சிந்தனை : கோயில் நகரம் என்றால்…

பிப்ரவரி 16-28 2021

திருமாலும் சிவனும் குருதிப்பலி எதுவும் கோரவில்லை. ஆனால், அவர்கள் பண்புக்கியைய அவர்கள் ஒரு கன்னிப்பலி கேட்கின்றனர். பல வழிகளில் – சில மிகவும் நடுக்கந்தரும் முறைகளில் – சிறு பெண்கள் தேடித் திரட்டப்பட்டு, இறைவனுக்குப் பணிவிடை செய்யும் தேவதாசிகள் ஆக்கப்படுகின்றனர். தென் இந்தியாவில், ஒரு நகர் எந்த அளவுக்குச் சமய முக்கியத்துவம் உடையதோ, அந்த அளவுக்கு மேக நோய்கள் அதில் மிகுதி.

1917இல் கும்பகோண நகரின் வாழ்க்கைப் புள்ளி விவரங்களை (Vital Statistics) ஆய்ந்து மதிப்பிடும் பணியைச் சென்னை அரசியலார் எனக்குத் தந்தனர். பல ஆண்டுகளாகப் பிறப்பு விகிதம் மிகக் குறைந்த அளவாய் ஆயிரத்துக்கு 30க்குச் சற்று மேலும் கீழுமாக ஊசலாடிக் கொண்டிருந்தது. அரசியல் அலுவலகத்தார் பிறப்புகளிற் பெரும்பாலானவை ஒழுங்காகப் பதிவு செய்யப்படத் தவறிவிட்டனவோ என்று அய்யுறத் தொடங்கினர். நகரவை மன்றம் இதனை உறுதியாக மறுத்தது. மாவட்ட வரி முதல்வரும் (Collector of the district)  தனிப்பட இதைத் துருவி ஆராய்ந்து, நகரவையின் முடிவையே உறுதிப்படுத்தினார்.

நான் நகரத்துக்குச் சென்றதும் நகரவை அலுவலாளர்களிடம், “பிறப்பு விகிதம் குறைவாயிருப்பதற்குக் காரணம் என்ன?’’ என்று கேட்டேன். மறுமொழி உடனே வந்தது. “இங்கே பன்னிரண்டு பெருங் கோயில்கள் இருக்கின்றன. அவற்றிலெல்லாம் தேவதாசிகள் இருக்கிறார்கள்’’ என்று அவர்கள் கூறினார்கள்.  மருத்துவ விடுதியில் உள்ள உள்நோயாளி (In-Patients) களில் நேர்பாதிப்பேர் வெள்ளை, வெட்டை முதலிய மேகநோய் வகைகளில் முனைத்த நோயாளிகளாக இருந்தனர். முனைப்பற்ற பொதுநிலை நோயாளிகள் பலர் ஆயுர்வேத மருத்துவரால் வெளியே கவனிக்கப் பட்டிருந்தனர். ஒரு பிராமண இளைஞர், “பிராமண மாதரில் அய்ந்தில் நான்கு பேர் இந்நோய்க்கிரைப்பட்டே இருக்கிறார்கள்’’ என்று கூறினார்.

மருத்துவமனைக்கும் வெளி நோயாளித் (Out-Patient) துறைக்கும் பொறுப்பேற்று 30 ஆண்டு அறுவை மருத்துவராயிருந்த ஒருவர் இந்தக் கருத்தை ஆதரித்தார். அத்துடன் பிராமணர்களைவிட சவுராஷ்டிரரின் நிலை இன்னும் மோசமானது; ஏனென்றால் அவர்களிடையே ஆண்களும் பெண்களைப் போலவே ஒழுக்கங் கெட்டவர்கள்; அத்துடன் மற்றவர்கள் அறிவதுபோல நோயைத் தடுக்கும் முறைகளையும் அவர்கள் அறியாதவர்கள்’’ என்று கூறினார்.

– பன்மொழிப் புலவர் கா.அப்பாதுரையார்

நூல்: இந்திய நாகரிகத்தில் திராவிடப் பண்பு,

பக். 92-93.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *