பொன்னீலன்
சாதாரணமா சாயங்காலம் ஆறு ஆறரையானா என் மக வீட்டுக்குத் திரும்பிடுவா. மணி இப்ப எட்டு ஆகுது. இன்னுங் காணல்ல. ஒரு வேளை பஸ்தான் கோளாறாகி எங்கயாவது கிடக்குதா? இல்ல வேற ஏதாவது பிரச்சனையா? இளைய பொண்ணு. ரொம்பச் செல்லமா வளர்க்கிறோம். அவ வராம வீடே துக்கம் பிடிச்சு இருண்டு கிடக்குது.
‘’அதா பஸ் சத்தம் கேக்குது. வாராளா பாருங்க. இல்லைன்னா ஒரு டாக்சிய எடுத்துக்கிட்டு நேரே காலேஜிக்குப் போங்க. இது என்ன, இப்பிடியே ஈசி சேர்ல படுத்து முகட்டப் பாத்துக் கிட்டு…. உள்வாசல்ல நின்னு அதட்டுறா என் தலைவி. பிள்ளப் பாசம் அவள உலுக்குது.
நான் எந்திரிச்சு, சட்டை மாட்டுறதுக்குள்ள முற்றத்தில செருப்புச் சத்தம் கேக்குது. சாட்சாத் மகளேதான்!
“ஏன் மக்கா பிந்திச்சு?’’
“எங்க மேடத்தப் பேய் பிடிச்சுக்கிட்டுதுப்பா.’’
புஸ்தகங்கள மேசையில எறிஞ்சிட்டு நேரே பாத்ரூம் போறா மக.
எனக்கானா ஒரே ஆச்சரியம். பேயா? அதும் ஒரு பேராசிரியரப் பிடிச்சிக்கிட்டுதா? பேய்களே ஒழிஞ்சு போன இந்தக் காலத்துலயா?
என் சின்ன வயசுல. எங்க ஊர்ல பேய் நடமாட்டம் அதிகம். கீழத் தெருவு பூவம்மையப் பிடிச்சிட்டு, மேலத் தெருவுல வள்ளியம்மையப் புடிச்சிட்டு என்று ஓயாமச் செய்தி பரவிக் கிட்டிருக்கும். வேடிக்கை பாக்கிறதுக்கு ஓடுவோம். அப்பாவிப் பூவம்மை காளியா மாறி அப்பன வெட்ட அருவாளத் தூக்கிக் கிட்டுப்பா….
கண்ண உருட்டி நாக்கத் துருத்தி அவ பார்க்கிற பார்வை… நமக்கு உதறல் எடுக்கும்.
“ஏண்டா எனக்கு நீ பூச குடுக்கல்ல?”
“குடுத்துடுறன் தாயே!”
துண்ட இடுப்புல கட்டிக்கிட்டு, கால்ல விழுந்து கும்புடுவான் அப்பன்.
இருபத்தஞ்சு வயசு அதிகாரி முன்ன நம்ம எம்பது வயது அப்பன் பாட்டன் விழுந்து கிடப்பானே _- அப்பிடி இருக்கும் காட்சி.
அஞ்சு நிமிசம்தான். அப்றம் அவ பழைய பூவம்மையாயிடுவா. அவ பாட்டுக்குச் சாணி பொறுக்கப் போயிடுவா.
வள்ளியம்மை இதுக்கு நேர் எதிர். கலகலன்னு எப்பவும் சிரிச்சுப் பேசக் கூடியவா, பேய் பிடிச்சிட்டா கம்முண்ணு மவுனமாயிடுவா. உதடு பிதுங்கிடும், இமை சுருங்கிடும். கர்வம் பிடிச்ச அதிகாரி மாதிரி தூட்டை (தாடை) இறக்கிக்கிட்டு உக்கார்ந்திருப்பா.
இப்படி படிக்காததுகளப் பேய் பிடிக்கிறதப் பாத்திருக்கோம். இது பி.எச்.டி. முடிச்சவங்க. பேராசிரியர் வேலை பார்க்கிறவங்க. எப்படிப் பிடிச்சுட்டு பேயி?
ஏதாவது பேய்களோட பீடங்கள்ல போயி உக்கார்ந்திருப்பாங்களோ?
இந்தப் பேய்கள் இருக்கே… அதுகளும் மனுசரப் போலத்தான். ஒரு கல்லுல அல்லது ஒரு மரத்துல அல்லது ஒரு கிணத்துல இப்படி எதுலயாவது பீடம் அமச்சு வாழும். யாராவது வசப்பிசகா… அந்தப் பீடத்துல போயி உக்காந்ததுட்டீங்க… அல்லது பீடத்துல மிதிட்சிட்டீங்க….. அம்புட்டுத்தான். பேயி உங்களப் பிடிச்சிடும். அப்புறம் லேசுல விடாது.
எங்க ஊருக்கு மேக்கால ஆலமரம் ஒன்னு நிக்குது. ராட்சச மரம். விழுதுக நெருங்கி, புதர் அடர்ந்து பட்டப்பகல்லயே நரி ஊளையிடும். அதுக்குள்ள இருக்கு ஒரு பீடம், சும்மா ஒரு குத்தக்கல்லுதான் _- ஆனா அதுதான் அதோட சிம்மாசனம் _ கொடை. அதாவது, திருவிழா குடுக்கும் போதுதான் அப்பிடி ஒரு பீடம் இருக்கிறது கண்ணுக்குத் தெரியும். மற்றபடி சாதாரண நாள்ள அது சாதாரணமாத்தான் கிடக்கும். ஆனா எவனாவது அதில் உக்கார்ந்துட்டான்…. அவன் கதி அதோகதிதான்!
ஒரு சமயம் எங்க ஊர் புதுமாப்ள ஒருத்தர் அந்தப் பாதை வழியா மாமியார் வீட்டுக்கு நடந்து வந்திருக்கார். நல்ல வெயிலு. கால்ல முள்ளு வேற தச்சிருக்கு. நேரே போயி அந்தப் பீடத்துல உக்காந்துட்டாரு. சரியான, உச்சிப் பொழுது… விடுமா அது! சக்குன்னு ஏறிப்பிடிச்சுட்டுது அவர. பிறகென்ன, அந்தப் பேய்க்கு உரிய சேட்டைகளைத் தொடங்கிட்டாரு. கண்ண உருட்டுறது, நிமிர்ந்து பார்க்கிறவன அடிக்கப் போறது, ஆடு வெட்டு காணிக்க வையின்னு ஆளுகள மெரட்டுறது இப்படி பதவி உயர்வு பெற்றுவந்த புது அதிகாரி மாதிரி ஊரப் பாடாப் படுத்திப்பிட்டாரு. பெரிய பெரிய மந்திரவாதிகள எல்லாங் கொண்டாந்து என்னென்னமோ பண்ணினாங்க. பத்து நாளு நல்லா இருப்பாரு….. திரும்பவும் பழையபடி தொடங்கிடுவாரு.
இதவிட பயங்கரமான சம்பவம் எங்க பள்ளியில நடந்தது. அப்ப நான் பத்தாவது படிச்சிட்டிருக்கேன். எங்க ஆசிரியர் தீவிரமான பகுத்தறிவுவாதி. வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் அறிவியலையும் பகுத்தறிவையும் இணைச்சுப் பேசி எங்கள்ல அனேகரோட பேய் நம்பிக்கையயே மாத்திப் போட்டாரு.
ஒரு நாள் பரிணாமக் கொள்கைய வகுப்புல விளக்கிக்கிட்டிருக்காரு….. கடவுள் படைப்புக் கொள்கை தூள் தூளா நொறுங்கி விழுந்துக்கிட்டிருக்கு……..
“ஆ ஆ…… ய்!”
திடீர்னு பொம்பளப்புள்ள பகுதியில ஒரு அலறல். வகுப்பே திடுக்கிட்டுப்போச்சு. யாருன்னு பாத்தா… சாந்தி! இருக்கிற இடம் வெளியே தெரியாத அப்ராணி அவ. எல்லாருக்கும் ஆச்சரியம்.
சாந்தி சுத்தக் கருப்பா இருப்பாளா, வெள்ளப் பல்லும் வெள்ள முளியுமா அந்த நேரம் பாக்கவே பயங்கரமா இருக்கா!
ஓ…!
இமை தட்டுற நேரந்தான். கைகள டெஸ்குல ஊனி அப்பிடியே தாவி ஆசிரியர் முன்னே பாயிறா அவ. பசங்க எல்லாம் அலறியடிச்சு வெளியே ஓடுறாங்க. ஆசிரியர் துணிச்சலானவர். அப்படியே அவ கை ரெண்டையும் பிடிச்சு, மல்லாக்கத் தரையில தள்ளினாரு. முழங்கா போட்டு நின்னு அவளோட ரெண்டு கையையும் அமுக்கிப் பிடிச்சிக்கிட்டாரு.
“அடே நீசா, விடுடா! என்ன தொடாதடா!”
பேய் துடிக்கிது, புரளுது, உடம்ப முறுக்கி காலால் அவர மிதிக்கப்பாக்குது. அவரக் கடிக்கிறதுக்காக கழுத்த வளைக்கிறது. துணி விலக, சட்டை பட்டன் தெறிச்சு ஒரு பக்கம் நெஞ்சு தெரிய, அலங்கோலமாப் புரளுறா சாந்தி.
சேதி அறிஞ்சு பொம்பள டீச்சர்க ஓடி வர்ராங்க. தங்கம் டீச்சர் கொஞ்சம் தைரியமானவங்க. அவ துணிகள ஒழுங்குபடுத்தி, சாருக்கு உதவியா மறுபக்கம் மண்டி போட்டு, அவ கையப் புடிச்சி அழுத்துறா.
“விடு டீ என்ன!’’ அப்டீன்னு ஒரு பாய்ச்சல் பாய்ஞ்ச பேயி மறு நிமிசம் அழத்தொடங்கிட்டு “அய்யோ ஒடம்பு காந்துதே… எரியுதே….. அய்யோ, தண்ணி குடுங்களேனு.’’
அது போட்ட கூச்சல் ஊரெல்லாம் கேட்குது. ஆளுக ஓடி வர்ராங்க.
ரத்தினபாய் டீச்சர் வயசானவங்க. பேய் விவகாரங்க நல்லாத் தெரிஞ்சவங்க. பக்கத்துல நின்னவங்ககிட்ட ஓடிப் போயி எதிர்வீட்ல மீன் தண்ணியும் விளக்குமாறும் வாங்கிட்டு வாங்கப்பா! அப்டின்னாங்களே….. பார்க்கணும்‘ பேய் ஓடனேயே அலற ஆரம்பிச்சிடுச்சி.
‘’அடி வேண்டாம் டீ, வேண்டாம் டீ… அய்யோ அய்யோ … எரியுதே எரியுதே….. தண்ணி குடுங்களேன்.’’
செம்புல தண்ணி வாங்கி பேய் முகத்தில அடிச்சாங்க டீச்சர். அப்படியே மயங்கி, செத்த பிணம் போல துவண்டுட்டா சாந்தி. கண்ணு செருகிப் போகுது. டீச்சர், திரும்பவும் தண்ணி அடிச்சாங்க. அலங்க மலங்க முளிச்சபடி எந்திரிச்சு உக்காந்தா சாந்தி.
பிறகு விசாரிச்சதில, பக்கத்தூர்ல உயர் ஜாதியில ஒரு இளம் பெண்ணாம். கல்யாணம் ஆகுமுன்ன கர்ப்பமாயிடிச்சாம். குடும்ப மானம் போயிடுமேன்னு அம்மக்காரி ராத்திரி மண்ணெண்ணை விட்டு நெருப்பு வச்சுக் கொன்னுட்டாளாம்.
அவளைச் சுட்ட இடத்துல ஒரு கல்லு கிடக்குதாம். இந்த சாந்தி தலித்துப் பொண்ணு. வறுமையான குடும்பம். ஞாயிற்றுக்கிழமை விறகு பொறுக்கப் போகும்போது அந்த சுடுகாட்டுக் கல்லுல உக்காந்துருக்கு. பேய் விடுமா? சக்குன்னு புடிச்சுக்கிட்டுது.
இதெல்லாம் நடந்தது _ அந்தக் காலத்துல. அப்பறம் ஊர்ல மின்சாரம் நுழைஞ்சு தெரு விளக்கு, பேட்ரி விளக்கு எல்லாம் வந்த பிறகு, பேய்கள் கிட்டத்தட்ட ஒழிஞ்சே போச்சுன்னுதான் நினைச்சிட்டிருக்கேன். இப்பப் போயி உன்னோட பேராசிரியர் அம்மாவப் பிடிச்சிருக்கிறதா மக சொல்றாளே? எப்பிடிப் பிடிச்சிருக்கும்? யார் அந்தப் பேராசிரியர்?
முகம் கழுவி, துணியும் மாத்தி, காபியும் கையுமா என் முன்னாடி வந்து நாற்காலியில கால் மேல் கால் போட்டு உக்காந்தா என் மக.
யாரம்மா அந்தப் பேராசிரியர்னு கேட்டேன். பேரச் சொன்னா. ஆச்சரியமாப் போச்சு எனக்கு. அந்த அம்மாவோட அப்பா ஒரு சுதந்திரப் போராட்ட வீரர். ஏன், அந்த அம்மாவே ஒரு முற்போக்குச் சிந்தனையாளர், நாத்திகர், ஆசிரியர். அரசு ஊழியர் கூட்டு இயக்கப் போராட்டங்கள்ல கல்லூரி ஆசிரியர்கள் சார்பா பேச வருவார். பேச்சு கணீர்னு இருக்கும். வார்த்தைக்கு வார்த்தை சமத்துவத்த வலியுறுத்தும் பகுத்தறிவுக் கருத்துகள் மின்னும். அப்பிடிப்பட்டவங்களுக்கா பேய் பிடிச்சிருக்கு?
“மக்கா, சும்மா கிண்டலுக்குச் சொல்றியா? அல்லது நிஜமாவே அவங்களுக்குப் பேய் பிடிச்சிருக்கா?”
“நிஜம்மாத்தாம் பா. நான் ஏன் ஒங்ககிட்ட பொய் சொல்லப் போறேன்?’’
“அவங்க பகுத்தறிவுவாதியாச்சே, மகளே, அவங்களப் போயா பேய் பிடிச்சுது?”
“எந்த வாதியா இருந்தா என்னப்பா? பேய்களுக்குரிய பீடத்துல உக்காந்துட்டா பேய் பிடிச்சுத்தான் ஆகும்!”
பீடம்னு மக சொன்னதும் பயந்து போனேன். எந்தப் பீடத்துல போயி உக்காந்துருக்கும், இந்த அம்மா? ஒரு வேளையில பேய் இல்லைன்னு நிரூபிக்கிறதுக்காக வம்படியாப் போயி எங்கயாவது மாட்டிக் கிடிச்சா? அவ்வளவுக்கு பலவீனமானதா?
சாந்திக்குப் பேய் பிடிச்ச அன்னிக்குச் சாயங்காலம் எங்களுக்கும் எங்க சாருக்கும் இடையில் பலத்த வாக்கு வாதம். “பேய் இருக்குதா இல்லியா?’’ கடைசியில ராத்திரி பதினொரு மணிக்கி அவரும் எங்கள்ல கொஞ்சம் தைரியமான பசங்க மூணுபேருமா அதே சுடுகாட்டுக்கு, அவளச் சுட்ட இடத்துக்குப் போனோம். நல்ல நிலா வெளிச்சம். எங்களுக்கு உள்ளூர உதறலெடுக்கு. சருகு சரசரத்தாலும் ரோமம் சிலிர்க்குது. சரியாப் பதினொன்னு அம்பதுக்கு எங்க சாரு அந்தக் கல்லு மேல துண்ட விரிச்சு உக்கார்ந்துட்டாரு. துண்ட விரிக்காம வெறுமனே உக்காருங்கன்னோம். துண்ட உருவிட்டாரு. பன்னிரண்டரவர உக்கார்ந்திருந்தாரு. ஒண்ணும் ஆகல்ல.
“மன வலிமை உள்ளவங்களப் பேய் பிடிக்காது சார்”ன்னான் ஒருத்தன்.
அப்போ இந்தப் பேராசிரியர் அம்மாவுக்கு மன வலிமை இல்லியா?
“பேய் பிடிச்சி ஆடிச்சா மக்கா?” கேட்டேன்.
“ஆட்டமா?’’ ரெண்டு கையையும் தூக்கிக் குலுக்கினா மக, “காலேஜே நடுநடுங்கிப் போச்சு!’’’
“அவுங்களா ஆடுனாங்க? என்னால நம்பவே முடியல்லியே மக்கா !”
“அய்யோ அப்பா… நீங்க பாத்துருக்கணும் அந்தக் கன்றாவிய, சின்ன ஆட்டமா ஆடுனாங்க! காலேஜே நடுங்கிடிச்சு. என் நாற்காலியில் உக்காந்திருக்கிறதுக்கே பயமா இருக்கு எனக்கு. இதலியும் ஏதாவது பேய் கீய் குடியிருந்தா!… கொஞ்சம் தெளிவாச் சொல்லும்மா!… அவளக் கெஞ்சுறேன்.
“எப்பா, இந்த மேடத்துக்குப் பேய் பிடிச்சிருக்கிறது என்கிற விசயம் ஏற்கெனவே எங்களுக்குத் தெரியும். காலேஜிக்கு இது ஏறுற பஸ்ல நாங்க ஏறமாட்டோம். அது எட்டு முப்பது பஸ்ல மூணாவது ஸ்டாப்ல ஏறும். நாங்க எட்டு நாப்பத்தஞ்சு பஸ்ல போவோம். ஆனா இன்னிக்கி எட்டு முப்பது பஸ் வரல்ல போல. நாங்க வழக்கம் போல போகிறோம். நல்ல கூட்டம். எனக்குக் காலையில் கடுமையான தலைவலியா… என் கூடப் படிக்கிற ஒருத்தி எந்திரிச்சு இடம் தந்தா. மூணாவது ஸ்டாப்ல இந்த மேடம் ஏறுது. நேரே எங்கிட்ட வந்து நிக்குது. எனக்குத் தலைவலிதான். ஆனாலும் பேராசிரியர் ஆச்சே, உக்காருங்க மேடம்னு கொஞ்சம் நகண்டு இடம் குடுத்தேன். வேண்டாம் என்னுட்டாங்க. நான் எந்திரிச்சு இடம் குடுக்காதது அவங்களுக்குக் கோபம்.
ரெண்டு ஸ்டாப் போயிருக்கும். நிறைமாச கர்ப்பிணி ஒருத்தி ஏறினா. நல்ல கூட்டம். யாராவது வயித்துல இடிச்சிடப் போறாங்கன்னு பயந்துகிட்டே என் பக்கம் ஒதுங்கினா அவ. எனக்கு ரொம்பப் பாவமா இருந்தது. எந்திரிச்சு இடம் குடுத்துட்டேன். இவ்வளவுதாம்பா நடந்தது. இது தப்பா? இதுக்காக என்ன அவங்க தன் அறையில கூப்பிட்டுவிட்டு, நாயே பேயேன்னு திட்டினாங்க. திட்டினதுமில்லாம மன்னிப்புக் கேக்க வேற சொல்லுறாங்கப்பா, என்ன குற்றம்பா நான் செஞ்சேன்?’’
அவள் விம்மினாள். கண்ல இருந்து கண்ணீர் சொட்டுச் சொட்டா விழுது.
“இது பேய் பிடிச்சது இல்லம்மா _- வேற விஷயம்.’’ என் மகள சமாதானப்படுத்த முயற்சிக்கிறேன் நான். இது பேய்தான். அடிச்சுச் சொல்லுறா. அவ ஒத்துக்கல்ல. “இல்லப்பா, இது இந்தக் காலத்துப் பேய். பதவி பீடங்கள்ல பந்தி போட்டுக் கிடக்குற பேய். ஒங்க காலத்துப் பேய் பாமரனப் பிடிக்கும். இந்தக் காலத்துப் பேயி படிச்சவனயும் அதிகாரியையும்தான் பிடிக்கும்!
“ஒன்ன என்ன சொன்னாங்க?”
“அய்யோ, அவங்க ரூம்ல என்னக் கூப்பிட்டுவிட்டு திங்கு திங்குன்னு குதிச்சாங்கப்பா. என்னடி நினைச்சுக்கிட்ட, நீ பெரிய இவளோ, நான் யார் தெரியுமாடி? அப்படின்னு ஆடுறாங்கப்பா! கண்ண உருட்டுறாங்க உடம்பெல்லாம் நடுங்குது! காலேஜ் பூரா கூடிடிச்சு.”
‘’அப்றம்?”
“எங்க சார் போயி பேசினாங்க. அது போடான்னுட்டுது. என்னய மதிக்க வேண்டாம். நான் உக்காந்திருக்குற இந்தப் பீடத்த மதிக்க வேண்டாமா? பீடம்… பீடம்… எங்க பாத்தாலும் பீடம்! ஒவ்வொரு பீடத்துலயும் ஒரு பேயி! உக்காந்தவங்களப் புடிச்சு உலுக்கு உலுக்குன்னு உலுக்குது…….’’
‘’அப்படிச் சொல்லு மக்கா.’’ அடுக்களையில இருந்து கத்திக்கிட்டே ஓடியாந்தா என் தலைவி.” முந்தா நாள் ஒன் சித்தி வீட்டுக்குப் போனமே, கொழம்புல எவ்வளவு உப்புப் போட்டுருந்தா சித்தி! ஒங்க அப்பா என்ன செய்தாக? பரவால்ல பரவால்லன்னு கொழையிறாக. நம்ம வீடா இருந்தா… தட்டு பறந்துருக்காது? ஒரு மணி நேரம் பேயாட்டம் நடந்துருக்காது? ஏன்னா, ஒங்க அப்பா வெளியே மனுசன்; வீட்டுக்குள்ள புருசன்!
காலேஜில மட்டுமல்ல. வீட்டுக்குள்ளேயும் பீடம் இருக்கு! அந்தப் பீடத்துலயும் பேய் இருக்கு….. உக்காந்தவனுக்குள்ள பூந்து அது பண்ணுற ஆதாளி… மொதல்ல ஒடைக்க வேண்டியது இந்தப் பேய் பீடங்களை. அப்பதான் உலகம் உருப்படும்!”
என் தலைவி பேசல்ல. சூட்டுக்கோலாவே நெஞ்சுல செருகிட்டா. ராவெல்லாம் எனக்குத் தூக்கமில்ல. என்னையே நான் நெனச்சுப் பார்த்தேன். எத்தன தடவ பேய்பிடிச்சி ஆடியிருக்கேன். வெட்கமில்லாம, ரோசமில்லாம, ஊர் கூடி வேடிக்கை பார்க்குதே என்கிற சுரணை இல்லாம, எவ்வளவு கேவலமா எல்லாம் ஆடியிருக்கேன்! நிசம்தான். புருசன் பீடம், பேராசிரியர் பீடம், அதிகாரி பீடம், அமைச்சர் பீடம்… ஒவ்வொரு பீடத்துலயும் ஒரு பேய் உக்கார்ந்தவனப் பிடிச்சு என்னமா ஆட்டுது! நினைச்சப் பார்க்கவே அருவருப்பா இருந்தது.
மறுநாள் காலையில மகள அழச்சிக்கிட்டு கல்லூரிக்குப் போனேன். கிட்டதட்ட ரெண்டு மணி நேரம் வெளியே என்னக் காக்க வச்சபிறகு உள்ள கூப்பிட்டாங்க. உள்ள போனேன். கலியாணம் பண்ணிக் குடுத்திருக்கிற என் மூத்த பொண்ணு வயசு இருக்காது அந்தப் பேராசிரியருக்கு. என்னய நிறுத்திவிட்டே கேள்வி கேக்குறாங்க…
“என்னய்யா புள்ள வளர்ந்திருக்கிறீரு? எங்கள மதிக்காட்டிலும் நாங்க உக்காந்துருக்கிற பீடத்தயாவது மதிக்க வேண்டாமாய்யா? ஒம்ம மகளோட டி.சி.ய வாங்கிட்டுப் போய்யா…’’
“‘பேய் பிடிச்ச சாந்திதான் என் ஞாபகத்துக்கு வர்ரா. விளக்கமாறும் மீன் தண்ணியும் எடுத்ததும் ஓடிப்போயிடிச்சு அவளப்புடிச்ச பேயி. இந்தப் பேய்க்கு என்ன மருந்து? நேரே கல்லூரி முதல்வர்கிட்டே போனேன்.
அவரைப் பிடிச்சிருந்தது ஒரு அமுக்குப் பேயி. தாடைய அசைக்க முடியாம ரொம்ப நேரம் திணறிக்கிட்டிருந்தாரு. திரும்பக் கெஞ்சினதுக்கு அப்புறம் கடைசியில சிரமப்பட்டு வாயத் திறந்தாரு. வகுப்பறையில டீச்சர்கிட்ட மன்னிப்புக் கேட்டா விடுறேன். இல்ல டி.சி. வாங்கிக்கோங்க!
சரி, அப்பிடியாவது பிரச்சனை ஓயட்டும்னு வெளியே வந்தா, பசங்க அம்புட்டுப் பேருமே வாசல்ல கூடி நிக்கிறானுக.
“மன்னிப்பா? முடியவே முடியாது!” பசங்க கத்துறானுக. நீங்க போங்க வீட்டுக்கு. இந்தப் பேய்ப் பீடங்கள் மூணே முக்கால் நாளியல்ல ஒடச்சுக்காட்டுறோம். துடப்பக்கட்டையத் தூக்குனாத்தான் பேய் ஓடும்….
எனக்கு பயமா இருக்கு. என் செல்ல மகதான் என் வருங்காலம். இன்னும் மேலே எவ்வளவோ படிச்சு எங்கனவுகளை நெசமாக்க வேண்டியவ… அய்யோ! இந்தப் பேய்க்கிட்ட இருந்து அவளக் காப்பாத்த வேற மந்திரமே இல்லியா? பசங்க சொல்லுறதுதான் மந்திரமா?