அண்மைக் காலமாக சீனர்கள் தமிழ் மொழியை ஆர்வத்துடன் கற்பது அதிகரித்து வருகிறது. சீனாவில் உள்ள பல்கலைக்கழகங்கள் தமிழ் மொழியில் பட்டப் படிப்புகளை உருவாக்கி வருகின்றன. அதில் சீன மாணவர்கள் ஆர்வத்துடன் சேர்ந்து தமிழ் படித்து வருகிறார்கள். தமிழ் மொழியில் இலக்கண இலக்கியங்கள், தமிழர் பண்பாடு மற்றும் கலாச்சாரம் போன்றவை அவர்களுக்கு சொல்லித் தரப்படுகின்றன.
தமிழ் மீது உள்ள ஆர்வத்தால் அந்த மாணவர்கள் தங்களின் பெயர்களை மாற்றி தமிழ்ப் பெயர்களை வைத்துக் கொள்கின்றனர். இந்த அளவுக்கு சீனாவில் தமிழ் மீது ஆர்வம் அதிகரிக்கக் காரணம் என்ன என்று ஆராய்ந்தபோது, பல சீன நிறுவனங்கள் தமிழகத்தில் செயல்பட்டு வருகின்றன. அவற்றில் பணிபுரிய வேண்டுமென்றால் அவர்களுக்கு தமிழின் தேவை மிகவும் அவசியம் என்று கூறுகிறார்கள்.
இதுமட்டுமல்லாமல் தமிழ் நாட்டிலேயே தங்கி தமிழர்களின் பாரம்பரியம், கலாச்சாரம் மற்றும் பழக்கவழக்கங்கள் போன்றவற்றை அறிந்து கொள்ளும் எண்ணமும் அவர்களிடையே உள்ளது. நமது தாய் மொழியாம் தமிழின் அருமையை அயல்நாட்டவர் சொல்லித் தெரிந்துகொள்ள வேண்டிய நிலைமையில் நாம் இருக்கிறோம். தமிழ்நாட்டிலே, இன்றைய மாணவர்கள் பலருக்கு தமிழை பிழையின்றிப் படிக்கவும், எழுதவும் தெரியாது என்பது மிகவும் வேதனைக்குரியது.