திராவிட கழகங்கள் தமிழ்நாட்டிற்கு செய்தது என்ன? எனக் கேட்கும் மத்திய பா.ஜ.க. அரசுக்கு தமிழ்நாட்டின் கல்வி முன்னேற்றத்தை மற்ற மாநிலங்களுடன் ஒப்பிட்டாலே உயர்வு புரியும்.
இந்தியாவிலேயே அதிகமான மருத்துவக் கல்லூரிகள் தமிழகத்தில்தான் உள்ளன. ஆனால், தமிழர்கள் அதில் அதிகம் இடம் பெற்றுவிடக் கூடாது என்பதற்கு ‘நீட்’ தேர்வைக் கொண்டு வந்து எளிய மாணவர்களின் மருத்துவக் கல்விக் கனவை நிர்மூலமாக்கியது மத்திய பா.ஜ.க. அரசு. அது உருவாக்கியுள்ள தேசியக் கல்விக் கொள்கைகள் எளிய மக்களை முற்றிலுமாகக் கல்வியிலிருந்து வெளியேற்றவே வழிவகுக்கிறது.
கஸ்தூரிரங்கன் குழு பரிந்துரைத்துள்ள புதிய இந்தியாவுக்கான(?) தேசியக் கல்விக் கொள்கை 2035ஆம் ஆண்டில், 18 முதல் 23 வயதினரின் GER (Gross Enrollment Ratio) உயர் கல்வி இணைவு விகிதம் 50% இலக்கை எட்ட வேண்டும் என்கிறது.
தமிழ்நாடு இப்போதே 50% விழுக்காட்டை எட்டிவிட்டது. உயர்கல்வியில் இணைபவர்களின் விழுக்காடு பிற மாநிலங்களில் எவ்வாறு உள்ளது?
இந்துத்துவத்தின் சோதனைச் சாலையான குஜராத்தில் வெறும் 22%தான். கலவர நாயகன் யோகி ஆதித்யநாத் ஆளும் உ.பி.யில் 24.2%தான். ராஜஸ்தானில் 23.1%தான். தேசிய சராசரிகூட 26.3%தான். ஆனால், திராவிட இயக்கங்கள் தொடர்ந்து ஆண்ட தமிழகத்தில் 49%அய் இது தாண்டி நிற்கிறது.
மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத் துறை வெளியிட்டுள்ள இந்தியாவின் சிறந்த 100 கல்வி நிறுவனங்களின் தர வரிசைப் பட்டியலில் தமிழகத்தின் 37 கல்லூரிகள் இடம் பெற்றுள்ளன. குஜராத்தின் 3 கல்லூரிகள் இடம் பெற்றுள்ளன. ம.பி., உ.பி., உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து ஒரு நிறுவனம்கூட இந்தப் பட்டியலில் இடம்பெறவில்லை.
இந்தியாவின் சிறந்த 100 பல்கலைக்கழகங்களில் இடம் பெற்றுள்ள தமிழகப் பல்கலைக்கழகங்களின் எண்ணிக்கை 24, குஜராத்திலிருந்து 2, உத்தரப்பிரதேசத் திலிருந்து 7, ராஜஸ்தானிலிருந்து 4, ம.பி.யிலிருந்து ஒன்றுகூட இல்லை. சமூகநீதிக் கோட்பாடு சார்ந்த அரசியல் ஒரு மண்ணை எப்படி முன்னேற்றும் என்பதற்கும், பா.ஜ.க. தாங்கிப் பிடிக்கும் சமூக அநீதிக் கோட்பாடு எப்படி தேசத்தைப் பாழ்படுத்தும் என்பதற்கும் மேற்கண்ட புள்ளிவிவரங்களே போதுமான சான்றுகள்.
திராவிட இயக்கப் பொருளாதார நிபுணர் முனைவர் வெ.சிவப்பிரகாசம் தனது ‘திராவிடர் இயக்க சமூக, அரசியல் பொருளாதாரச் சிந்தனையும் செயல்பாடும்’ என்னும் நூலில், பொதுச் சுகாதாரம், ஊட்டச்சத்து, பொருளாதாரம் ஆகியவற்றில் இந்தியாவின் பிற மாநிலங்களைவிட குறிப்பாக பா.ஜ.க. ஆளும் மாநிலங்களைவிட தமிழகம் எவ்வளவு உயர சிகரத்தில் இருக்கிறது என்பதை புள்ளி விவரங்களுடன் துல்லியமாகப் புலப்படுத்தியுள்ளார்.
மோடி அரசு நடைமுறைப்படுத்தியுள்ள புதிய கல்விக் கொள்கை, குறைந்த ஊதியத்தில் குழந்தைத் தொழிலாளர்களை உருவாக்கும் கூடங்களாகப் பள்ளிகளை மாற்றிவிடும் என்று குற்றம் சாட்டுகிறார் கல்வியியல் சிந்தனையாளரான பிரின்ஸ் கஜேந்திரபாபு.
சனாதனத்தினை உயர்த்திப் பிடிக்கும் பா.ஜ.க. ஆளும் மாநிலங்களைவிட, தமிழ்நாடு என்னும் பெரியார் மண் சமதர்மத்தின் மூலம் பெற்றுள்ள முன்னேற்றங்களை அழிக்கவே பா.ஜ.க. கட்சி இங்குக் காலூன்ற முயல்வதை வாக்காளர்கள் நன்கு உணர்ந்தே உள்ளனர். அதற்கான பதிலாகச் சட்டமன்றத் தேர்தலில் நல்ல பாடம் கற்பிப்பார்கள்.
– மகிழ்