சிகாகோவில் திருப்பாற்கடல்

டிசம்பர் 01-15

மானமிகு ஆசிரியர் வீரமணி அவர்களின் நகைச்சுவை ஒரு தனித் தன்மை வாய்ந்தது. அவர் மேடையிலேயே நகைச்சுவை கலந்து பேசுவார் என்பது அனைவருக்கும் தெரியும். எதிரிகளும் ரசிக்கும்படியான ஆபாசமில்லாத நகைச்சுவையாக இருக்கும். அடுக்குமொழி, எதுகை மோனை, வார்த்தை ஜாலங்கள் நிறைந்திருக்கும். ஆனால், தனியாகப் பேசும் போதும் கிண்டல் செய்யும் போதும் மனதைப் புண்படுத்தாத, மகிழ்ச்சி கலந்த நகைச்சுவை என்பது அவரது தனிச்சிறப்பாகும்.

ஒருமுறை குளிர்காலத்தில் சிகாகோவில் ஒரு ஏரியைப் பார்த்தோம். அங்கு தண்ணீரே தெரியாமல் பனி இரண்டடி உயரம் போல் வெள்ளையாக குவிந்திருந்தது. என்ன உடை அணிந்திருந்தாலும் குளிரில் கொஞ்சம் நடுங்க வேண்டியதுதான். ஆனால், ஆசிரியர் அதைப் பார்த்ததும் “திருப்பாற்கடல் ” என்பார்களே இதுதானா? என்றார். உள்ளத்திலே ஊறிவிட்ட கொள்கை பல நேரங்களில் நகைச்சுவையாக வரும். தந்தை பெரியார் அவர்களும் நகைச்சுவை மிக்கவர் என்பது பலருக்குத் தெரியாது. ஆசிரியர் அவர்கள் அந்த நகைச்சுவைகளை எழுதினால் அதுவே ஒரு வாழ்வியல் சிந்தனையாக வெளியிடும் அளவிற்கு இருக்கும்.

நாங்கள் பேராசிரியர் பால் கர்ட்சைப் பார்க்க நியூயார்க் ஆம்கர்ச்ட் நகருக்குச் சென்றிருந்தோம். வானூர்தி நேரத்தில் செல்லவில்லை. வரவேற்க வந்திருந்த பால் கர்ட்சு  விமானம் வராது என்று சொன்னதால் திரும்பி விட்டார். இறங்கிய உடனே தொலைப்பேசியில் அழைத்ததும் வந்துவிட்டார், இரவாகி விட்டது. ஆனால், பெட்டிகள் வரவில்லை. மறுநாள்தான் வரும் என்று சொல்லி விட்டார்கள். அவர்கள் அலுவலகத்தில் இருந்த விருந்தினர் விடுதியில் தனி அறைகளில் தங்கிவிட்டோம். ஆனால் மாற்று உடுப்பில்லை. அங்கிருந்த பெரிய துண்டே லுங்கி ஆகிவிட்டது. அதைப் பற்றிக் கவலைப்படாது இது என்ன துண்டு அணியும் கிளப்பா? என்று வரிசையாக நகைச்சுவையாகப் பேசினார். எனக்கோ என்ன இப்படி ஆகிவிட்டதே, உடனே சென்று வாங்குவதற்கும் லுங்கிக் கடை இல்லையே என்று வருந்தினேன். அவர் அதையெல்லாம் பற்றிக் கவலைப்படாதீர்கள் என்று தூங்கிவிட்டார். நான், அடுத்த வானூர்தியில் பெட்டிகள் வந்துவிட்டது என்று உறுதி செய்து கொண்டு விடியற்காலை கொண்டுவந்து கொடுத்து விடுவார்கள் என்று உறுதி செய்த பின்னர்தான் தூங்கினேன்.

ஆசிரியருடன் 200- மைல்கள் காரில் பயணம் செய்தாலும் நேரம் போவது தெரியாது. சிரிக்கச் சிரிக்கப் பேசி, பல கருத்து மழைகளையும் அதைவிட ஆங்காங்கே உள்ள காட்சிகள் மற்றவற்றைப் பற்றிப் பேசி விழுந்து விழுந்து சிரிக்கும்படியும் பயணம் இருக்கும்.

புத்தகக் கடையைக் கண்டால் போதும், குழந்தை மிட்டாய்க் கடைக்குப் போவது போல் துள்ளிக் குதித்து ஓடி விடுவார்.

ஒரு முறை விசுகான்சின் விமான நிலையத்தில் காணாமல் போய்விட்டார். நேரமாகிவிட்டது. பார்த்தால் கை நிறைய பழைய புத்தகங்களுடன் வந்தார். அங்குள்ள அந்தப் புத்தகக் கடை அங்கிருந்தவர்களுக்கே தெரியாது. அரிய நூல்கள் பலவற்றை வாங்கி வந்துவிட்டார். பாவம், அண்ணியார்தான் இதையெல்லாம் எப்படிச் சமாளிப்பது என்று வருந்தினார்கள்.

பல நகைச்சுவைகள் உடனுக்குடன் அங்கே நடப்பது பற்றி இருக்கும். பல இடங்களுக்கும் அவர் செல்லப் பெயர் வைத்து அழைப்பார். அதுவே நகைச்சுவையாகத்தான் இருக்கும். மருத்துவர்களான நாங்கள் பல முறை அவரது நகைச்சுவைக்கு ஆளாகியிருக்கின்றோம். பல மருத்துவர்கள் மக்களைப் பயமுறுத்துவதற் காகவே பிறந்து பிறவிப் பயன் அடைந்துள்ளார்கள். ஆனால், நல்ல மருத்துவர்களை மனம்விட்டுப் பாராட்டுவார். மிக்க நன்றியுடையவராக அவர்களிடமும் நகைச்சுவை ததும்பப் பேசுவார்.

பல நேரங்களில் சரியான சாப்பாடு கிடைக்காது. அதைப் பெரிய குறையாகக் கருதாமல் அதிலேயும் நகைச்சுவையாகப் பேசி மற்றவர்களின் வருத்தத்தையும் போக்கிவிடுவார்.

அவசரக் கால சட்டத்தில் அவர் அனுபவித்த கொடுமைகளையே மிக்க நகைச்சுவையுடன் சொல்லும்போது நமக்கு அழுவதா சிரிப்பதா என்றே தெரியாது. எம். ஆர். ராதா போன்ற மற்றவர்கள் எப்படி மகிழ்ச்சியூட்டினார்கள் என்பதையெல்லாம் நடித்தே சொல்லுவார்.

அவருடைய நகைச்சுவை விருந்தை அவருடன் வேனில் பயணம் செய்ய நேர்ந்தவர்கள் பலர் அனுபவித்துச் சிரிப்பார்கள். அந்த வேன் பார்ப்பதற்குத் தான் பெரிதாக அழகாக இருக்கிறதே தவிர அதில் பயணம் செய்வது சந்திர மண்டலத்திற்குச் செல்வது போலத்தான். அந்தக் குலுக்களிலும் அவரது நகைச்சுவைக் குலுக்கல் அதிகமாக இருக்கும்.

நடைப் பயிற்சியாக இருந்தாலும் சரி, அவசரமாக விமானத்திற்குச் சென்றாலும் சரி ஏதாவது நகைச்சுவை சொல்லி மற்றவர்கள் சிரிப்பதைப் பார்த்து மகிழ்வார். அந்தக் குழந்தைத்தனத்தைப் பார்த்து அண்ணியார் புன்முறுவலுடன் அவருக்குள்ள டென்சனை மறந்துவிடுவார்.

இதையெல்லாம் பல முறை அனுபவித்து மகிழ்ந்த எனக்கு உண்மையிலேயே பெரிய மன நிறைவு தந்த வாய்ப்புக் கிட்டிய பலருக்கும் அதே மகிழ்ச்சிதான் இருக்கும்.

எனது  வாழ்விணையர் அதிகம் பேசமாட்டார். ஆனால், நாங்கள் செய்துகொள்ளும் கேலியும் கிண்டலும் ஆரம்பத்தில் அவரை அதிசயத்தில் ஆழ்த்தியது. இவ்வளவு பெரிய மனிதர் இப்படிக் குழந்தை மாதிரி மகிழ்ந்து எப்படி எளிமையாகப் பழகுகின்றார் என்று பல முறை வியந்து சொல்வார்.

அவர் நகைச்சுவை பற்றி பல முறை எழுதியுள்ளார். ஆனால், அதை அனுபவித்து இன்புறும் அனைவரும் மறக்கமாட்டார்கள்.

– சோம. இளங்கோவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *