சிறுகதை : அர்த்தநாரீஸ்வரி

ஏப்ரல் 16-31,2021

கவிப்பேரரசு வைரமுத்து

அவள் பெயர் ஈசுவரி. அவளை அறிந்தவர்கள் அனைவரும் அவளைப் பற்றிச் சொல்லும் முதல் வார்த்தை ‘பாவம்‘. இரண்டு பொருள்கொண்ட அந்தப் ‘பாவம்’ இரக்கத்தையும் குறிக்கலாம்; குற்றத்தையும் குறிக்கலாம். அந்தச் சொல் அவள் மீது இரக்கத்தையே காட்டுகிறதென்றால் அதை அவள் விரும்பவில்லை; குற்றத்தையே குறிக்கிறதென்றால் அதற்கு அவள் பொறுப்பில்லை.

ஒரே ஓர் எழுத்தில் அவள் தலையெழுத்தே மாறிப்போனது. “சீ’’ இருக்க வேண்டிய இடத்தில் “ஙீ’’ வந்துவிட்டது. அதனால் அவள் ஒட்டு மொத்த வாழ்வும் கேள்விக்குறியானது. பதவி, பணம், மானம், நம்பிக்கை இவையெல்லாம் மாறிப் போனது குறித்துக்கூட அவள் கவலையுற வில்லை. அந்த ஓரெழுத்து மாற்றத்தால் அவள் பிறவியே மாறிப்போனது; அப்படித்தான் சொல்கிறது அரசாங்க அறிக்கை.

‘நான் செய்த பிழை என்ன? ஏன் என்னை தண்டிக்கிறீர்கள்?’ என்ற அவளது கேள்வியின் நியாயம் “இதயத்தில் தொடங்கித் தொண்டையிலேயே முடிந்துபோகிறது. அந்தக் கேள்வியை எய்யும் இலக்கு எதுவென்பதையும் அறியவில்லை அந்தக் கிராமத்துப் பேதை. பெற்ற போலீஸ் வேலை மூன்றே மாதங்களில் பறிக்கப்பட்டு வெறுங்கையோடு வீடு வந்து நிற்கிறாள்.’’

ஆத்தா அன்னத்தாயி வாடித் தொங்கிய தன் நெஞ்சில் அறைந்து அறைந்து அழுதசத்தம் கேட்டு ஊரே ஓடி வந்து வீட்டு வாசலில் மொத்தமாய் முளைத்துவிட்டது. நல்லதுக்குச் சொல்லிவிட்டால் கூட வந்துசேர யோசிக்கும் சனம், ஒரு கெட்டதென்றால் சட்டென்று கூடி விடுகிறதே! இது என்ன உளவியல் என்று அறியக் கூடவில்லை. மலர்ந்த பூவில் ஒன்றோ இரண்டோ என்று ஒட்டவரும் ஈக்கள், மாடு கழித்த சாணியில் பொதுபொதுவென்று வந்து பொதுக்கூட்டம் போடுவதில்லையா? எல்லாக் காலத்திலும் சனங்களுக்குக் கெட்டதன் மீது ஒரு ‘கிறுக்கு’ இருந்தே வந்திருக்கிறது. தனக்குப் பங்கில்லாத ஒரு கெட்டதை தூரத்தில் நின்று மனசார அனுபவிக்கும் ஒரு சோகசுகம் மனிதக்கூட்ட மரபணுக்களின் மாறாத குணம் போலும்.

ஒப்பாரி ராகத்தில் உரைநடையில் ஆரம்பித்தாள் அன்னத்தாயி.

¨¨¨

“அடியே ஆத்தா ஈசுவரி! நான் பெத்த நல்லதங்கா! என் தலையில கல்லத் தூக்கிப் போட்டுட்டியேடி பாவி. நான் மூணே வருசத்துல தாலியறுத்தேன். நீ மூணே மாசத்துல வேலையறுத்து வந்து நிக்கிறியே. இப்பத்தானடி… முப்பது நாளைக்கு முன்ன போலீஸ் உடுப்பு மாட்டி பூட்ஸ் போட்டு ‘தாட் பூட்’ தஞ்சாவூருன்னு நடந்துவந்து ஊரையே அதிரி புதிரி பண்ணிட்டுப்போன. அதுக்குள்ள உள்ளதும் போச்சுடி நொள்ளக்கண்ணின்னு வந்து நிக்கிறியே! ஒன் தண்டிக்குந் தரத்துக்கும் ஒனக்கு எந்தச் சீமையில மாப்பிள்ள பாக்கிறதுன்னு நான் பெருமூச்சு விட்டுப் பேய் முழி முழிக்க… இப்படி உள்ள வேலை பறிபோயி ஒத்தக் காட்டுல நிக்கிறியே.

எம் மக போலீஸ்காரியாயிட்டா… பொழைச்ச பொழப்பு போதுமடா சாமி… ஏலே எமராசா இனி எடுடா ஒன் பாசக் கயித்தன்னு எகத்தாளம் பேசிக் கெடந்தனே…? இப்ப ஒனக்குஞ் சேத்துல்ல என் உசுரக் கையில புடிக்க வேண்டியிருக்கு…..? மகள நம்பிக் கெடந்தேன் பாரு நானு… சீல கேக்கலாம்னு ஆத்தா மக வீடு தேடிப் போனாளாம். மக ஈச்சம் பாயக் கட்டி எதுக்க வந்தாளாம். தூரில்லாத பானைய எடுத்துத் தண்ணிக்குப் போய் வந்த கதையாகிப் போச்சே எங்கதை’’

சர்ரென்ற சத்தத்தோடு சளியிறக்கம் செய்தவள் மூக்கைச் சீந்திக் கூட்டத்தில் விட்டெறிந்தாள்.

“ஏ உள்ளூர்ப் பக்கிகளா! இங்கென்ன அவுத்துப்போட்டு ஆட்டமா காட்றாக? இங்க நாடகக் கொட்டகையா நடக்குது? எங்க வீடே இடி விழுந்து கெடக்கு. நீங்க ஆளுக்கொரு ஒடஞ்ச ஓடெடுத்து ஓடிப்போக வந்தீகளாக்கும்? எங்க பொழப்பு எடுபட்ட பொழப்பாகவே போகட்டும். நீங்க சந்தோஷமாப் போயிட்டு வாங்க”

திண்ணையில் இடிந்து உட்கார்ந்திருந்த மகளை வீட்டுக்குள் இழுத்துக் கொண்டு போய்க் கதவடைத்தாள் அன்னத்தாயி.

“எடுத்து வச்சாலும் குடுத்து வச்சிருக்கணுமா இல்லையா… என்ன நாஞ் சொல்றது?’’

“இவ என்ன தலப்பெரட்டுப் பண்ணி வேல காலியாகி வெளிய வந்தாளோ? தண்ணியில இருக்கிற மீனு குடிச்சதக் கண்டதாரு…? குடியாததக் கண்டதாரு…?’’

“கைக்கெட்டினது வாய்க்கு எட்டலையேப்பா. வருத்தமிருக்காதா வளத்தவளுக்கு?’’

படிக்காதவர்களின் உரையாடல்களைச் செழுமை செய்ய வந்தவைகளே பழமொழிகள். அங்கே பழமொழி அறியாதவன்தான் படிக்காதவன். ஆளுக்கொரு அபிப்ராயமும் அதை உறுதி செய்யப் புழங்கும் ஒரு பழமொழியுமாய்க் கலைந்து போனார்கள் ஊர்ச்சனங்கள்.

¨¨¨

இறைக்கச் சுரப்பது மணற்கேணி மட்டுமல்ல; கண்ணீரும்தான். தொடர்ந்து வரும் கண்ணீரைத் துப்பட்டாவில் துடைத்துக் கொண்டு ஓட்டு வீட்டு முகட்டையே வெறித்து வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள் ஈசுவரி.

கடைசி கிராமத்தின் கடைசிக் குடும்பத்தில் பிறந்தவள் அவள். விதவைத் தாயின் ஒரே ஆதரவில் பட்டம் படித்து, பத்துப்  பதினைந்து விளையாட்டுப் பதக்கங்களோடு வெளியேறி, மாவட்ட ஆயுதப்படையின் கான்ஸ்டபிள் வேலைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு, காவலர் பயிற்சிப் பள்ளியில் அன்று மாதப் பயிற்சியும் முடித்தவள். இப்போது அவளை வீட்டுக்குப் போ என்று விடுதலை கொடுத்துவிட்டது அரசாங்கம்.

இறந்த காலம் படம்படமாய் விரிந்தது அவள் கண்ணீர்த் திரையில்.

சின்ன வயது முதலே அவள் ‘துடி’யானவள். சில புகையிலைத் தோட்டத்தில் கரும்பு விளையாது; கரும்புத் தோட்டத்தில் புகையிலை விளையாது என்பதுபோல, சில பிள்ளைகளுக்குப் படிப்பு வரும் _ விளையாட்டு வராது; விளையாட்டு வரும் _ படிப்பு வராது. இவளோ படிப்பில் கெட்டி; விளையாட்டிலும் சுட்டி. ஓட்டு விடு -_ ஊரோரத் தோட்டம் இரண்டும்தான் அவர்களுக்குப் பூர்வீகச் சொத்து. ஆனாலும் அவளைப் படிக்கவைத்ததென்னவோ பால்மாடுதான். இரண்டு பசுமாடுகளின் பால் பீய்ச்சி விற்றுத்தான் மகளைப் படிக்கவைத்தாள் ஆத்தா அன்னத்தாயி. அவளுக்கு ஊட்டம் கொடுத்தது தாய்ப்பாலு: பட்டம் கொடுத்தது பசும்பாலு.

போலீஸ் தேர்வுப் பட்டியல் வெளியிடுவதற்குப் பத்து நாட்கள் முன்புதான் அந்தப் பயல் வீடு தேடி வந்தான். மாவட்டச் செயலாளரின் அக்காள் மகனாம். பணம் கொடுத்தால்தான் பட்டியலில் பெயர் வருமாம். பாலில் சத்தியம் செய்தான். வேலை வரவில்லையென்றால் பணத்தைத் திருப்பித் தருவது அவன் பொறுப்பு என்றான்.

பதறிப்போனாள் அன்னத்தாயி. உசுர வித்தாவது லஞ்சம் கொடுப்பது என்ற உறுதிக்கு வந்துவிட்டாள். ஊரடித் தோட்டத்தை ஒத்திவைத்தாள். பால்மாடு ரெண்டையும் விற்றுவிட்டாள். பண்டபாத்திரம் அடகு வைத்தாள். பத்தும் பத்தாதற்குக் கைமாத்து கால்மாத்து வாங்கினாள். விளக்கெண்ணையைத் தேய்த்துப் புரண்டாலும் உடம்பில் ஒட்டுவதுதானே ஒட்டும்? ரெண்டு லட்சத்துக்கு இருபதாயிரம் குறைந்தது.

“யப்பா! ஓம் பொறுப்புல வேல வந்திருச்சுன்னா சம்பளத்தவாங்கி அடைக்கிறோமப்பா” -_ அவன் கையில் கும்பிட்டுக் கொடுத்தாள்.

சமூகம் மாறித்தான் விட்டது. தீ _- கடன் _- புண் மூன்றிலும் மிச்சம் வைக்கக்கூடாது என்பது மூத்தோர் மொழி. அந்தப் பட்டியலில் இப்போது லஞ்சத்தையும் சேர்த்துவிட்டது அதிகார வர்க்கம்.

“சொன்ன வார்த்தையை நான் காப்பாத்துவேன்; குடுத்த வாக்க நீங்க காப்பாத்தணும்’’- _ கறாராய்ச் சொல்லிவிட்டு வெளியேறினான். நிச்சயம் வேலை கிடைக்கும் என்றும் உறுதிசொன்னான்.

தகுதி அடிப்படையிலேயே அவள் பெயர் மூன்றாம் இடத்தில் இருக்கும் பட்டியல் நகலைக் கையில் வைத்துக்கொண்டுதானே அவன் காசு வேட்டையை ஆரம்பித்தான். வேலையும் வந்துவிட்டது. காய்ந்துபோன ரெண்டு ஆப்பிளை அவன் கையில் கொடுத்துக் காலில் விழுந்து ஆசீர்வாதமும் வாங்கியாகிவிட்டது.

¨¨¨

காவலர் பயிற்சிப் பள்ளியில் ஈசுவரிதான் எதிலும் முதல். நீளம் தாண்டுதல் அவள்தான்; உயரம் தாண்டுதல் அவள்தான்; பளு எறிதல் பரிசு அவளுக்குத்தான். துப்பாக்கி சுடுவதிலும் அவள் வைத்த குறி தவறுவதில்லை . 22 ரைபிள், துப்பாக்கி 303, எஸ்.எல்.ஆர் வகைத் துப்பாக்கி மூன்றையும் சொல்லிக்கொடுத்த ஒரு வாரத்தில் தன் சொந்த விரல்களைப்போல இயக்கத் தொடங்கி விட்டாள். சக மாணவிகளுக் கெல்லாம் அவள் மீது பொறாமை. பொறாமை என்பதென்ன? கையாலாகாதவர்களின் பாராட்டுதானே? கண்காணிப்பாளர்களுக்கு மட்டும் அவள் மீது மரியாதை.

அன்று அந்த வெட்கங்கெட்ட சம்பவம் நடந்தேவிட்டது. ஓர் அதிகாலையில் பயிற்சி விடுதியில் குளிக்கப்போன ஈசுவரி குளியலறையைத் தாழிடப் பார்த்தாள். தாழ்ப்பாள் உடைந்து கிடந்தது. இல்லாத தாழ்ப்பாளுக்குக் காவல்துறையைக் கரித்துக் கொட்டுவதை விட, இருக்கும் கதவுக்குக் கடவுளுக்கு நன்றி சொல்லலாம் என்று சிரித்துக்கொண்டே ஒவ்வொன்றாய் உடை களைந்தாள். வைரக்கட்டை போல் உருண்டு திரண்டிருந்த தொடைகளில் சன்னஞ்சன்னமாய் நீர்விட்டு, உள்ளங்கை நீரை முகத்திலெறிந்து தோள் வழியே நீரூற்றி மேடு பள்ளங்களில் அது பாய்ந்து பரவி ஒழுகும் அழகை ரசித்துக் கொண்டிருந்தபோது படீரென்று கதவு திறந்து பல்துலக்கிக் கொண்டே உள்ளே புகுந்தாள் ரோகிணி. எதிர்பாராத அதிர்ச்சியிலிருந்து இரண்டு பெண்களும் மீள்வதற்குள் ‘‘அயாம் சாரி’ என்ற ரோகிணி, ஈஸ்வரியின் பிறந்தமேனி பார்த்து ‘ஆ’வென்று வாய் பிளந்தாள். அதிர்ச்சிக்கும் ஆச்சரியத்துக்கும் அருவருப்புக்கும் ஆளானாள். அதிர்ச்சியில் அவள் உறைந்து போனது கண்ட ஈசுவரி தன்னிரு கைகளாலும் சட்டென்று உயிர்த்தலம் பொத்தினாள். தன் வலிய உடலால் ரோகிணியை மோதி வெளித்தள்ளி முதுகைக் கதவில் போட்டு முட்டுக்கொடுத்து ஈரஞ் சொட்டச் சொட்ட அழுதாள் ஈசுவரி. அதில் எது தண்ணீர் எது கண்ணீர் என்பதை அவளால் பிரித்தறிய முடியவில்லை; ஏனென்றால் இரண்டு நீருமே உப்பு நீர்.

¨¨¨

“நீ சொல்றது உண்மையா?’’

ஆச்சரியத்தில் விறைத்து உட்கார்ந்தார் பயிற்சிப் பள்ளியின் கண்காணிப்பாளர்.

“சத்தியம் சார்; ரெண்டு கண்ணால பாத்தேன் சார். அவ ஈஸ்வரி இல்ல… ஈஸ்வரன். அதுலயும் அர்த்த நாரீஸ்வரன்…’’ என்றாள் ரோகிணி.

“நம்பவே முடியலையே’’

“வேணுன்னாக் கூட்டிட்டு வந்து நீங்களே பாருங்க சார்’’

“சேச்சே… அது என் வேலை இல்ல. மெடிக்கல் போர்டு செய்ய வேண்டிய வேலை’’

¨¨¨

எல்லாருக்குமான பொது மருத்துவச் சோதனையில் ஈசுவரியின் முறையும் வந்தது. மருத்துவச் சோதனை அறிக்கை அவளை ஆண் என்று சொன்னது.

குரோமோசோம்களின் ஆய்வு “46ஙீஙீ’’ என்று புலப்படுத்தினால் அது பெண். “46ஙீசீ’’ என்று புலப்படுத்தினால் அது ஆண். ஈஸ்வரிக்கான மருத்துவ அறிக்கை இப்படிச் சொன்னது :

இந்த நபருக்கான குரோமோசோம்களின் ஆய்வு 46ஙீசீ என்று புலப்படுவதால் சம்பந்தப்பட்டவர் ஆண் அமைப்பினர் என்று அறிய முடிகிறது. பிறப்புறுப்புகளின் வெளிப்புறத் தோற்றம் ஆண் _- பெண் என்ற தெளிவற்ற அடையாளம் காட்டுகிறது. ஆனால் ஆண்களுக்கான விரைகள் மட்டும் இறங்கிய நிலையில் காணப்படுகின்றன.

சோதனை முடிவுகளாவன: இது பிறழ் பாலினம். ஆண்மையூக்கி செயல்படாத ஆண் நிலை இது. போலி இருபாலினப் பண்பு இது.

¨¨¨

அவ்வளவுதான்! காவல்துறை இயக்குநரகம் ஆணையிட்டது.

“பாலினத்தால் பெண் என்ற ஆவணத்தோடு காவலர் பணிக்குத் தேர்வு செய்யப்பட்ட ஈசுவரி என்பவர் பிறழ் பாலினம் என்று கண்டறியப்பட்டதால் அவரைப் பணிநீக்கம் செய்து காவல்துறை இயக்குநரகம் ஆணையிடுகிறது”

பெண்ணாய்ப் போனவள் ஆணாய்ப் போனதால் வீணாய்ப் போனாள் என்று போகப்போகத் தெரிந்து கொண்டு அவளுக்கு ஆதரவாகப் புலம்பித் தீர்த்தது ஊர்.

பிரம்மன் செய்த பிழைக்காக ஒரு பேதைப் பெண் தண்டிக்கப்படக் கூடாதென்று துண்டேந்தி வசூலித்து, பொதுநல வழக்குப்போட்டது ஊர்.

¨¨¨

“பிறந்தது முதலே பெண்ணென்று அறியப்பட்டவர் _ ஒரு பெண்ணின் அடிப்படைக் கூறுகளோடும் இந்திரிய மரபுகளோடும் தன் உடலையும் வாழ்வையும் பிணைத்துக் கொண்டவர் _- இந்த இருபத்து நான்கு வயதிலும் ஒரே பாயில் தன் தாயைக் கட்டிப்பிடித்துக்கொண்டு உறங்குகிறவர் -_ நடை உடை பாவனைகளால் பெண்ணையே பிரதிபலிப்பவர் ஈசுவரி. சாதாரண மனிதர்களை ஆணென்றும் பெண்ணென்றும் தீர்மானிப்பது உடலியல் சார்ந்தது. இந்தப் பிறழ்பாலினத்தில் ஒருவர் ஆணா பெண்ணா என்று தீர்மானிப்பது வெறும் உடலியல் சார்ந்ததல்ல; உளவியல் சார்ந்தது. குரோமோசோம்களுக்கு எண்ணிக்கைதான் தெரியும். இதயம் தெரியாது. இயற்கை இப்படிச் சதி செய்யும்போது அவர் ஆணா பெண்ணா என்று தீர்மானிக்க வேண்டிய பொறுப்பு சம்பந்தப்பட்டவர்களின் உரிமையே தவிர, சட்டத்தின் உரிமையல்ல. இந்தப் பிறழ்பாலினம் ஆதரிக்கப்பட வேண்டியதே தவிர, நிராகரிக்கப்பட வேண்டியதல்ல. உடைந்துபோன ஓர் இதயத்தின் குரல் தன் உடலுக்காக வாதாடுவதை நீதிமன்றம் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும்.’’

சமூக ஊடகங்கள் வருந்தி வருந்தி வாதாடின.

¨¨¨

“ஏ ஈசுவரி! வேலை வாங்கித் தந்தது என் பொறுப்பு; அதை விட்டுட்டு வந்தது ஒன் பொறுப்பு. என் வார்த்தையை நான் காப்பாத்திட்டேன். ஒங்க வாக்கை நீங்க காப்பாத்தணுமா இல்லையா? இருபதாயிரம் பாக்கி இருக்கு. வர்ற வெள்ளிக்கிழமை கடைசிக் கெடு. தவறுச்சுன்னு வச்சுக்க… சனிக்கிழமை சாயங்காலத்துக்குள்ள ஆத்தாளும் மகளும் குடியிருக்க வீடிருக்காது’’

வெந்த புண்ணில் வேல் பாய்ச்சிப் போய்விட்டான் லஞ்சப் பாக்கிக்காரன்.

வியாழக்கிழமை நள்ளிரவு. இதுதான் தன் கடைசி ராத்திரி என்ற முடிவோடு போர்வைக்குள் புதைகிறாள் ஈசுவரி. வெள்ளிக்கிழமை தீர்ப்பு வருகிறது.

உறுதியான குரலில் நீதிபதி தன் தீர்ப்பை வாசிக்கிறார்:

‘’சட்டத்தின் முன் சமபாதுகாப்பு வழங்கப்படும் என்பதற்கு உத்தரவாதம் தரவந்த இந்திய அரசமைப்பு எந்த ‘நபரு’க்கும் என்று குறிக்கிறதே தவிர ஆண் _- பெண் _- மூன்றாம் பாலினம் என்று எந்தப் பாகுபாட்டையும் விதிக்கவில்லை. மற்றும் இந்திய அரசியலமைப்பின் 15ஆம் பிரிவு மதம் _- இனம் _- ஜாதி _- பாலினம் _- பிறப்பிடம் ஆகிய எந்தக் காரணத்திற்காகவும் குடிமக்களில் யாருக்கும் பாகுபாடு காட்டலாகாது என்று வலியுறுத்துகிறது. மேற்சொன்ன காரணங்களில் ஏதொன்றுக்காகவும் வேலைவாய்ப்பிலும் பாகுபாடு கூடாதென்று அதே அரசியலமைப்பின் பிரிவு 16(2) உத்தரவாதம் தருகிறது. இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட ஈஸ்வரி என்பவர் கருப்பை இல்லாதவர் என்பது – அவர் ஆணினத்தைச் சார்ந்தவர் என்பதற்கு  –  ஒரு காரணமாகக் காட்டப்படுகிறது. ஒரு பெண்ணின் அடையாளம் கருப்பை மட்டும்தானா? பின்னாளில் விரும்பியோ விரும்பாமலோ கருப்பை நீக்கப்படுபவர்கள் பெண்பாலினத்தில் சேருவார்களா? மாட்டார்களா? அர்த்த நாரீஸ்வரரை ஏற்றுக்கொள்ளும் இந்துக்களின் சம்பிரதாயம் இந்தப் பிறழ்பாலினத்தைக் கரிசனத்தோடு காண்பதற்கு ஏன் தயங்குகிறது? பிறப்பின் பிழைகளுக்குப் பிறந்தவர்கள் எப்படிப் பொறுப்பாவார்கள்? எனவே, பெண்ணாகப் பிறந்து பெண்ணாக வளர்ந்து தன்னைப் பெண்ணென்றே உணரும் ஒரு பெண்ணை அவர் விரும்புகிற பெண் பாலினத்திலேயே இணைத்துக்கொள்ள வேண்டுமென்று இந்த நீதிமன்றம் கருதுகிறது. ஈசுவரிக்கு எதிராக வழங்கப்பட்ட பணிநீக்க ஆணையை ரத்துசெய்து மாவட்ட ஆயுதப்படையின் பெண் காவலராக ஈசுவரியை மீண்டும் நியமிக்க இந்த நீதிமன்றம் ஆணையிடுகிறது’’

¨¨¨

ஊரே கூடி நின்று குமுறுகிறது அரசாங்க ஆஸ்பத்திரியில். –

“கோர்ட்டு சொல்லிருச்சு. கும்புடுற சாமியே! விஷம் குடிச்சுக் கெடக்கிற எங்க பொண்ண நீதான் காப்பாத்தணும்‘’

‘அவள்’ பிழைக்க வேண்டுமே…. சுவரில் முட்டிமுட்டி மண்டை உடைந்து புலம்பினாள் அன்னத்தாயி.

‘அவன்’ பிழைப்பானா? மாட்டானா? கவலையோடு கவனித்துக் கொண்டிருந்தது காவல்துறை.

அவனா அவளா என்ற கவலை இல்லாது ஓர் உயிர் பிழைக்க வேண்டுமே என்று போராடிக் கொண்டிருந்தது மருத்துவம்.

உயிருக்கு என்ன பால்?

(மாண்பமை நீதியரசர் எஸ்.நாகமுத்துவின் தீர்ப்பின் அடிப்படையில் வனையப்பட்ட புனைகதை.)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *