ஆகா! எவ்வளவு பயன் தரும் மரம்!
வெயிலில் வாடும் மக்களுக்கு நிழல் தருவதில் ஆலமரம் முதன்மையானது.
அது மட்டுமா! பல நூறு பறவைகளுக்குப் புகலிடமாகவும் அமைகிறதே!
ஆலமரத்தின் விழுதுகள், பால், பழங்கள் அனைத்துமே மருத்துவ குணங்கள் நிறைந்தவை. மக்களுக்குப் பயன்தரவல்லன.
மலையப்பன் வசித்துவந்த கிராமத்திலும் பல ஆலமரங்கள் ஒரு காலத்தில் இருந்தன. ஆனால் அவை அனைத்தும் வெட்டப்பட்டுவிட்டன. ஊரின் ஒதுக்குப்புறத்தில் இருந்த தோப்பில் ஒரே ஒரு ஆலமரம் மட்டுமே மிஞ்சி இருந்தது.
ஒரு நாள் மாலை வேளையில் மலையப்பன் அந்தத் தோப்புப் பக்கம் வந்தார். அங்கிருந்த ஆலமரத்தை அண்ணாந்து பார்த்துவிட்டு அதன் அடியில் அமர்ந்தார்.
மலையப்பன் ஆசிரியராகப் பணியாற்றிவிட்டு ஓராண்டுக்கு முன் பணி ஓய்வு பெற்றவர். மரத்தடியில் உட்கார்ந்த அவருக்கு பழைய நினைவுகள் அவரது எண்ணத்திரையில் ஓடின.
ஆகா! இந்த ஆலமரம்தான் ஒரு காலத்தில் எவ்வளவு பிரமாண்டமாக இருந்தது! எத்தனை பறவைகளுக்குப் புகலிடமாக விளங்கியது! ஆனால் இப்போது? அதன் கிளைகள் பலவும் வெட்டப்பட்டுவிட்டன. சடைசடையாகத் தொங்கிய விழுதுகள் எல்லாம் மறைந்து சிறிதளவான விழுதுகளே பெயரளவுக்குத் தொங்கிக் கொண்டிருந்தன. ஏதோ பெயரளவுக்கு ஆலமரம் என்ற பெயரைத் தாங்கி பரிதாபமாகக் காட்சியளித்தது.
ஆலும் வேலும் பல்லுக்குறுதி. நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி என்று மலையப்பன் வாய் முணுமுணுத்தது. மலையப்பன் சிறுவயதில் இந்த ஆலமரத்தில் தொங்கிக் கொண்டிருந்த விழுதுகளை வெட்டித்தான் தனது பற்களைத் தூய்மைப்படுத்தி வந்தார். விழுதுகளை வெட்டும்போது ஒழுகிய பாலை எடுத்து பல் ஈறுகளில் தேய்த்துக் கொள்வார். அவரின் நண்பர்களும் அவ்வாறே செய்வார்கள். ஆலம்பால் பற்களுக்கு உறுதியைத் தரும் என்பது வழிவழியாக அந்த ஊர் பெரியவர்கள் சொல்லிக் கொடுத்த பாடம்.
தோப்பில் இருந்த பல மரங்களும் வெட்டப்பட்டுவிட்டன. அங்கு பல அரசுக் கட்டடங்கள் கட்டப்பட்டுவிட்டன. கால்நடை மருத்துவமனை, தானியக் கிடங்கு போன்ற அரசு சார்பான கட்டடங்கள் கட்டப்பட்டுவிட்டன. இதனால் அரிய வகையான மரங்கள் வெட்டி வீழ்த்தப்பட்டுவிட்டன.
இலுப்பை மரம், அத்தி மரம், கொடுக்காப்புளி மரம், மாமரம், அரச மரம், நெல்லி மரம் எல்லாமும் அழிக்கப்பட்டுவிட்டன.
அரசுக் கட்டடங்கள் கட்ட மட்டும் மரங்கள் வெட்டப்படவில்லை. ஊரில் இருந்த கோயிலுக்கு தேர் செய்ய என்று சொல்லி பல மரங்கள் வெட்டப்பட்டுவிட்டன. கும்பாபிஷேகச் செலவுக்காக என்று சொல்லியும் பல மரங்களை வெட்டி விற்று காசு பார்த்து விட்டார்கள்.
எவ்வளவு கொடுமை!
இதையெல்லாம் எண்ணிப் பார்த்தபடியே அவர் சற்றே கண்ணயர்ந்தார்.
அப்போது அவர் தலையில் ஏதோ பட்டுத் தெறித்தது. திடுக்கிட்டு கண்விழித்த அவர் என்னவெனப் பார்த்தார். ஓர் ஆலம் பழம்தான் அவர் தலையில் விழுந்து தெறித்தது. அதை எடுத்த மலையப்பன் அதை இரண்டாகப் பிட்டார். உள்ளே ஏதும் புழுப் பூச்சிகள் இல்லாததை உறுதி செய்து கொண்டார். தோளில் கிடந்த துண்டால் துடைத்து விட்டு வாயில் போட்டு மென்று சாப்பிட்டார். சிறுவயதில் ஆலம் பழங்களைப் பொறுக்கிச் சாப்பிட்டது அவர் நினைவுக்கு வந்தது.
இந்த ஆலம் பழத்துக்குத்தான் எத்தனை மருத்துவ குணங்கள்!
மூலநோயைக் குணப்படுத்தவல்லது. இதைச் சாப்பிட்டு வந்தால் நம் உடல் தோல் பளபளப்பாகும். சோப்பு தயாரிப்பிலும் ஆலம்பழம் பயன்படுகிறது. பெண்களின் நோய்களைத் தீர்க்கவல்லது. தசை வலியை நீக்கும். ஆண்களுக்கும் சக்தியைக் கொடுக்க வல்லது. ஞாபக மறதியைக் கூட போக்கும்.
ஆலமரத்துப்பட்டை, விழுதுகள், பழங்கள் அனைத்துமே பலன் தரவல்லன என்பதையெல்லாம் புத்தகங்களிலிருந்தும் பெரியவர்கள் சொல்லக் கேட்டும் அறிந்திருந்தார் மலையப்பன்.
இந்தச் சிந்தனைகளோடு மீண்டும் கண்ணயர்ந்த அவரை,
என்ன மலையப்பா? தூங்கிட்டியா? என்ற குரல் உலுக்கி எழுப்பியது.
அவரது பள்ளித்தோழர் மாரிமுத்துதான் அங்கு வந்திருந்தார்.
கண்ணயர்விலிருந்து விடுபட்ட மலையப்பன் மாரிமுத்துவைக் கண்டதும் மிகவும் மகிழ்ந்து அவரை உட்காரச் சொன்னார்.
என்ன பலமான யோசனை? என்றவாறே உட்கார்ந்தார் மாரிமுத்து.
மாரிமுத்துவைப் பார்த்ததும் மிக்க மகிழ்ச்சியடைந்தார் மலையப்பன். சிறுவயது நண்பராயிற்றே!
மாரிமுத்து, இந்த ஆலமரம் நம் வாழ்க்கையில் ஓர் அங்கம். சின்னவயதில் இந்த மரத்தடியில் உட்கார்ந்துகிட்டுத் தானே படிப்போம் என்றார்.
ஆமாம் மலையப்பா. அப்போதெல்லாம் நீ ரொம்பவும் சத்தம் போட்டுப் படிப்பாய். நான் உன்னைத் திட்டி மெதுவா படிக்கச் சொல்வேன்.
இப்போதும் நம்ம பற்கள் எல்லாம் உறுதியா இருக்குன்னா அதுக்குக் காரணம் இந்த ஆலமரம் தந்த விழுதுகள்தான். ஆனா, இப்பப்பாரு மாரிமுத்து! விழுதுகளே இல்லை.
நிறைய கிளைகளை வெட்டியாச்சு. அப்புறம் எப்படி விழுதுகள் தொங்கும், மலையப்பா?
மரங்களையெல்லாம் நாம் காப்பாத்தனும். பல வெளிநாடுகளில் மரங்களை அழித்தால் கடும் தண்டனை உண்டு.
கேள்விப்பட்டிருக்கேன் மலையப்பா. சில விஷமிகளால் காட்டுத்தீயெல்லாம் ஏற்படுது. காட்டில் இருக்கிற மரம், மூலிகைச் செடி கொடிகள் எல்லாம் சாம்பலாகிப் போவுது.
இந்தத் தோப்பில் எவ்வளவு மரங்கள் இருந்துச்சி. எல்லாத்தையும் வெட்டி அழிச்சுட்டாங்களே மாரிமுத்து! நான்கூட வேலை செய்ய வெளியூர் போயிட்டேன். ஆனா, நீ ஊரில் இருந்தும் இந்தத் தோப்பை உன்னால் காப்பாற்ற முடியலையே.
அரசுக் கட்டடங்கள்… என்று சொல்லவந்த மாரிமுத்துவை இடைமறித்தார் மலையப்பன்.
ஊரில் நெறைய புறம்போக்கு நிலங்கள் இருந்ததே. ஆனால் அங்கெல்லாம் மூலைக்கு ஒண்ணா கோயிலைக் கட்டிட்டாங்க. அதனால்தான் ஆஸ்பத்திரி கட்ட இந்தத் தோப்பை அழிசுட்டாங்க. எது முக்கியம்னு நம்ம மக்களுக்கு எப்பத்தான் தெரியப் போவுதோ? என்று வருத்தத்துடன் கூறினார் மலையப்பன்.
இவ்வாறு இவர்கள் இருவரும் பேசிக் கொண்டிருந்தபோது அதே ஊரைச் சேர்ந்த கலியன் என்பவர் கையில் சுருட்டப்பட்ட வைக்கோலுடன் எதையோ எடுத்து வந்தான். அதிலிருந்து துர்நாற்றமும் வீசியது.
அந்த வைக்கோல் சுருளை அவன் ஆலமரத்தில் உள்ள கிளையில் கட்டச் சென்றான்.
அதைப் பார்த்த மாரிமுத்து, கலியா, என்ன செய்றே? என்று கேட்டார்.
மாடு, காலையில் கண்ணு போட்டுது. அதோட நஞ்சுக்கொடியை வைக்கோலில் கட்டி எடுத்து வந்திருக்கேன். இதை இந்த ஆலமரத்தில் கட்டணும் என்றான் கலியன்.
ஏன் அப்படிக் கட்டணும்? எனக் கேட்டார் மலையப்பன்.
வாத்தியாரைய்யா, இப்படிக் கட்டினாத்தான் மாடு நெறைய பால் கறக்குமாம் என்றான் கலியன்.
இதெல்லாம் மூடநம்பிக்கை. மாடு நிறைய பால் கறக்க அதுக்கு நல்ல சத்தான தீனி போட்டாலே போதும். மாட்டின் கழிவுகளை இப்படி கட்டி சுற்றுச்சூழலை மாசுபடுத்தக்கூடாது. அதை குழியில் போட்டு மூடி விடு என்றார் மலையப்பன்.
வாத்தியார் சொன்னால் சரியாகத்தான் இருக்கும் என்று முடிவு செய்த கலியன் அதை மரத்தில் கட்டாமல் எடுத்துச் சென்றுவிட்டான்.
இதனால் திருப்தியடைந்த நண்பர்கள் இருவரும் அந்த இடத்தை விட்டு அகன்றனர்.
நாள்கள் சில கடந்தன.
ஒரு நாள் அதே இடத்தில் நண்பர்கள் இருவரும் மீண்டும் சந்தித்துக் கொண்டனர். அப்போது மாரிமுத்து ஒரு செய்தியை மலையப்பனிடம் சொன்னார்.
ஊர்க்கோயில் பூசாரி ஒருவர் சிலரைத் தூண்டிவிட்டு கோயில் கும்பாபிஷேகச் செலவிற்காக தோப்பில் உள்ள ஆலமரம் உட்பட வேறு சில மரங்களையும் வெட்டி விற்க ஏற்பாடு செய்து வருகிறாராம்.
இதைக் கேட்ட மலையப்பன் மிக்க வருத்தமடைந்தார். எப்படியும் இந்த ஆலமரத்தை காப்பாற்ற வேண்டும் என முடிவு செய்தார். அதற்கு என்ன செய்யலாம் என்ற யோசனையில் ஆழ்ந்தார். அதற்கு மாரிமுத்து ஒரு யோசனை சொன்னார்.
மலையப்பா, இந்த ஆலமரத்தைப் பார். இதில் ஓர் அரச மரக் கன்று பின்னிப் பிணைந்து வளர்ந்து வருவதையும் பார்.
ஆமாம் மாரிமுத்து. இருக்கு
நாம் ஒரு செயலைச் செய்வோம்
என்ன செய்யனும் மாரிமுத்து?
மலையப்பா, நாம் யாரையாவது விட்டு ஒரு சாமி சிலையை இந்த ஆலமரத்தின் கீழே வைத்து பூசை செய்யச் சொல்வோம். சாமி வந்து ஆடச் சொல்லி இந்த ஆலமரத்தை வெட்டக் கூடாதுன்னும் சொல்லச் சொல்வோம் என்று யோசனை சொன்னார் மாரிமுத்து.
ஆனால், மாரிமுத்துவின் இந்த யோசனையை மலையப்பன் ஏற்கவில்லை.
மாரிமுத்து, கடந்த காலங்களில் இப்படித்தான் நம் முன்னோர்கள் நமக்கு ஒரு தகவலைச் சொல்ல அதில் மூடநம்பிக்கைக் கதைகளை இணைத்துச் சொன்னார்கள். மூடநம்பிக்கைகளே அதிகமா வளர்ந்துப் போச்சி. குழந்தைகள் சாப்பிடுவதற்குக் கூட பேய் பிசாசு கதைகளைச் சொல்வார்கள். வேப்ப மரத்தில் பேய் இருக்கிறதா சொல்லி குழந்தைகளோட வீரத்தையே கேலி பேசினார்களே! பட்டுக் கோட்டையார் நெறைய பாட்டுகள் மூலம் மூடநம்பிக்கைகளைச் சாடியிருக்காரு. இந்த நூற்றாண்டிலும்கூட நாம் அது மாதிரியான மூடநம்பிக்கைகளை வளர்ப்பதா? கூடவே கூடாது என்று உறுதியாகக் கூறினார் மலையப்பன்.
அப்புறம் என்னதான் செய்ய வேண்டும் மலையப்பா எனச் சோர்வுடன் கேட்டார் மாரிமுத்து.
மாரிமுத்து நாம் சோர்வடையக் கூடாது. ஊரில் பஞ்சாயத்து போர்டு இருக்கல்லவா
ஆமாம், இருக்கு
பஞ்சாயத்து போர்டு தலைவர் கிட்ட போய் சொல்லுவோம். அதோடு உறுப்பினர்களையும் போய்ப் பார்ப்போம். அவங்ககிட்ட பேசுவோம். மரங்களை வெட்டக்கூடாதுன்னு தீர்மானம் போடச் சொல்லுவோம். பசுமாட்டின் நஞ்சுக் கொடியை கட்ட வந்தவனுக்கு அறிவுரை சொல்லி நாம் திருத்தினோம் அல்லவா! அது போல் செய்வோம். ஒரு குற்றத்தைத் தடுக்க மற்றொரு குற்றத்தை நாம் செய்யக் கூடாது. ஒரு நல்ல செயல் விளையும் என்பதற்காக மூடநம்பிக்கையை வளர்த்துவிடக் கூடாது.
நீ சொல்றதும் சரிதான் மலையப்பா என்று ஒப்புக் கொண்டார் மாரிமுத்து.
எதையும் நாம் சட்டப்படியே எதிர்கொள்ள வேண்டும் என்றார் மலையப்பன்.
அங்கு அப்போது சில பஞ்சாயத்து போர்டு உறுப்பினர்கள் வந்தனர். அவர்களிடம் இருவரும் விவரத்தை எடுத்துச் சொன்னார்கள். அவர்களும் உண்மையை உணர்ந்து பஞ்சாயத்தில் தீர்மானம் கொண்டுவர ஒப்புக் கொண்டனர்.
நண்பர்கள் இருவரும் மகிழ்வுடன் விடை பெற்றுச் சென்றனர்.