ஆசிரியர் அய்யா அவர்களுக்கு, வணக்கம். நான் உண்மை நவம்பர் 16-30, 2020 படித்தேன். அதில் அய்யாவின் அடிச்சுவட்டில்… இயக்க வரலாறான தன் வரலாறு (256) படித்தேன். அதில், பிரபஞ்சன் அவர்கள், கோயில்கள் தோன்றியது ஏன்? அருமையான புத்தகம் என்கிறார். அந்தப் புத்தகத்தை மீண்டும் படித்தேன். பிரபஞ்சன் கூறியுள்ளபடி ஆசிரியருக்கு 300 டாக்டர் பட்டம் தர மிகவும் பொருத்தமான சமூகநீதிக் காவலர் என்பதை மெய்ப்பிக்கும் மிகப் பெரிய ஆய்வுப் புத்தகம் அது என்பதில் அறிஞர்களுக்கு எள்ளளவும் அய்யமிருக்காது. அதில் உள்ள கருத்துகள் சில – உங்கள் பார்வைக்கு…
சோறு போட்டால் தோஷம் போகும்.(பக்கம் 48)
அர்ச்சகனல்லாத பிராமணன் சாமி சிலை அருகில் நெருங்கினால் தீட்டாகும்.
சாமிக்குக் கொஞ்சம் சுத்த ஜலத்தால் சம்ப்ரோட்சணம் செய்தால் போதும்.
அதே நபர் சத்திரியனாக இருந்தால், 7 கலசம் (7 குடம் தண்ணீர்)
வைசியனாக இருந்தால் 24 கலசமும், சாந்தி ஹோமமும், பிராமணர்களுக்குப் போஜனமும் அளிக்க வேண்டும் என்று கூறுவதே ஜாதி தர்மத்தைக் காப்பாற்றும் ஏற்பாடு அல்லாமல் வேறு என்ன?
நீ சூத்திரன் – வெளியே நில்! (பக்கம்: 158)
ஒரு மனிதன் எவ்வளவு பணக்காரனாக இருந்தாலும் எவ்வளவு பெரிய பதவி, அதிகாரம் உள்ளவனாக இருந்தாலும் எவ்வளவு பெரிய படிப்பு எம்.ஏ., பி.ஏ., டாக்டர் படிப்புப் படித்திருந்தாலும் அவன் கோயிலுக்குப் போகிறான் என்றால், அவன் தன்னைச் சூத்திரன் என்பதாக ஒப்புக் கொண்டுதானே போகின்றான்?
அப்படி அவன், தான் சூத்திரன் என்பதை ஒப்புக் கொள்வதால்தானே அவன் கோயிலுக்குப் போய் வெளியே நிற்கின்றான்?
அப்படி இல்லையென்றால், பார்ப்பான் இருக்கிற இடம் வரைக்கும் அவன் செல்லலாமே!
நம்மைவிட இழிவான பார்ப்பான், சிலைக்குப் பக்கத்திலிருந்து கொண்டு நம்மைப் பார்த்து, நீ சூத்திரன் – வெளியே நில் என்கின்றான். இப்படி ஒரு சமுதாயத்தை இழிவு படுத்துவதற்காகவா கோயில் இருக்க வேண்டும்? கடவுள் இருக்க வேண்டும்?
– விடுதலை 12.7.1969
– க.பழநிசாமி, தெ.புதுப்பட்டி-624705