பெரு.இளங்கோ
அரசியல் தளத்தில் அணுவணு வாக
அடிகள் பதித்தே உருப்பெற் றோரை
உரசிப் பார்த்திடும் உருப்படா ததுகளின்
உரைதனில் மயங்கி உளந்தடு மாறி
தரவுள வாக்கால் தமிழரின் உரிமை
தகர்ந்திடும் என்பதை நினைவில் கொண்டு
திராவிடம் மட்டுமே வெல்லும் என்பதை
தேர்தலின் மூலம் தெரிவிப் பீரே!
நடித்துப் பணத்தைப் பார்ப்பதை விடுத்து
நாடாள் வதிலே நாட்டம் கொண்டு
நொடியினில் ஆட்சியை மடியினில் கொள்ள
நோட்டம் பார்த்தே நந்தமிழ் நாட்டை
பிடித்திட எண்ணிப் பத்தரை மாற்றுபோல்
பிம்பம் காட்டிடும் பித்தரின் பின்னே
குடியின் பெருமை மறந்துசெல் பவர்கள்
குற்றம் புரிந்தவர் ஆகிடு வாரே!
எண்ணருங் கட்சிகள் எதிரியர் கூலிகள்
இன்தமிழ் நாட்டினை இரைகொள் வதற்காய்
எண்ணம் கொண்டே ஏட்டுச் சுரையென
இருப்பவர் மூலமாய் இயக்கிடும் வேளையில்
தண்டமிழ் நாட்டைத் தமிழரே ஆண்டிட
தமிழ்மகன் புரட்சிக் கவிவரி மெய்ப்பட
தொன்மைத் திராவிடம் வெல்லும் தீர்ப்பை
தொகைமிகு வாகத் தேர்தலில் காட்டுவீர்!
செந்தேள் ஆரியம் திராவிடம் தன்னை
சந்தினுள் நுழைந்து கொட்டியே வீழ்த்திட
செந்தமிழ் நாட்டில் செலாவணி பிடித்து
செய்கிற கமுக்கச் செயலத் தனையும்
சிந்தனை செய்திடில் சதிச்செயல் என்றே
சட்டென விளங்கிக் கொள்ளும் காலை
இந்தத் தேர்தல் அரசியற் கல்ல;
இனப்போர் என்பதைப் புரிந்துகொள் வீரே!
திராவிடத் தால்தான் வீழ்ந்தோம் என்றபின்
திராவிடக் கட்சியின் காலடி வீழ்ந்தவர்
திராவிடக் கழகமே கூடா தென்றபின்
திராவிடக் கட்சியின் தோளிலே அமர்ந்தவர்
‘திராவிட’ எனுஞ்சொல் தமிழ்த்தாய் வாழ்த்திலும்
ரவீந்திர நாதரின் நாட்டுப் பண்ணிலும்
இருக்கிற வரைக்கும் திராவிடம் சிறக்கும்!
இனத்தின் எதிரியைத் தேர்தலில் ஒறுக்குமே!