மகளிர்குல மணி விளக்காகவும், அறிவியக்கத்தின் ஒளிச்சுடராகவும் தெளிந்த சிந்தனையும், திடமான நெஞ்சமும் கொண்ட வீராங்கனையாகவும் விளங்கியவர்கள் அன்னை மணியம்மையார் அவர்கள். பெரியாருக்குத் துணையாக இருந்து தன்மான இயக்கத்தையும், திராவிடர் கழகத்தையும் வளர்த்தார்கள் என்பது மட்டுமல்ல; பெரியாருக்குப் பிறகு அவரது கொள்கைகளைக் காக்க ஓயாது உழைத்தார்கள்.
ஓய்வில்லாத பணிதான் அவரது உயிரையும் கொள்ளை கொண்டு விட்டது என்று சொன்னால் அது மிகையாகாது. சென்ற வாரம் கூட அவர்களைச் சந்தித்து உரையாடி ஓய்வு எடுத்துக் கொண்டு உடல் நலம் பேணுமாறு கேட்டுக் கொண்டேன். அன்னை மணியம்மையாரின் மறைவுச் செய்தி பெரும் அதிர்ச்சியைத் தருகின்ற ஒன்றாகும். நமது கழகத்தின் மீதும் அளவற்ற அன்புகொண்ட ஒரு தாய் உள்ளத்தைப் பறிகொடுத்து விட்டோம். திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் வீரமணிக்கும், மற்றுமுள்ள நண்பர்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கலைக் கழகச் சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன்.