சு.அறிவுக்கரசு
1920 இன்றைய ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள நெல்லூர் சென்னை மாகாணத்தில் இருந்தபோது ஒரு வழக்கு. கோயில் ஒன்றின் தர்மகர்த்தாக்கள் மூவரையும் பதவி நீக்கம் செய்யக் கோரிய வழக்கு. கோயில் சொத்துகளைச் சரிவரப் பாதுகாக்காமல் நட்டம் ஏற்படுத்தி, நம்பிக்கைத் துரோகம் செய்ததாக வழக்கு. தொடுத்தவர்கள் தர்மரட்சண சபாவின் தலைவர் சுப்ரமணிய அய்யர், குருவா ரெட்டி, ராமி ரெட்டி, சீராமுலு ஆகியோர். எதிர்த் தரப்பினர் சேஷாத்ரி ரெட்டி, சுப்பராம ரெட்டி, பிச்சி ரெட்டி ஆகியோர். இவர்களின் வழக்குரைஞர் ராகவ ரெட்டி. சப்ஜட்ஜ் பார்ப்பனர் என்பதால், வழக்கை ஜில்லா ஜட்ஜ் வேணுகோபால செட்டியின் வழக்கு மன்றத்திற்கு மாற்றி விசாரணை செய்யுமாறு வழக்குரைஞர் ராகவ ரெட்டி மனுச் செய்தார். “வழக்கு தொடுத்தவர்கள் பார்ப்பன சபாவினர், பார்ப்பனரின் நலன் நாடும் அமைப்பு, என்பதால் பார்ப்பன நீதிபதி இயல்பாகவே அவர்களின் பக்கமாகவே செயல்படுவார். வழக்கின் குற்றம் குறைகளைக் கண்டு கொள்ளாமல் இருப்பார். பார்ப்பனர்களின் வழக்குரைஞர் பக்கமாகவே பரிவுடன் செயல்படுவார். பிரதிவாதிகளின் வக்கீல் பார்ப்பனர் அல்லர் என்பதால் இந்த வழக்கில் வெற்றி கிடைத்துவிட்டால், பார்ப்பனர்கள் பாதிக்கப்படும் நிலை ஏற்படும். ஆதலால் சப்ஜட்ஜ் நீலகண்டம் பந்துலுவுக்குப் பதிலாக மாவட்ட நீதிபதியே விசாரிக்க வேண்டும்’’ என்று மாறுதல் மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.
பார்ப்பன நீதிபதியின் ஜாதியைக் காரணம் காட்டி அவதூறு செய்துவிட்டதாக அரசு தலைமை வக்கீல் சர்.சி.பி.ராமசாமி அய்யர் மனு தாக்கல் செய்துவிட்டார்.
உண்மையில், வழக்கு விசாரணையின்போது இரண்டு தரப்பாரின் வாதங்களையும் கவனித்து, குறிப்பு எடுக்க வேண்டிய துணை நீதிபதி, அம்மாதிரி செய்யாமல் அலட்சியம் செய்வதாகக் குற்றம் சாற்றியுள்ளார் ராகவ ரெட்டி. என்றாலும் 1.1.1921இல் மாவட்ட நீதிபதி ராகவ ரெட்டியின் மாறுதல் கோரும் மனுவைத் தள்ளுபடி செய்துவிட்டார். மறுநாளே, ராகவ ரெட்டி அட்வகேட் ஜெனரல் சி.பி.ராமசாமி அய்யரிடம் மேல் முறையீடு செய்தார். பார்ப்பனர் அல்லாத ஒரு நீதிபதிதான் தம் வழக்கை விசாரிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். ஒட்டக்கூத்தன் பாட்டுக்கு இரட்டைத் தாழ்ப்பாள் என்பதைப் போல, ராகவ ரெட்டி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்தார் சி.பி.ராமசாமி அய்யர். உயர்நீதிமன்றத்திலும் பார்ப்பன நீதிபதிகள் தம் வழக்கை விசாரிக்கக் கூடாது என வாதிட்டார் ராகவ ரெட்டி. சி.பி.ராமசாமி அய்யர் வாதிடும்போது, பிரிவினைகளும் ஜாதி உணர்வுகளும் நிறைந்திருக்கும் நாட்டில் வழக்குரைஞர்களின் நலனைப் பாதுகாத்திட எல்லாவித நடவடிக்கைகளும் எடுக்கப்படுவது அவசியம் என்று கூறினார். அவ்வாறு செய்தால்தான் நீதி பரிபாலனம் செவ்வனே நடைபெறும் என முடித்தார்.
தனது குற்றச்சாற்றுகளைத் திரும்பப் பெற்றுக் கொள்ளும்படி உயர்நீதிமன்ற அமர்வு கூறியது. தனக்கும் பார்ப்பன நீதிபதிக்கும் தனிப்பட்ட கோபம் ஏதும் இல்லையென்று கூறிய ராகவ ரெட்டி தம் மனுவில் எந்தப் பகுதியை நீக்க வேண்டுமென்று அமர்வு (பெஞ்சு) குறிப்பிட்டுச் சொன்னால் நீக்கத் தயார் என்றும், அம்மாதிரிக் குறிப்பிடாமல் மனுவையே திரும்பப் பெறத் தாம் தயாரில்லை என்றார். தொழில் தர்மத்திற்கு மாறாகத் தாம் செயல்படுவதாகக் கூறுவோர் தாம் அப்பகுதியைச் சுட்டிக் காட்ட வேண்டும் என்றார். அதைப் பற்றி அட்வகேட் ஜெனரல் குறிப்பிட வேண்டும் என்று கேட்டார். இறுதியாக பிரச்னைக்குரிய பார்ப்பன சப்ஜட்ஜை உயர்நீதிமன்றம் விசாரித்தால், அவர் எப்படிப் பாகுபாட்டுடன் நடந்து கொண்டார் என்பதைப் புரிந்துகொள்ளலாம் என்றார், ராகவ ரெட்டி.
ஏற்க மறுத்த உயர்நீதிமன்ற நீதிபதி கோட்ஸ் ட்ராட்டர் என்பார், ராகவ ரெட்டியின் வாதம் மேலும் அவதூறு கூறுவதாகவும் நச்சுத் தன்மை மிக்கதாகவும் இருப்பதாக எரிச்சல் அடைந்தார். சாதாரண வழக்குரைஞராக இருப்பதால் இந்நிலை எனக் கருதிய ராகவ ரெட்டி மூத்த வழக்குரைஞர் யாரையாவது வாதாட அழைக்க முடிவு செய்தார். ஒருவரும் வாதாடச் சம்மதிக்கவில்லை. மாறாக, வழக்கின் வாதங்களைக் கவனித்து வருமாறு சென்னை வக்கீல் சங்கம் வெங்கடசுப்பாராவ் என்பவரைக் கேட்டுக் கொண்டது. மீண்டும் ஒரு பார்ப்பனர் தொடர்புபடுத்தப்பட்டார்.
இன்னொரு மனுவைத் தாக்கல் செய்தார் ராகவரெட்டி. அத்துடன், ஜஸ்டிஸ் ஏட்டில் தாம் எழுதிய “பார்ப்பனரும் நிருவாகமும்’’ என்ற கட்டுரையின் (3.1.1920 ஏட்டில் வெளியானது) நகலை இணைத்திருந்தார். நீதிபதிகளைவிட சாமான்ய குடிமக்கள் மேலானவர்கள் என அக்கட்டுரை குறிப்பிட்டிருந்தது. இதைப் பார்த்ததும் உயர்நீதிமன்றத்திற்குக் கோவம் தலைக்கேறியது. சக வழக்குரைஞர்களைக் குறை கூறினால் எப்படி மூத்த வழக்குரைஞர் உங்களுக்காக வாதாட வருவார்? என்று கேட்டார், அய்ரோப்பிய நீதிபதி. “அது என்ன ஜஸ்டிஸ் கட்டுரை? பார்ப்பனரைத் திட்டும் கட்டுரையா?’’ என்று கோவப்பட்டார் இந்திய நீதிபதி கிருஷ்ணன். நீதிபதி கிருஷ்ணன், நீதிபதி ராமேசம், அட்வகேட் ஜெனரல் சி.பி.ராமசாமி, சென்னை வக்கீல் சங்கம் சார்பான வழக்குரைஞர் வெங்கடசுப்பாராவ் என எல்லாருமே பார்ப்பனர்களே!
அக்டோபரில் தீர்ப்பு. ராகவ ரெட்டி வழக்குரைஞர் தொழில் செய்யத் தடை விதிக்கப்பட்டது. ஆறு மாதத் தடை. இதுதான் அன்றைய நீதி பரிபாலனம். ஆகவேதான்,
5.5.1921இல் கூடிய பார்ப்பனரல்லாத வழக்குரைஞர்கள் சங்கம் தீர்மானம் நிறைவேற்றியது -_ சென்னை உயர்நீதிமன்றத்தில் ஏற்படும் நீதிபதிப் பணியிடங்களில் பார்ப்பனர் அல்லாதவர்களை மட்டுமே நியமிக்க வேண்டும் என்று. ஏனென்றால், சி.பி.ராமசாமி அய்யரே ஒத்துக் கொண்டவாறு, பார்ப்பன ஆதிபத்தியம் நீதித்துறையில் நிலவுகிறது… குற்றச்சாற்று பார்ப்பனர்களை வெகுவாகப் பாதித்தது.
திராவிடர் கொள்கைப் பிரகடனம் 1916இல் வெளியிடப்பட்டதன் விளைவு இது. பூதேவர்கள் என மதிக்கப்பட்டு வணங்கப்பட்ட பார்ப்பனப் பரதேசிகள், துச்சமாகக் கருதப்பட்ட மாபெரும் சமூக மாற்றத்திற்கான புரட்சியை நீதிக்கட்சி தென்னகத்தில் ஏற்படுத்தியது.
தந்தை பெரியார் சுயமரியாதை இயக்கத்தைத் தொடங்கிய 1925ஆம் ஆண்டில், முக்கிய தீர்ப்பு ஒன்றினை அதே உயர்நீதிமன்றம் வழங்கியது.
“ஆரியர்கள் இந்தியப் பகுதிக்குள் நுழைவதற்கு முன்பேயே துரேனிய இனத்தவரான திராவிடர்கள் தென்இந்தியாவில் வாழ்ந்து வந்தனர். அவர்களின் பழக்க வழக்கங்களும் சட்டங்களும் இன்றளவும் நிலவுகின்றன. இவர்களை மனுநூல் எழுதியோர் சூத்ரர்கள் எனக் குறித்தனர். காலப்போக்கில், மனுவின் நீதி முறைகளை மண்ணுக்கான நீதிமன்றங்களும் -ஏற்றுப் பின்பற்றிடும் நிலை உருவாகிவிட்டது; அனைத்து மக்களுக்குமான சட்டங்களாக வந்துவிட்டன’’ எனத் தம் தீர்ப்பில் குறிப்பிட்டு எழுதியவர் நீதியரசர் தேவதாஸ்.
பார்ப்பனர்கள் ஒருதலைப் பட்சமாக நடந்து கொள்வதைக் குறிப்பிட்டு எதிர்த்தார் ராகவ ரெட்டி என்றால், சட்டங்களுமே பார்ப்பனர்க்குச் சாதகமாகவே அமைக்கப்பட்டுள்ளன என்பதை எண்பித்தவர் நீதியரசர் தேவதாஸ். “மனுவாதி ஒரு குலத்துக்கொரு நீதி’’ என்று பேராசிரியர் சுந்தரம் பிள்ளை பாடினார் அல்லவா?
புகழ்பெற்ற வழக்குரைஞராகத் திகழ்ந்த சர்.சிவசாமி அய்யர் (1864_1946) சென்னை, பனாரஸ் பல்கலைக்கழகங்களில் துணைவேந்தராக இருந்தவர். சென்னை சட்டக் கல்லூரிப் பேராசிரியர். ‘மெட்ராஸ் லா ஜர்னல்’ ஏட்டிற்கு இணை ஆசிரியராக 14 ஆண்டுகள் இருந்தவர்.
கைக்கடிகாரமும் பாக்கெட் கடிகாரமுமாக இரு கடிகாரங்களை வைத்துக் கொண்டு நேரம் தவறாமையைக் கடைப்பிடித்தவர். சென்ட் தடவிய கைக் குட்டைகளைப் பயன்படுத்தியவர். பளபள என பாலிஷ் செய்யப்பட்ட ஷூக்களை அணிந்து இரு குதிரை பூட்டிய கோச் வண்டியில் கம்பீரமாக அமர்ந்து மைலாப்பூரிலிருந்து நீதிமன்றம் வந்தவர். கடல் கடக்கக் கூடாது எனும் சாஸ்திர விதிகளை மீறியவர். ஆனாலும் சந்தியாவந்தனம் செய்து ஜாதி தர்மத்தைக் கடைப்பிடித்தவர். ஒரு நாளில் மூன்று முறை செய்தவர். பாகவத உபதேசம், தேவி பாகவதம் உபன்யாசங்களைக் கேட்பவர். பார்ப்பனர்க்கு உணவளித்துச் சடங்குகளைச் செய்தவர். இவ்வாறாக இரட்டைவேஷ வாழ்க்கை வாழ்ந்தவர். 1933இல் பொள்ளாச்சி நகர் மன்றத் தீர்மானம் நிறைவேற்றி ஓட்டல்களில் பார்ப்பனர் தனியாகவும் பார்ப்பனரல்லாதார் தனியாகவும் அமர்ந்து உணவு உண்ணும் முறையை ஒழித்தது. அதனை சிவசாமி அய்யர் எதிர்த்தார். தனிநபர் சுதந்தரத்தில் தலையிடக் கூடாது என்றார். அய்ரோப்பிய நாகரிகப் பூச்சை மீறி பார்ப்பன ஜாதிவெறிப் போக்கு தலைதூக்கியது. தான் திருக்காட்டுப்பள்ளி பார்ப்பனர் என்று நடந்துகொண்டார் வைதிகப் பார்ப்பானை நம்பினாலும், லவுகீகப் பார்ப்பானை நம்பக் கூடாது என்று பெரியார் சொன்னதன் உண்மை விளங்குமே!
பார்ப்பன வக்கீல்களின் ஆடம்பரமான வாழ்க்கைக்கான பணம் பார்ப்பனரல்லாத வழக்காடிகளுடையது என்பதுதானே உண்மை! ஆனாலும், பார்ப்பனர்கள் இதை ஒத்துக் கொண்டதில்லை. தாங்கள் ஏதோ திறமைவாய்ந்தவர்கள் என்றும், அதனால் பணம் கொழிக்கிறது என்றும் கூறினார்கள். உண்மை அது அல்லவே. எடுத்துக்காட்டாக, கோயிலில் கொட்டப்படும் பணம் முழுக்கவும் பார்ப்பனர் அல்லாதாருடையதே. ஆனால், அனுபவிப்பது பார்ப்பனர்கள். 1887இல் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் முன்பாக சாட்சியம் அளித்த (அந்தக் காலப் பிரபலம்) வி.பாஷ்யம் அய்யங்கார் இந்த உண்மையை ஒப்புக்கொண்டார் என்பது வரலாறு. அவர் சென்னை மாநிலக் கல்லூரியில் சட்டத்துறைப் பேராசிரியர். “பார்ப்பனரல்லாத இந்துக்களின் நன்கொடைத் தொகையின் உதவியால்தானே பெரும்பாலான பார்ப்பன மாணவர்கள் படிக்கிறார்கள் என்பது உண்மையா என்ற கேள்விக்கு ஆமாம் என்று பதில் அளித்தார். சூத்ரர்களின் உதவியால்தான் என்றும் கூறினார். இதே மாதிரியான உதவியை சூத்ர மாணவர்கள் பெறுகிறார்களா என்ற கேள்வி எழுப்பப்பட்டபோது, பார்ப்பனர் பெறும் அளவுக்குக் கிடையாது எனப் பதில் கூறினார். இதற்கு என்ன பொருள்? வாரி வழங்குவோர் சூத்ர பக்தர்கள்; பெரும்பகுதியைத் தின்று தீர்ப்போர் பார்ப்பன மாணவர்கள் என்பதுதானே! இதைத்தான் சர்.பிட்டி தியாகராயர் கேட்டார், பார்ப்பனரல்லாதார் கைப் பணம் பார்ப்பனரின் பாக்கட்டுக்குப் போகிறதே, இதைத் தடுத்து அப்பணம் பயனுள்ள வகையில் செலவாக வேண்டாமா? என்று. அந்தக் கேள்வியின் செயல் வடிவம்தான் பார்ப்பனரல்லாதார் இயக்கம். நீதிக்கட்சியின் தோற்றம்.
“சாதியைக் கீழ் என்றும் மேல் என்றும் நாட்டிவிட்டுப்
பாரதத்தாய் பெற்ற புத்திரரென்று – நிதம்
பல்லவிபாடிப் பயன் எதுவோ?’’ என்று கேட்டார் கவிமணி தேசிக வினாயகம் பிள்ளை. இந்தக் கேடு பயக்கும் ஜாதிகளை உண்டாக்கியவன் கிருஷ்ணன். அவனைக் கடவுள் என்கிறார்கள். அவன் கூறியது கீதை. அதை பாரதக் கதையின் இடையில் செருகிவிட்டு பகவத் கீதை என்கிறான்.
அந்த நூலின்மீது கை வைத்து “சத்தியம் செய்து எல்லா நீதிமன்றத்திலும் சாட்சி சொல்ல வைக்கிறது சட்டம். பொய் சாட்சி சொல்பவர்களும்கூட, இதே நூலின் மீது சத்தியம் செய்கிறார்கள். வேடிக்கை என்னவென்றால், இது புனித நூலாம். இந்த ஜாதிப் படிக்கட்டில் உச்சத்தில் உட்கார வைக்கப்பட்டிருப்பவன் பார்ப்பனன். நல்ல தமிழ்ச் சொல்லால் விளிக்கப்படும் கெட்ட மனிதர்கள். அவர்களின் ஜாதிப் பெயரையே பயன்படுத்தி அவர்களுக்கு எதிரான வசைச் சொல்லாக்கிய ரசவாதம் கற்றவர் பெரியார். பார்ப்பனரல்லாதார் பல ஜாதிகளைச் சேர்ந்தவர்கள் என்பது ஹிந்து மதம். இருப்பினும் அவர்களை ஒரு குடையின்கீழ் கொண்டுவந்து, தங்களின் உரிமைகளை மீட்டெழச் செய்தது தென்இந்தியர் நல உரிமைச் சங்கம் எனும் நீதிக் கட்சி. பல முனைகளில் வென்றுள்ளது. எனினும் முழுமை அடையவில்லை. தொடர்ந்து உழைப்போம். வெல்வோம். வெல்லும்.
தரவு: ‘BRAHMINS AND NON BRAHMINS’ நூல். எழுதியவர்: பேரா.எம்.எஸ்.பாண்டியன்