நாள்பட்ட அழற்சியில், நோயாளிகள் பெரும்பான்மையானோர் அறிகுறிகள் இல்லாமலோ, குறைந்த அறிகுறிகளுடனோ காணப்படும் நிலை இருக்கும். இரத்தப் பரிசோதனை மட்டுமே நோயை உறுதிப்படுத்தும் நிலை பல நேரங்களில் ஏற்படும்.

¨           கல்லீரல் எந்த அளவு சேதமடைகிறதோ, அந்த அளவுக்கு நோயின் அறிகுறிகள் இருக்கும்.

¨           மஞ்சள் காமாலை எனப்படும் அறிகுறிகள் மெதுவாகவே தோன்றும்.

¨           அந்த மஞ்சள் நிற மாற்றம் என்பது கல்லீரல் அதிகளவு சேதமடைந்ததையே காட்டும்.

¨           வயிறு எப்பொழுதும் உப்பியே காணப்படும்.

¨           விலா எலும்புகளுக்கு கீழ், வலது புறத்தை அழுத்திப் பார்த்தால், கல்லீரல் வீக்கம் எளிதாகத் தெரியும்.

¨           லேசான காய்ச்சல்.

¨           வயிற்றில் நீர்மங்கள் சேர்தல் இதை ‘மகோதரம்’’ என்பர்.

¨           கல்லீரல் மிகவும் சேதமடைந்துவிட்டால், ஏற்படும் வடுக்களால் கல்லீரல் செயல்பாடுகள் பாதிப்படைவதாலும், உடல் மெலிவடையும்.

¨           இரத்தக் கசிவுகள் ஏற்படும்.

¨           அளவு கடந்த இரத்தப்போக்கு, மாதவிலக்குக் காலங்களில் உண்டாகும்.

¨           நுரையீரலில் வடுக்கள் ஏற்படும். அதன் விளைவாக நுரையீரலில் நீர் கோப்பு உண்டாகி, மூச்சுத் திணறல் ஏற்படும்.

¨           சிறு நீரங்களில் அழற்சி அடுத்த நிலையில் ஏற்படும்.

¨           ஒவ்வோர் உறுப்பும் பாதிப்படையும் நிலையில், அதை ஒட்டிய பாதிப்புகளும் ஏற்படும்.

¨           கல்லீரல் அழற்சி நாளடைவில் மூளைக் கோளாறு ஏற்படுத்தும் நிலையும் ஏற்படும். முதலில் மனக்குழப்பத்தில் துவங்கும் மூளைக் கோளாறு, சிறிது நாள்களில் ‘ஆழ் மயக்கத்தில்’  (Coma) ஆழ்த்தி விடும்.

¨           ஆழ் மயக்கம் தெளியாமலே நோயாளி மரணமடையும் நிலையை ஏற்படுத்தும்.

¨           மரணம் நிகழும் முன், நோயாளி மிகவும் தொல்லைப்படுவார்.

¨           ஆரம்ப நிலையில் பசியின்மையில் துவங்கும் அறிகுறி மேலே குறிப்பிட்டுள்ள ஒவ்வொரு நிலைகளாக வளர்ந்து முடிவில் மரணத்தை நிகழ்த்தும்.

¨           லேசான காய்ச்சலில் சில நோயாளிகளுக்கு உண்டாகும் அறிகுறி, மஞ்சள் காமாலையாக மாறி, கல்லீரலை அழித்து உயிருக்கு ஆபத்தை உண்டாக்கும் நிலையை கவனத்தில் கொள்ள வேண்டும்.

நோயறிதல்: கல்லீரல் அழற்சியில் கல்லீரல் இழைநார் வளர்ச்சி  (Civvhosis) ஏற்படுவதாலும், அழற்சியின் காரணமாக வீக்கம் ஏற்படுவதாலும், கல்லீரலை வயிற்றின் வலது புற மேல் பகுதியை அழுத்திப் பார்ப்பதாலேயே மருத்துவர் அறிந்து கொள்வார். இயல்பான நிலையில் கல்லீரலை வயிற்றை அழுத்திப் பார்ப்பதால் உணர முடியாது. ஆனால், நோயுற்ற நிலையில் கல்லீரல் வீங்கி விடுவதால் எளிதில் தொட்டுணர முடியும்.

கல்லீரல், தன் செல்களை, லேசான பாதிப்பு இருந்தால் எளிதில் சீராக்கிக் கொள்ளும். ஆனால், பாதிப்பின் அளவு அதிகமாகும்போது, இது இயலாமல் போய்விடும்.

மஞ்சள் காமாலை பல நேரங்களில் கல்லீரல் பாதிப்பை வெளிப்படுத்தும் முதல் அறிகுறியாக வெளிப்படும். சிறுநீர் வழமைக்கு மாறாக அதிக மஞ்சளாக போதல், கண்ணின் விழி வெண்படலம், வெண்மைக்குப் பதில் மஞ்சள் நிறமாக மாறுதல், நகங்கள் இயல்பான நிறத்தில் இருந்து மாறி வெளிர் மஞ்சள் நிறமாக மாறுதல், தோலின் நிறம் இளம் மஞ்சளாக மாறுதல் போன்ற ‘மஞ்சள் காமாலை’ அறிகுறிகள் கல்லீரல் நோய்த் தொற்றாலும், கல்லீரல் அழற்சியாலும் வெளிப்படும். இதன் அடிப்படையில் மருத்துவர், நோயாளியின் அறிகுறிகளைக் கொண்டு, மேற்கொண்டு சோதனைகள் மேற்கொள்ள அறிவுறுத்துவார்.

கல்லீரல் அழற்சியில், ஈரலின் பாதிப்பு ஏற்படுவதால், ஈரலுக்கு ஓய்வு கொடுக்கும் வகையில் உணவுப் பழக்கங்கள் இருக்க வேண்டும். எண்ணெய் உணவுகள், பொறித்த உணவுகள் முழுமையாகத் தவிர்க்க வேண்டும். வேக வைத்த உணவுகள் சிறந்தவை. பழங்கள், காய்கறிகள் நல்ல உணவுகள்.

நாட்டு மருந்துகள் பலரால் பயன்படுத்தப் படுகின்றன. மஞ்சள் கரிசலாங்கண்ணி, கீழாநெல்லி இலைகள் சிறந்த மருந்துகளாக கல்லீரல் அழற்சிக்குக் கொடுக்கப்படுகின்றன. இவை கல்லீரலை பலப்படுத்தவே பயன்படும். இதுவே “லிவ் 52’’ என்ற மருந்தாகப் பயன்படுகிறது.

சித்த மருத்துவத்தில் மஞ்சள் காமாலைக்கு சிறந்த மருந்துகள் கொடுக்கப்படுகின்றன.

(தொடரும்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *