தமிழ் எழுத்தாளர்களிடையே தன் அரசியல் அடையாளத்தை மறைக்காமல் கட்சிக் கறை வேட்டியுடன் இலக்கிய மேடைகளில் பங்கேற்பவரும், அவர் சார்ந்த கட்சி மட்டுமின்றி மற்ற தமிழ் வாசகர்களுக்கிடையேயும் பெரும் வரவேற்பும், நட்பும் கொண்ட எழுத்தாளர் வெ.அண்ணாமலை என்கின்ற இமையம் அவர்களுக்கு 2020ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது _ அவர் எழுதிய ‘செல்லாத பணம்’ நாவலுக்காகக் கிடைத்திருப்பது தமிழக வாசகர்கள் பலருக்கும் மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் கொடுத்துள்ளது.
தமிழ் இலக்கியத்தில் கால் நூற்றாண்டுக்கும் மேலாக இயங்கிவரும் இந்த இமையத்தின் முதல் நாவலான ‘கோவேறு கழுதைகள்’ வெளியானபோதே வாசகர்களுக்கிடையே பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. அந்தப் புதினத்தில் ஒடுக்கப்பட்டவர்களிலும் ஒடுக்கப்பட்டவர்களாக வாழும் புதிரை வண்ணார்களின் வாழ்க்கையையும் அவர்கள் மீது மேற்கொள்ளப்படும் வன்முறைகளையும் பதிவு செய்து, வாசிப்போர் மத்தியில் உரையாடலைத் துவக்கி வைத்தார்.
2013இல் வெளியான இமையத்தின் ‘பெத்தவன்’ என்னும் நெடுங்கதை, ‘ஆறுமுகம்’, ‘செடல்’, ‘எங்கதெ’ ஆகிய நாவல்களும் ‘வீடியோ மாரியம்மன்’, ‘நன்மாறன் கோட்டைக்கதை’, ‘நறுமணம்’, ‘சாவுச்சோறு’, என்று பல சிறுகதைத் தொகுப்புகளும் தமிழர்களின் வாழ்வியலையும், தமிழ் நிலத்தின் தொன்மைகளையும், மக்களிடையே உள்ள ஜாதிய பிரச்சினைகளையும் வெளிப்படுத்துவதாய் எழுதப்பட்டு தமிழக மக்களின்
பெரும் ஆதரவைப் பெற்றன. ஆங்கிலம், பிரெஞ்சு என்று பல்வேறு மொழிகளில் அவருடைய கதைகள் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. ஆனந்தவிகடன் விருது, தமி
ழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்க விருது, திராவிடர் கழகத்தின் ‘பெரியார் விருது’, ‘இயல் விருது’ என பல விருதுகள் அவருக்குக் கொடுக்கப்பட்டன. திராவிட இயக்கத்தில் இருந்தபோதும் ‘கட்சிக்காரன்’, ‘வாழ்க வாழ்க’ போன்ற படைப்புகள் மூலம் விமர்சனங்களை முன் வைக்கும் துணிச்சல்மிக்க எழுத்தாளர் இமையம். ‘செல்லாத பணம்’ எனும் புதினமும்கூட சமூகப் பிரச்சினையான ஜாதி மறுப்புத் திருமணத்தின் மய்யக் கருத்தை ஒட்டி 2018ஆம் ஆண்டு படைக்கப்பட்டதாகும்.
விருது அறிவிக்கப்பட்டபோது மகிழ்ச்சியோடு அவர் கூறுகையில், “நீதிக் கட்சித் தலைவர்களையும், திராவிட இயக்க முன்னோடிகளையும் இந்தத் தருணத்தில் நினைத்துக் கொள்கிறேன். திராவிட இயக்கச் சிந்தனைகளே என் எழுத்துகளுக்கான அடிப்படை. தந்தை பெரியார், டாக்டர் அம்பேத்கர், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் ஆகிய நால்வருக்கும் இந்த விருதுகளைச் சமர்ப்பிக்கிறேன்’’ என அகம் மகிழ்ந்து கூறியுள்ளார்.
இலக்கியத்தில் இசங்களின் வகைமைக்குள்ளும், எந்த ஒரு குழு வாதத்திலும், தம்மை இணைத்துக் கொள்ளாமல், தன் எழுத்துத் திறன், கலை நேர்த்தி, சமூக அக்கறை இவற்றை மட்டுமே நம்பி இயங்குபவர். நன்றாக எழுதினால், எழுத்து, தானே வாசகர்களைப் போய்ச் சேரும். அதற்கு யாருடைய பரிந்துரையும் தேவையில்லை என்பதை இவ்விருது பெறுவதன் மூலம் மெய்ப்பித்துள்ளார்.
அவருக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினும் வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்த பாராட்டு அறிக்கையில்,
திராவிட இயக்கச் சிந்தனையாளரும், சிறந்த தமிழ் இலக்கியப் படைப்பாளரும் முற்போக்குக் கொள்கையாளருமான தோழர் இமையம் அவர்களுக்கு அவர் 2018இல் எழுதி வெளியான ‘செல்லாத பணம்’ என்னும் புதினத்திற்கு சாகித்திய அகாடமி விருது கிடைத்திருப்பதை அறிய பெருமகிழ்ச்சியடைகிறோம்!
எளிய ஒடுக்கப்பட்ட விவசாயக் குடும்பத்தைச் சார்ந்தவரும், கிராம மக்களின் வாழ்க்கையை நன்கு புரிந்தவரும், சமூக ஆர்வலருமான அவரது முதல் இலக்கியப் படைப்பான ‘கோவேறு கழுதைகள்’ என்னும் நாவல் (புதினம்) 1994இல் வெளியானது. பல்வேறு விருதுகளைப் பெற்றவர்; கனடா நாட்டின் இலக்கிய வட்டாரங்களால் அழைக்கப்பட்டு ‘இயல் விருது’ வழங்கிப் பெருமைப்படுத்தப்பட்ட திராவிடச் செம்மல் இவர். பள்ளி ஆசிரியர். நம்மால் பெரியார் விருது வழங்கிச் சிறப்பிக்கப்பட்டவரும்கூட!
சீரிய இலட்சியவாதியான அவருக்கு நமது வாழ்த்துகளும், பாராட்டுதலும்!
இவருக்குக் கிடைத்த விருது, அறிவு, ஆற்றலுக்குக் கிடைத்த விருது மட்டுமல்ல… கொள்கை இலக்கியங்களில் ‘நம்மவர்கள்’ யாருக்கும் சளைத்தவர்கள் அல்ல என்பதைப் பறைசாற்றும் உண்மையும் ஆகும்.
– சந்தோஷ்