இந்திய கூடைப்பந்து பெண்கள் அணியில் 13 ஆண்டுகள் அணியின் தலைவராக இருந்தவர் தமிழகத்தைச் சேர்ந்த அனிதா பால்துரை. இவ்வாண்டு பத்மஸ்ரீ விருது மூலம் இந்திய ரசிகர்கள் அனைவரது கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்திருக்கிறார் அனிதா. தனது விளையாட்டுப் பயணத்தைப் பற்றிக் கூறுகையில்,
“பிறந்து வளர்ந்தது எல்லாம் சென்னைலதான். பூர்வீகம் திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் பக்கத்துல யாக்கோபுபுரம்னு ஒரு கிராமம். அப்பா பால்துரை சென்னையில் தலைமை காவலரா வேலை பார்த்தார். அதனால நாங்க இங்கே சென்னைவாசி ஆனோம். ஆறாம் வகுப்புவரை சாந்தோம் செயின்ட் ஆன்டனி பள்ளியில் படிச்சேன். அப்ப பள்ளியில் பி.டி ஆசிரியரா சம்பத் சார் இருந்தார். அவருதான் கூடைப் பந்தாட்டம் விளையாட ஊக்கப்படுத்தினார். எங்க குடும்பத்துல நான்தான் முதல் ஸ்போர்ட்ஸ்வுமன். அப்ப உறவுக்காரங்களும், சுற்றியுள்ளவங்களும் ‘விளையாடினா கருப்பாகிடுவா… ஆம்பளத்தனம் வந்திடும்’னு சொன்னாங்க. ஆனா, அப்பா என்னை விளையாட அனுமதிச்சாரு. அம்மாவும் உன் விருப்பப்படி செய்யின்னு ஊக்கப்படுத்தினாங்க.
எங்க டீம் பள்ளி அளவுல சிறப்பா வந்துச்சு. நிறைய ஜெயிச்சோம். பதிமூணு வயசுல மினி நேஷனல்ஸ் ஆரம்பிச்சது. அப்படியே நான் மினி யூத், ஜூனியர், சீனியர் டீம்னு விளையாட ஆரம்பிச்சேன். 2000இல் எனக்கு இந்திய ஜூனியர் டீமில் ஆட வாய்ப்பு கிடைச்சது. அடுத்த ஆண்டே இந்திய சீனியர் அணியில் இடம் பிடிச்சிட்டேன். அப்ப எனக்கு 15 வயதுதான். ஜூனியர் லெவல்ல விளையாட்டைப் பார்த்து, சீனியர் கேம்ப்ல போட்டாங்க. அங்க சீனியர் வீராங்கனைகளுடன் பொருந்திப் போனதால சீனியர் டீம்ல எடுத்துக்கிட்டாங்க. அனுபவமுள்ள வீராங்கனையா அணியை வழி நடத்திச் செல்லக்கூடிய பக்குவம் இருந்தமையால் 19 வயதிலேயே இந்திய அணியின் கேப்டனாகிட்டேன். அதேமாதிரி ஒன்பது சீனியர் ஆசிய கூடைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டிகள்ல கலந்துகிட்ட முதல் இந்திய பெண் வீராங்கனை என்ற பெருமையும் எனக்கு கிடைச்சது.
இந்திய அணிக்காக விளையாடியதால 2003லேயே ரயில்வேயில் பணி நியமனம் பெற்றேன். பிறகு, 2006ஆம் ஆண்டு காமன்வெல்த் கேம்ஸ், 2009இல் ஆசிய இன்டர் கேம்ஸ், 2010ஆம் ஆண்டு ஆசியன் கேம்ஸ், ஆசியா சாம்பியன்ஷிப்னு எல்லாம் ஆடினேன்.
இதுல 2009இல் ஆசிய இன்டர் கேம்ஸ்ல வெள்ளிப் பதக்கம் வாங்கினோம். 2011இல் ஆசிய பீச் கேம்ஸ்ல தங்கப் பதக்கம் பெற்றோம். இது 3க்கு 3ன்னு விளையாடுற விளையாட்டு. டீமுக்கு மூணுபேர்தான் விளையாடணும். அதேபோல மைதானத்தின் ஒரு பகுதியிலே விளையாடணும்.
அப்ப சீனாவை ஜெயிச்சோம். 2013இல் 3க்கு 3 ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியிலும் நாம் தங்கப் பதக்கம் வாங்கினோம். எனக்கு சர்வதேச அளவுல நாலு தங்கப் பதக்கம், ரெண்டு வெள்ளிப் பதக்கம் கிடைச்சது. தவிர தேசிய, மாநில அளவுல 30க்கும் மேற்பட்ட பதக்கங்கள் பெற்றிருக்கேன். இதுக்கிடையில் பி.காம்., எம்.பி.ஏ., படிப்புகளை தொலைதூரக் கல்வியில் முடிச்சேன். திருமணமும் ஆனது. காதல் திருமணம். கணவர் கார்த்திக் பிரபாகரன் தலைமை காவலரா இருக்காரு.
கல்யாணமாகி மூணே நாள்ல இந்திய கேம்ப்புக்கு போயிட்டேன். அதுக்கு கணவர் கார்த்திக் அளித்த ஊக்கம் முக்கியமானது. 2014இல் பையன் பிறந்தான். அந்நேரம், ‘உன்னுடைய கோல் இன்னும் முடியல. தொடர்ந்து விளையாடு’னு சொன்னதும் கணவர்தான்.
2017இல் சீனியர் டீம்ல இருந்து விலகினேன். எனக்கு அப்ப உதவி பயிற்சியாளரா இருக்க சான்ஸ் கொடுத்தாங்க. இப்போது தென்னக ரயில்வேயின் விளையாட்டுப் பிரிவில் சீஃப் வெல்ஃபேர் இன்ஸ்பெக்டராகப் பணி செய்கிறேன்.
2018ஆம் ஆண்டு ‘வாழ்நாள் சாதனையாளர் விருது’ தமிழக முதல்வர் கையால் வாங்கினேன். நிச்சயம் சிறந்த பயிற்சியாளராகி இந்திய கூடைப்பந்து அணியை ஆசியாவின் முதலிடத்திற்குக் கொண்டு வருவேன்…’’ என நம்பிக்கை விதைக்கிறார் அனிதா பால்துரை.
(தகவல் : சந்தோஷ்)