இதயம் இனித்தது!
ஜனவரி 1-15, 2021 உண்மை இதழில் வெளிவந்த செய்திகள் அனைத்தும் அருமை!
பெண்ணால் முடியும் பகுதியில், குமரியின் முதல் பெண் அய்.பி.எஸ். பிரபினா அவரது நேர்காணலைப் படித்தேன். நெகிழ்ந்தேன்.
தான், அய்.பி.எஸ் தேர்வில் வெற்றி பெற, சில தடவை வெற்றி வாய்ப்பை இழந்தபோதும் துவண்டு விடாமல் 5ஆவது முறையாக தேர்வு எழுதி, அகில இந்திய அளவில் 445ஆவது இடத்தைப் பிடித்து அய்.பி.எஸ் அதிகாரி பணியிடத்தை எட்டிப் பிடித்தார் என்பதும், இந்த வெற்றியின் மூலம் ‘குமரி’ மாவட்டத்தின் முதல் பெண் அய்.பி.எஸ் என்ற பெருமையையும் – அவர், தனதாக்கிக் கொண்டார் என்பதைப் படித்தபோது இதயம் இனித்தது-.
பிரபினா அவர்களின் பெற்றோர் தன் மகளுக்கு, படிப்பதில் தன்னம்பிக்கையையும் தைரியத்தையும் ஊட்டி இருப்பது போற்றத்தக்கது. அய்.பி.எஸ் பிரபினா அவர்கள் பெண் இனத்தைக் காக்கும் மாதர்குலத் திலகமாக திகழ எனது இதய வாழ்த்துகள்!
‘தமிழர் திருநாளில் உறுதிமொழி ஏற்போம்!’ என்ற தலைப்பில் பேராசிரியர் முனைவர் கடம்பூர் மணிமாறன் எழுதிய கவிதை செங்கரும்பாய் செந்தேனாய் இனித்தது.
ஓயாமல் தொடர்ந்து நம் ஆசிரியரிடம் கேள்விக் கணைகள் தொடுத்த அருமைமிகு, கேள்வியின் நாயகர் நெய்வேலி க.தியாகராஜன்! அவர்கள் மறைந்த செய்தியை, சிந்தனைப் பகுதியில் படித்ததும் கலங்கியது கண்கள்!
– தி.பொ.சண்முகசுந்தரம், திட்டக்குடி
பாராட்டுக் கடிதம்
இதழ் ஆசிரியருக்கு வணக்கம். 2021 ஜனவரி
16-31 இதழை முதல்முறையாகப் படிக்கத் துவங்கினோம். திருக்குறளையும், தமிழரின் பண்பாட்டுப் பொங்கல் விழாவினைக் கொச்சைப்படுத்தும் மனு கும்பலுக்கு 4, 5ஆம் பக்கம் நல்ல புத்தியைக் கொடுக்கும். தாய்மை உணர்ச்சியை மிஞ்சியது உழவர்களின் உணர்ச்சி என்பது அதைவிட பெருமை.
“ஒன்று பட்டோம் சாதியில்லை, சமயமில்லை குரல் கேட்க ஆள்வோரின் காதே ஒப்பம் கூறுவாயே, இல்லையேல் புரட்சி தோன்றும் எனும் புரட்சிக்கவிஞர் பாரதிதாசனின் கவிதை வரி வெகுசாட்டையடி. ‘ஆரியர் நுழைவால் அனைத்தும் பாழ்’ அருமை. ஆரியர் சூழ்ச்சியை அறுத்தெறிந்த பெருமை திராவிட இயக்கங்களுக்கு உண்டு.
அருமை. ஆசிரியரின் நுட்பத்தால் – கூரிய சிந்தனையால் 31சி சட்டத்தின் மூலம் 69% இடஒதுக்கீடுக்கு 9ஆம் அட்டவணை பாதுகாப்பு பெற வைத்த பெருமை நம் இயக்கத்துக்கு உண்டு. அருமை. 1948லேயே என்.சோமசுந்தரத்தை நீதிபதியாக்கிய பெருமை நம் இயக்கத்துக்குண்டு. ‘அதிக பெண் நீதிபதிகளைக் கொண்ட நம் தமிழ்நாடு’ இந்தியாவுக்கே எடுத்துக்காட்டு என்பது நமது இயக்கத்துக்கே பெருமை. ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ இக்குறளை உலகம் போற்றும், வணங்கும்.
ஆனால், மனுவை பார்ப்பனர்களும் இந்து மதமும் மட்டும்தான் தூக்கிப் பிடிக்கும்; உலகம் போற்றாது. திருக்குறள் 200 கூறினால் அருமையான உணவை இலவசமாகச் சாப்பிடலாம் என்று அறிவித்து திருக்குறள் பரப்பும் புதுச்சேரிக்கு (வாழ்த்து) ஓட்டலுக்கும் பெருமை.
மும்பை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு மூடநம்பிக்கை கொண்டு பொருள் விற்போருக்கு ஒரு முட்டுக்கட்டை ஆரம்பம் அருமை, பெருமை. பக்கத்துக்குப் பக்கம் பகுத்தறிவுடன் கூடிய வெளிச்சம். உண்மை படிப்போம், பரப்புவோம், ஆசிரியரைப் பாராட்டுவோம், பேணிக் காப்போம்.
இப்படிக்கு,
– லெனின், ஸ்டாலின்
அன்புச் சகோதரர்கள் சிங்கிபுரம், வாழப்பாடி.