இன்று வசதி படைத்தவருக்கே மருத்துவம் படிக்க முடியும் என்னும் நிலையில், மிகச் சிறிய இனக்குழுவான கோத்தர் இன மக்களிலிருந்து 2011ஆம் ஆண்டு திருச்சி அரசு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்து முதல் பெண் மருத்துவராகப் பட்டம் பெற்றிருக்கிறார், வைத்தீஸ்வரி. கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதாரம் உள்ளிட்டவற்றில் மிகவும் பின்தங்கிய நிலையில் இருந்து தன் மகள் தன் சமூகத்தின் அடையாளமாக இருப்பதை மகிழ்ச்சியுடன் கூறுகிறார் அம்மா குந்திதேவி:
“என் கணவர் பெயர் கம்பட்டீஸ்வரன். எங்களுக்கு ரெண்டு பொண்ணுங்க, ஒரு பையன். நாங்கதான் படிக்கலை… எங்க பசங்களையாவது நல்லா படிக்க வைக்கணும்கிற கனவு எங்க ரெண்டு பேருக்குமே இருந்தது. இவளை எப்படியாவது டாக்டராக்கணும்கிற உறுதியோட என் வீட்டுக்காரர், ‘வைத்தீஸ்வரி’னு பெயர் வெச்சாரு. ஓடியாடி உழைச்ச அவர், திடீர்னு மாரடைப்புல இறந்துபோயிட்டார்.
அப்போ எனக்கு 28 வயசு. மூணு குழந்தைகளுக்குமே விவரம் தெரியாத வயசும்கூட. இவங்களையெல்லாம் எப்படி காப்பாத்தப் போறோம்னு ரொம்ப பயமா இருந்தது. எங்களுக்குன்னு சொந்தமா கொஞ்சம் நிலம் இருந்தது. அதுல டீ விளைவிச்சிட்டிருந்தோம். அத வெச்சு என் பசங்களை வளர்த்தெடுக்க முடியும்கிற நம்பிக்கையை வளர்த்துக்கிட்டேன்.
பசங்களை மனசுல வெச்சுக்கிட்டு கடுமையா உழைச்சேன். மூணு பசங்களையும் நல்லா படிக்க வெச்சேன். பெரியவ அக்ரி, இவ டாக்டர், பையன் இன்ஜினீயரிங் முடிச்சிருக்காங்க. ‘உதவி கிடைக்காம தவிக்கிறவங்களுக்கு கண்டிப்பா உதவுங்க. ஒண்ணு அல்லது ரெண்டு பேரையாவது உங்க செலவுல படிக்க வைங்க. வசதியில்லாதவங்களுக்கு இலவசமா மருத்துவம் பாருங்க’ _ இதைத்தான் பசங்களுக்கு அடிக்கடி நான் சொல்வேன்’’ என்றபடியே பெருமிதத்தோடு மகளை அணைக்கிறார் குந்திதேவி.
அம்மாவைப் பெருமிதத்தோடு பார்த்த படியே கூறுகிறார் வைத்தீஸ்வரி:
“எங்கள் இனத்தில் முதல் பெண் மருத்துவர் நான்தான் என்கிற விஷயமே மத்தவங்க சொல்லித்தான் தெரியும். பள்ளிக்கூடத்தில படிக்கிறப்பவே மருத்துவர் ஆகணும்கிற முனைப்போடு தீவிரமா படிச்சேன். 2011-ஆம் ஆண்டு, திருச்சி அரசு மருத்துவக்கல்லூரில மெரிட்ல இடம் கிடைச்சது. அப்போல்லாம் ‘நீட்’ கிடையாது! எங்களுக்காகக் கஷ்டப்படுற அம்மா, எப்போதும் ஆறுதலா இருக்கற அக்கா, தம்பி, கேட்காமலேயே தேவைகளை நிறைவேற்றும் தாய்மாமன்கள்னு எங்க மொத்த குடும்பத்தோட சப்போர்ட் இல்லைன்னா என்னால நிச்சயம் மருத்துவர் ஆகியிருக்க முடியாது.
முதல் தலைமுறைங்கிறதுனால ஆங்கிலத்துல இருந்து கடுமையான பாடச் சுமை வரை எல்லாமே சவாலாகத்தான் இருந்தது. எல்லாத்தையும் விருப்பத்தோட ஏத்துக்கிட்டு படிக்க ஆரம்பிச்சேன்.
2017-ஆம் ஆண்டு, எம்.பி.பி.எஸ் முடிச்சேன். அதன்பிறகு, மருத்துவ உயர்கல்விக்கான ‘நீட்’ தேர்வை எழுதி அதிலேயும் வெற்றி பெற்றேன். அடுத்த மாசம் கவுன்சலிங். அதுல சிறுநீரகவியல் துறையைத் தேர்ந்தெடுக்க ஆவலா இருக்கேன். சிறந்த சிறுநீரகவியல் நிபுணர் ஆகறதுதான் என் கனவு.
ஸ்கூல் முழுக்க ஸ்காலர்ஷிப்லதான் படிச்சேன். மருத்துவம் மெரிட்ல கிடைச்சதுனால கவலையில்லாம படிச்சேன். படிச்சு முடிச்சதும் அம்மா ஆசைப்படி எங்க இன மக்களுக்கும், ஏழை மக்களுக்கும் இலவசமா மருத்துவம் பார்க்கணும். இல்லாதவங்களுக்கு உதவணும்’’ என்கிற மக்கள் மருத்துவரின் சொற்களில் அத்தனை உறுதி!
அடித்தட்டிலிருந்து வரும் மருத்துவ மாணவர்கள்தாம் மருத்துவத்தை சேவையாகப் பார்க்க முடியும். இன்றைய “நீட்’’, “நெக்ஸ்ட்’’ போன்ற தேர்வுகளால் மருத்துவம் மிகப் பெரிய வணிகத் தொழிலாக மாறியிருப்பதை நாம் இன்று காண முடிகிறது என்பது ஆட்சியாளர்களுக்கே அவமானம் அல்லவா!
தகவல்: சந்தோஷ்