கழுகுப் பார்வை, பாம்பு செவி (பாம்புக்குக் காது உண்டா?) என்றெல்லாம் சொல்லப்படுகிறது அல்லவா? இதே போன்ற திறனை மனிதர்களும் பெற முடிந்தால் எப்படி இருக்கும்? வருங்கால மருத்துவம் இதை எல்லாம் சாத்தியமாக்கலாம் என்றால் நம்ப முடிகிறதா? நாமெல்லாம் சைபோர்க் (cyborg) மனிதர்களாக மாறும்போது இவை சாத்தியம்தான். அதென்ன சைபோர்க்?
மனிதர் பாதி, ரோபா மீதி என்று சொல்லக்கூடிய வகையில் தொழில்நுட்பத்தால் மனித ஆற்றலை மேம்படுத்திக்கொள்வதன் மூலம் சைபோர்க் மனிதனாகலாம் என்கின்றனர். உடலுக்குள் சிப் பொருத்திக் கொள்வதுதான் என்றாலும் இது இன்னோர் அற்புதம் ஆகும். இப்போதே பல துணிச்சல்காரர்கள் உடலுக்குள் சிப்பைப் பொருத்திக்கொண்டு சைபோர்க்காக வலம் வருகின்றனர். வருங்காலத்தில், சிப்கள் மூலம், கழுகுப் பார்வை பெறுவது, செவித்திறனை இன்னும் துல்லியமாக்குவது எல்லாம் சாத்தியமாகலாம். இதெல்லாம் வியப்பாக இருந்தால், இதயத் துடிப்பை சீராக்கிக் கொள்ள பேஸ்மேக்கர் சாதனத்தைப் பொருத்திக் கொள்வது கூட ஒரு வித சைபோர்க் தன்மைதான் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்!