உயர்ந்த அங்கீகாரம் வேண்டி பணி ஆற்றுவோம்

மார்ச் 1-15, 2021

இளைஞர்கள், பாராட்டை எதிர்பாராமல் பொதுப் பணியாற்ற வேண்டும் என்கிற நிலையிலிருந்து செய்யக்கூடிய பணியில் ஈடுபாடு, அதன் சிறப்பறிந்து பணியாற்றும் அடுத்த நிலைக்குச் செல்ல வேண்டும். அப்படிப்பட்ட பணிகளில் அங்கீகாரத்தை அதற்கு உரிய தகுதியானவர்களிடம் பெற வேண்டும் என்கிற முறையில் பணியாற்றுவதில் தவறில்லை. செய்கின்ற பொதுப்பணியின் உயர்வுத் தன்மை குறித்து நமக்கு நாமே அறிந்து உணர்ந்திருப்பதோடு, அந்தப் பணி உரிய வகையில் முடிக்கப்பட்டுள்ளதா என்பதை அத்தகைய பணிகளை முடித்த முன்னோடிகள், அதன் தன்மை அறிந்தவர்களின் பாராட்டைப் பெறும் எண்ணத்துடன் கடமை ஆற்றுவதில் தவறில்லை. அப்படிப்பட்ட பாராட்டு என்பது கேட்டுப் பெறுவதல்ல. செய்து முடிக்கின்ற தன்மை அறிந்து உரியவர்கள் இயல்பாகப் பாராட்டும் நிலையில் அந்தப் பாராட்டே அங்கீகாரம் எனும் உன்னத நிலையினை அடைந்துவிடும்.

தமிழ்த்திரை உலகில் நடிப்புத் துறையில் மாபெரும் ஆற்றலாளராக விளங்கியவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். ஏற்றுக்கொண்ட கதைப் பாத்திரத்திற்கு ஏற்றவாறு தனது நடிப்பில் மெருகு ஏற்றிக் கொள்ளும் வல்லமை அவரது கலைத்துறைப் பயணத்தின் தொடக்கத்திலிருந்தே அவரிடம் இருந்தது. சத்ரபதி சிவாஜி பாத்திரத்தை அறிஞர் அண்ணாவின் படைப்பான ‘சிவாஜி கண்ட இந்து சாம்ராஜ்யம்’ எனும் நாடகத்தில் அந்தக் கலைஞன், வி.சி.கணேசன் என்னும் தனது இயற்பெயருடன் நடித்தார். அந்த நாடகத்தைப் பார்க்க தந்தை பெரியார் அழைக்கப் பட்டிருந்தார். நாடகத்தை ரசித்துப் பார்த்த தந்தை பெரியார், நாடக இடைவேளையில் மேடையேறி கலைஞர்களைப் பாராட்டிப் பேசுகையில், -”எங்கே அந்த இளைஞன் – சத்ரபதி சிவாஜியாக நடித்தவர்? – மிக அற்புதமாக நடித்தார்; சிவாஜியாகவே மாறிவிட்டார்’’ என பாராட்டினார். அத்தகைய பாராட்டைப் பெற்றதால் ‘வி.சி.கணேசன்’ என்ற அந்தக் கலைஞன் ‘சிவாஜி கணேசன்’ என அழைக்கப்பட்டார். திரைத்துறையில் தந்தை பெரியார் சூட்டிய அடைமொழியுடன் கூடிய பெயரே அவருக்கு நிலைத்துவிட்டது. பின்னர் அவர் ஏற்று நடிக்காத கதைப் பாத்திரங்களே இல்லை எனும் நிலையில், அவருக்கு அறைகூவலாக ஒரு வேடம் வந்தது. அதுதான் அவர் நடித்த ‘கப்பல் ஓட்டிய தமிழன்’ திரைப்படம். செக்கிழுத்த செம்மல் வ.உ.சிதம்பரம் அவர்களுடைய வரலாற்றைக் காட்டும் படம். அந்தத் தலைவரின் பாத்திரத்தில் நடிக்கவேண்டிய வாய்ப்பு சிவாஜி கணேசன் அவர்களுக்குக் கிடைத்தது.

மிகவும் கடினமாக உழைத்து கவனமாக நடிக்க வேண்டிய பாத்திரம் அது. அதுவரை பல்வேறு வரலாற்றுப் பாத்திரங்களை ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’, உள்பட நடித்து அவர் பெயர் பெற்றார். அந்த வரலாற்றுப் பாத்திரங்கள் அனைத்தும் காலத்தால் பல தலைமுறைகளுக்கு முந்தியது. அந்தக் கதைப் பாத்திரங்களை உயிருடன் பார்த்த யாரும் திரைப்படம் வெளிவந்த பொழுது வாழும் நிலையில் இல்லை. எனவே, ஏற்றுக்கொண்ட பாத்திரத்திற்கு தனது கற்பனையில் உன்னதம் ஊட்டி சிவாஜி கணேசனால் நடிக்க முடிந்தது. அதனால் பரந்துபட்ட பாராட்டுதலையும் அவர் பெற்றார். ஆனால், வ.உ.சி. பாத்திரம் அப்படிப்பட்டதல்ல; வ.உ.சி. அவர்களைப் பார்த்தவர்களும், அவருடன் பழகியவர்கள் பலரும் அப்பொழுது வாழ்ந்து கொண்டிருந்தனர்.  வ.உ.சி.யை சிவாஜி நேரில் பார்த்ததும் இல்லை. இப்படிப்பட்ட சூழலில் வ.உ.சி. பாத்திரத்தை பலரிடமும் கேட்டறிந்து, உணர்ந்து கடுமையாக உழைத்து அந்தத் திரைப்படத்தில் நடித்தார். படம் வெளிவந்து ரசிகர்களின் பாராட்டுதலைப் பெற்றது. அந்தப் பாராட்டுகளால் மனநிறைவு அடையவில்லை அந்த மாபெரும் கலைஞன், அதற்கும் மேலே தனது நடிப்புக்கு அங்கீகாரம் வேண்டும் எனும் உறுத்தல் இருந்துகொண்டே இருந்தது.

வ.உ.சி. அவர்களின் மகன், ‘கப்பலோட்டிய தமிழன்’ திரைப்படம் வெளிவந்த பொழுது அதைப் பார்த்து விட்டுக் கூறினாராம்; வ.உ.சி.யாக சிவாஜி நடித்ததைப் பற்றிக் குறிப்பிடும் பொழுது, “எனது தந்தையை நேரில் பார்ப்பதுபோல இருந்தது’’ என மனம் உருகி மகிழ்ந்தாராம். பார்த்தவருக்கு மனமகிழ்வு. ஆனால், சிவாஜி அவர்களுக்கு அவர் ஏங்கிக் கொண்டிருந்த அங்கீகாரமாகவே வ.உ.சி. அவர்களது மகனார் கூறியது இருந்தது. தனது நடிப்புக்கு அங்கீகாரமாக பல விருதுகள் பெற்றிருந்தாலும் அந்த மாபெரும் நடிப்பு மேதை, வ.உ.சி. மகனார் கூற்றையே விருதாக நினைத்து மனமகிழ்வு, மனநிறைவு பெற்றாராம்.

தாம் ஏற்றுக் கொண்ட பணியில், தொழிலில் அங்கீகாரம் என்பது இப்படித்தான் இருக்க வேண்டும் என்கிற அவசியம் இல்லை. இயல்பாக எதிர்பாராத ஒருவரிடமிருந்து பெறும் பாராட்டு உயர்ந்த அங்கீகாரமாக மாறிவிடும். அப்படி ஒரு நிகழ்வு கவிஞர் கண்ணதாசன் வாழ்வில் நடந்தது. கருத்தியல் ரீதியாக கண்ணதாசன் அவர்களைப் பற்றி பல விமர்சனங்கள் இருந்தாலும், அவரது கவிதை புனையும் ஆற்றல், எளிமையான பாடல் வரிகளைப் போற்றாதவர்கள் யாருமே இருக்கமுடியாது. கவிஞர் கண்ணதாசனைப் பாராட்டி பல கவிஞர்கள், தமிழறிஞர்கள், படித்துப் பட்டம் பெற்ற ஆய்வறிஞர்கள் பேசியிருக்கிறார்கள்; எழுதியிருக்கிறார்கள்; அவரைப் போற்றிக் கவிதையும் புனைந்திருக்கிறார்கள். இருப்பினும் கண்ணதாசனுக்குப் பிடித்தது-முதன்மையாக, பெருமைக்கு உரியதாக நினைத்தது ஒருவருடைய பாராட்டைத்தான். தான் படிக்காவிட்டாலும், கல்வியின் அவசியம் கருதி குழந்தைகள் அனைவரும் கல்வி கற்க பள்ளிக் கூடங்கள் பலவும் திறந்த கல்விவள்ளல் காமராசர் அவர்களிடம் கிடைத்த பாராட்டே அது!  

ஒரு சமயம் கவிஞர் கண்ணதாசனைப் பாராட்டிட கவிஞர்கள் பலர் சேர்ந்து ஒரு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தார்கள். அந்த நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கிட கல்விவள்ளல் காமராசர் அவர்களையும் அழைத்திருந்தார்கள். நிகழ்ச்சியில் பாராட்டுக் கவிதை மழைகள்-இலக்கண மரபுகளுடன், இலக்கண மரபுகளை மீறியும் கவிஞர்களால் வடிக்கப்பட்டன. புதுமையான சொற்படைப்புகள் ஏராளமாக, தமிழறிஞர்களைச் சிந்திக்கத் தூண்டும் வகையில் இருந்தன. அனைத்தையும், தன்னை பாராட்டும் நிகழ்ச்சி என்பதால் மரபு கருதி கண்ணதாசன் அமைதியாக அனைத்துக் கவிஞர்கள் பாராட்டுப் படைப்புகளையும் கேட்டு கவனித்துக் கொண்டிருந்தார். நிறைவாக காமராசர் எழுந்து பேசத் தொடங்கியதும் பாராட்டிய கவிஞர்கள், கண்ணதாசன் உள்பட மிகுந்த எதிர்பார்ப்புடன் இருந்தனர். கவிஞர்கள் நடத்திய பாராட்டுக் கூட்டம். காமராசர் முறையாக பள்ளிப் படிப்பைக் கூட முடிக்காதவர் எப்படிப் பாராட்டிப் பேசப் போகிறார் என்கிற ஓர் எதிர்பார்ப்பு! கண்ணதாசனின் அரசியல் உள்பட பல தளங்களிலும் அவரது, சிறப்புகளை தனக்கே உரிய சொல்லாடலில் பாராட்டிப் பேசிவிட்டு, கவிஞர்கள் நடத்திடும் பாராட்டு என்பதால் தானும் கவிதை போல ஒன்றை கண்ணதாசன் அவர்களைப் பற்றிக் கூறினாராம்.

               “காட்டுக்கு ராஜா சிங்கம்

                 பாட்டுக்கு ராஜா கண்ணதாசன்”

காமராசரின் பாட்டுக் கவிதையைக் கேட்டதும் அரங்கமே கைதட்டி மகிழ்ந்தது. சம்பிரதாயமாக மற்ற பாராட்டுதல்களைக் கவனித்துக் கொண்டிருந்த கண்ணதாசன் மகிழ்ச்சி – நெகிழ்ச்சியின் உச்சத்திற்கே சென்றுவிட்டாராம். கவிதை உலகில் தமிழ்ப் புலமை வாய்ந்த பலரின், அறிஞர்களின் பாராட்டுகளுக்கிடையே நெகழ்ச்சியான, பள்ளிக்கூடப் படிப்பை நிறைவு செய்யாத காமராசரின் வரிகளைக் கேட்டு, தனது படைப்புகளுக்கு கிடைத்த பெரிய அங்கீகாரமாக நினைத்து கண்ணதாசன் மகிழ்ந்தாராம். பலமுறை காமராசரால் தனக்குக் கிடைத்த அங்கீகாரத்தை நண்பர்கள், நலம் விரும்பிகள் பலரிடமும் பல நேரங்களில் பகிர்ந்து கொண்டார்.

உயர்ந்த அங்கீகாரம் என்பது எப்படியெல்லாம் உரியவர்களிடமிருந்து கிடைக்கிறது; இந்த வகையில்தான் கிடைத்திடும் என்றில்லாமல், நினைத்துப் பார்க்க முடியாமல் அழுத்தமான அங்கீகாரம் பலருக்கு தாம் செய்த பணிகளுக்காகக் கிடைத்திருக்கிறது. இளைஞர்கள் நினைக்கலாம், சிவாஜி கணேசன், கண்ணதாசன் ஆகியோருக்குக் கிடைத்த அங்கீகாரம் ஒவ்வொருவருக்கும் கிடைக்குமா? முதலில் அப்படிப்பட்ட திறமைகள் எல்லாரிடமும் இருக்குமா? எளியவர்கள், துறைசார்ந்த புலமை இல்லாதவர், அந்தத் துறைபற்றிய பணிகளிலிருந்து ஒதுங்கி இருப்பவர்களுக்கு அங்கீகாரம் கிடைக்குமா? போன்ற வினாக்கள் பெரும்பாலானவர்கள் மனதில் எழுவது இயல்பே. சொல்லக்கூடிய செய்தியில் உள்ள ஆர்வம், நேர்மை, சொல்லக்கூடியவற்றைத்  தயக்கமின்றிக் கூறும் துணிச்சல் பலருக்கு பல நேரங்களில் பாராட்டையும், அங்கீகாரத்தையும் அளித்திருக்கிறது. அப்படிப்பட்ட ஒரு நிகழ்வினை தொடர்ந்து பேசுவோம்.

(தொடரும்…)

வீ.குமரேசன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *