தலையங்கம் : கரோனா வைரசைத் தடுக்க முற்றிலும் தேவை அறிவியல் அணுகுமுறையே!

ஏப்ரல் 01-15 2020

கரோனா வைரஸ் சிகிச்சைக்கான சிறப்பு மருத்துவமனைகளை தமிழக அரசு

உடனடியாக அமைப்பது மிக அவசியம்

கரோனா வைரஸ் (Covid-19) என்ற தொற்று நோய் உலகமெங்கும் உள்ள நாடுகளில் கொள்ளை நோயாக மாறி உயிர்ப் பலிகள் வாங்கும் நிலையில், நம் நாட்டிலும் அதனைத் தடுப்பதில் ஒவ்வொரு தனி மனிதனின் ஒத்துழைப்பும், சுயக் கட்டுப்பாடும் மிகவும் அவசியம் என்பதை நம் மக்கள் உணர்ந்து போதிய ஒத்துழைப்பை அரசுகளுக்கும், காவல்துறைக்கும் தர வேண்டியது இன்றியமையாத ஒன்று.

மூடநம்பிக்கைகளை பரப்பும் சுரண்டல்

கூட்டத்தை அரசு தடுக்க வேண்டும்

இந்த நேரத்தில் பலவித மூடநம்பிக்கைகளையும், மவுடீகங்களையும் மதத்தின் பெயராலும், சடங்குகள், யாகங்கள் என்ற பெயராலும், மக்களின் அறியாமைக்கு ஊட்டச்சத்து கொடுத்து தங்கள் வாழ்வை வளப்படுத்திக் கொள்ளும் சுரண்டல் கூட்டத்தை அரசுகளேகூட தடுக்க வேண்டும். படித்தவர்கள் அறிவியலைத் துணைக் கொண்டால் தான் இதனைத் தடுக்க சரியான கோணத்தில் அணுக முடியும்.

சமூக இடைவெளி தேவை1

அமெரிக்காவில்  அரிசோனா மாநில பல்கலைக் கழகத்தில் பி.எச்டி பட்டம் பெற்ற  ஆராய்ச்சியாளர்  பவித்திரா வெங்கட்ட கோபாலன் என்பவர், தனது ஆய்வு பற்றி அதிகம் சமூக ஊடகங்களில் கலந்து கொள்ளாமல் தவிர்த்து வந்தவர், “தற்போது பரப்பப்படும் தவறான செய்திகளைக் கேட்டு அவற்றின் அபத்தம் குறித்துப் பேசியாக வேண்டும் என்ற கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளேன். எடுத்துக்காட்டாக, கரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து மீள்வதற்கு பசு மாட்டு மூத்திரத்தைத் குடித்தால் போதும் என்பது போன்றவை ஏற்கக் கூடியதல்ல” என்று தெளிவுபடுத்தி “அந்த வைரசை அறிவியல் ரீதியாகத் தடுக்க மனித உடலின் சில செல்களில் உள்ள ACE2 என்ற   Receptor முக்கியமானதாகும்.  அந்த வைரஸ்  தொடர்பு வளர்வதைத் தடுப்பதற்கு வகையாக வெகுவாக சமூகத்தள்ளி நின்று பழகுதல் (Social Distance), தனிப்பட்ட உடல் சுகாதாரம் கவனமுடன் பேணுதல், அத்துடன் நமது சுவாசக் கருவிகளைத் தூய்மையுடன் பராமரித்தல் என்பதை அரசுகள் வலியுறுத்திக் கூறுவது முக்கியமானதாகும்.”

“கரோனா வைரசிற்கு எதிரான தடுப்பு மருந்து (Antiviral Medicine) கண்டுபிடிக்கும் ஆய்வுகள் மிக வேகமாக நடைபெற்று வருகின்றன. இந்த இடைக்காலத்தில் கவனம் மிகவம் தேவை” என்று சிறப்பாகக் கூறியுள்ளார்.

13 லட்சம் பேர் பாதிக்கப்பட வாய்ப்பு

“நமது மத்திய – மாநில அரசுகள், மே மாதத்துக்குள் இந்தியாவில் 13 லட்சம் பேர் கரோனாவால் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக சர்வதேச விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்திருப்பதை அலட்சியப்படுத்தக் கூடாது.”

“தற்போதைய நிலையில் இந்தியாவில் வைரஸ் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டவர்கள் குறைவு. பரவலான பரிசோதனைக் குறைவு காரணமாக சமூகப் பரவலை கவனிக்க முடியவில்லை. வேறு வார்த்தைகளில் சொல்வதானால் இந்தியாவில் மருத்துவமனைகள், சுகாதார மய்யங்களுக்கு வெளியே எத்தனைப் பேருக்கு வைரஸ் தொற்றியுள்ளது என்று மதிப்பிட முடியவில்லை” என்று அவ்விஞ்ஞானிகள் தங்களது எச்சரிக்கையில் குறிப்பிட்டிருப்பதை உரிய முறையில்கவனத்தில் கொண்டு செயல்பட வேண்டும்.

எதிர்ப்பால் பதிவை நீக்கிய அமிதாப்பச்சன்

அத்துடன் மிகவும் பிரபலமான நடிகரான அமிதாப்பச்சன் அவரது சுட்டுரைப் (டுவிட்டர்)  பதிவில் “அமாவாசையில் கை தட்டினால் – அந்த சத்தத்தினால் கரோனா ஓடி விடும்“ என்று பதிவிட்டு பலத்த கண்டனம் ஏற்பட்டவுடன் நீக்கியுள்ளார்.

அதுபோலவே பிரபல மலையாள நடிகர் மோகன்லால் தனது வலைத்தளப் பக்கத்தில் இதே கருத்தினை  – “அமாவாசையில் கை தட்டுவது ஒரு செயல்முறை. அந்த ஒலியானது மந்திரம் போல் மாறி பாக்டீரியாக்கள் – வைரஸ்களையும் அழிக்கும்“ என்று தெரிவித்துள்ளது எவ்வளவு அபத்தம்? “அறியாமைதான் உலகின் மிகப் பெரிய நோய்” என்றார் இங்கர்சால். இவரைப் போன்றவர்கள் இதைப் பரப்பலாமா? அவர்மீது வழக்குப் பதிவு செய்துள்ளது மிகவும் சரியான நடவடிக்கையாகும்.

தனி சிறப்பு மருத்துவமனைகள்

அமைப்பது அவசியம்

தமிழக அரசு – குறிப்பாக முதல்வரும், நல்வாழ்வுத் துறை அமைச்சரும் ஒடிசா மாநிலத்தில் அவசரமாக எழுப்பப்படும் 1000 படுக்கைகள் கொண்ட கரோனா வைரஸ் சிகிச்சைக்கான ஸ்பெஷாலிட்டி மருத் துவமனையினைப் போன்று உடனடியாக அமைப்பது மிக அவசியம். இப்போதுள்ள நிலைமை மே மாதம் வரை கூட நீடிக்கும் பேரபாயம் உள்ளதால், இதுவரை எடுத்துள்ள நடவடிக்கைகளோடு இதுபோன்ற பல நிவாரண சிகிச்சைக்கான நடவடிக்கைகளை எடுப் பது, மருத்துவ மற்றும் தூய்மைப் பணியாளர்கள், செவிலியர்கள், காவல்துறையினர் இவர்களின் பாதுகாப்பு  – கரோனா  தற்காப்புக்கான அத்துணை வழி முறைகளையும் தக்காரின் ஆலோசனைகளைப் பயன்படுத்திச் செய்ய வேண்டியது அவசர அவசியமானதாகும்.

அறிவியல் அணுகுமுறையே இப்போது முற்றிலும் தேவை!

கயிறுகளை அகற்றுங்கள்

கையில் கட்டியுள்ள கயிறுகள் மூலம் வைரஸ் கிருமிகள் தங்க ஏராளமான வாயப்புக்கள் உள்ளன என்று Microbiological ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். எனவே அதனை அகற்றுவதும் அவரவர் பாதுகாப்புக்கு நிச்சயம் உதவக் கூடும்.

இப்படிப் பலவும் செய்து – உரிய சிகிச்சைகளையும் நாம் முறையாக மேற்கொண்டால் கரோனா பாதிப்பிலிருந்து நம் மக்களைப் பாதுகாக்க முடியும்.

செயல்! செயல்!! செயல்!!! தேவை இந்த கால கட்டத்தில்!

கி.வீரமணி

ஆசிரியர்

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *